வாழ்க்கை + வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)
‘சென்றெட்டு திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”
என்ற மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப கலைச்செல்வங்கள் கொணரும்போது பணச்செல்வமும் நமது நாட்டில் பெருகுவது பொருளாதார வளம்தானே. அத்தகைய பொருளாதார வளத்தினை நம் நாடு பெறுவதற்கு பெருமளவில் உதவுபவர்கள் அயல்நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள். நமது குடும்பத்தைச் சார்ந்த பலர் அயல்நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இந்தியாவில் தொடங்கி நடத்தும் கணக்குகள் குறித்தும், அயல் நாட்டுக்குப் பணம் அனுப்புவது குறித்தும், அயல்நாட்டிலிருந்து பணம் பெறுவது குறித்தும், அயல்நாட்டு நாணயம் (Foreign Currency) பெறுவது, கையிருப்பு கொள்வது, பயண அட்டையில் (Travellers’ Card) பதிவேற்றுவது, இன்னும் இவற்றை யொட்டிய பல சந்தேகங்கள் உள்ளன. அவற்றைக் குறித்துப் பேசுவோம்.
இந்தியாவில் பிறந்து அயல்நாட்டில் வசிக்கும் / பணியாற்றுபவர்கள் இந்தியாவில் வங்கியில் தொடங்கி நடத்தும் கணக்கே என்.ஆர்.ஐ (NRI – Non-Resident Indian account) கணக்காகும். இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தில், பல்வேறு அனுமதிக்கப்பட்ட சேவைகளைப் பெற வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இந்த கணக்கினை துவங்கலாம். இது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிப்பவர்களுக்குப் பொருந்தாது. இந்தியக் குடிமகன் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது குடியுரிமைச் சட்டம் 1955 இன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டவர். ஓ.சி.ஐ (OCI_ Overseas Citizen of India) அட்டை வைத்திருப்பவரும் இந்திய வங்கியில் கணக்கு துவங்கலாம்.
என்.ஆர்.ஐ (NRI) கணக்குகள்
(1) என்.ஆர்.இ (NRE – External) – வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வெளிப்புற கணக்கு : இந்திய ரூபாயில் நிர்வகிக்கப்படும் இந்தக் கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்துதான் பணம் அனுப்பமுடியும். டாலராகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அனுப்பினால் அதனை இந்திய ரூபாயில் மாற்றி கணக்கில் வரவு வைப்பர். இந்தியாவில் வருமானமீட்டும் பணத்தை இந்தக் கணக்கில் செலுத்த முடியாது. இந்தக் கணக்கில் உள்ள தொகையை மீண்டும் வெளிநாட்டு வங்கிக்கு மாற்றலாம். என்.ஆர்.ஐ /பி.ஐ.ஓ ஆகவுள்ள இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டாகக் கணக்கைத் (Joint Account) துவக்கி நடத்தலாம். இந்தக் கணக்கில் அங்கீகாரம் பெற்ற (Power of Attorney) இந்தியாவில் உள்ளவர் பரிவர்த்தனை செய்யலாம். அங்கீகாரம் வழங்கும் ஆவணத்தின் (Power of Attorney) அசல் படிவத்தினை வங்கிக்கு வழங்கவேண்டும்.
சேமிப்புக் கணக்காகவோ, நடப்புக் கணக்காகவோ, தொடர்வைப்புக் கணக்காகவோ, நிலைவைப்புக் கணக்காகவோ துவக்கலாம். வெளிநாட்டிலுள்ள வங்கிக்கு மாற்றக்கூடிய பரிவர்த்தனைகள், அதாவது வெளிநாட்டிற்கு பணமாக அனுப்பக்கூடியவை மட்டும்தான் இந்தக் கணக்கில் வரவு வைக்க அனுமதிக்கப்படும். ரிசர்வ் வங்கி அனுமதித்தபடி வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்குள் முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு கிடைக்கும் வட்டி, லாபம், ஈவுத்தொகை (Dividend), ஓய்வூதியம் ஆகியவற்றை இந்தக் கணக்கில் வரவு வைக்கலாம்.
உள்நாட்டில் செலுத்தவேண்டிய வரி, கட்டணம், முதலீடுகள், வெளிநாட்டு வங்கிக்கணக்கிற்கு அனுப்ப வேண்டிய தொகை, பிற என்.ஆர்.இ / எப்.சி.என்.ஆர் கணக்கிற்கு மாற்ற வேண்டிய தொகை ஆகியவற்றுக்காக இந்தக் கணக்கில் பற்று வைக்கலாம். இந்தக் கணக்கில் உள்ள பணத்திற்கு சொத்து வரியோ, வருமானவரியோ கிடையாது. வருமானத்திற்கு வரி செலுத்துவதைத் தவிர்க்க அதேநேரத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் நிர்வகிக்கும் கணக்கிற்கு அதிக பணம் அனுப்ப மிகச் சிறந்த கணக்கு என்.ஆர்.இ. கணக்கில் உள்ள பணத்திற்கான வட்டிவங்கியால் நிர்வகிக்கப்படுகிறது.
(2) என்.ஆர்.ஓ (NRO – Non-Resident Ordinary Account) சாதாரண கணக்கு : வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஈட்டும் வருமானத்தை இந்திய ரூபாயில் செலுத்தக் கூடிய கணக்கு. இதில் உள்ள தொகையை வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அந்தந்த வங்கியிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இந்தியாவில் உள்நாட்டு பண பரிவர்த்தனைக்கு இதனைப் பயன்படுத்தலாம். ரூபாய் 50,000/-த்துக்கு மேல் பணமாக செலுத்தினால் அந்தப்பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். என்.ஆர்.ஐ / பி.ஐ.ஓ ஆகவுள்ள ஒருவரும் இந்தியாவில் வசிப்பவரும் இணைந்து கூட்டாகக் கணக்கைத் துவக்கலாம்.
ஆனால் அந்தக் கணக்கில் முதல் நபர் வெளிநாட்டில் வாழும் இந்தியராக இருக்கவேண்டும். சேமிப்புக் கணக்காகவோ, நடப்புக் கணக்காகவோ, தொடர்வைப்புக் கணக்காகவோ, நிலைவைப்புக் கணக்காகவோ துவங்கலாம். தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின்படி (Liberalised Remittance Scheme) உள்நாட்டில் உள்ளவர் வெளிநாட்டில் பணியில் உள்ளவருக்குப் பணம் அனுப்பவேண்டுமெனில் அதனை இந்த என்.ஆர்.ஓ கணக்கில் வரவு வைக்கலாம். இரண்டு என்.ஆர்.ஓ கணக்குகளிடையே பண பரிவர்த்தனை செய்ய அனுமதியுண்டு.
அந்நியச் செலாவணி மேலாண்மை விதிமுறைகள் 2016ன் படி இந்தக் கணக்கிலிருந்து வரையறுக்கப்பட்ட தொகையை வெளிநாட்டு வங்கிக்கு அனுப்பமுடியும். அதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெறவேண்டும். உள்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு உச்ச வரம்பு இல்லை. கணக்கு வைத்துள்ள நபரின் வருமான அட்டவணைப்படி வருமானவரி வசூலிக்கப்படும். கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி வங்கியால் நிர்ணயிக்கப்படும். நேபாள் மற்றும் பூட்டான் நாடுகளில் வசிப்பவர்களும் இந்தியாவில் இந்தக் கணக்கைத் துவங்கலாம். கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 160ன் படி இந்திய நிறுவனங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து வைப்புத்தொகை பெறமுடியும்.
(3) வெளிநாட்டு நாணயக் கணக்கு [FCNR (B)] : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக, குறிப்பாக அவர்கள் வெளிநாட்டு நாணயங்களான டாலர், பவுண்ட் ஆகியவற்றில் இந்தக் கணக்கினை வைத்து நடத்தலாம். இந்தக்கணக்கில் இந்திய ரூபாயை செலுத்த முடியாது. இதில் உள்ள தொகையை வெளிநாட்டில் இயங்கும் வங்கிக்கிளைக்கு அனுப்பலாம். என்.ஆர்.ஐ / பி.ஐ.ஓ இவர்கள் இருவராகவோ அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து கூட்டாகக் கணக்கைத் துவக்கி நடத்தலாம். நிலைவைப்புக் கணக்காக மட்டும்தான் நடத்த முடியும். அவ்வாறு துவக்கப்படும் நிலைவைப்பின் வரையறை காலம் ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி வங்கியால் நிர்ணயிக்கப்படும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் கணக்கினை துவங்க தேவையான ஆவணங்கள்
(1)பயனில் உள்ள கடவுச் சீட்டின் நகல் (Copy of valid Passport)
(2)வருமானவரித்துறை வழங்கிய நிரந்தரக் கணக்கு எண் (PAN) (அல்லது) பூர்த்திசெய்யப்பட்ட படிவம் 60 (Form 60)
(3)செல்லுபடியாகும் விசா / பணி அனுமதி அட்டை / வெளிநாட்டு குடியிருப்பாளர் அடையாள அட்டை (இவற்றில் ஏதாவது ஒன்று என்.ஆர். ஐ என்பதை உறுதி செய்ய வழங்க வேண்டும்.)
(4)முகவரிச் சான்று
(5)கணக்குத் துவக்க – என்.ஆர்.இ (NRE) எனில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பவேண்டும் / வெளிநாட்டு வங்கியிலிருந்து வழங்கப்படும் காசோலையாக இருக்கலாம்.
பல வங்கிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் அங்கு வசிக்கும் இருப்பிடச் சான்று கோருகின்றன. வசிக்கும் நாட்டில் அரசாங்கம் வழங்கிய தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு ரசீது (மின்கட்டணம் / எரிவாயு/ குடிநீர் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம்), வெளிநாட்டு வங்கி வழங்கும் வங்கிக்கணக்கு அறிக்கை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வெளிநாட்டு இருப்பிடச் சான்றாக வழங்கலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு தமக்கான மற்றும் தம் குடும்பத்திற்கான கணக்கைத் துவக்கினால் மட்டுமே பணம் அனுப்பமுடியும். உள்நாட்டில் சேமித்து, முதலீடுகள் செய்ய இயலும். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றபிறகுதான் இந்தியாவில் வங்கிக்கணக்கு தொடங்கமுடியும்.
வெளிநாட்டுப் பயணத்திற்கான பணம் வெளிநாட்டுக்கு பயணிக்கும் போது, பயணர் அட்டையின் மூலம் நாம் எடுத்துச் செல்லும் பணத்தின் உச்சவரம்பு அளவை நிர்ணயிக்கலாம். தனிப்பட்ட சுற்றுலா / ஓய்வுப் பயணத்திற்கான உச்சவரம்பு ஒரு வருடத்திற்கு 10000 அமெரிக்க டாலர்.
வணிகப் பயணத்திற்கான உச்சவரம்பு ஒரு வருடத்திற்கு 25000 அமெரிக்க டாலர் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இந்த வரம்புக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை. சர்வதேச மாநாடு, கருத்தரங்கு, பயிற்சியரங்கு, ஆய்வுப் பயணம் ஆகியவை வணிக நோக்கப் பயணமாகக் கருதப்படும். வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான செலவுக்காக 100000 அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பலாம் / எடுத்துச் செல்லலாம்.
இதற்கு மேலும் பணம் அனுப்பவேண்டும் எனில் வெளிநாட்டு மருத்துவமனை வழங்கும் செலவு / கட்டணப்பட்டியல், சிகிச்சை விவரம், உரிய ஆவணங்கள் வழங்கி அனுமதி பெற்று அனுப்பலாம். கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாகக் கருதப்படுவர். வெளிநாட்டில் தங்கி படிப்பதற்கு 100000 அமெரிக்க டாலர் வரை இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு பணமாற்றம் செய்யலாம். இந்திய வங்கிகளில் கல்விக்கடனாகப் பெற்ற அல்லது சொந்தப் பணம் / நண்பர்களிடமிருந்து / உறவினர்களிடமிருந்து பெற்ற பணம் என்ற ஆதார வகையில் அனுமதி வழங்கப்படுகிறது.
பணமாக எவ்வளவு கொண்டு செல்லலாம்
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும்போது வெளிநாட்டுப் பணமாக கொண்டு செல்வதற்கு உச்சவரம்பு உள்ளது. அமெரிக்க டாலர் 2000 அல்லது அதற்கு ஈடான அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பணம் மட்டுமே எடுத்துச் செல்லமுடியும். ஈராக் மற்றும் லிபியா நாடுகளுக்குச் செல்பவர்கள் அமெரிக்க டாலர் 5000 வரை பணமாக பெற்றுச் செல்லலாம். மேலும் வெளிநாட்டு பணத்தாள் இந்திய ரூபாய் 50000த்திற்கு சமமானது அல்லது அதற்குக் குறைவான மதிப்பெண்ணில் பணமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் / வங்கியில் செலுத்தி பெறலாம். இந்திய ரூபாய் 50000த்திற்கு மேல் என்றால் வங்கி பணமாற்று பரிவர்த்தனை அல்லது காசோலை மூலம்தான் அன்னியச் செலாவணியைப் பெறமுடியும்.
வெளிநாடு சென்று திரும்பிய பிறகு 90 நாட்களுக்குமேல் வெளிநாட்டு பணத்தாளை கைவசம் இந்தியாவில் வைத்திருக்க அனுமதி இல்லை. மீண்டும் வெளிநாடு செல்லவேண்டியவர்கள் அமெரிக்க டாலர் 2000 வரை கையிருப்பாக வைத்திருக்கலாம். பயணியர் அட்டையில் (Foreign Travel Card) வெளிநாட்டுப் பணம் மிச்சமிருந்தால் இந்தியாவிற்கு வந்து 180 நாட்களுக்குள் அதனை இந்திய ரூபாயாக வங்கியின் மூலம் / அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணமாற்றும் நிறுவனம் மூலம் மாற்றவேண்டும்.
வெளிநாட்டு நாணயங்களை (Coins) கைவசம் வைத்திருக்க அனுமதி உண்டு. வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் இங்கு வரும்போது பணத்தாளாக இந்திய ரூபாய் 5000 வரை கைவசம் வைத்திருக்கலாம். வெளிநாட்டு பணத்தாளாக, பயணர் அட்டையின் மூலம் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 10000 அமெரிக்கா டாலருக்கு அதிகமாகக் கொண்டுவந்தால் விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் நாணய அறிவிப்புப் படிவத்தில் (Currency Declaration Form- CDF) அந்தப் பணம் குறித்த தகவலோடு கடவுச்சீட்டு எண், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை எழுதி சுங்க அதிகாரிகளிடம் வழங்கவேண்டும். சுங்க அதிகாரி வழங்கும் ஒப்புகை சீட்டினை கடவுச் சீட்டுடன் வைத்திருக்க வேண்டும்.
பயணியர் அட்டை
வெளிநாட்டில் நமது செலவுக்காகத் தேவைப்படும் பணத்தைக் கொண்டு செல்வதற்கு மிகவும் எளிய, பாதுகாப்பான வழி பயணியர் அட்டையைப் பெறுவதாகும். நமது தேவைக்கு ஏற்ப, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அமெரிக்க டாலராகவோ, பவுண்ட் ஸ்டெர்லிங்காகவோ , ஈரோ (Euro), ஜப்பானிஸ் யென் (Yen) மேலும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பணமாக இந்த அட்டையில் வங்கியின் மூலம் பதிவேற்றி பயன்படுத்தலாம்.
இந்த அட்டையைப் பயன்படுத்துவோருக்கு சிறப்புச் சலுகைகள், பொருட்களை பெறும் இடங்களில் விலை / கட்டணத்தில் தள்ளுபடிகள் கிடைக்கும். செலவழிக்கும் பணம் குறித்த விவரம் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வந்துவிடுவதால் பாதுகாப்பானது. பயணியர் அட்டை தொலைந்தால் உடனே வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்குப் பணம் தேவைப்படும்போது அவர்களிடம் இந்த பயணியர் அட்டை இருந்தால் அந்த விவரத்தை வைத்துள்ள பெற்றோர் இந்தியாவிலிருந்தே வங்கியின் மூலம் அந்த அட்டையில் பணம் கட்ட முடியும். இந்தியாவிற்கு திரும்பி வரும்போது அட்டையில் உள்ள செலவாகாத பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நன்கொடைஇந்தியாவில் உள்ள ஒருவர் வெளிநாட்டில் வசிப்பவருக்கு அல்லது நிறுவனத்திற்கு நன்கொடையாக ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக அமெரிக்க டாலர் 5000 வரை அனுப்பலாம். அதற்குமேல் அனுப்ப வேண்டுமெனில் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை.
இந்தியரில்லாத ஒருவர் துவக்கும் கணக்கு இந்திய வம்சாவளியைச் சேராத ஒருவர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தால் அவர் என்.ஆர்.ஓ (NRO – Non-Resident Ordinary Account) சாதாரண கணக்கினை துவக்கலாம். வெளிநாட்டிலிருந்து அவர் கொண்டுவரும் பணம் அல்லது அவரின் வெளிநாட்டு வங்கிக் கணக்கிலிருந்து மாற்றும் பணம் ஆகியவற்றின் மூலம் வங்கிக்குத் தேவைப்படும் ஆவணங்களை வழங்கி கணக்கினைத் துவங்கலாம்.
இந்தக்கணக்கு ஆறு மாதத்திற்குள்ளான காலத்திற்குத்தான் அனுமதிக்கப்படும். உள்நாட்டில் ஈட்டப்படும் வருமானம் இந்தக் கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது. அந்த நபர் மீண்டும் வெளிநாட்டிற்குத் திரும்பும்போது கணக்கில் உள்ள நிலுவைத் தொகையை வெளிநாட்டிலுள்ள அவரின் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். ஆழ்கடலில் அள்ள அள்ளக் குறையாத செல்வம் போல வங்கித்துறையில் நாம் மூழ்கி எடுக்கவேண்டிய முத்துக்கள் ஏராளம். மேலும் கற்போம்.