குழந்தைகளை கொண்டாடுவோம்!(மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 12 Second

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியரை தாக்குவது போலவும், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்துவது போலவும், போதை பொருட்களை பயன்படுத்துவது போன்றும் காணொளிகள் சமூக வளைத்தலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மாணவர்களின் இந்த நிலை குறித்து சிலரிடம் பேசியபோது…

சுடரொளி, ஆசிரியர்.

ஆசிரியருக்கும் குழந்தைகளுக்குமான முரண்பாடு காலம்காலமாக இருந்து வரும் ஒன்று. இங்கே குழந்தைகளைக் குற்றவாளியாக்கி நாம் தப்பிக்க முயல்கிறோம். குழந்தைகள் பாடத்திட்டத்தில் இருந்து விலகி வெளியே கவனத்தை திருப்புவதற்கான அத்தனை கூறுகளும் (exposure) அவர்களைச் சுற்றி நிகழ்கிறது. கல்வியில் இருந்து விலகி வெளியேறுவதற்கான அத்தனை அழுத்தங்களையும் நாம் கல்விக்குள்ளும் வைத்திருக்கிறோம். ஒரு மிகப் பெரிய சிஸ்டத்தில் இருக்கும் குளறுபடி கடைநிலையில் நேருக்கு நேர் சந்திக்கும் இருவரை இங்கு பாதிக்கின்றது.

குழந்தைகள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றால் பள்ளிக்கூடங்களை சுற்றி போதைப் பொருட்கள் ஏன் சுலபமாகக் கிடைக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?

காரணிகளை நாம் குழந்தைகளுக்கு சுலபமாகக் கொடுத்துவிட்டு, விளைவுகளை பூதாகரமாக்கி வெளிப்படுத்தி குழந்தைகளை குற்றவாளியாக்குகிறோம்.  கொரோனா காலகட்டத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டது கொஞ்ச நஞ்ச அழுத்தம் கிடையாது. பெரியவர்களே மிகப் பெரிய அச்சத்தில் வாழ்ந்திருக்கிறோம். குழந்தைகள் அச்சத்துடன், கல்வி சார்ந்த இடர்பாடுகளையும் சந்தித்திருக்கிறார்கள்.

இடம் பெயர்தல், பொருளாதார நிலைமை போன்றவை அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல்களையும் உருவாக்கி இருக்கிறது. பயம், பதட்டத்துடன் போக்குவரத்து நெரிசலுக்குள் பயணித்து வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாய் வேறொரு முறையற்ற வாழ்க்கைக்குள் சென்று பல சவால்களை சந்தித்துவிட்டு திரும்பும் குழந்தைகளிடம் நாம் படிப்பு என்கிற அழுத்தத்தை மேலும் திணித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பேச வருவதைக் காதுகொடுத்துக் கேட்க நமக்கு நேரமில்லை. நெறிபிறண்ட நடவடிக்கைகளோடு வரும் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களை எப்படி ஆற்றுப்படுத்த வேண்டும் என்கிற பயிற்சியும் ஆசிரியர்களுக்கு இல்லை.

குழந்தைகள் என்னவாக மாறி வருகிறார்கள் என்பதை கல்வி துறை உள்பட ஆசிரியர்கள் உள்வாங்க வேண்டியது இங்கே முக்கியம்.குழந்தைகளுக்கு ஏற்ற சிலபஸ் இல்லை. தேவையான கட்டமைப்பு வசதிகள் பள்ளியில் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை. தேர்வு குறித்த அழுத்தம் என இரு தரப்புமே அழுத்தத்துடனே பயணிக்கிறார்கள். இதில் வெளியில் இருக்கும் மொத்த பிரச்சனையும் பிரதிபலிக்கும் இடமாக ஆசிரியர், மாணவர் உறவு மாறி நிற்பதுடன், தவிர்க்க முடியாத காரணங்களால் மாணவர்கள் மீதே ஆசிரியர்கள் அழுத்தங்களை திணிக்கிறார்கள். விளைவு மாணவர்கள் ஆசிரியர்களின் எதிரிகளாக மாறி நிற்கிறார்கள். இந்தச் சூழலை ஆசிரியர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பார்வை ஆசிரியர்களுக்கு இருந்தால் மாணவர்களிடத்தில் அவர்களின் அணுகுமுறை மாறும்.

அதற்காக மாணவர்களை கட்டவிழ்த்து விடச் சொல்லவில்லை. தண்டனைதான் தவறுகள் நடக்காமல் இருக்க வழிகோலும் என்பதை நாம் இன்னும் முழுமையாக நம்புகிறோம். குச்சி ஆசிரியரின் கையில் இருந்து பறிக்கப்பட்டதால்தான் தவறுகள் நடப்பதாகவும் நினைக்கிறோம். அரசும் அப்படியே நம்புகிறது. குழந்தைகளுக்குத் தண்டனை என்பது அவர்களை திருத்துவதற்கான வாய்ப்பல்ல.

இராமசாமி,ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

மனிதர்கள் கற்றுக்கொள்வதில் தேர்ந்தவர்கள். அந்தக் கற்றலை நாம் கல்வி, பாடத்திட்டம், தேர்வெனச் சுறுக்குகிறோம். ஏட்டுக் கல்வியில் அனைத்தையும் திணிக்க முயல்கிறோம். அதை ஒட்டியே சிந்திக்கின்றோம். நம் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிப்பதும் வன்முறையே. நம்மை அறியாமலே கல்வியின் அழுத்தத்திற்குள் சென்று விட்டோம். பத்தாவது படிக்கும் ஒரு குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பமே அழுத்தத்தில் இருக்கிறது.

நிறையக் கொடுத்தால் அறிவு வரும் என பலர் நினைக்கிறார்கள். வழங்கும் உணவு செரிமானமாகி நின்றால்தானே அது சக்தி.


புத்தகத்தை திருடிப் படித்த மேதைகள் பிறந்த நாடு இது. டார்வினை Orgin of the Species எழுத வைத்தது அவரின் தேடல் ஆர்வமே. எழுத்தாளர் கி. ராஜநாராயணன் ‘மழைக்காக பள்ளிக்கூடம் ஒதுங்கிய நான்.. பள்ளியில் இருந்து மழையை பார்க்கிறேன்’ என எழுதினார். எழுத்தாளர் ஜெயகாந்தனும் பள்ளிக்கூடம் இடைநின்றவரே. ஆனால் இன்று அவரை பி.எச்டி மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். முன்னாள் முதல்வர் கலைஞர், ஏ.ஆர் ரகுமான், சச்சின் டெண்டுல்கர் இவர்களை ஏற்கிறோம். ரசிக்கிறோம். ஆனால் நம் வீட்டில் ஒரு குழந்தை படிக்கத் தவறினால் அவர்களை தண்டனைக் குரியவர்களாக மாற்றுகிறோம். அறிவைப் பெற இங்கு திறந்த வெளி தேவை. பள்ளிக்கூடங்கள் மட்டுமே அதைத் தந்துவிடாது.

குழந்தையின் வளர்ச்சிக்கு ஐவர் பங்கும் முக்கியம். முதலாவது அரசு. இரண்டாவது பெற்றோர். மூன்றாவது ஆசிரியர். நான்காவது சமூகம். ஐந்தாவது மாணவர்கள். இதில் எது தன் கடமையை செய்யத் தவறினாலும் அது ஆசிரியர் மீதும் குழந்தைகள் மீதும் பழியாய் மாறும். ஒரு சில வகுப்பறைகளில் ஆசிரியருக்கும் மாணவருக்குமான முன்பின் நிகழும் நிகழ்வுகளின் நீட்சியே இவை. அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு  அடுத்த நிமிடமே அமையலாம்.எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.

டிராமா செல்வம், ஆசிரியர்.

குழந்தைகளை நோக்கி மட்டுமே குற்றம் சுமத்திவிட முடியாது. கேள்விகளை மாணவர்களை நோக்கி எழுப்பாமல் நம்மை நோக்கி எழுப்பினால் இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். ஒரு டிராமா ஆசிரியராகச் சொல்கிறேன், ஊடகங்களுக்கும் இதில் மிகப் பெரும் பங்குண்டு. ‘அசுரன்’ படம் வெளியானதும் பல மாணவர்களின் பார்வை மாறியது. ஹீரோக்கள் பேசும் வசனங்களை குழந்தைகள் அப்படியே உள்வாங்கி அந்த கதாபாத்திரமாய் மாறி வாழ்ந்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். ‘பீட்ஸ்’ படம் வெளியான மறுநாளே தலை முடியை கோதுவதில் தொடங்கி செருப்பு போடுவது, சட்டை போடுவது, நடை, உடை, பார்வை என அத்தனையும் மாற்றுகிறான்.

‘சார் இந்த வீடியோ பார்த்தால் பயமா இருக்கா?’ எனக் கேட்கிறான் ஒரு மாணவன்.  நான் ஆமாடா என்றால். அவன் ‘இனிமேல் பயங்கரமா இருக்கும்  சார்’ என ‘பீட்ஸ்’ பட வசனத்தை அதே உடல் மொழியில் பேசுகிறான். இதுவும் ஒரு போதைதானே. 30 பேரில் அவன் ஒரு பீட்ஸாகவும், ஒரு புஸ்பாவாகவும், ராக்கியாகவும் வாழ ஆசைப்படுகிறான். கலை படைப்பு என பாராட்டப்படும் படத்தில்கூட ஆசிட் ஊற்றுவதையும், விதவிதமாக கொலை செய்வதையும் க்ளோசாகக் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும் மாணவர்கள் மனதில் வன்முறை விதைக்கப்படுகிறது. 100 பேரை ஹீரோ வெட்டும் கலர்ஃபுல் ஸ்டிக்கர் விளம்பரத்துடன் செல்லும் பேருந்தைப் பார்க்கும் குழந்தையின் மனதில் அந்த காட்சி படிகிறது. இது சமூகம் மீதான குற்றமா? குழந்தையின் மீதான குற்றமா?

ஒரு படைப்பாளி படைப்பை உருவாக்கும்போது அது குழந்தைகளையும் போய் சேரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சுப.தென்பாண்டியன், வழக்கறிஞர், மாநில குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்.

ஐ நா சபையில் 1989 குழந்தை உரிமைக்கான  சட்டத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன் அடிப்படையிலே குழந்தைகளுக்கான பல சட்டங்கள் இங்கு இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, குழந்தைகள் எளிதில் ஆபத்துக்கு உள்ளாகக்கூடியவர்கள் (vulnarable). குழந்தைகள் ஒன்றும் அறியாதவர்கள்(innocents). குழந்தைகள் நம்மை சார்ந்து வாழ்பவர்கள்(dependent)என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமூகத்தை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புரிந்துகொள்ள அவர்களுக்கு 18 ஆண்டுகள் எடுக்கிறது. அதுவரை அவர்கள் குழந்தையே. அவர்களை பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு என்கிறது.

இளம் சிறார் நீதி சட்டம் 74 பிரிவில் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிட்டால் 6 மாதம் முதல் தண்டனை உண்டு.

கோவையில் குழந்தையின் அடையாளத்தை வெளியிட்டதற்கு 21 யுடியூப் சேனல்கள் தடைசெய்யப்பட்டது. கதுவா பாலியல் பலாத்காரத்தில் குழந்தையின் அடையாளத்தை வெளியிட்டதற்காக பத்திரிகைகளுக்கு 10 லட்சம் ரூபாய் உச்ச நீதி மன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு குழந்தை தவறு செய்தால் அது வீடியோவாக இங்கே வெளிவருகிறது. அதை தொடர்ந்து பல பழைய வீடியோக்கள் திட்டமிட்டு இங்கு பரப்பப்படுகிறது.

நமது மக்கள் தொகையில் 45 சதவிகிதம் குழந்தைகள் இருக்கிறார்கள். 3 கோடிக் குழந்தைகளில் 1 கோடி குழந்தைகள் பள்ளி மாணவர்கள். அதில் 80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். இந்த நிலையில் அரசுப் பள்ளிகளின் பெயர்களை தரம் தாழ்த்துதல் கூடாது. குழந்தைகள் ஏன் இந்தத் தவறை செய்தார்கள் என நாம் கேட்பதில்லை. அவர்களை பேசவும் நாம் அனுமதிப்பதில்லை. ஆய்வும் மேற்கொள்வதில்லை. வாழ்வுரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்கும் உரிமை என்கிற குழந்தைகளின் நான்கு உரிமையை ஆசிரியர்கள் புரிந்துகொண்டார்களா? இதற்கு தகுந்த மாதிரி தங்களை தகவமைத்துக்கொண்டார்களா? என்பதிலும் இங்கே சிக்கல் உள்ளது.

கொரோனாவுக்கு பின் ஒன்றரை லட்சம் குழந்தைகள் இன்னும் பள்ளிக்கு வராமலே இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துவரவே அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம். பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு பள்ளியிலும் பெட்டி வைத்து குழந்தைகள் மனதில் என்ன உள்ளது என்பதை வெளிக் கொண்டுவரவேண்டும். பள்ளிகளில் மனநல ஆலோசகரை நியமித்து, பாதை மாறும் குழந்தைகளை பேச வைக்க வேண்டும். நமது குழந்தைகள் அனைவரையும் ஈர்ப்பவர்கள். அவர்கள் நம் மகிழ்ச்சி. நமது சொத்து. அவர்களை நாம் சரியாகப் புரிந்து செயல்படவேண்டும்.

டாக்டர் சுனில்குமார் மருத்துவ உளவியல் நிபுணர்/குழந்தைகள் உளவியலாளர்

குழந்தைகளை நாம் இன்று அச்சுறுத்தலாக பார்க்கிறோம். சமூக உளவியல் கோணத்தில் இதற்கான மூலம் என்ன என்பதை நாம் பார்க்காமல் குழந்தைகள் மாறிட்டாங்க என உள்ளடக்குவது அவலம்.  பாஸிட்டிவ் டிசிப்பிளின் என்கிற ஒரு விசயம் குறித்து யாரும் இங்கு பேசுவதில்லை. குழந்தைகளை ஊக்குவிக்கிறோமா? அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோமா? சமமாக நடத்துகிறோமோ? என்பது இங்கு மிகவும் முக்கியம்.

குழந்தையின் செயலை பாராட்டி ஊக்கப்படுத்தும்போது, இந்த சமூகத்திற்கு நான் தேவை என அவன் தன்னை நம்ப ஆரம்பிப்பான். Part of the society என்கிற மனநிலை அவனுக்குள் வரும். நான் இந்த வீட்டில் முக்கியமானவன். எல்லா முடிவுகளையும் என்னையும் கலந்து ஆலோசித்தே எடுக்கிறார்கள்.  நான் இந்த குடும்பத்தின் அடையாளம் என நினைத்தால் அவன் ஒழுங்காக இருப்பான். அச்சுறுத்தலற்ற உலகில் நானிருக்கிறேன் என அவன் உள்மனம் நினைக்க வேண்டும். அந்த பாதுகாப்பு இல்லாதபோது தவறான செயல்களில் ஈடுபடுவான்.

குழந்தைகள் மீது நாம் என்ன மாதிரியான அழுத்தத்தை செலுத்துறோம் என்பதில்தான் அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள்.

இதை விடுத்து அடிதடி விசயங்கள் மூலமாக குழந்தைகளை நெறிமுறை படுத்தமுடியும் என்கிற பழையகால முறையினை யோசித்தால், கவனத்தை தன் பக்கம் திருப்புவது (attention seeking). பழிவாங்குதல் (Revenge). இயலாமை (inadequacy). போன்ற விசயங்களை மாணவர்கள் கையிலெடுப்பார்கள். ஒரு நடத்தை உருவாவதற்கான காரணம், பிறழ்வு நடத்தையாகப் போவதற்கான காரணம், அதை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியான கோணத்தில் அணுகாமல், கருத்தியலைத் தூக்கிப் பிடிப்பது தவறான செயல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!(அவ்வப்போது கிளாமர்)
Next post கோடைகால குளு குளு ரெசிபீஸ் !! (மகளிர் பக்கம்)