பெஸ்ட் ஃபுட் புகைப்பட கலைஞர்னு பெயர் எடுக்கணும்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 18 Second

அடுக்கி வைக்கப்பட்ட பேன்கேக் அதன் மேல் சொட்ட சொட்ட ஒழுகும் தேன்… ஆவி பறக்கும் மூங்கில் பிரியாணி… நுரை ததும்பும் பில்டர் காபி… படிக்கும் போதே நம்முடைய மனத்திரையில் காட்சியாக ஓடும். அந்த ஒவ்வொரு காட்சியினையும் தன்னுடைய மூன்றாவது கண்களால் படம் பிடித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பிரிசில்லா பிரியதர்ஷினி. ஃபுட் போட்டோகிராபரான இவர், ஒவ்வொரு உணவின் சுவையினை தன் புகைப்படம் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இப்பதான் மொபைல் போன். முன்பெல்லாம் எல்லாருடைய வீட்டிலேயும் ஒரு மினி டிஜிட்டல் கேமரா இருக்கும். வீட்டில் என்ன விழா அல்லது விசேஷம் நடந்தாலும் அதை புகைப்படம் பிடிச்சு ஆல்பமா பார்த்து ரசிப்பாங்க. எங்க வீட்டிலேயும் அப்படித்தான் ஒரு கேமரா இருந்தது. அப்பா, மாமா இரண்டு பேருமே வச்சிருந்தாங்க. வீட்டில் விசேஷம்ன்னா அவங்க புகைப்பட கலைஞரா மாறிடுவாங்க. அவங்க போட்டோ எடுப்பதைப் பார்த்து எனக்கும் ஃபோட்டோ எடுக்கணும்ன்னு ஆசை வந்தது.

நானும் புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் எனக்கு போட்டோகிராபி மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது. என்னுடைய விருப்பத்தை தெரிந்து கொண்டு எங்க வீட்டில் நான் 12ம் வகுப்பில் 80% மதிப்பெண் வாங்கினால், கண்டிப்பாக ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கித் தருவதாக சொன்னாங்க. நானும் படிச்சேன். ஆனா 79% சதவிகிதம் தான் எடுத்தேன். இருந்தாலும் என்னுடைய உழைப்பிற்கு மதிப்பு கொடுத்து எங்க வீட்டில் எனக்கு ஒரு சின்ன சைஸ் டிஜிட்டல் கேமரா வாங்கிக் கொடுத்தாங்க.

அந்த கேமராவை கையில் எடுத்ததும் எனக்கு அவ்வளவு சந்தோஷம். எல்லாத்தையும் படம் பிடிச்சேன். தரையில் ஊர்ந்து போகும் எறும்பு வின்னில் பறக்கும் பறவைகள் என நான் பார்த்து பிடித்த அனைத்தையும் படம் பிடிச்சேன். மேலும் நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அந்த தருணங்களை அழகாக பதிவு செய்தேன். இதற்குள் நான் கல்லூரி படிப்பும் முடிச்சேன். ஒரு எம்.என்.சி நிறுவனத்தில் வேலையும் கிடைச்சது. ஆனாலும் புகைப்படம் எடுப்பதை மட்டும் நான் நிறுத்தவில்லை. வார இறுதிநாட்கள் விடுமுறை என்பதால், அந்த இரண்டு நாட்கள் கையில் கேமராவுடன் பயணிக்க ஆரம்பிச்சிடுவேன். அலுவலக பிரஷரில் எனக்கு இந்த இரண்டு நாட்கள் தான் ரிலாக்சான நாட்களாக இருந்தது.

இந்த இரண்டு நாட்களும் வைல்ட் லைஃப் மற்றும் பறவைகளை தான் நான் படம்பிடிப்பேன். இதற்காக புலிகட் லேக், பந்திப்பூர், கபினி ஆறு, முதுமலைன்னு பயணம் செய்திருக்கேன். அதேப்போல் சென்னை என்றால் இங்கு ஈ.சி.ஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு முதல் மகாபலிபுரம் வரை சென்ற வருவேன். புகைப்படம் எடுப்பது ஒரு தனிப்பட்ட கலை. நான் ஆரம்பத்தில் எனக்கு தெரிந்த விஷயங்கள் கொண்டு தான் புகைப்படம் எடுத்து வந்தேன். அதை முறையாக கற்றுக் கொள்ள சுதீர் சிவம் அவர்களிடம் பயிற்சி பெற்றேன்.

அது மட்டுமில்லாமல் எங்கெல்லாம் புகைப்படம் எடுப்பது குறித்த வர்க்‌ஷாப் மற்றும் வெபினார் நடைபெறுகிறேதோ அதில் பங்கு பெற ஆரம்பிச்சேன். இதன் மூலம் புகைப்படம் எடுப்பது குறித்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதற்கிடையில் சில காரணங்களால் நான் என் வேலையை 2018ல் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எப்போதும் ஓடிக் கொண்டிருந்த கால்கள் ஒரு நாள் அமைதியாக இருந்தால்… என்ன செய்வதுன்னே தெரியாதுல்ல. அப்படித்தான் என்னுடைய நிலையும் இருந்தது. அந்த சமயத்தில் எனக்கு மிகவும் துணையாக இருந்தது என்னுடைய கேமரா தான்’’ என்றவர் முழுமையாக புகைப்பட கலைஞராக மாறியது பற்றி விவரித்தார்.

‘‘எனக்கு பிடிச்சது இரண்டு விஷயம். ஒன்று புகைப்படம் எடுப்பது. இரண்டாவது சாப்பாடு. நான் ஒரு ஃபுட்டீன்னு சொல்லலாம். விதவிதமான உணவுகளை சுவைத்து பார்க்க ரொம்ப பிடிக்கும். வேலையும் இல்லை… வீட்டில் சும்மா இருக்கவும் பிடிக்கல. வேலைக்கு போன போது வார இறுதிநாட்கள் புகைப்படம் எடுக்கவே வெளியே போவேன். இப்ப அப்படி போக முடியல. அதனால நான் சமைச்ச உணவுகளை நானே புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சேன். எனக்கு பிடிச்ச இரண்டையும் சேர்த்து செய்யலாம்னு பொழுதுபோக்கா தான் ஆரம்பிச்சேன்.

ஆனால் அதுவே என்னுடைய தொழிலாக மாறும்ன்னு அப்ப நான் நினைக்கல. ஃபுட் போட்டோகிராபி பொறுத்தவரை அதைப் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டணும். அதனால் எங்க வீட்டு பக்கத்தில் இருந்த டீக்கடையில் ஒரு பத்து ரூபாய்க்கு குட்டியா சமோசாக்களை வாங்கி அதை புகைப்படம் எடுத்தேன். எதை என்னுடைய வலைத்தளங்களில் பதிவு செய்தேன்.

அதைப் பார்த்து பிரபல ஓட்டலில் இருந்து என்னை அழைத்து பேசினாங்க. இந்த சமோசா எங்கு கிடைக்கிறது. பார்க்கும் போதே அவ்வளவு நல்லா இருக்கு. எங்க ஓட்டலின் காபி ஷாப்பில் வைக்கலாம்னு நினைக்கிறோம் என்றனர். நான் எங்க ஏரியா டீக்கடையில் வாங்கி தான் படம் பிடித்தேன்னு சொன்னேன். உடனே அவங்க தங்களின் ஓட்டல் உணவுகளை படம் பிடித்து தர
முடியுமான்னு கேட்டாங்க. நானும் எடுத்துக் கொடுத்தேன். பெரும்பாலும் நான் என் இன்ஸ்டாவில் பதிவு செய்வதைப் பார்த்து அழைப்பார்கள். சில ஓட்டல்களுக்கு நானே நேரில் சென்று, அவர்களின் உணவினை படம் பிடித்து தருவதாக கேட்பேன். அப்படித்தான் இந்த உணவு புகைப்படம் பயணம் ஆரம்பிச்சது.

நான் புகைப்படம் எடுப்பது எல்லாமே என்னுடைய அனுபவம் கொண்டு தான் கற்றுக் கொண்டேன். இதற்காக நான் முறையாக படிப்பு எல்லாம் படிக்கல. வர்க்‌ஷாப் மற்றும் நிறைய செல்ஃப் லேர்னிங் தான். ஒரு புகைப்படம் எடுத்தால், மற்ற பிரபல புகைப்பட கலைஞர்கள் எடுத்த புகைப்படத்தை என்னுடைய புகைப்படத்தோட ஒப்பிட்டு பார்ப்பேன். அதில் உள்ள வித்தியாசத்தை பார்ப்பேன். அதற்கு ஏற்ப மறுமுறை புகைப்படம் எடுக்கும் போது பார்த்துக் கொள்வேன். இப்படித்தான் ஒவ்வொரு விஷயமாக கற்றுக்கொண்டேன். நான் புகைப்படம் எடுக்கும் போது இந்த துறையை சேர்ந்தவர்கள் என்று எனக்கு பெரிய அளவில் நண்பர்கள் எல்லாம் கிடையாது. நானே தான் விழுந்து எழுந்து கற்றுக்கொண்டேன்.

புகைப்படம் எடுப்பது என்பது அடிப்படையான விஷயம். ஆனால் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப அவை மாறுபடும். வைல்ட் லைப் மற்றும் உணவு புகைப்படத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வைல்ட் லைப் பொறுத்தவரை அந்த மொமென்ட்டை மிஸ் செய்யக்கூடாது. உணவு புகைப்படம் பொறுத்தவரை ஏற்கனவே சமைக்கப்பட்டு இருக்கும் உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தணும். இதில் ஒவ்வொரு ஆங்கிளில் உணவின் அமைப்பு மாறுபடும். சில உணவுகளை அப்படியே நேரடியாக படம் பிடிக்கலாம். பீட்சா போன்ற உணவுகளை டாப் ஆங்கிளில் படம் பிடிச்சா நல்லா இருக்கும்.

அப்பதான் அதில் உள்ள எல்லா உணவுகளும் நன்றாக தெரியும்’’ என்றவர் இதில் உள்ள சிரமங்களைப் பற்றி விவரித்தார். ‘‘பொதுவாகவே புகைப்படத்துறை ஆண்களுக்கானது என்ற எண்ணம் தான் மக்கள் மனதில் உள்ளது. நான் லைட்டிங் கேமராவோடு போனா… நீங்க தனியா வா வந்திருக்கீங்க. உங்களால ஹாண்டில் செய்ய முடியுமான்னு கேட்பாங்க. எனக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கும். சிலருக்கு ஆண்களுக்கு சமமாக பெண் புகைப்பட நிபுணர்களால் எடுக்க முடியுமான்னு சந்தேகம் இருக்கும். அந்த நேரத்தில் சங்கடமா இருக்கும். அடுத்து இதற்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. சில நாட்கள் விடிய விடிய ஷூட்டிங் நடக்கும். அந்த சமயத்தில் விடிய காலை 2 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வருவேன்.

வீட்டில் திட்டுவாங்க. எனக்கு இது வேலை. என் பெற்ேறாருக்கு பெண்ணுடைய பாதுகாப்பு முக்கியம்ன்னு பார்ப்பாங்க. இதெல்லாம் தாண்டித்தான் நான் இந்த துறையில் எனக்கான ஒரு பாதையை வகுத்துள்ளேன். புகைப்படத் துறையைப் பொறுத்தவரை அதன் எதிர்காலம் நன்றாகவே இருக்கு. டிஜிட்டல் வந்த பிறகு இதன் மவுசு மேலும் அதிகமாயிடுச்சு. என்னதான் செல்போனில் புகைப்படம் எடுத்தாலும், கேமராவில் எடுப்பது போல் இருக்காது.

குறிப்பாக உணவு சார்ந்த புகைப்படம். இப்போது மக்களுக்கு விதவிதமாக சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதை உணவகங்களுக்கும் தெரிந்துள்ளது. மக்களை கவர வேண்டும் என்றால், புகைப்படம் அழகாக இருக்கணும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது என்னைப் போல் நிறைய பெண்கள் இந்த துறையில் இருக்காங்க. எனக்கு அவர்களின் வேண்டுகோள்… புகைப்படம் எடுப்பது ஒரு கலை. இந்தக் கலை என்றுமே அழியாது. அதனால் பல இடங்களுக்கு சென்று இது குறித்து பல அனுபவங்களை சேகரியுங்கள். புகைப்படத்தை தொடர்ந்து வீடியோவும் எடுக்க இருக்கேன். மேலும் ஃபுட் போட்டோகிராபி துறையில் பெஸ்ட் புகைப்பட கலைஞர் என்ற பெயர் எடுக்கணும்… அவ்வளவு தான்’’ என்றார் பிரிசில்லா பிரியதர்ஷினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்ப்பாலில் செயின், கம்மல், மோதிரம்!(மகளிர் பக்கம்)
Next post பித்தப்பை கற்களும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளும்! (மருத்துவம்)