மறக்கப்பட்ட உணவுக்கான காலண்டர்! (மகளிர் பக்கம்)
புத்தாண்டு பிறக்கும் போது பொதுவாக எல்லாரும் ஒரு சபதம் எடுப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக உணவு விஷயத்தில். இந்த வருடம் ஜங்க் உணவுகளை தொடமாட்டேன்… ஆரோக்கியமான உணவினை மட்டுமே சாப்பிடுவேன்னு எல்லாம் சொல்வாங்க. ஆனால் அதை ஒரு மாதம் கடைப்பிடித்தால் அதிகம். இப்படி நாம் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்த பல உணவுகளை இன்று மறந்தேவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த உணவுகள் குறித்து நாட்காட்டி மூலம் நினைவுப்படுத்தி வருகிறார் பெங்களூரை சேர்ந்த மீனாட்சி பூபதி. இவர் சஹாஜா சாம்ருதா அமைப்பு மற்றும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) என்ற அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து ‘ஃபர்காட்டென் ஃபுட்ஸ்’ என்ற தலைப்பில் காலண்டர் ஒன்றை அமைத்துள்ளார்.
பெங்களூரில் ஐ.டியில் வேலை பார்த்து வரும் மீனாட்சிக்கு உணவு மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. ‘‘எங்க குடும்பத்தில் உணவிற்கு ரொம்பவே முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். எந்த உணவாக இருந்தாலும் அம்மா தான் வீட்டில் சமைச்சு தருவாங்க. எனக்கு தெரிந்து நான் கல்லூரியில் படிக்கும் ேபாது தான் பர்கரையே முதல் முறையா சுவைத்து பார்த்தேன். என்னதான் துரித உணவுகள் சுவையாக இருந்தாலும், எனக்கு நம்முடைய பாரம்பரிய உணவு மேல் தனிப்பட்ட மதிப்புண்டு.
மேலும் அப்பாவிற்கு வேலை ரீதியா பல இடங்களுக்கு மாற்றம் ஏற்படும். அந்த நேரத்தில் கூட அம்மா அந்த ஊரில் உள்ள பாரம்பரிய காய்கறிகளை தான் வீட்டில் சமைச்சு தருவாங்க. அவங்களின் பழக்கம் நான் வேலைக்கு போன பிறகும் என்னை தொற்றிக் கொண்டதுன்னு சொல்லலாம். என்னுடைய அலுவலகத்தில் நான் மதிய உணவு என்ன கொண்டு வருகிறேன்னு தான் பார்ப்பாங்க. காரணம் நான் பெரும்பாலும் நம் பாரம்பரிய உணவான பிரண்டை துவையல், மணத்தக்காளி கூட்டு, கரிசலாங்கண்ணி பிரட்டல், செம்பருத்தி டீன்னு கொண்டு போவேன். அதை பார்த்து என்னுடன் வேலை பார்ப்பவர்கள் வித்தியாசமா இருக்ேகன்னு சொல்வாங்க.
அப்பதான் என்னுடைய சகோதரி இந்த உணவுகளை நீ ஏன் ஆவணப்படுத்தக்கூடாதுன்னு கேட்டா. எனக்கும் அது சரின்னு பட்டது. அதனால் என்னுடைய முகநூல் பக்கத்தில் இந்த உணவுகளின் சமைக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் பற்றி குறிப்பிட்டேன். அப்போதுதான் தெரிந்தது. இது போன்ற உணவுகள் குறித்து தெரிந்துகொள்ள பலர் ஆர்வம் கொண்டுள்ளனர் என்று. ஒரு முறை நான் பசலைக்கீரை குறித்த விவரங்களை வீடியோவாக பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்த ஒருவர் இந்த கீரை அவரின் தோட்டத்தில் அதிகமாக படர்ந்திருப்பதாகவும். அதை சமைத்து சாப்பிடலாம் என்பது இது நாள் வரை தெரியவில்லை என்றும் அது குறித்த செய்தியினை பகிர்ந்ததற்கு நன்றியும் தெரிவித்திருந்தார்’’ என்றவர் காலண்டர் திட்டத்தில் இணைந்தது பற்றி குறிப்பிட்டார்.
‘‘எனக்கு பாரம்பரிய உணவுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதன் வெளிப்பாடு தான் காலண்டர் அமைக்கும் திட்டத்தில் இணைக்க வைத்தது. கர்நாடகாவில் மிகவும் பிரபலமான அரசு சாரா தொண்டு நிறுவனர் சஹாஜா சம்ருதா. இதன் நிறுவனர் கிருஷ்ணபிரசாத், பத்து வருடங்களுக்கு முன் இவர் இதை அமைத்தார். இவர்களின் முக்கிய நோக்கமே விவசாயிகளின் வளர்ச்சி குறித்து திட்டங்கள் அமைப்பது.
குறிப்பாக இயற்கை முறையில் விவசாயம் பற்றிய திட்டங்கள் மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி நெல்களை சேகரித்து விவசாயிகள் இயற்கை முறையில் பயிரிட உதவி செய்கிறார்கள். இவர்களை பற்றி நான் படித்திருந்தாலும் கிருஷ்ணபிரசாத் அவர்களை நான் சந்தித்தது இல்லை. ஒரு முறை எங்களின் ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற வொர்க்ஷாப்பில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய பாரம்பரிய உணவு தேடல் குறித்து அவரிடம் பகிர்ந்தேன். ஆர்வமாக கேட்டவர் 2021ம் ஆண்டு காலண்டரை பாரம்பரிய உணவு குறித்து செய்யச் சொல்லி என்னிடம் கேட்டார். எனக்கும் அது ஒரு நல்ல யோசனையாக தோன்றியது. எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
கடந்த இரண்டு வருடமாக இந்த காலண்டரை நான் அவருடன் இணைந்து செயல்படுத்தி வருகிறேன்’’ என்றவர் இதற்காக பல தேடல்களில் ஈடுபட்டுள்ளார். ‘‘சஹாஜா சம்ருதா… ஒவ்வொரு வருடமும் பாரம்பரிய உணவு குறித்து காலண்டர்கள் வௌியிடுவது வழக்கம். பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் குறித்து காலண்டர்கள் ஏற்கனவே வெளியிட்டுவிட்டதால், இந்த முறை மறந்துபோன உணவுகள் குறித்து வெளியிட திட்டமிட்டோம். என்னுடைய முகநூலில் பதிவு செய்திருந்த உணவுகள் குறித்து மேலும் சில விவரங்கள் மற்றும் அதனை எவ்வாறு சமைக்கலாம் என்று குறிப்பு எடுத்தேன். சில உணவுகளை பிரபல உணவு ஆலோசகர்கள் மற்றும் ஃபுட் பிளாக்கர்கள் கொண்டு அமைத்தேன்.
சில உணவுகளை கிராமத்தில் உள்ள பாட்டிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். பிரண்டை துவையல் மற்றும் தூதுவளை சட்னியை அவரின் பாட்டியிடம் முறையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகு தான் அதை காலண்டரில் பதிவு செய்தேன். 2020ம் ஆண்டு கனடா மற்றும் ஆங்கிலத்தில் வெளியானது. இது நல்ல வரவேற்பினை ெகாடுக்க, ராஜஸ்தானை சேர்ந்த வாக்தாரா என்ற அமைப்பு ஹிந்தியில் வெளியிட வேண்டி எங்களை அணுகினர். அதே காலண்டரை சித்திரை மாதம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டோம்.
அப்போது தான் இதையே ஏன் தமிழில் வெளியிடக்கூடாதுன்னு தோன்றியது. என்னுடைய எண்ணத்தை கிருஷ்ணபிரசாத் சாரிடம் தெரிவிக்க அவர் சென்னையில் உள்ள தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியை (NABARD) அணுகினார். அவர்களும் ஆதரவு அளிக்க… இந்தாண்டு மேலும் சில மாற்றங்கள் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனை வெளியிட்டு இருக்கிறோம்.
இவை எல்லாம் நம்முடைய பாரம்பரிய உணவு என்பதால். தமிழ்நாட்டு மக்களால் இந்த உணவுகளை உணர்வுபூர்வமாக பார்க்க முடியும். இன்றைய தலைமுறையினருக்கு இதை பற்றி விவரம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் வீட்டில் பாட்டி அல்லது அம்மாக்கள் இதை சமைத்து சாப்பிட்டு இருப்பார்கள். அப்படி மறந்து போன உணவுகளை நாம் தினமும் பார்க்கும் போது, ஒரு நாள் சமைத்து தான் பார்க்கலாமேன்னு எண்ணம் ஏற்படும்.
அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த காலண்டர் ஆறு தாள்கள் கொண்டது. ஒவ்வொரு தாளின் பக்கத்திலும் இரண்டு மாதத்திற்கான காலண்டர்கள் இருக்கும். அதன் மறுபக்கம் ஒரு உணவு குறித்த விவரம் மற்றும் அதனை சமைக்கும் முறைகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதேபோல் ஆறு தாள்களின் இரண்டு பக்கங்களையும் வடிவமைச்சிருக்கிறோம்’’ என்ற மீனாட்சி இது குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார்.