தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி நாயகி தவமணி தேவி!! (மகளிர் பக்கம்)

Read Time:24 Minute, 24 Second

1930களில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்து தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி, அன்றைய இளைஞர்களைக் கிறங்கடித்தவர்; நன்கு நடனமாடும் திறன், சொந்தக் குரலில் பாடும் அளவுக்கு இனிய குரல் வளம் என அன்றைய நடிகைகளுக்கு வேண்டிய அனைத்துத் திறமைகளும் ஒருங்கே அமையப் பெற்றவர். பிபிசி வானொலியால் ‘நைட்டிங்கேல்’ என வானளாவப் புகழப்பட்டவர்; கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சீனியர் பி.ஏ. பட்டம் பெற்றவர் என பல்வேறு பெருமைகள் கொண்டவர் நடிகை தவமணி தேவி. இவரது திரைப்பிரவேசம் என்பது உண்மையில் தென்னிந்தியத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை அக்காலத்தில் ஏற்படுத்தியது.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தவமணி தேவி, 1925 ஆம் ஆண்டில் பிறந்தவர்; மிகவும் வசதியான வீட்டுப் பெண். தமிழரான இவருடைய தந்தையார் கதிரேச சுப்பிரமணியன் கண்டி நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். தாயார் சிங்களவர். சிறு வயதில் ஆடல், பாடல் போன்றவற்றில் தவமணி மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் பள்ளியில் படிக்கும் காலத்தில் 15 வயதிலேயே தமிழகத்துக்கு வந்து பரத நாட்டியமும், சாஸ்திரீய சங்கீதமும் கற்றுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கராய் இருந்தாலும் தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை முழுவதும் உள்வாங்கிக்கொண்டவராக 1936ல் சதி லீலாவதி திரைப்படத்தைத் தமிழில் இயக்கி, மாபெரும் வெற்றி பெறச் செய்தவர் இயக்குநர் எல்லீஸ். ஆர்.டங்கன். இவர் இலங்கை சென்றிருந்த வேளையில் தவமணி தேவியின் நாட்டியத்திறன் குறித்து அறிந்து அவர் படிக்கும் பள்ளிக்கே சென்று சந்தித்திருக்கிறார். அத்துடன், ‘நீ திரைப்படத்தில் நடிக்கிறாயா?’ என்றும் நேரடியாகக் கேள்வியை எழுப்பி அப்பெண்ணை அதிரவும் வைத்திருக்கிறார். இந்தக் கேள்வியால் துணுக்குற்ற தவமணி, தனக்கு அது பற்றியெல்லாம் எதுவும் தெரியாதென்றும் தன் பெற்றோரிடம் இது குறித்துக் கேட்டுக் கொள்ளும்படியும் கூறி விட்டார்.

அடுத்தநாள் தவமணியின் வீட்டுக்குச் சென்ற டங்கன், அதே கேள்வியை அவருடைய தந்தையிடம் எழுப்பியிருக்கிறார். தவமணியின் தாயாருக்கு இதில் துளியும் விருப்பமில்லை; தந்தைக்கும் அரை மனதுதான். ஆனால், தவமணி சினிமாவில் நடிப்பதை விரும்பியதால், அப்பாவிடம் சற்றே குழைவாகவும் கொஞ்சலாகவும் பேசி அவரையும் அவர் மூலமாகத் தன் தாயாரையும் முழு மனதுடன் சம்மதிக்க வைத்துத் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டார். திரைப்படத்தில் நடிப்பதற்காக தவமணி தேவி தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்ததும் இவ்வாறுதான். டங்கன் இலங்கை சென்று தவமணி தேவியையும் அவருடைய பெற்றோரையும் சந்தித்துப் பேசியதும் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்துக்காகத்தான். 1997 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்ட தகவலை தவமணி தேவி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதிர வைத்த நாயகியும் நீச்சல் உடையும்

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் தயாரிப்பாளருமான டி.ஆர்.சுந்தரம் இராமாயணத்தில் இடம்பெறும் கௌதம முனிவரின் பத்தினியான அகலிகை பாத்திரத்தை முதன்மைப்படுத்தி ‘சதி அகல்யா’ என்ற புராணப் படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். அகலிகை வேடமேற்று நடிப்பதற்காக நாயகியாக தவமணி தேவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் பின் நிகழ்ந்தவை அனைத்தும் அப்போதைய சினிமா உலகம் கண்டிராத அதிசயமும் சுவாரசியமும் நிரம்பிய அசல் காட்சிகள்.

தன் திரைப்படத்துக்குக் கதாநாயகியை ஒப்பந்தம் செய்த கையோடு, பத்திரிகையாளர்களை அழைத்துத் தங்கள் படத்தின் புதிய கதாநாயகியை அறிமுகப்படுத்தியதுடன், பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கான தவமணி தேவியின் புகைப்படத்தையும் அளித்துள்ளார் டி.ஆர்.சுந்தரம். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அரண்டு போனார்களா? இல்லை அதிசயித்துப் போனார்களா என்பது தெரியாது. ஆனால் விவரிக்க முடியாத உணர்வலைகளுக்கு ஆட்பட்டுப் போனார்கள் என்பது மட்டும் உண்மை. அப்படி எல்லோரையும் வாய் பிளக்க வைத்த அந்தப் புகைப்படத்தில் என்னதான் இருந்தது? கதாநாயகி தவமணி தேவி நீச்சல் உடையில் மிகவும் ஒயிலாக சாய்ந்து அமர்ந்திருந்ததுதான் காரணம்.

உண்மையிலேயே தவமணி தேவிக்கு அசாத்திய துணிச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்பதோ புராணப் பாத்திரம். ஆனால், புகைப்படத்தில் அணிந்திருந்ததோ அதற்குச் சற்றும் பொருத்தமில்லாத நீச்சல் உடை. 1930களில் அப்போதைய கதாநாயகிகள் யாரும் அதுவரை அவ்வாறு உடை உடுத்தியது இல்லை. அதற்கான துணிவும் எவருக்கும் இல்லை. இது குறித்துப் பத்திரிகை உலகம் லேசான முணுமுணுப்புடன் நிறுத்திக்கொண்டதே தவிர, பெரிதாக வாய் திறக்காமல் இருந்ததற்குக் காரணம் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.சுந்தரத்தின் மீதிருந்த மரியாதையா? பயமா என்பதும் புரியாத புதிர்தான். அதேநேரம் கதாநாயகியின் பின்புலமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், நாயகியின் உடையே பெரும் பரபரப்பும் பேசுபொருளாகவும் ஆனதால், 1937ல் வெளியான ‘சதி அகல்யா’ திரைப்படத்துக்கான விளம்பரமாகவும் அது ஆகிப் போனது. படம் வெற்றி பெறாமல் இருக்குமா? அது பற்றிக் கேட்க வேண்டுமா?  
நீச்சல் உடைக்கு எதிரான பத்திரிகைகளின் போர்க்குரல் இதற்கிடையில் தவமணி தேவிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மற்றொரு நிகழ்வு தமிழ்த் திரையுலகில் அரங்கேறியது. அன்றைய காலத் திரைப்படங்களில் நடிகைகள் உடல் முழுவதையும் போர்த்தியபடி சேலையைக் கட்டிக்கொண்டு நடித்தார்கள். தாசி வேடம் ஏற்றாலும், ஆள் மயக்கும் மங்கையாக ஆடிப் பாடினாலும் அன்றைய திரைப்படங்களில் இதுதான் நிலை. இதை மீறி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை படம் முழுவதும் முக்கால் பகுதி உடல் வெளியில் தெரியும்படியான நீச்சல் உடை அணிந்து ஒரு திரைப்படத்தில் நடித்தார். படத்தின் பெயர் ‘வனராஜ கர்ஸான்’. இப்படம் 1938 ஆம் ஆண்டில் வெளியானது.

இது தமிழில் எடுக்கப்பட்ட முதல் கானக வாழ்க்கை பற்றிய படமாகும். சண்டைகளும் சாகசங்களும் படம் நெடுக நிரம்பியிருந்தன. கதாநாயகி நீச்சல் உடையில் உலவி வர, அதுவரை மனிதப் பிறவியையே கண்ணால் கண்டிராத, கானகத்தில் வளர்ந்த காட்டுவாசியான கர்ஸான், கதாநாயகியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடுவதும், அதை எதிர்த்து நீச்சல் உடையில் இருக்கும் கதாநாயகி  கை, கால்களை உதைத்துக்கொண்டு அவனிடமிருந்து தப்பிக்க முயல்வதுமாகக் காட்சிகள் படம் நெடுக இடம் பெற்றிருந்தன.

பெண்ணுக்கு மட்டும் ஒழுக்க நியதிகளையும் உடைக் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தி, அதனை  விதந்தோதும் நம் சமூகத்தின் கண்களுக்கு இது போதுமே எதிர்ப்பைத் தெரிவிக்க. அப்போதைய பத்திரிகைகள் ‘வனராஜ கர்ஸான்’ படத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, ‘ஆபாசம், அநாகரிகம்’ என உச்சக் கூக்குரலிட்டன. அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைக்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

உண்மையில் கணவனால் கைவிடப்பட்டு, இரு குழந்தைகளுடன் தனியே தவித்துக் கொண்டிருந்த நிலையில், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தால்தான் தன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலையிலிருந்த நாயகிக்கு வேறு வழியில்லாத நிலை. படத்தின் கதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டதோடு, வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம், வில்லி வேடங்களை ஏற்று நடித்துப் பிரபலமான நடிகை கே.ஆர்.செல்லம் தான் அவர். கதாநாயகனாக நடித்தவர் இந்திப் படங்களின் ஸ்டண்ட் நடிகர் ஜான் கவாஸ்.

இப்படிப்பட்ட சூழல் நிலவிய அன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய மொழி பேசும் நடிகைகளில் வேறு யார்தான் நீச்சல் உடையில் நடிக்கத் துணிவார்கள்? இந்தப் பத்திரிகையாளர்களின் குணாதிசயமும் புரிந்து கொள்ள முடியாததுதான். நீச்சல் உடை அணிந்து நடித்த கே.ஆர்.செல்லத்தைக் கடிந்து கொண்டவர்கள், தவமணி தேவியை வானளாவப் புகழ்ந்ததற்குமான பாரபட்சம் மிகுந்த நடவடிக்கைக்கு அவர் ஒரு நீதிபதியின் மகள் என்பதும், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரல்ல என்பதும் கூட காரணமாக இருந்திருக்கலாம். அது இத்தோடு மட்டும் நிற்கவில்லை. தொட்டுத் தொடரும் தொடர்கதையாகவும் மாறியது.

தொடரும் நீச்சல் உடை புரட்சி

விஸ்வநாத அய்யர் என்பவரின் தயாரிப்பில், பகவான் எழுத்து, இயக்கத்தில் ‘வனமோகினி’ திரைப்படம் 1941 ஆம் ஆண்டில் வெளியானது. இது ‘Her Jungle Love’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் வடிவம். ஹாலிவுட் நடிகை டோரதி லமொர் அணிந்திருந்ததைப் போலவே ஹவாய் பாணியில் அமைந்த நீச்சல் உடையணிந்து நாயகி தவமணி தேவி இப்படத்தில் நடித்தார். நீச்சல் உடை நாயகி என்றால், தவமணி தேவி மட்டும்தான் என்ற முடிவுக்கு அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஒரு தீர்மானகரமான முடிவுக்கு வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

நீச்சல் உடையின் மூலமாக ‘புரட்சிகரமான’ ஒரு மாற்றத்தைத் தமிழ்த் திரையில் கொண்டு வர முயன்றிருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்; அதற்கு தவமணி தேவி பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இப்படத்தின் நாயகன் எம்.கே.ராதா. பெரு வெற்றி பெற்ற இப்படத்தில் நாயகன், நாயகியைக் காட்டிலும் மக்களால் அதிகம் சிலாகித்துப் பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது சந்துரு என்ற யானை தான். இந்தப் படத்துக்குப் பிறகு தவமணி தேவி கனவுக்கன்னி என்றும், செக்ஸ் க்வீன் என்றும் மிகப் பரவலாக அறியப்பட்டார். அத்துடன் அப்போதைய காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களிலேயே மிகவும் கவர்ச்சிகரமான படம் என்ற பெயரையும் வன மோகினியே தக்க வைத்துக் கொண்டாள்.

பல்வேறு பட்ட வேடங்களில்…

1941 ஆம் ஆண்டில் தவமணி தேவி மீண்டும் ஒரு புராணப் படத்தில் நாயகியாக நடித்தார். ‘வேதவதி (அ) சீதா ஜனனம்’ படத்துக்காக சீதையாக அவதாரம் எடுத்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆர். இந்திரஜித் ஆக ஒரு சிறு வேடமேற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1946ல் வெளியான ஜூபிடரின் தயாரிப்பான ‘வித்யாபதி’ தவமணி தேவியின் வெற்றிப் படங்களில் ஒன்று. இதை எழுதி, இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி. மோகனாம்பாள் என்னும் தேவதாசிப் பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்ததுடன் ஐரோப்பிய பாணியில் அமைந்த ஆடல் பாடல்களுடன் காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் அன்றைய பத்திரிகைகள் பரவலாக எழுதின. இதன் மற்றொரு சிறப்பு இதில் இடம் பெற்ற ஒரு பாடலில் ஆங்கிலச் சொற்களும் இடம் பிடித்திருந்தன. அதை எழுதியவரும் தவமணி தேவி தான் என்பதும் கூடுதல் தகவல். அப்பாடலில் சில வரிகள்:

அதோ இரண்டு Black eyes !
என்னைப் பார்த்து Once, twice !
கண்ணைச் சிமிட்டி Dolly !
கை கட்டி Calls me !
Is it true your eyes are blue ?
I’ll fall in love with you!
I will dance for you!

தவமணி தேவியின் வீழ்ச்சி

1947 ஆம் ஆண்டில் வெளியான ஜூபிடரின் தயாரிப்பான ‘ராஜகுமாரி’ பல பேருக்கும் வாழ்வளித்த திரைப்படமாகும். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய இப்படத்துக்குக் கதை, வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. கதாநாயகன் எம்.ஜி.ஆர். இப்படம் பெரும் வெற்றியை ஈட்டியதுடன் கலைஞரின் வசனங்களும் பெரும் புகழை அறுவடை செய்தன. நாயகன் எம்.ஜி.ஆருக்கும் மறுவாழ்வை அளித்தது. ஆனால், அதீத கவர்ச்சிகரமான உடையணிந்து நடித்திருந்தும் தவமணி தேவி படத்தின் இயக்குநராலேயே கடும் கண்டனத்துக்கு ஆளானார். அதனால் இருவருக்கும் இடையே சர்ச்சைகள் வெடித்தன. அவர் அணிந்திருந்த உடையின் முன் கழுத்துப் பகுதி, அபாயகரமான அளவில் கீழிறங்கி இருந்ததை இயக்குநர் விரும்பவில்லை.

அதை ஈடு செய்ய மிகப்பெரிய அளவிலான காகிதப்பூ ஒன்றைத் தயாரித்து  முன் கழுத்துப் பகுதியில் பொருத்திவைத்துப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள். ஆனால், பல காட்சிகளில் தணிக்கைக் குழுவின் கத்திரி தன் கைவரிசையைக் காட்டியது. படம் பெரு வெற்றி பெற்றாலும் தவமணி தேவி அதன் பிறகு திரையுலகினரால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். எந்தக் கவர்ச்சியை முன்னிறுத்தி பேரும் புகழும் பெற்று முன்னேறினாரோ, அதே கவர்ச்சியாலேயே அதல பாதாளத்திலும் வீழ்ந்தார் என்பதுதான் உண்மை. அதன் பிறகு ‘நாட்டிய ராணி’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும் அதன் பிறகு எந்தப் படங்களிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதுவே அவரது இறுதிப் படமும் ஆனது.

ஊதியம் அதிகம் பெற்ற நாயகி

கவர்ச்சியாக நடித்தபோதிலும் சக நடிகர்கள் இவரைத் தொட்டு நடிக்க அஞ்சினார்கள் என்று தவமணி தேவி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதற்குக் காரணம் தவமணி தேவியின் தந்தை நீதிபதியாக இருந்தவர் என்பதுதான். அதேபோல், ஆரம்ப காலத் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதரைக் காட்டிலும் தவமணிதேவிக்கு அதிகம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இது அவருக்கு மட்டுமல்ல, பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் முதன்முதலாக நடித்த ‘பவளக்கொடி’ திரைப்படத்தில் கதாநாயகன் பாகவதருக்கு 1000 ரூபாயும், கதாநாயகி எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு 2000 ரூபாயும் அப்படத்தை இயக்கிய கே.சுப்பிரமணியத்துக்கு வெறும் 750 ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட்டது என்பதே திரையுலக வரலாறு. இன்றைய நாயகிகள் நாயகனை இந்த விஷயத்தில் மிஞ்ச முடியுமா என்பது பெரும் கேள்விக்குறிதான். மிஞ்ச வேண்டாம்; நாயகனுக்கு இணையாக சம ஊதியம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே….

திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபோதும் அவர் மீண்டும் தான் பிறந்த நாடான இலங்கைக்குத் திரும்பிச் செல்லவில்லை. ராமேஸ்வரத்திலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். கோடிலிங்க சங்கர சாஸ்திரி என்பவரைக் காதலித்து 1956 ஆம் ஆண்டில் மதுரையில் மணம் புரிந்துகொண்டார். முழுவதும் ஆன்மிகத்தில் தன் கவனத்தைச் செலுத்தி அதிலேயே கரைய ஆரம்பித்தார். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி தன் 76 வது வயதில் இவ்வுலக வாழ்க்கையை விட்டே மறைந்து போனார்.

பல்கிப் பெருகும் கவர்ச்சி நாயகிகளின் தேவை

பாலியல் தேவை பற்றி வெளிப்படையாகப் பேச முடியாமல் தன் தேவைகளை எங்கோ ஓரிடத்தில் தீர்த்துக் கொள்ள விரும்பும் மனங்களைக் கொண்ட, முரண்பட்ட மூடுண்ட நம் சமூகத்தில் கவர்ச்சிக்கன்னிகளின் தேவை காலம்தோறும் நம் திரைப்படங்களில் இருந்துகொண்டே இருக்கிறது. உடைக் கட்டுப்பாடுகளை நம் வீட்டுப் பெண்களுக்கும் சமூகத்தில் உலவும் பிற பெண்களுக்கும் வலியுறுத்தும் அதே மனம்தான் திரைப்படங்களில் குறைந்த உடையில் பெண்களைக் காண விழைகிறது. அப்படியான உடை உடுத்திய பெண்களை ரசிக்கிறது. அதன் விளைவுதான் கவர்ச்சிக் கன்னிகளின் தோற்றமும் அவர்கள் பெறும் பெரு வெற்றியும்.

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் பத்திரிகை அளித்த பேட்டி ஒன்றில், தன் இளம் வயதில் நடிகை தவமணி தேவியின் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் திரைப்படத்தில் பார்த்து, தான் உணர்ச்சிவயப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதுதான் நம் பெரும்பாலான இளைஞர்களின் நிலையும். ஆனால், பலரும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. அந்த வகையில் மேஜர் சுந்தர்ராஜன் பாராட்டுக்குரியவர்.  

பத்து ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த தவமணி தேவிக்குப் பின் எத்தனை எத்தனையோ கவர்ச்சிக் கன்னிகள், கவர்ச்சி நாயகிகள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நம் திரைப்படங்களில் தோன்றிக்கொண்டேயிருந்தார்கள். தங்கள் வெற்றிக்கொடியைத் திரையுலகில் ஓங்கி உயரப் பறக்க விட்டார்கள்; தவமணி தேவியைப் போலவே பின்னர் காணாமலும் போனார்கள். புதிது புதிதாகக் காலம்தோறும் வந்து கொண்டே இருந்தார்கள்; இருக்கிறார்கள். பிற்காலத்தில் கதாநாயகிகளே கவர்ச்சிக் கன்னிகளின் இடத்தை ஆக்கிரமிக்கவும் தொடங்கினார்கள். திரையுலகம் முற்றிலுமாக தவமணி தேவியை மறந்து போனது, ஆனால் திரையுலக வரலாற்றைப் புரட்டும்தோறும் தவிர்க்க முடியாதவராக முதல் கனவுக்கன்னி, முதல் கவர்ச்சி நாயகி என்று எப்போதும் இவர் அறியப்படுகிறார். என்றும் அறியப்படுவார்.

தவமணி தேவி நடித்த திரைப்படங்கள்

சதி அகல்யா, சகுந்தலை, சியாம் சுந்தர், வேதவதி (அ) சீதா ஜனனம், வன மோகினி, கிருஷ்ண குமார், பக்த காளத்தி, ஆரவல்லி சூரவல்லி, வித்யாபதி, ராஜகுமாரி, நாட்டிய ராணி.

‘செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் வெளியாகும் கட்டுரைகள் காப்பிரைட் உரிமை பெற்றவை. இக்கட்டுரைகளிலிருந்து எந்த ஒரு  பகுதியும் கட்டுரை ஆசிரியரின் ஒப்புதல் பெறாமல் அச்சு வடிவிலோ, யூடியூப்  சானல்களிலோ எடுத்தாளப்பட்டால், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மணப்பெண்களின் மனங்கவர்ந்த பட்டு நூல் வளையல்கள்!(மகளிர் பக்கம்)
Next post மறந்து வாடும் நெஞ்சு… அல்சைமரைத் தடுப்போம்! (மருத்துவம்)