என் பொம்மைகளே எனக்கான அடையாளம்! (மகளிர் பக்கம்)
22 வயதாகும் ராதிகாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர். ப்ரிட்டில் போன்ஸ் (Brittle Bones) அதாவது எளிதில் உடைக்கக்கூடிய எலும்புகளுடன் பிறந்த இவர், ஆப்ரிக்கன் பொம்மைகளை பழைய பேப்பரைக் கொண்டு கஸ்டமைஸ் செய்து வருகிறார். ராதிகா பிறக்கும் போது ஆரோக்கியமான குழந்தையாகவே பிறந்தார். ஆனால் ராதிகாவுக்கு ஐந்து வயது இருக்கும் போது முதல் முறையாக கீழே விழுந்து காலில் தீவிரமாக வலி ஏற்பட்டது. ‘‘சாதாரணமாக விளையாடி கீழே விழுந்ததும், என் தொடையில் அதிகமான வலி ஏற்பட்டது.
என் பெற்றோர்கள் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும் என எனக்கு அருகில் இருந்த க்ளினிக்கில் மருந்து வாங்கி கொடுத்தனர். எனக்கு எலும்பில்தான் அடிபட்டிருக்கிறது என யாருக்குமே அப்போது தெரியவில்லை. வலி குணமாகாததால், எங்களுடைய சொந்த ஊருக்கு சென்றோம். அங்கே எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்து ப்ளேட் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அது கொஞ்சம் பெரிய சர்ஜரி என்பதால், ஒரு வருடம் அங்கேயே தங்கி இருந்தோம். அப்போதும் என்னுடைய உண்மையான பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லோரும் நான் கீழே விழுந்ததால்தான் அடிபட்டிருப்பதாக நினைத்தார்கள்.
திரும்பி வந்த ஆறே மாதத்தில் மீண்டும் அதே இடத்தில் எனக்கு அடிபட்டது. என்னுடைய எலும்புகள் வலுவாக இல்லாததால் மீண்டும் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. என்னுடைய குழந்தை பருவம், விளையாட்டு பருவம் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் படி கழிந்தது. அப்போது என்னுடைய பக்கத்து வீட்டில் வசித்த பெண் என் அம்மாவிடம் என்னை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும்படி சொன்னார். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது இந்த பிரச்சனை ஆரம்பித்ததால் இரண்டாண்டுகளாக நான் பள்ளிக்கே செல்லவில்லை.
இரண்டாவது மூன்றாவது வரை பள்ளிக்குச் சென்றேன்.
என்னை தினமும் பள்ளிக்கு யாராவது தூக்கிக்கொண்டுதான் போவார்கள். என்னால் மற்ற குழந்தைகளோடு விளையாட முடியாது. வகுப்பில் ஆசிரியர்களும் என்னை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். ஆனால் திடீரென என்னுடைய முதுகெலும்பு கொஞ்சம் கொஞ்சமாக வளைய ஆரம்பித்தது. அப்போது தான் ஏன் எலும்பு சம்பந்தமா பிரச்னை வருகிறது என்று என் பெற்றோர் உண்மையிலேயே என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள். பல பரிசோதனை செய்து பார்த்த போது, நான்கு இடத்தில் எலும்பு முறிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் உடைந்து போகும் தன்மையில் உள்ளதாக கூறினார்கள்.
கீழே விழுந்து அடிபட்டு தான் உடையும் என்றில்லை. தாமாகவே என் எலும்புகள் உடையலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். மற்றபடி உடலில் எந்த பிரச்னையும் இல்லை, ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினர். என்னுடைய எலும்பில் ஏற்பட்டு இருக்கும் பிரச்னை ப்ரிட்டில் போன்ஸ் (Brittle Bones) எனும் அரிதான குறைபாடு என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சாதாரணமாக இருப்பவரைவிட என்னுடைய எலும்புகள் அதிக நேரம் நடந்தால், லேசாக அடிபட்டாலே உடைந்துவிடும்.
மேலும் எலும்புகள் நான் எந்த நிலையில் அதிக நேரம் இருக்கிறேனோ அதே போல வளைந்து போகக் கூடிய தன்மையும் கொண்டதாக தெரிவித்தனர். என் முதுகு எலும்ப வளையவும் இது தான் காரணம், இதற்கு அறுவை சிகிச்சை செய்தால், 50% வெற்றி பெறலாம், இல்லையென்றால் நடக்கக் கூட முடியாமல் படுக்கையிலேயே இருக்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்றனர். அதனால் அறுவை சிகிச்சையை தவிர்த்து உடற் பயிற்சி மற்றும் முதுகு எலும்பிற்கான பெல்ட் போட்டுக்கொண்டு சமாளித்து வருகிறேன்.
என்னுடைய முதுகெலும்பில் மூன்று வளைவுகள் உள்ளது. என்னால் முழு நேரம் உட்கார முடியாது. ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தால், அடுத்த ஒரு மணி நேரம் நிச்சயம் படுக்க வேண்டும். உணவும் ஆரோக்கியமானதாக சாப்பிடவேண்டும். அறுவைசிகிச்சையே வேண்டாம் என்றிருந்த எனக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுகளால் 2010க்குள் நான்கு முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. அதற்கு பின் நடக்கவே இரண்டு ஆண்டுகளானது. அறுவை சிகிச்சை முடிந்தும், என் உடல் பற்றிய விவரம் தெரிந்த போது மற்ற குழந்தைகள் போல ஓடியாடி விளையாடலாம் என்ற என் கனவு முற்றிலும் நொறுங்கிப் போனது. விளையாட மட்டுமில்லை சரியாக நடக்கவே முடியாது என்பதும் தெரியவந்தது.
இதனால் மனதளவில் நான் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். பள்ளிக்கு போக முடியாது, நண்பர்களை சந்திக்க முடியாது, நான் நானாக இருக்க முடியாது என்று பல சிந்தனைகள் என்னை ரொம்பவே வாட்டி வதைத்தது. என் பெற்றோர்கள் எனக்கான மருத்துவ செலவிற்காக கடினமாக உழைத்தனர். அம்மா வீட்டில் எல்லா வேலையும் முடித்துவிட்டு டெய்லரிங் செய்வார்கள். நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடும் என் பெற்றோர்களால் என்னுடன் உட்கார்ந்து நட்பாக பேச கூட நேரம் இருக்கவில்லை. என் உடலளவிலான பிரச்சனை மட்டுமே என் குடும்பத்திற்கு தெரிந்ததே தவிர மனதளவில் நான் பாதிக்கப்பட்டிருக்கேன் என்பதை அவர்கள் உணரவில்லை.
எப்போதும் துறுதுறுவென கலகலப்பாக பேசக்கூடியவள் நான். என் பிரச்னையைப் பற்றி தெரிந்ததும் அப்படியே அமைதியாகிட்டேன். வீட்டில் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டிவி பார்ப்பேன், மற்றபடி யாருடனும் பேச மாட்டேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை என் அண்ணன் தான் கண்டுபிடித்து, முதல் தளத்தில் இருந்த எங்க வீட்டை தரைத்தளத்திற்கு மாற்றினார். அதன் பிறகு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கும் வழி வகுத்தார்.
நான்காம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய நான் நான்கு வருடம் கழித்து எட்டாம் வகுப்பினை கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்’’ என்றவர் தன்னுடைய 16ம் வயதில் தான்வீட்டை விட்டு வெளியே வந்து தெருக்களில் நடக்க ஆரம்பித்துள்ளார். ‘‘என் எலும்பு பிரச்னையால், சில அடி எடுத்து வைத்தாலும் வலிக்கும். மாத்திரை, மருந்து எல்லாம் போட்டுக் கொண்டு நடப்பேன்.
எட்டாம் வகுப்பினை வெற்றிகரமாக முடித்ததால், ஹோம் ஸ்கூலிங் முறையில் பத்தாவதும் படித்து முடித்தேன். 11 மற்றும் 12ம் வகுப்புகளை பள்ளியில் படிக்க நினைத்தேன். என் நிலமை காரணமாக அரசுப் பள்ளிகள் உட்பட அட்மிஷன் கொடுக்கவில்லை. என்னைப் பார்த்து பேச கூட அவர்கள் நேரத்தை ஒதுக்கவில்லை. ஏன் படிக்க ஆசைப்பட்டோம் என்ற அளவுக்கு அந்த காத்திருப்பு என்னை வறுத்தியது.
கடைசியாக ஒரு பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் காத்திருந்த காரணத்தால் என்னால் பள்ளிக்கு சென்று படிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை குறைந்து போனதால், வீட்டிலிருந்தே என் படிப்பை தொடர்ந்து, +2வினை வெற்றிகரமாக முடித்தேன். அந்த சமயத்தில் தான் படிப்பை தாண்டி கலைப் ெபாருட்களை வடிவமைப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. டி.வியில் அது குறித்த நிகழ்ச்சியைப் பார்த்து சின்ன சின்ன கைவேலைப்பாடுகளை செய்தேன். என் ஆர்வத்தை பார்த்து, என் அண்ணன் மற்றும் பெற்றோர் அது சார்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தாங்க. வீட்டுக்குள்ளேயே கொஞ்சம் நல்ல விதமாக பொழுதுபோகும் விஷயங்களை செய்ய ஆரம்பித்தேன்.
எனக்கு கணினி, செல்போன் எல்லாம் பயன்படுத்த தெரியாது. யுடியூப், கூகுள் என்றால் என்ன என்பது கூட தெரியாது. அவர் தான் எனக்கு யுடியூபில் கலைப் பொருட்கள் செய்வதற்கான வீடியோக்களை எப்படி பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். நான் செய்வதைப் பார்த்த பலர் அதை காசு கொடுத்து வாங்க முன் வந்தார்கள். அந்த தொகை கலைப்பொருட்கள் செய்வதற்கான பொருட்களை வாங்கவும், என் படிப்பு மற்றும் டியூஷன் செலவிற்கும் கைக்கொடுத்தது. அந்த சமயத்தில் தான் அண்ணாவின் நண்பர் ஒருவர் ஆப்ரிக்கன் பொம்மைகள் செய்யும் வீடியோவை பகிர்ந்தார். பழைய பேப்பர், மூங்கில் குச்சிகளை வைத்து செய்யப்படும் பொம்மைகள்.
முதலில் என்ன குச்சி குச்சியாக இருக்குன்னு யோசித்தேன். நிறைய பேர் விரும்பி கேட்டதும் செய்ய ஆரம்பித்தேன். அதன் பின் அதிலேயே புதுப்புது வடிவங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற ஆர்வம் எனக்குள் தொற்றிக் கொண்டது. பல வண்ணங்களில், அழகான உடைகள் கொண்டு அலங்காரம் செய்ய ஆரம்பித்தேன். உடைகளைத் தாண்டி, கையில் கிட்டார், மேளம் போன்ற பொருட்கள் கொண்டு பொம்மைகளை வடிவமைத்தேன்.
பிறகு சமூக வலைத்தளத்தில் ஒரு பக்கம் ஆரம்பித்து அதில் பொம்மைகளின் புகைப்படங்களை பதிவிட்டேன். அதைப் பார்த்து ஒரு சிலர் அவர்களுக்காக கஸ்டமைஸ்ட் பொம்மைகளை செய்யச் சொல்லி கேட்டனர். அதுவும் செய்து கொடுத்தேன். நண்பர் ஒருவர் புக் ஸ்டால் வைத்தார். அதில் என் பொம்மைகளையும் வைக்க சொன்னார். நான்கே நாட்களில் என் எல்லா பொம்மைகளும் விற்பனையானது. அப்போது தான் இந்த பொம்மைகளை விரும்பி வாங்குபவர்களுக்கு தெரியப்படுத்தினால் கண்டிப்பாக வாங்குவார்கள் என்று புரிந்தது’’ என்றவர் மூன்றடிக்கு பொம்மை ஒன்றை ஒரு உணவகத்திற்காக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளிலும் இவரின் பொம்மைகளை விரும்பி வாங்குகிறார்கள்.
‘‘ஒரு முறை கொலுவில் வைக்க வேண்டும் என்று பொம்மைகள் செய்து தரச்சொன்னார். என்னுடைய பொம்மைகள் எல்லாம் கருப்பு நிறத்தில் தான் இருக்கும். நான் அதை சொன்ன போது, அவர் ‘கோயில்களில் இருக்கும் கடவுளின் உருவச் சிலைகளும் கரு நிறத்தில் தானே இருக்கிறது. அப்போது நாம் கருமையை தீட்டு என்று நினைப்பதில்லையே. அதே போல, உங்களுடைய கரு நிற பொம்மைகளும் நல்லதையே குறிக்கும்’ என்றார்.
என் பொம்மைகள் தான் என் அடையாளம். வீட்டிலேயே அடையாளம் இல்லாமல் போய்விடுவோமோ என்று பயந்த எனக்கு, இந்த பொம்மைகள்தான் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. கோபமாக இருந்தாலும் வருத்தமாக இருந்தாலும் எனக்கு இந்த பொம்மைகள் செய்யும் போது எல்லாமே மறந்துவிடும். பள்ளிக்குச் செல்வதே சவாலாக இருந்த போது, முதல் முறையாக ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்து 400 மாணவர்களுக்கு முன்னால் பேச சொன்னார்கள். என்னை இரண்டு நிமிடம் பேசுங்கள் என்றார்கள். நான் 26 நிமிடங்கள் பேசினேன். இது வரை இருபதுக்கும் அதிகமான பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும், பொம்மைகள் செய்ய சொல்லி தருவதற்கும் சென்றிருக்கிறேன்” என்றார்.
பல விருதுகளை பெற்றிருக்கும் ராதிகா, திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்ஸ், கஸ்டமைஸ் கிஃப்ட்ஸ் செய்து தருகிறார். பார்பி பொம்மைகள் ஆண்டாண்டுகளாக புகழ்பெற்றிருப்பதை போல, தன் பொம்மைகளும் தனிப்பட்ட அடையாளம் பெற வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருக்கிறது. இது தவிர, அரசாங்கம் சார்பாக, இவருடைய பொம்மைகளை கண்காட்சியில் ஸ்டால் அமைக்கும் வாய்ப்பும் சிறிய அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்றும் ராதிகா விரும்புகிறார்.