இசையையும் ஆன்லைனில் கற்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 23 Second

மார்கழி என்றாலே கச்சேரி மாதம் என்றாகிவிட்டது. விடியற்காலையில் தெருவீதியில் பஜனை பாடிக்கொண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை செல்வது வழக்கமாக இருந்தது. இன்றும் இந்த முறைகளை சில இடங்களில் கடைப்பிடித்தாலும், நகர வாழ்க்கையில் இவை எல்லாம் சாத்தியப்படுத்த முடியவில்லை. ஆனால் நம்முடைய பாரம்பரிய கர்நாடக சங்கீதம், வீணை, வயலின், பரதம் போன்ற கலைக்கு மரியாதை கொடுக்கும் விதமாக மார்கழி மாதம் முழுதும் கச்சேரிகள் நடைபெற்று வந்தது. குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து சபாக்களை கடக்கும் போதும் அந்த ஒரு மாதம் பலதரப்பட்ட இசையின் ஒலியினை நாம் உணரமுடியும்.

கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடம் எந்த கலை நிகழ்வுகளும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் சபாக்களில் நேரடியாக கலை நிகழ்ச்சிகள் இல்லை என்றாலும், ஆன்லைன் மூலமாக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக சென்னையை ேசர்ந்த ஆர்டியம் அகாடமி நிறுவனம் இசை மேல் ஆர்வம் உள்ளவர்களுக்காகவே ஆன்லைன் மூலமாக இசைப் பயிற்சியினை அறிமுகம் செய்துள்ளது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஜோஷி, பயிற்சி மையத்தின் செயல்பாட்டு திறன் பற்றி விவரித்தார்.

‘‘தென்னிந்தியாவின் முக்கிய அடையாளமே இங்குள்ள பாரம்பரிய இசை மரபுகள்தான். இசை மேல் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் திறமையினை வளர்த்துக் ெகாள்வதற்கான அனைத்து அம்சங்களும் இங்குள்ளது. ஒவ்வொரு குடும்பங்களில் மட்டுமில்லாமல் சமூகங்களில் உள்ளவர்கள் அனைவரும் இசை துறை மேல்  தனிப்பட்ட  மரியாதை கொண்டுள்ளனர். இசையினை கடவுளின் வெளிப்பாடாக மதித்து வருகிறார்கள்.

மேலும் இசைத் துறையில் பல ஜாம்பவான்கள் இருப்பதால் அவர்களைக் ெகாண்டு இசைக்கான பிரத்யேகமான ஆன்லைன் இசைப் பயிற்சியினை அறிமுகம் செய்ய திட்டமிட்டோம். இதற்காக பல துறையை ேசர்ந்த இசைக்கலைஞர்களை பயிற்சியாளராக நியமித்து இருக்கிறோம். மேலும் கல்விக்குழுவின் செயல்பாடு மற்றும் பாடத்திட்டங்களை முறையாக அமைப்பதற்காக பிரபல பாடகிகளான சித்ரா, அருணா சாய்ராம் மற்றும் குரல் பயிற்சியாளர் ஆனந்த் வைத்தியநாதன் அவர்களை நியமித்து இருக்கிறோம். இவர்களின் தலைமையில்தான் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு இசைக்கு ஏற்ப தனிப்பட்ட பாடத்திட்டங்களை இவர்கள் அமைத்துள்ளனர்.

இசை மேல் ஆர்வமுள்ளவர்கள் முதலில் எங்கள் நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அவர்களின் குரல் வளத்தைப் பொறுத்து பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவனுக்கு ஒரு பயிற்சியாளர் என்பதால், தனிப்பட்ட கவனம் செலுத்த முடிகிறது. மேலும் அனைத்தும் ஆன்லைன் முறையில் பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் அவர்களின் விரும்பிய நேரத்திற்கு ஏற்ப பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

இசையின் முக்கிய அம்சமான ஸ்வரம், தாளம், ராகம், வடிவம் என அனைத்து நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் மாணவர்களின் குரல்,  திறமை மற்றும் செயல்திறன் குறித்த தனித்துவத்தைக் கண்டறிந்து அதற்கான சிறப்பு வழிக்காட்டலும் அளிக்கப்படும். மாணவர்களுக்கு இசை பற்றிய முழுமையான  அறிவை வழங்குவது மட்டுமல்ல, அவர்களை உண்மையான கலைஞர்களாக  மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கம்’’ என்றார் ஆஷிஷ் ஜோஷி.

பாடகி சித்ரா  

‘‘ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அது கடவுள் கொடுத்தது. ஆனால் அவர்களின் அறிவு, திறன், இசை குறித்த ஆர்வம் மற்றும் புரிதல் இவை அனைத்தும் மேம்படுத்த முறையான பயிற்சி அவசியம். இசைதான் எனக்கு எல்லாமே. நான் இத்தனை நாள் இந்த துறையில் பெற்ற அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப இசையும் பல வித பரிணாமங்களை பெற்று வருகிறது. அவை அனைத்தும் மாணவர்கள் பெறும் வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்திருக்கிறோம்.’’

கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம்

‘‘கர்நாடக இசையினை பெரும்பாலும் தலைமுறை தலைமுறையாகத்தான் பயில்வது வழக்கம். இந்த இசையினை கற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் மட்டுமே போதாது, அசாதாரண உத்வேகம், அர்ப்பணிப்பு கொண்டிருந்தால் மட்டுமே அதன் ஒவ்வொரு படிநிலைகளையும் முறையாக கற்க முடியும். கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்க இடைவிடாத பயிற்சிகள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.’’

குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதன்

‘‘மனித இனம் பாடும் இனம். மனிதக் குரல் பாடும் குரல். நீங்கள் ஒரு மனிதர். எனவே நீங்கள் பாடலாம். ஒருவரின் இயல்பான பாடும் திறனை அறிந்து அதனை மேம்படுத்தி அவர்களின் சுய வெளிப்பாட்டினை அறிந்து சரியான பாதையினை ஏற்படுத்தி தரமுடியும். இசை மேல் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி முறை மிகப்பெரிய பரிசாகும். ஒருவரின் உண்மையான குரல் வளத்தை என்னால் மேம்படுத்த முடிகிறது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு!! (மருத்துவம்)
Next post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)