அட்டை டப்பா, கட்டில், மேஜை, சேர்…!!(மகளிர் பக்கம்)
படிப்பிற்கு ஏற்ற வேலை இருக்கிறதா? வேலைக்கு ஏற்ற படிப்பிருக்கிறதா? என்கிற விவாதம் காத்திரமாக தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வரும் சூழலில், நம் ஆர்வம் எது? அதற்காக உதவும் படிப்பு எது? அதை நோக்கியே முழுவதும் தேடல், கவனம் என தன் துறையில் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய கார்த்திக்.
‘‘ஒரு பொருள் என் கையால் செய்து அதை மற்றவருக்கு விற்கும்போதோ அல்லது கொடுக்கும் போதோ, ‘இது நானே வடிவமைத்தது…’ என சொல்லிக் கொடுப்பது பிடித்திருந்தது. மனநிறைவாகவும் இருந்தது” என்கிற கார்த்திக் தன் வெற்றிக் கதையை தோழியரோடு பகிர்கிறார். ‘‘வீட்டில் அம்மா, அப்பா, அக்கா மூன்று பேரும் ஆர்க்கிடெச்சர் துறை. இதனால் டிசைனிங் மீது அடிப்படையிலேயே ஆர்வம் இருந்ததால் மூவரிலிருந்தும் வேறுபட்டு புராடெக்ட் டிசைனராக விருப்பப்பட்டேன்.
புராடெக்ட் டிசைன் என்பது கார், உடை, பைக் என நாம் பயன்படுத்தும் பொருட்களை வடிவமைப்பது. இதற்காக 12ம் வகுப்பு படிக்கும் போதே அது சம்பந்தமாக என்ன படிப்பு இருக்கிறது என்று அலச ஆரம்பித்தேன். பள்ளிப்படிப்பு முடிக்கும் முன்னரே பூனேவில் உள்ள ரூபிகா இந்தியா என்ற வடிவமைப்பு பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பித்தேன். நேர்காணலும் நடந்தது. தேர்வுமானேன். ஆனால் என்னால் அங்கு முழுமையாக படிக்க முடியவில்லை.
மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் போது, சில காரணத்தினால் கல்லூரியை மூடும் சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் என் முன் இரண்டு வாய்ப்பு தான் இருந்தது. ஒன்று பிரான்ஸ் போவது. இல்லை என்றால் என்னுடைய கல்லூரி நிறுவனமே பூனேவில் மாற்றாக ஒரு கல்லூரியினை அமைத்திருந்தனர், அதில் சேர்வது. நான் இந்தியாவிலேயே இருந்து படிக்க முடிவு செய்தேன். ஆனால், ஒரு சின்ன சிக்கல். கல்லூரியில் தங்கும் விடுதி கிடையாது என்பதால் தனி அறை எடுத்து தங்க வேண்டிய சூழல்.
ரூமும் எடுத்துவிட்டேன். அதில் ஃபர்னிச்சர் எல்லாம் வாங்கணும். கையில் காசு இல்லை. முதலில் என்னுடைய பொருட்களை எல்லாம் அலமாரியில் அடுக்கலாம்னு, அட்டை டப்பாக்களில் இருந்து பொருட்களை பிரிக்க ஆரம்பித்தேன். அப்ப சடாரென்று என் மனதில் ஒரு சின்ன பல்ப் எரிந்தது. நாம் தான் டிசைனர் ஆச்சே! ஏன் கார்டுபோர்ட் அட்டைகளை பயன்படுத்தி நமக்கு தேவையான ஃபர்னிச்சர்கள் செய்யக்கூடாது! எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடமே அதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பிச்சேன். அழகான கட்டில், துணிகள் வைப்பதற்கு கப்போர்டு என என்னிடம் இருந்த அந்த அட்டை டப்பாக்களில் செய்ய முடிந்தது.
இப்போதைக்கு ஒரு சின்ன பிரச்னை தீர்ந்தது, பிறகு பார்த்துக் கொள்ளலாம்ன்னு விட்டுவிட்டேன். நான் தனியே இருப்பதால், என்னைப் பார்க்க என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். அவர்கள் கண்ணில் முதலில் தென்படுவது அட்டைப்பெட்டி கட்டில்தான். பார்த்து வியந்தவர்களுக்கு என் கற்பனை திறன் மற்றும் என் கைவண்ணம் பிடித்துப் போனது. எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொல்ல சொல்ல… என்னுள் ஒரு ஸ்பார்க் எழுந்தது. இதையே ஒரு தொழிலாக ஏன் முன் எடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு.
ஆனால் நான் என்னுடைய தேவைக்காக தான் கட்டில் மற்றும் கப்போர்ட் அமைச்சேன். அதையே மெருகேற்றி செய்ய நினைத்தேன்’’ என்றவர் டிசைனிங் குறித்து இந்தியா முழுக்க பல இடங்களில் வேலை பார்த்துள்ளார். ‘‘வேலை, டிசைனிங் துறையில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் கற்றுக் கொண்ட நேரத்தில் தான், கொரோனாவினால் ஒரு பிரேக் ஏற்பட்டது. சென்னைக்கு வர வேண்டிய சூழல். கொரோனா உச்சத்தில் இருந்த போது எல்லா இடங்களிலும் சானிடைசர் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதற்கான ஸ்டீலில் செய்யப்பட்ட ஸ்டாண்ட் மட்டுமே ரூ .2,000-3,000 வரை விற்பனையானது.
என்னையே தாங்கக்கூடிய கட்டில் கார்ட்போர்ட்டில் செய்யும் போது, இதை ஏன் செய்யக் கூடாதுன்னு யோசித்து செய்தேன். அதன் பயன்பாட்டு முறையை என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்தேன். பார்த்தவர்கள் செய்து தரச்சொல்லி கேட்டார்கள். அவர்கள் மூலமாக ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. ஒரே வாரத்தில் 2,000 ஆர்டர்கள். அவ்வளவும் தனியாக கையில் வெட்டி செய்ய முடியாது. அதனால் அட்டை டப்பாவில் நாம் கொடுக்கும் டிசைன்களை வடிவமைப்பவர்களை தேடினேன். இதெல்லாம் பண்ணுவாங்களானு கேட்டாங்க. சிலர் முயற்சி செய்து பார்க்கலாம்னு சொன்னாங்க. ஒரு சிலர் நிச்சயமா செய்யலாம்னு சொன்னாங்க. அவர்களோடு இணைந்து 2,000 ஸ்டேண்ட் செய்து அனுப்பினேன்.
நம்ம ஊர் மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, யூரோப், துபாய் போன்ற வெளி நாடுகளிலும் கேட்டனர். தென்னாப்பிரிக்காவில் மட்டுமே 28,000 பீஸ்கள் விற்றோம். கார்ட்போர்டில் பல மேஜிக் ெசய்ய முடியும் என்று தெரிந்த பின் ஒரு நிறுவனமாக 2020 ஆகஸ்ட் மாதத்தில் செயல்பட தொடங்கினோம். ஒரே டிசைன்களை மட்டுமே விற்க முடியாது என்பதால், அடுத்த கட்டமாக மிக்ஸ்ட் ஃபர்னிச்சர் முயற்சி செய்ய குஜராத் சென்றேன். அங்கு தான் கார்ட்போர்ட் செய்யப்படுகிற பேப்பர்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். 13 பேர் கொண்ட குழு வைத்து 53 டிசைன்களை டிரையல் அடிப்படையில் உருவாக்கினோம். அங்கு சில விஷயங்கள் கற்றுக் கொண்டு மீண்டும் சென்னை வந்த போது, கொரோனாவினால் ஒரு மாதம் பாதிக்கப்பட்டேன்.
மீண்டு வந்ததும் நான்கு பேர் வைத்து பல டிசைன்களில் பொருட்கள் உருவாக்க ஆரம்பித்தேன். நிறைய பொருட்கள் சேர்ந்ததும் இந்த ஆண்டு ஜனவரி 26-ல் எங்க நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் விற்பனைக்காக லாஞ்ச் செய்தோம். என் பொருளின் விலை குறைவு. எல்லா தரப்பினரும் வாங்கும்படி இருக்கும். ஆனால் ஷிப்பிங் சார்ஜ் அதிகமாக இருந்தது. அதாவது ஒரு சானிடைசர் ஸ்டேண்ட் ரூ.500 என்றால், அதன் ஷிப்பிங் சார்ஜ் ரூ.1500 ஆக இருந்தது. அதனால் வாடிக்கையாளர்களே அதனை அசம்பில் செய்வது போல் வடிவமைத்தேன்” என்கிற கார்த்திக், தான் விற்கும் பொருட்களின் உறுதித்தன்மை குறித்து பகிர்ந்தார்.
“கார்டுபோர்ட் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்கிறது? தண்ணீரோ அல்லது எண்ணெய் பட்டாலோ ஏதும் ஆகாதா? என்கிற கேள்வி வரலாம். நாங்கள் உபயோகிக்கும் கார்டுபோர்ட் தரம் மிக்கது. அடுத்து வாட்டர் & ஆயில் ஃப்ரூப் கொண்டது. துடைத்தால் போதும். ஒன்றும் ஆகாது. உறுதியாக இருப்பதற்கேற்றார் போல் வடிவமைக்கிறோம். இதை பயன்படுத்துபவர்கள் எளிதாக எங்கேயும் எடுத்துக் கொண்டு போகலாம். ஈக்கோ ஃபிரண்ட்லி. மாணவர்களுக்கு ஏற்றது.
குழந்தைகளும் எளிதில் கையாளும் முறையில் எடை குறைவு. அவர்களுக்கு பிடித்தது போல் டிசைன் மற்றும் வண்ணங்கள் மாற்றி அமைக்கலாம். அலுவலகங்களுக்கு மேஜை, கேபின் ரூம், டிவைடர், லேப்டாப் ஸ்டேண்ட் என வடிவமைத்துக் கொடுக்கிறோம். ரெடிமேடாக ஒரு கடை போட வேண்டும் என்றால், குட்டி வீடு அல்லது குட்டி டெண்ட் மாதிரி செய்து கொடுக்கலாம். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் எளிதாக, எல்லோராலும் ஹேண்டில் பண்ணக் கூடியதாக நாங்கள் கொடுக்கும் பொருட்கள் அழகிய வடிவில் இருக்கும்” என்கிறார் கார்த்திக்.