ஓவியங்களாக மின்னும் 80ஸ் நாயகிகள்!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 49 Second

நடிகைகளின் படங்களை தத்ரூபமாக வரைந்து சமூக வலைத்தளத்தில் கவனத்தை பெற்று வருகிறார், சித்த மருத்துவரும் பேராசிரியருமான டாக்டர் லதா ராணி. அதிலும் இவர் குறிப்பாக 80 – 90 காலக்கட்டத்தில் திரையுலகில் கலக்கி வந்த நாயகிகளை மட்டுமே வரைந்து வருகிறார். 1985-2000களில் லதா ராணி வரைந்த ஓவியங்கள் பல செய்தித்தாள்களில் மற்றும் இதழ்களில் பிரபலமாகியிருந்தாலும், அதே ஓவியங்கள் இன்றும் இளம் தலைமுறையினரின் இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் கொண்டாடப்படுகிறது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான். சென்னையில் பிரபல கல்லூரியில் பேராசிரியராகவும், சித்த மருத்துவராகவும், கலைஞராகவும் மும்மூர்த்தியாக இருக்கும் டாக்டர் லதா ராணி, தன் அனுபவங்களை நம் தோழியருடன் பகிர்கிறார்.

‘‘குழந்தையாக இருக்கும் போது, நானும் என் சகோதரனும் அம்மாவுடன் சேர்ந்து வாசலில் கோலம் போடுவோம். எங்களது ஆச்சி சாணி மொழுகி வீட்டு வாசலை தயார்ப்படுத்தியதும், அம்மா கோலம் போடுவாங்க. நானும் என் அண்ணனும் அவங்க போடும் பெரிய கோலத்திற்கு பக்கத்தில் சின்னதா ஒரு கோலம் போடுவோம். முதலில் கோலமாவு கொண்டு கோலம் போடுகிறோம் என்ற பெயரில் கிறுக்குவோம். ஆனால் அந்த கிறுக்கலில் ஆரம்பித்து பள்ளியில் இந்திய-உலக வரைபடங்களை ரங்கோலி கோலங்களாக வரையும் அளவுக்கு பயிற்சி பெற்றேன். கோலங்களில் பல ஓவியங்களை வரைய ஆரம்பித்து அதை அப்படியே காகிதத்திலும் வரைய ஆரம்பித்தேன்.

பயாலஜி படிக்கும் போது பூக்கள், விலங்குகளின் படங்களை வரைய வேண்டும். மற்ற குழந்தைகள் அதை அவசர அவசரமாக வரைவார்கள். நான் அதை அப்படியே அச்சு அசலாக அழகாக வரைந்து ஓவியத்திற்காக தனி பாராட்டுகளை ஆசிரியரிடமிருந்து பெறுவேன். அதனால் ஓவியத்துடன் சேர்ந்து உயிரியல் பாடமும் எனக்கு பிடித்துப்போனது. பள்ளி காலத்தில் எந்த ஓவியப்போட்டியிலும் கலந்துகொள்வது மட்டுமில்லாமல் பரிசும் ெபறுவேன். படித்ததெல்லாம் தூத்துக்குடியில்தான்.

ஆசிரியர்கள் என் திறனைப் பார்த்து ஓவியத்தில் பயிற்சி அளித்தனர். பல போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தனர். நான் ஓவியத்திற்கு என தனியாக எந்த வகுப்புகளிலும் இணைந்ததில்லை. எந்த முறையான பயிற்சியும் செய்ததில்லை. என் ஆர்வத்தால் தினமும் வரைந்து பழகி என் திறமையை நானே வளர்த்துக் கொண்டேன். அப்போது தூத்துக்குடியில் ஒரே ஒரு கடையில்தான் ஓவியம் வரைவதற்கான பொருட்களை விற்பார்கள்.

அதிலும் குறைந்தபட்ச நிறங்கள்தான் இருக்கும். என் தந்தை அங்கு கிடைக்கும் பொருட்களை எனக்காக வாங்கி வந்து கொடுப்பார். எனக்கு கிடைக்கும் வண்ணங்களை இணைத்து நானே புதிய நிறங்களை உருவாக்குவேன். சென்னை வரும் வரை வாட்டர் கலரிங், ஆயில் கலரிங் போன்ற ஓவியங்களை வரைய பிரத்யேகமான காகிதங்கள் இருப்பதே எனக்கு தெரியாது. அதுவரை ஓவியங்கள் அனைத்துமே சாதாரண சார்ட் பேப்பரில் தான் வரைந்திருக்கேன். வாட்டர் கலரிங், ஆயில் கலரிங் போன்ற ஓவியங்களை வரையும் போது சார்ட் பேப்பரை கத்தரித்து இன்னொரு சார்ட் பேப்பரில் ஒட்டிக் கொள்வேன். அதுதான் நான் என் ஓவியங்களை பாதுகாக்க எடுத்த அதிகபட்ச முயற்சி. அதைத் தாண்டி அந்த காலகட்டத்தில் தூத்துக்குடியில் வேறெந்த வாய்ப்புகளும் இருக்கவில்லை.

இன்று நான் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி உள்ள ஓவியங்கள் அனைத்துமே, நான் என் கல்லூரி காலம் முதல் 2000ஆம் ஆண்டு வரை வரைந்த ஓவியங்கள் தான். அப்போது பல வானொலிகளில் என்னைப் பற்றிய செய்தி வந்துகொண்டே இருக்கும். நான் பங்குகொள்ளும் போட்டிகளில் வென்று அதன் விவரங்களும் மறுநாள் செய்தித்தாள்களில் வெளிவரும். நான் கல்லூரியில் படிக்கும்போது என் அப்பா எங்கள் ஊரில் விற்கும் பத்திரிகைகள் அனைத்தையும் வீட்டிற்கு வாங்கி வருவார். அதில் இருக்கும் படங்களை நான் வரைந்து பார்ப்பேன். அப்படித்தான் எனக்கு பிடித்த நடிகை தேவியில் ஆரம்பித்து ஒவ்வொரு நடிகையின் உருவப் படங்களையும் வரையத் தொடங்கினேன்.

முகத்தை விட ஆடைகள் மற்றும் நகைகள் மீதுதான் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், சேலைகளின் விவரங்களை நுணுக்கமாக வரைவேன். பலர் என் ஓவியங்களைப் பார்த்து நீங்கள் சினிமா ரசிகையா என்றுதான் கேட்பார்கள். ஆனால் எனக்கு தங்க நகைகள், தங்க ஜரிகைகள் கொண்ட பட்டுப் புடவைகளைத்தான் ரொம்ப பிடிக்கும். அந்த தங்க ஜொலிப்பை வரைய ஐந்து முறையாவது கோட்டிங் கொடுக்க வேண்டும். ஜெமினி சினிமா, ஃப்ரெண்ட்லைன் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் படங்கள் அனைத்தையுமே அப்போது வரைந்து வைத்திருக்கேன். பென்சில் ஓவியம், ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர், அக்ரிலிக், ஃபேப்ரிக், இந்தியன் இங்க் வாஷ் பெயின்டிங் போன்ற பலதரப்பட்ட ஓவிய முறைகளில் வரைவேன்.

ரங்கோலி, எம்ப்ராய்டரி, இலை ஓவியமும் செய்திருக்கிறேன். மந்தாரை இலையை புத்தகத்தில் வைத்து ஈரப்பதம் போனதும் அதில் வரைந்தால் பார்க்க அழகாக இருக்கும். நான் சித்தா கல்லூரி மாணவியாக இருந்ததால் பல இலைகள், தாவரங்கள் குறித்த விவரங்கள் எனக்குத் தெரியும். அதனால் பல விதமான வடிவங்களில் இருக்கும் இலைகளை தேடிக் கண்டுபிடித்து அதில் வரைவேன்.

இப்போது நான் பணியாற்றும் சித்தா கல்லூரியில், ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஓவியத்தின் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறேன். பொதுவாக ஓவியங்களை வரைவதன் மூலம் நம் மனதைக் கட்டுப்படுத்த முடியும். சாந்தமான வண்ணங்களை பயன்படுத்தும் போது, நமது மனம் அமைதியடைந்து ஒருநிலைப்படுத்தலாம். உற்சாகம் அல்லது உத்வேகம் தேவைப்
படும் சமயங்களில் குறிப்பிட்ட சில வண்ணங்களைப் பயன்படுத்தும்போது நமக்குத் தேவையான வலிமை கிடைக்கும்.

அதே போல சித்த மருத்துவத்தில், நாம் அணியும் உடையின் வண்ணங்களில் தொடங்கி, சாப்பிடும் மாத்திரைகளின் வண்ணங்கள் வரை அனைத்துமே நோயைக் குணப்படுத்தக் கூடிய தன்மை இருப்பதாகக் கோட்பாடுகள் இருக்கின்றன. வண்ணங்களைப் பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்” என்கிறார்.

தூத்துக்குடி, சென்னை எனப் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பல பத்திரிகைகளின் சிறுகதைகளுக்கும் இவர் ஓவியம் வரைந்துள்ளார். சித்த மருத்துவம் சம்பந்தமான புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். எதிர்காலத்தில் ஃபேஷன் டிசைனிங் படித்து வரும் தனது மகளுடன் இணைந்து கலை சம்பந்தமான பொட்டிக் அல்லது பயிற்சி பட்டறையை திறக்க முடிவெடுத்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கவும் தயாராகவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! (அவ்வப்போது கிளாமர்)