நீங்க ஜிம்முக்குப் புதுசா? 8 தவறுகள் எச்சரிக்கை!!(மருத்துவம்)
ஜிம்முக்குப் போகிறோம். உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டோம் என்ற உணர்வு கொடுக்கும் பெருமிதம் அற்புதமானது. உடற்பயிற்சி செய்யப் போகிறேன் என ஜிம்முக்குப் போய் பணம் கட்டிவிட்டு, டிராக் சூட், ஷூ வாங்கி, நண்பர்களிடம் எல்லாம் கெத்தாய் சொல்லிவிட்டு, ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு, செல்ஃபிகளாகக் குவித்துப் பண்ணாத அலப்பறை எல்லாம் செய்தபின் சில நாட்களில் ஜிம்மாவது, உடற்பயிற்சியாவது எனக் குறட்டைவிட்டுத் தூங்குவதுதான் பலரின் வழக்கமாக இருக்கிறது. புதிதாக ஜிம்முக்குப் போகிறவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யும் தொடக்கநிலைத் தவறுகள் என்னென்ன? அவற்றை எப்படிக் களைவது எப்படி சொல்கிறார் ஜிம் டிரைனர் லோகேஷ்.
1.ஆர்வக்கோளாறு
சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘நான் 15 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்’ என்றும், ‘நான் 10 கிலோ எடையைக் கூட்டி உடலை வலுவாக்க வேண்டும்’ என்றும், ‘தினமும் மூன்று வேளை உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று பெரிய திட்டங்களோடு மிகுந்த ஆர்வமாகச் செயலில் இறங்கி, விரைவில் சோர்ந்துபோய் உடற்பயிற்சியையே கைவிடும் நிலைக்குப் போகிறார்கள். உங்கள் இலக்குகளைச் சிறிது சிறிதாகப் பிரித்துக்கொள்ளுங்கள். இந்த மாதம் மூன்று கிலோ குறைய வேண்டும். இந்த வாரம் கால் மணி நேரம் நடக்கத் தொடங்க வேண்டும். அடுத்த வாரம் முதல் ஐந்து ஐந்து நிமிடங்களாகக் கூட்ட வேண்டும். என இலக்குகளைச் சிறிதாக்கும்போது அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து முன்னேற ஊக்கமாக இருக்கும்.
2. எதையும் குறித்து வைத்துக்கொள்ளாதது
வொர்க்அவுட் செய்யத் தொடங்கும் புதிதில் சிலர் தங்கள் உடற்பயிற்சி தொடர்பாக எதையுமே குறித்து வைத்துக்கொள்வது இல்லை. இப்படி இருந்தால், உங்கள் பயிற்சியில் ஏற்படும் முன்னேற்றம், சிக்கல்கள், குறைபாடுகள், சறுக்கல்கள் பற்றிய முழுமையான சித்திரம் உங்களுக்குக் கிடைக்காது. என்ன பயிற்சி செய்தீர்கள், எவ்வளவு நேரம் அல்லது எத்தனை முறை செய்தீர்கள், எவ்வளவு எடையைத் தூக்கினீர்கள், எவ்வளவு தூரம் நடந்தீர்கள், எவ்வளவு கலோரி உட்கொண்டீர்கள், எவ்வளவு எரித்தீர்கள், பயிற்சியின்போது என்ன பிரச்னை ஏற்பட்டது, அன்றைய எடை எவ்வளவு, உடலின் அளவு என்ன என அனைத்தையும் பதிவுசெய்யுங்கள். இது உங்களின் முன்னேற்றத்துக்கும், அடுத்தமுறை தவறு செய்யாமல் இருப்பதற்கும், தொடர்ந்து இயங்குவதற்கான கமிட்மென்ட்டுக்கும் பெரிதும் உதவும்.
3.எந்தத் திட்டமும் இல்லாமல் இருப்பது
நண்பர்கள் சேர்ந்திருக்கிறார்கள். பக்கத்துவீட்டுக்காரர் சேர்ந்திருக்கிறார் என்பதற்காக சிலர் தினமும் ஜிம்முக்குச் செல்வார்கள். அவர்கள் செய்வதை எல்லாம் உடன் சேர்ந்துசெய்வார்கள். ஜிம்முக்குள் வெறுமனே அரட்டையடித்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இது நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் நல்லது அல்ல. எந்தத் திட்டமும் இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். ஒவ்வொர் உடலும் ஒவ்வொரு மாதிரி. எனவே, உங்களுக்கான உடற்பயிற்சிகள் எதுவெனத் திட்டமிடுங்கள். இது தேவையற்ற உடல்வலியையும் நேர விரயத்தையும், பண விரயத்தையும் தவிர்க்கும்.
4. சப்ளிமென்ட்டுகள் அதிகமாக எடுத்துக்கொள்வது
சிலர் உடற்பயிற்சி செய்கிறோம் அதிகப் பலன் கிடைக்கவேண்டும் என மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்வார்கள். இன்னும் சிலர் முதல் நாள் இரவு பீட்சா, பரோட்டா என வெளுத்துவாங்கிவிட்டு, மறுநாள் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வார்கள். மோசமான டயட்டுடன் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தராது. எனவே, ஆரோக்கியமான, சமச்சீரான டயட், தேவையான அளவு புரோட்டின் போன்றவற்றுடன் மருத்துவர் பரிந்துரைப்படி அவசியமானால் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
5.வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்யாதது
உடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும். இது, தசைப்பிடிப்பு, எலும்பு மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து உடலைக் காத்து உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தை மேம்படுத்துகிறது.
6.கால்களைக் கவனிக்காதது
சிக்ஸ் பேக் வைக்க வேண்டும். கட்டுமஸ்தான உடல் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்கூட தங்கள் கால்களைக் கவனிப்பது இல்லை. ஓடுவது, சைக்கிளிங் செய்வது, ஜாக்கிங் போவது போன்ற உடற்பயிற்சிகள் கால்களை முழுமையான வலுவாக்காது. எனவே, கால்களை வலுவாக்க, செய்ய வேண்டிய பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். கால்கள் வலுவாகும்போது முழு உடலையும் தாங்கும் திறன் மேம்படுவதால், மேல் உடல் வலுவாவது எளிதாகிறது.
7.உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். உடற்பயிற்சியைச் சில நாட்கள் செய்ததும் மனம் அதைவிட்டுவிட ஏதாவது காரணங்கள் தேடும். சளிப்பிடித்திருக்கிறது, மழை பெய்கிறது, வானிலை மோசம், வேலை நேரத்தில் உடல் சோர்வாகிறது, உடல் வலிக்கிறது, நேர மேலாண்மை பாதிக்கப்படுகிறது எனக் காரணங்களை உருவாக்கி உடற்பயிற்சி செய்வதை நிறுத்தத் தூண்டும். உடற்பயிற்சியைக் கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் இந்த தொடக்கநிலை தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, விழிப்பாய், பிடிவாதமாய் இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.
8.வருத்திக்கொண்டு பயிற்சி செய்வது
உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருக்காதீர்கள். எந்தப் பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.