இசையில் நான் ஃப்ரீ பேட்!!(மகளிர் பக்கம்)
தனது கணவர் பாலகணேசனோடு இணைந்து பாகேஸ்வரி மேடைகளில் நாதஸ்வரம் வாசிப்பது பார்ப்பவர்களை விழிகள் விரிய பரவசப்படுத்துகிறது. கோயில் திருவிழா, சபா கச்சேரி, திருமண வரவேற்பு நிகழ்ச்சி என ஆல்வேஸ் பிஸியாக இருப்பதுடன், இதுவரை 5000க்கும் மேற்பட்ட மேடைகளுக்கு மேல் ஏறி நாதஸ்வரம் வாசித்திருக்கிறார். நாதஸ்வரத்தில் எப்படி இப்படி அசால்டு செய்து அதகளப்படுத்துகிறீர்கள் என்ற நமது கேள்விக்கு புன்னகைத்தவாறே பேச ஆரம்பித்தார்.பாகேஸ்வரி என்பது அமைதிக்கான ஒரு ராகத்தின் பெயர். எங்கள் குடும்பமே கலைக் குடும்பம் என்பதால் எனக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. எட்டு வயதில் இருந்தே மேடைகளில் நாதஸ்வரம் வாசிக்கிறேன்.
பரம்பரை பரம்பரையாக தாத்தா, அப்பா என அனைவருமே நாதஸ்வரக் கலைஞர்கள்தான். நான் குழந்தையாக இருந்தபோது நிறையபேர் அப்பாவிடம் நாதஸ்வரம் கற்பதை தூரத்தில் இருந்து நான் பார்த்தே விளையாடுவேன். அப்படியே எனது கவனம் நாதஸ்வரத்தின் பக்கம் திரும்பியது. நாதஸ்வரம் வாசிப்பது என் கனவாகவும், ஆசையாகவும் மாற, முதல்நாள் அப்பாவுக்குத் தெரியாமல் எடுத்து உதட்டுகளுக்குள் நாதஸ்வரத்தைப் பொருத்தி வாசிக்க முயற்சித்தேன்.
ஆனால் எந்த சத்தமும் அதற்குள் இருந்து வரவில்லை. முதல் நாள்.. இரண்டாம் நாள்.. மூன்றாம் நாள்.. இப்படியே அப்பா இல்லாத நேரங்களில் நான் தொடர்ந்து முயற்சிப்பதைக் கவனித்த அம்மா, அப்பாவிடம் சொல்ல, நானும் அப்பாவின் மாணவியாக அமர வைக்கப்பட்டேன். எனக்கு அப்போது வயது ஆறுதான். காலை மதியம் மாலை என மூன்று வேளையும் அப்பா மூலம் பயிற்சிகள் தொடர்ந்தது. நாதஸ்வரத்தோடு ஒன்றிப்போனேன். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த முறையான பயிற்சியால் 8 வயதில் என் அரங்கேற்றம் நிகழ்ந்தது என்றவர், மூச்சுக் காற்றை இசையாக்கும் நாதஸ்வரம் எளிதான விசயமல்ல. அதற்கு நிறையவே பயிற்சிகள் தேவைப்படும் என்கிறார்.
வீணை, வயலின், வோக்கல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்க பெண்கள் மிகவும் ஆர்வத்தோடு வருவார்கள். ஆனால் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாக மட்டுமே இருப்பார்கள். நாதஸ்வரத்தை வாசிக்க பெண்களுக்கு அவ்வளவாய் ஆர்வம் இருக்காது. நான் மேடை ஏறி முதன் முதலில் நாதஸ்வரத்தை வாசித்தபோது, சிறுமி ஒருவர் நாதஸ்வரம் வாசிக்கிறார் என எல்லோரும் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
அதன்பிறகு அப்பாவுடன் இணைந்து பல்வேறு மேடைகளில் ஏறி வாசிக்கத் தொடங்கினேன். பக்க வாத்தியமாக நாதஸ்வரம் வாசிப்பது அப்பாவுக்கு மிகப் பெரும் பலமாக இருந்தது. அப்பா இல்லாமலும் தனியாகவும் என் ஆவர்த்தனங்களை செய்ய ஆரம்பித்தேன். இதில் என் படிப்பு கொஞ்சமாகத் தடைபட, பள்ளிப் படிப்பு முடிந்ததுமே, திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மியூசிக் முடித்தேன். பெண் நாதஸ்வரக் கலைஞராய் நான் தொடர்ந்து மேடை ஏறியதில் பல்வேறு விருதுகளும் எனக்குக் கிடைத்தது. இயக்குநர் கே. பாலசந்தர், பாடகர்கள் டி.எம்.எஸ், உன்னி கிருஷ்ணன், டி.கே. பட்டம்மாள் போன்றவர்களின் கரங்களில் விருதுகளால் நான் கௌரவிக்கப் பெற்றேன்.
சென்னை பெரம்பூர்தான் எனக்குப் பூர்வீகம். திருமணமாகி நான் புகுந்த வீடு சென்றது திருவண்ணாமலை. எனது அப்பா பி.வி.என். தேவராஜ். மிகப் பெரிய நாதஸ்வரக் கலைஞர். ஒரு நிகழ்ச்சியில் நான் அப்பாவுடன் நாதஸ்வரம் வாசிப்பதை பார்த்த என் மாமனார், கலைமாமணி திருவண்ணாமலை டி.ஏ. பிச்சாண்டி என்னை அங்கேயே தன் வீட்டு மருமகளாக்க நினைத்து, அப்பாவிடம் பெண் கேட்டார் எனச் சிரித்தவர், அப்பாவும் இதற்கு சம்மதிக்கவே, நாதஸ்வரக் கலைஞர் பாலகணேசன் தனக்கு கணவராய் வந்த கதையை சுருக்கமாய் விவரித்தார்.
2009ல் எங்கள் திருமணம். திருமணத்துக்கு முன்புவரை அப்பாவோடு இணைந்து பயணித்த எனது இசைப் பயணம், திருமணத்திற்குப் பின் கணவரோடு தொடர்ந்தது. தம்பதிகளாய் கச்சேரிகளை செய்யும் இடத்திற்கு என்னை நகர்த்தியது என்றவரிடம், அப்பாவுடன் நாதஸ்வரம் வாசித்ததற்கும், கணவரோடு வாசிப்பதற்கும் மாற்றங்கள் இருந்ததா என்ற நம் கேள்விக்கு? அப்பாவின் சிலபஸில் இருந்து இவரது சிலபஸிற்கு மாறியபோது, கீர்த்தனைகள் ஒன்றாய் இருந்தாலும், சப்ஜெக்ட் மாறியது. இதனால் பாடும் விதம் வேறு மாதிரியாக இருந்தது. போகப்போக அதையும் சரி செய்து கொண்டேன்.
கணவரோடு இணைந்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும்போது உங்களுக்குள் ஈகோ இருக்கிறதா என்ற கேள்விக்கு?. திருமணத்திற்கு முன்பு பெண்களால் சுதந்திரமாக செயல்பட முடிந்திருக்கும். நாம் எடுப்பதே முடிவாகவும் இருக்கும். திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து எடுப்பதே முடிவாக மாறுகிறது. அதை புரிந்து கொண்டால் எந்த குழப்பமும் இல்லை. ஒருவர் உணர்வுக்கு ஒருவர் மதிப்பளிக்கிறோம். அவரவர் பாணியில் சுதந்திரமாய் செயல்படுகிறோம். என் சுதந்திரத்திலும், நான் தனித்து செயல்படவும் அவர் எந்தத் தடையும் விதித்ததில்லை. உனக்கென யுனிக்கா ஒன்றை தனிச்சு செய் என்றே எப்போதும் என்னை ஊக்கப்படுத்துவார்.
மேலும், திருமணத்திற்கு பின்னான பெண்களின் வாழ்க்கை வேறொரு கோணத்திற்கு மாறுவது தவிர்க்க முடியாததுதான். எனது குடும்பமே இசை சார்ந்தது என்பதால் திருமணத்திற்கு பின் பெரிய அளவில் பிரச்சனைகள் எதையும் சந்திக்கவில்லை. திருமணத்திற்கு முன்பு இசைக்காக மூன்று வேளையும் செய்து வந்த மூச்சுப் பயிற்சி, திருமணத்திற்கு பின் ஒரு வேளையாக மாறியது. அதுவும் மாலையில் மட்டுமே பயிற்சி எடுக்க முடிந்தது. தாய்மை அடைந்தபோதும், குழந்தை பேற்றுக்குப்பின்னும் அரைமணி நேரம் வாசித்தாலே சோர்வடையத் தொடங்கினேன். அந்த நேரங்களில் எனது மாமியார் பக்கபலமாக எனக்கு இருந்தார். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகம்தான். மீண்டும் பெண்களால் பழைய நிலையை கட்டாயம் அடைய முடியும். எல்லாமே நம்பிக்கையும்.. முயற்சியும்.. பயிற்சியும்தான். இசைக்கான சூட்சுமம் அதற்குள்தான் அடங்கியிருக்கிறது என்கிறார் தெளிவாக.
தபேலா, தவில், மேளம், வயலின், வீணை, கீ போர்டு, கிட்டார் என இவையெல்லாமே விரலில் நிகழ்த்தும் வித்தைகள். ஆனால் நாதஸ்வரம், சாக்ஸபோன், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகள் நம் மூச்சுக்காற்றை உள்நுழைத்து அதையே இசையாக்கி வெளிப்படுபவை. இதை எப்படி சாத்தியப்படுத்துகிறீர்கள் என்றதற்கு? மூச்சுக் காற்றை நாம் எப்படி விடுகிறோம் என்பதில்தானே இசையின் சூட்சுமம் அடங்கியிருக்கு. தொடர்ந்து 5 வருடமாவது பயிற்சிகள் இருந்தால்தான் நாம் சொல்வதை இசைக் கருவிகள் கேட்கும். அவை நமக்கானதாக மாறும். இதற்கு தேவை அதீத பொறுமை என்றவரிடம் மீண்டும், இதுல நீங்க வாசிச்சா மட்டும்தான் இந்த சத்தம் வருமா? நாங்க வாசிச்சாலும் வருமா? என்ற தில்லானா மோகனாம்பாள் பட ஜில்லு மாதிரிக் கேட்க? மீண்டும் சிரித்தவர், எந்த விசயத்தையும் திடீர்னு செய்தால் நமக்கு வராதுதானே.
எல்லாத்துக்கும் தேவை பயிற்சி. பயிற்சி செய்ய செய்ய வாசிப்பு நமக்கு வசப்படும். நமது அடிவயிற்றின் நாடி கமலத்தில் இருந்து எழும் காற்று, ஸ்வரத்திற்கு ஏற்ப லயமாய் உள் நுழைந்து, ராகத்தின் எழுத்துக்களை நாம் சரியாகப் புடிக்க அதுவே வெளிப்பட்டு இசையாகிறது. எல்லாவற்றுக்கும்மேல் இசைமீது உள்ளார்ந்த ஒரு லயிப்பு இருக்க வேண்டும். அது ரொம்ப ரொம்ப முக்கியம் என்கிறார்.
முதன்முதலில் நீங்கள் மேடை ஏறி வாசித்த அந்த நாளை பற்றிச் சொல்லுங்கள் என்றதும். எங்கு பார்த்தாலும் ஜனத் திரள் இருந்தது. மக்கள் கூட்டமாக மேடையை நோக்கிப் பார்க்க, ‘வெறும் காத்துதான் வருதுன்னு நடிகை ரேவதி பாணியில்’ உதறல் எனக்கு ஆரம்பித்தது. அப்பாதான் எனக்கு தைரியம் கொடுத்து, என்னை வாசிக்க வைத்து மேடை பயத்தை போக்கினார் என்றவரிடம், நாதஸ்வரத்தை ஆண் வாசித்தாலும், பெண் வாசித்தாலும் இசை ஒரே மாதிரிதானே இருக்கும் என்ற நமது கேள்விக்கு? முறையாகப் பயிற்சி எடுத்தவர், முறையாகப் பயிற்சி எடுக்காதவர் என்ற வித்தியாசத்தை வேண்டுமானால் உணரலாம். மற்றபடி வாசிப்பது ஆண் கலைஞரா, பெண் கலைஞரா என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது என்றார்.
ஒரே இசைக் கருவியை வாசிக்கும் இரண்டு இசைக் கலைஞர்கள் இணைந்த வாழ்க்கையில் உங்களின் உரையாடல்களும் இசை சார்ந்துதான் இருக்குமா? அதிகபட்சமும் நாங்கள் இசையோடுதான் வாழ்கிறோம். என் கலையார்வத்தை புரிந்தவர் கணவராக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. அவர் புதியதாக வரும் சினிமா பாடல்களை நாதஸ்வரத்தில் வாசித்தால் நான் பழைய பாடல்களை வாசித்து அமர்க்களப்படுத்துவேன். ஒரு சினிமாப் பாடலை நாதஸ்வரத்திற்குள் கொண்டுவருவதற்கு, எனக்கு முப்பதே நிமிடங்கள் பயிற்சி போதும். கடினமான பாடல் மட்டுமே சற்று கூடுதலாய் நேரம் எடுக்கும். அத்துடன் திரையிசைப் பாடல்களை இருவருமாக இணைந்து ப்யூசன் வடிவில் நிகழ்ச்சிகளில் மேடை ஏற்றுவதால், இசைப் பிரியர்களை தவிர்த்து, பாமரர்களுக்கும் எங்களின் இசை போய் சேர்கிறது.
இப்போது எங்கள் ஆறு வயது மகள் ஹரிணியும், எட்டு வயது மகள் கனிமொழியும் நாதஸ்வரம் வாசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களும் எங்களுடன் பயிற்சியில் இணைகிறார்கள். காலையில் குடும்பமாக அமர்ந்து வீட்டில் பயிற்சி எடுக்கும்போது வீடே இசையால் அமர்க்களப்படும் என்றவரிடம், தொடர்ந்து வீட்டில் அனைவருமாக பயிற்சி எடுக்கும்போது நாதஸ்வரமும் தவிலும் இணைந்து எழுப்பும் ஓசை பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக இருக்காதா எனக்கேட்டபோது, நீங்கள் கேட்பது சரிதான் என்றவர். பயிற்சி எடுக்கும் நேரங்களில் மட்டும் காற்று வெளியே செல்லாத அளவுக்கு ஜன்னல், கதவுகள் அனைத்தையும் அடைச்சு வீட்டை ஏர் ஃபுரூப் செய்த பின்னரே வாசிக்க தொடங்குவோம் என்கிறார்.
நாதஸ்வரத்தை என்னிடம் முறையாய் கற்றுக்கொள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் வருகின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து பயில விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையும் எடுக்கிறேன். ஒரு பெண் நாதஸ்வரக் கலைஞராக இருந்தால், நிறைய பெண்கள் இந்த இசையை விரும்பி கற்க வருகிறார்கள். நாதஸ்வரக்கலை பெண்களிடமும் வளர்கிறது என நம்பிக்கை அளித்தவர், இன்னும் நிறையப் பெண்கள் இந்தத் துறைக்கு வர வேண்டும் என்கிறார்.
நான் சிறுமியாய் அப்பாவோடு மேடைகளில் நாதஸ்வரம் வாசித்தபோதும் பலரும் என்னை ஆச்சரியத்தோடு பார்த்துச் சென்றார்கள். இன்று என் கணவரோடு இணையராய் வாசிக்கும்போதும் அதே ஆச்சரியம் கலந்த பார்வைகளையே சந்திக்க நேர்கிறது என்றவர், உணர்வுப்பூர்வமாய் முழுமையாக முயற்சித்தால் கண்டிப்பாக காற்றை இசையாக்க முடியும் என விடைபெற்றார். நம் செவிகளில் ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ என்ற அவரின் நாதஸ்வர இசை தொடர்ந்தது.