டிஸ்லெக்சியா பாதிப்பு… யூடியூப் ஸ்டார்…ஆறு இலக்குகளில் வருமானம்…!!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 5 Second

ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தின் அஸ்திவாரம் என்பதில் கல்வி மிக முக்கிய பங்கினை வகித்து வருகிறது. கல்வி மட்டுமே ஒருவருக்கு நிலையான வாழ்க்கையினை மேம்படுத்தும் என்பதால்தான் நாம் அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதன் காரணமாகத்தான் நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள் தங்களின் 13 வயதிலேயே அவர்களுக்கான ஒரு வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இங்கு பள்ளியில் சென்று படித்தாலும், பகுதி நேர வேலைக்கும் செல்கிறார்கள். 13 வயதிலேயே தங்களுக்கு ஒரு வருமானம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தை தான் ஒமரி மெக்வீன். லண்டனைச் சேர்ந்த ஒமரி, அந்நாட்டின் பிரபல யூடியூபர். இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பலவிதமான ‘வீகன்’ உணவுகளை பதிவு செய்து வருகிறார். இவரின் சேனலுக்கு பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்கள் உள்ளனர். இருப்பினும் ஒமரி ஒரு சிறப்புக் குழந்தை.

‘‘எனக்கு கணக்கு மட்டுமல்ல எந்த பாட புத்தகங்களைப் பார்த்தாலும் அதில் உள்ள எண்கள் மற்றும் எழுத்துக்கள் எல்லாம் தலைக்கு மேலே சுற்றுவது போல் இருக்கும். எழுத்துக்களை அடையாளம் காண்பதில் எனக்கு சிரமம். ஒரு தகவலை உடனே புரிந்து கொள்ளவும் தெரியாது. அதை எனக்கு பல முறை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை எல்லாம் டிஸ்லெக்சியா, அதாவது கற்றல் குறைபாட்டின் பாதிப்பு. இந்த பாதிப்பு இருப்பதால், என்னால் மற்ற குழந்தைகள் போல் சாதாரண பள்ளியில் அவர்களின் வேகத்தில் படிக்க முடியாது. நான் கொஞ்சம் ஸ்லோ லர்னர் தான். ஆரம்பத்தில் எனக்கு இருக்கும் பிரச்னையைப் பற்றி என் பெற்றோருக்கு தெரியவில்லை.

பள்ளியில் நான் சரியாக படிப்பதில்லை. எழுத்துக்களை தவறாக எழுதுகிறான்னு பள்ளி நிர்வாகம் என் பெற்றோர்களிடம் என்னைப் பற்றி புகார் செய்தார். என்னுடைய பெற்றோர் மற்றவர்கள் மாதிரி என்னைத் திட்டாமல்… எனக்குள் இருக்கும் பிரச்னை என்ன என்று ஆராய்ந்தனர். அப்போது தான் எனக்கு டிஸ்லெக்சியா பாதிப்பு இருப்பதை புரிந்து கொண்டார்கள். என்னால் மற்ற குழுந்தைகள் போல் படிக்கவும் முடியாது எனறு தெரிந்து கொண்டு, என்னை சிறப்பு பள்ளியில் சேர்த்துவிட்டனர். இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்யலாம்ன்னு யோசித்த போது தான் என் கவனம் இணையம் பக்கம் திரும்பியது. அப்ப எனக்கு எட்டு வயசு இருக்கும்.

அதில் நான் போஸ்ட்களை போட ஆரம்பிச்சேன். படிப்படியாக இன்ஃப்புளுவென்சராக மாறினேன். அப்போது தான் என் பெற்றோர் இன்ஃப்புளுவென்சராக இருப்பதற்கு பதில் எனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்த சொன்னாங்க. எனக்கு அது சரின்னு பட்டது. எனக்கு மிருகங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். நம்முடைய இலையில் அவற்றை விருந்தாக்க அதனைக் கொல்ல வேண்டுமான்னு அம்மாவிடம் கேட்பேன். அவர்களின் பதில் ஒரு புன்னகையாகத்தான் இருக்கும்.

என்னுடைய இந்த கேள்வி இங்கிலாந்து மக்களின் காதில் எட்டிவிட்டது போல. பலர் இங்கு வீகன் உணவிற்கு மாறி வருகின்றனர். அவர்களுக்காக வீகன் உணவு குறித்த சமையல் சேனலை யுடியூப்பில் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. வீட்டில் சொல்ல அனைவரும் எனக்கு உதவ முன்வந்தார்கள். ‘ஓமரி கோஸ் வைல்ட’ என்ற பெயரில் என்னுடைய வீகன் சமையல் சேனலை ஆரம்பித்தேன்.

‘வீகன்’ உணவு என்பது அசைவ உணவுகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பால், வெண்ணை, முட்டை, தயிர், நெய், பன்னீர் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து, தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாகும். வீகன் உணவில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகள் மட்டும் இடம் பெறும்’’ என்ற 13 வயதே நிரம்பிய ஓமரி தாவரங்களை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய பிரத்யேக சமையற்கலையில் இளம் மாஸ்டராக திகழ்ந்து வருகிறார்.

இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீகன் சமையல் பற்றிய குறிப்புகள் மற்றும் ரெசிபிக்களைப் பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் கணிசமான வருமானமும் அவருக்கு வந்துள்ளது. அதைக் கொண்டு ‘டிபாலிசியஸ் டிப்ஸ்’ (Dipalicious dips) என்ற நிறுவனத்தை துவங்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து
வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ஆரோக்கியமான, சுவையான வீகன் ஸ்நாக்ஸ் மற்றும் அதற்கு ஏற்ற சாஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அதோடு, குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வீகன் உணவுகளை எப்படித் தயார் செய்ய வேண்டும் என்ற சமையல் புத்தகங்களையும் எழுதி வருகிறார். பிரிட்டனின் இளம் டிவி செஃப் மற்றும் குக் புக் ஆத்தர் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் ஒமரி.

‘‘எட்டு வயதில் இருந்தே சமூக வலைத்தளத்தில் நான் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். நான் பணத்திற்காக மட்டுமே இந்த சேனலை நடத்தவில்லை. என்னைப் போன்ற குறைபாடு கொண்டுள்ள சிறுவர்களுக்கு, படிப்பைத் தாண்டி வேறு ஒரு திறமை அவர்களுள் ஒளிந்திருக்கும். எனக்குள் இருந்த சமையல் கலையை என் பெற்றோர் மற்றும் சகோதரர் இவர்கள் தான் வெளியே கொண்டு வந்தார்கள். அதேபோல் அவர்களுக்குள் இருக்கும் திறமை என்ன என்று கண்டறிந்து அதற்கான பாதையில் வழிநடத்தினால் கண்டிப்பாக அவர்களும் மிளிர்வார்கள் என்பதற்கு நானே ஒரு உதாரணம். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு பிரத்யேக வீகன் உணவகங்களை திறக்கும் திட்டம் உள்ளது’’ என்றார் ஒமரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஃபேஷன் A – Z !!(மகளிர் பக்கம்)