கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 33 Second

பிள்ளைகளின் பள்ளி வாழ்க்கை என்பது பெரும்பாலும் அவர்கள் வளரும் சூழல், குடும்பப் பின்னணி, சமூக சூழல் மற்றும் பழகும் நட்பு வட்டம் இவற்றைக் கொண்டே வெற்றிகரமாக அமைய முடிகிறது. இவற்றில் ஏதாவது ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் அறியா வயதில் அவர்களை பாதிக்கத்தான் செய்கிறது. பல்வேறு சூழல்களில் அவர்கள் வளரும் பொழுது பலவிதமான சோதனைகளை கடந்துதான் ஏணிப் படியை எட்டிப் பிடிக்கிறார்கள். இதற்கான பல்வேறு எடுத்துக் காட்டுகளை கண்டோம். மனோரீதியான மாற்றங்களைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற அருமையான தீர்வுகளை கொண்டு வருவதுதான் நம் அனைவரின் யுக்தியும் கூட. அது போன்ற பல யுக்திகளில் ஒன்றுதான் ‘தோல்வி’யைப் பற்றி எடுத்துரைப்பதும் “தோல்விதான் வெற்றிக்கு அறிகுறி” என்பதை உணர்த்துவதும் ஆகும்.

இதையே ஆங்கிலத்தில் “ஒரு போட்டியில் வெற்றி பெறுவதை விட பங்கெடுப்பது சிறந்தது” என்பார்கள். முதலிலேயே எதிலும் வெற்றி பெற்று விட்டால், நமக்கு அதன் மதிப்பு தெரியாமல் போகலாம். அதீத தன்னம்பிக்கையில் நம் முயற்சிகள் கூட தடைபடலாம். தன்னம்பிக்கை அவசியம் வேண்டும். அதுவே ‘நான்-நாம்’ என்ற ஆதிக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது. பல முறை தோல்வியை சந்தித்தவர்களெல்லாம், ஒரு முறை வெற்றி பெற்று விட்டால் போதும், அவர்கள்தான் வெற்றியின் ரகசியத்தை உண்மையில் உணர்ந்தவர்கள் ஆவர். ‘ஒலிம்பிக்’கில் சென்று பங்கெடுத்துவிட்டு வருவதே எவ்வளவு ‘பாக்கியம்’ என்பது அந்தந்தத் துறை வீரர்களுக்குத்தான் தெரியும். அப்படியிருக்கையில் மாணவச் செல்வங்களாகிய நம் பிள்ளைகளுக்கு ‘தோல்வி’, ‘வெற்றி’’ பற்றி எடுத்துக் கூறுவதும் நம் கடமை.

குழந்தை தவழ்ந்து, நீந்தி தன் முட்டியை பல இடங்களில், ஏன் கரடு முரடான இடங்களில் கூடி தேய்த்துக் கொண்டுதான் வெற்றியை எட்டுகிறது. நடக்க ஆரம்பித்து பல முறை விழுந்து எழுந்து தான் சொந்த நடை பயில்கிறது. நடக்கத் தெரிந்த மகிழ்ச்சியில், ஓடி ஓடி அடிபட்டுக் கொள்கிறது. பச்சிளம் குழந்தையின் மூலம் கூட நாம் சில பாடங்களைக் கற்க நேரிடுகிறது. “வாழ்க்கையில் விழுந்து எழுந்தால்தான் வெற்றி” என்பது புரிகிறது. அப்படியிருக்கையில் ஒரு போட்டி நடை பெறுகிறதென்றால், நமக்கும் கண்டிப்பாக வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, நாம் இதை சிறப்புற செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்க வேண்டும்.

பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். சிறப்புற பயிற்சி எடுக்க வேண்டும். அதை விடா முயற்சியுடன் செயல்படுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளில், இரண்டு வயது குழந்தையை நீச்சல் பயிற்சி எடுக்க பழக்குகிறார்கள். பளு தூக்கவும், காலில் வலுவுள்ள குழந்தைகளை கால்பந்தாட்டத்திற்கும் பயிற்சி எடுக்க ஊக்குவிக்கிறார்கள். பிள்ளைகளின் ஊக்கத்தை கண்டறிந்து, அதற்கேற்ற பயிற்சி தரும்பொழுது அவசியம் அவர்களால் சாதிக்க முடிகிறது.

எல்லாக் குழந்தைகளும் பயிற்சி பெற்றாலும், ஓரிருவரால் தான் அதை வாழ்க்கைக்குரிய கலையாக அமைத்துக் கொள்ள முடிகிறது. இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். எல்லோருமே முதல் மதிப்பெண் எடுக்கும் நிலையில் இருந்து விட்டால், மற்றவர்களை எப்படித்தான் வகைப்படுத்த இயலும்? படிப்பில் மட்டும் உச்சத்தை எட்டிவிட்டு வேறு எதுவும் தெரியாது என்பதை விட “கலைகள் பல கற்று தேர்ச்சி பெறு” என்பதுதான் நமக்கு ஏற்ற பாடமாகும். கலைகளில் எந்தக் கலையும் உயர்வு, தாழ்வு என்று பிரிக்க முடியாது. சமையல் கலை முதல் ஆடல்-பாடல் வரை அனைத்தும் அருமைதான்.

ஒரு முறை தோற்றுவிட்டேனே என்று நினைக்காமல், ஒரு அனுபவம் கிடைக்கப் பெற்றோம் என்று யோசித்துப் பார்த்தால் போதும். தோல்விகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தாது. அவை யாவும் நம் ஊக்கப் படிகள். அதீத அனுபவங்கள். முதலில் வெற்றி பெற்று வீர நடை போடுவதைவிட சில அனுபவங்கள் மூலம் கிடைக்கும் வெற்றி உறுதியானதாகவும், முழு திருப்தியைத் தருவதாகவும் அமையும். ஒரு கிராமத்து மாணவி, திறமைசாலிதான். நன்கு படித்திருந்தாள். வெளி நாட்டில் படித்து பணிபுரியும் பையனுடன் திருமணம் நடந்தேறியது. வெளிநாடு சென்றவுடன், அவள் விரும்பிய படிப்பை தருவதற்காக கணவன் பல முயற்சிகளை எடுத்தான்.

மாணவியும் படிப்பதாகக் கூறி சில துறைகளை தேர்வு செய்தாள். அவளால் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியவில்லை. கிராமத்தில் பிறந்து, அதே சூழலில் வளர்ந்ததால் வெளிநாட்டு மோகம் அவளை ஈர்க்கவில்லை. மாறாக தோல்வியே அனைத்திலும் கிடைத்தது. அவள் மனம் தளரவில்லை. வீட்டு வேலைகளிலும், சமையல் போன்ற துறைகளிலும் அவளை யாரும் ஜெயிக்க முடியாது. தெரிந்தனவற்றில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால், வெற்றி கிடைக்கலாமே என யோசித்தாள். நம் நாட்டிலிருந்து உத்தியோகத்திற்காக அங்கு சென்றுள்ள சில கணவன்-மனைவி நண்பர்களை சந்திக்க நேரும் பொழுதெல்லாம், “இங்க என்ன படித்தாய்? எங்கு வேலை செய்கிறாய்?” என்று கேட்பார்களாம். அவளுக்கு மனதிற்குள் வேதனை எழுமாம். இருப்பினும் தோல்வியை சொல்ல முடியாமல் தவிப்பாளாம்.

விருந்துக்கு வந்திருந்த ஒரு தம்பதி அவளின் சாப்பாட்டைப் புகழ்ந்து மடல் எழுதித் தந்தனராம். மேலும் அவர்கள் குடும்பத்தில் நாலு பேருக்கு திங்கள் முதல் வெள்ளிவரை சாப்பாடு தயாரித்து அனுப்பினால், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருவதாகக் கூறினார்களாம். நட்பில் ஆரம்பித்த ‘ஃபுட்சர்வீஸ்’ இப்பொழுது ஊரையே கலக்கிக் கொண்டிருக்கிறதாம். ஒரு குடும்பத்தில் தொடங்கிய சிறிய முயற்சி பல வாடிக்கையாளர்களை வீடுவரை அழைத்து வந்ததாம். உதவிக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு பெரிய ஒரு வியாபாரமாகி விட்டதாம். கேட்கும் ‘மெனு’வை தயாரித்துத் தருவதுதான் மேலும் சிறப்பு அம்சமாம். தன் மனைவியின் படிப்பு தோல்வியால் முதலில் சிறு மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் கணவனுக்கு இப்பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சியாம். காரணம் அவனின் வருமானத்தை விட மனைவி இருமடங்கு ஈட்டுவதுடன், பிரபலமாகி மிகவும் ‘பிஸி’யாம்.

‘ஒரு வழி மூடினால், மறு வழி திறக்கும்’ என்பார்களே! அதுதான் இத்தகைய நிகழ்வு என்று கூட கூறலாம். ஒருக்கால் அவளும் படிப்பில் அங்கு வெற்றிக் கொடி நாட்டியிருந்தால், அவர்கள் குடும்பமே வீட்டு சாப்பாட்டிற்கு சிரமப்பட்டிருக்கலாம். அவள் தோல்வியைக் கண்டு பயந்து ஓடி யிருந்தாலும் நம் முயற்சியும் ஈடுபாடும் கண்டிப்பாக மற்றொன்றில் வெற்றியை தேடித் தரும் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் யதார்த்தமும் அதுவே!

ஒரு துறையில் வெற்றியடைந்து விட்டால், அதன் பிறகு யாரும் நம்மிடம் என்ன படித்தோம், ஏன் அதைப் படிக்கவில்லை என்றெல்லாம் கேட்கப் போவதில்லை. நம் இலக்கை அடைவதுதான் லட்சியமாகக் கொள்ள வேண்டும். அதற்காக எவ்வளவுமுறை வேண்டுமானாலும் விழுந்து எழலாம். ஆனால் உற்சாகமும் ஊக்குவித்தலும் தான் அவர்களின் மன உறுதிக்கான ‘டானிக்’. இது முதலில் பெற்றோரிடம் கிடைத்து, ஆசிரியர்கள் உரமாகிய அறிவுடன் திடமான நம்பிக்கையை ஊட்ட, சமுதாயம் நல்ல அங்கீகாரத்தைத்தர, பிள்ளைகள் செழித்து வளரும் நம் பரம்பரைக்கும் ஆயத்தமாவார்கள். நாட்டின் எதிர்காலமே, இன்றைய நம் பிள்ளைகள் கையில்தான் உள்ளது.

இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலர் எத்தனையோ தோல்விகளை சந்தித்திருக்கிறார்கள். தோல்வியைக் கண்டு அவர்கள் துவண்டிருந்தால், அவர்கள் பெயர்கூட நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருபாய் அம்பானி(Dhirubhai Ambani) அவர்கள் தான் பெட்ரோல் பங்க்கில் வேலை புரிந்ததாகக் கூறியிருக்கிறார். அவர்களின் கடினமான உழைப்பும், தன்னம்பிக்கையும், மன உறுதியும், துவளாத மனமும் எவ்வளவு தூரம் அவர்களை உயர்த்தியுள்ளது என்பதை நம்மால் நன்றாகவே அறிய முடிகிறது.

இன்றைய சமூகத்தினருக்கு வெற்றியாளர்களின் தோல்விகளே பாடமாக இருந்து நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதுதான் உண்மை. நாடே போற்றும் உத்தமர், படிக்கும் பிள்ளைகள் முதல் நம் பாட்டி-தாத்தா வரை அனைவராலும் விரும்பப்படும் தலைவர்தான் நம் அப்துல்கலாம் அவர்கள். ‘விமான ஓட்டி’ நேர்முகத் தேர்வில் தான் மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதனால் அவர் மனம் தளராமல் உழைப்பையும், முயற்சியையும் கைவிடாமல் வாழ்க்கைப் படிகளில் ஏறினார். தன் அனுபவங்கள் மூலம் மாணவர்களுக்கு மணி மணியான கருத்துக்களை மனதில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார். அன்று ‘இன்டர்வியூ’வில் மறுக்கப்பட்டதால் பல மடங்கு வெற்றிகளைக் குவித்தார். உலகமே போற்றும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். அவர்கள் பெயரில் எத்தனை எத்தனை குழுக்கள், என்னவெல்லாம் பயிற்சிகள்! சமீபத்தில் கூட அவர் பெயரில் நூறு படைப்பாளிகள் உருவாக்கப்பட்டனர்.

மாணவர்களிடையே படைப்பாற்றலை ஏற்படுத்தும் அவர் ஆசை நடந்து கொண்டே இருக்கிறது. எவ்வித மேற்கோளும் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட அப்துல் கலாமின் மேற்கோள்களை அவசியம் படித்து அறிவார்கள்.இந்த கொரோனா காலகட்டத்தில், மாணவர்களின் பல்துறை சாதனைகள் பாதிக்கப்பட்டதால், பல தமிழ் அமைப்புகள் ‘காணொலி’ மூலம் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, மாறு வேடப் போட்டி என பல்வேறு போட்டிகள் சமையல் போட்டிகள் உட்பட நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபமாக, தேசபக்தியை வளர்க்கும் விதத்தில் தேசீயகீத பாடல் கூட ஒரு அம்சமாக நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

பள்ளிக் கல்லூரிகள் நடைபெறாத காலத்தில், இத்தகைய காணொலி நிகழ்வுகள் மற்றொரு பலனையும் தருகிறது என்று கூறலாம். மேடை நிகழ்வுகளில் பங்கு பெறுவது சிலருக்கு பயம் தரும். அப்படிப்பட்ட பிள்ளைகள் தங்கள் இடத்திலிருந்து ‘காணொலி’ நிகழ்வில் பங்கேற்கும் பொழுது தைரியமாக எதிர்கொள்கிறார்கள். பலமுறை பங்கேற்று பழகி விட்டால், நாளை மேடைமேல் நின்று நிகழ்ச்சிகள் நடத்தும் தைரியம் வந்து விடுகிறது. ஆக எதையுமே தோல்வியாகக் கொள்ளாமல், ஒவ்வொரு முறையும் நிறைய அனுபவம் கிடைக்கிறது என நினைத்துக் கொண்டால் போதும். நிறைய பிரபலங்கள் தங்கள் வாழ்வில் கிடைத்த தோல்விகளை அனுபவங்களைத்தான் எடுத்துரைப்பார்கள்.

ஒரு பிரபல பாடகர் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது. “ஒரு வாய்ப்புக்கு எத்தனையோ இடங்களில் ஏறி இறங்கி தோற்றேன். இன்று அனைவரும் எல்லாவற்றிற்கும் என்னைக் கூப்பிடுகிறார்கள். என் கைப்பேசி எண் கேட்கிறார்கள்”.ஆம். வாழ்க்கையின் வெற்றியை ஒரு சில தோல்விகள், துயரங்கள், மனக் குழப்பங்களுக்குப் பிறகே காணமுடிகிறது. கேட்கும் எதற்குமே வாயைத் திறந்து பதில் சொல்லாத ஒரு மாணவன், கொஞ்சம் அதட்டிப் பேசினாலே கண்களில் அருவி கொட்டுமளவுக்கு கோழை போன்று காணப்படுபவன், பிரபல வழக்கறிஞராக வெற்றி நடைபோடுகிறான். ஒரு பயந்தாங்கொள்ளி சிறுவன், சப்தமாகக் கூட பேசமாட்டான். அவன் சகோதரி துறு துறுவென்று காணப்படுவாள்.

எல்லாப் போட்டிகளிலும் கொடிகட்டிப் பறப்பாள். பையன் இப்படி ஒரு ‘மௌனி’யாக இருக்கிறானே என்று அவர்கள் தாய் கவலைப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதே ‘மௌனி’ பையன்தான் இப்பொழுது அவன் விமான ஓட்டியாம். எல்லா நாடுகளுக்கும் விமானம் ஓட்டிச் செல்கிறானாம். தனக்குப் பல விஷயங்களில் உதவி புரிந்த ஆசிரியர்களுடன் மீண்டும் தொடர்பில் வர விரும்புவதாகவும், தன் ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் கூறியிருந்தான். இப்படியாக, ஓரிரு நிகழ்வுகளையோ, தோல்விகளையோ வைத்து அவர்கள் இப்படித்தான் என்று சொல்லி விடவே முடியாது.

பிள்ளைகளுக்கு பெற்றோரும், ஆசிரியரும் இரு கண்களாக இருந்து சரியான பாதையைக் காட்டி அழைத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கைப் பாதையின் நுணுக்கங்கள் கல்லூரி செல்லும் காலத்தில் அவர்களுக்கே புரிய ஆரம்பிக்கும். அது வரை நாம் கூறும் விஷயங்கள் கூட அறிவுரை கூறுவதாக இல்லாமல், இப்படியும் இருக்கலாம் என்பது போன்ற ‘பாஸிடிவ்’ எண்ணங்களை வித்திட வேண்டும். இப்பொழுதுள்ள, இந்தக்கால பிள்ளைகள் அதிபுத்திசாலிகள். எதையும் எளிதாக புரிந்து கொள்வார்கள். நம் விருப்பத்தை அவர்களிடம் திணிக்காமல். அவர்கள் விருப்பத்தை கண்டறிந்து நட்புடன் கலந்து ஆலோசனைகளை மட்டும் ஓரிரு முறை சொன்னால் போதும். எப்பொழுது பார்த்தாலும் அறிவுரை சொல்வதும், பிறரை ஒப்பிட்டுப் பேசுவதும் நல்ல ஒரு உறவை ஊக்குவிக்காது. பிள்ளைகள் மனநிலை அறிந்து, அவர்கள் விருப்பம் புரிந்து செயல்படும் பொழுது, மதிப்பும் மரியாதையும் நம்மைத் தேடி வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நூறு நோய்களுக்கான ஒற்றை மருந்து…அஸ்பார்கஸ் பற்றி அறிந்துகொள்வோம்! (மருத்துவம்)
Next post ஓவியங்களாக மின்னும் 80ஸ் நாயகிகள்!(மகளிர் பக்கம்)