செல்லுலாய்ட் பெண்கள் 95!! (மகளிர் பக்கம்)
‘கபட மாயாஜால அரக்கனிடம் சிக்கும் கண்ணனின் தங்கை நான் என்பது உண்மையானால், கண்டவர் நடுங்கிடும் அஸ்திரக் கலை தேர்ந்த காண்டீபன் மனைவி நான் என்பது உண்மையானால், இந்தக் கணையாலே அந்தக் கண்மூடி அரக்கன் மாய வேண்டும்’… மாயக் கண்ணனின் தங்கையும் வில் வித்தையில் தேர்ந்தவனுமான அர்ஜுனன் மனைவியும் மாவீரன் அபிமன்யுவின் தாயுமான சுபத்திரை, கானகத்துக்குள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து நின்று மாயப் போர் செய்யும் கடோத்கஜனை எதிர்த்து நின்று, வில்லையும் அம்பையும் கையிலெடுத்து அவனை நோக்கி வீராவேசமாகப் பேசும் வசனம் இது.
1957ல் வெளியான ‘மாயா பஜார்’ திரைப்படத்தில் இக்காட்சி இடம் பெற்றது. வீரமும் துணிவும் மிக்க பெண்ணாக இக்காட்சியில் மிகச் சிறப்பாக நடித்தவர் பழம்பெரும் நடிகை ருஷ்யேந்திரமணி. ‘மதுர கான சரஸ்வதி’ என விருது பெற்றதுடன் ‘ராயலசீமா ராணி’ என்றும் அக்கால நாடக ரசிகர்களால் வியந்து போற்றிக் கொண்டாடப்பட்டவரும் கூட. ஆந்திரத்தில் பிறந்து தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்துப் பேரும் புகழும் பெற்றவர் நடிகை ருஷ்யேந்திரமணி. 1950களில் முன்னணி கதாநாயகர்களாகக் கோலோச்சிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற நாயகர்களின் தாயாராக நடித்தவர். பசுப்பலேட்டி கண்ணாம்பா போலவே கம்பீரம் மிக்க குரலும் அசாத்தியமான உடல்மொழியும் வாய்க்கப் பெற்றவர்.
தெலுங்கு பூமி தந்த அளப்பரிய சொத்து 1917 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று பிறந்தவர் ருஷ்யேந்திரமணி. ஒருங்கிணைந்த அன்றைய மதராஸ் ராஜதானியில் அமைந்த விஜயவாடா இவர் பிறந்த ஊர். பெற்றோர் இட்ட பெயர் ருத்ராவதி. பின்னர் நாடகத்திற்காக ருஷ்யேந்திர மணி என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவே என்றும் நிரந்தரமாக நிலைத்துப் போனது. மிகவும் அபூர்வமான, எந்த மொழியிலும் வேறு எவருக்கும் வைக்கப்படாத மிக அழகான பெயரும் கூட.
தன் பெயரிலேயே ஒரு தனித்தன்மை வாய்க்கப் பெற்றவர். நாடக, திரைப்பட நடிகை, முறையாக சாஸ்திரிய இசையைப் பயின்ற பாடகி, பல திரைப்படங்களில் பின்னணிப் பாடகி, குச்சிப்புடி மற்றும் பரத நாட்டியக் கலைஞர் எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். 60களில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த காஞ்சனாவிடம் ருஷ்யேந்திர மணியின் தோற்றமும் முகச்சாயலும் தென்பட்டது ஓர் அதிசயமான ஒற்றுமை.
தெலுங்கு நாடக உலகின் திறமைசாலி ருஷ்யேந்திர மணியின் தாயார் ஒரு நாடக நடிகை. இசை, நாட்டியம் நன்கு கற்றுத் தேறியவர். அம்மா நடிப்பதைப் பார்த்து இவருக்கும் இசை மற்றும் நடிப்பு, நாடகம் என கலைகளின் மீது மிக இளம் வயதிலேயே பேரார்வம் எழுந்தது. தாயாரே குருவாகவும் இருந்து தன் மகளுக்கு இசை, நாட்டியத்தைக் கற்பித்தார். விளைவு 1924 ஆம் ஆண்டில் ஏழு வயதிலேயே ருஷ்யேந்திர மணி மேடையேற்றம் கண்டார். நாடகத்துக்கான வசனங்களை மனப்பாடம் செய்வது, நடிப்பது என்பது அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவருக்குள் படிந்து போனது.
பத்து வயதில் கிருஷ்ணன் மற்றும் பிரஹலாதன் என பாலபார்ட் வேடங்களை ஏற்றுச் சிறப்பாக நடிக்கத் தொடங்கினார். குழந்தை மேதையாகவே அவர் தெலுங்கு நாடக உலகினரால் கொண்டாடப்பட்டார். அந்நாளில் பிரபலமாக இருந்த கொம்மூரி பட்டாபி ராமய்யாவின் லட்சுமி விலாஸ நாடக சபாவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். மிக இளம் வயது சிறுமியாக இருந்தாலும் திறமை வாய்ந்தவராக இருந்ததால் மூத்த நாடகக் கலைஞர்களான கபிலவாய் ராமநாத சாஸ்திரி மற்றும் புவ்வுல ராமதிலகம் ஆகியோர் தாமாகவே முன்வந்து நடிப்புப் பயிற்சி அளித்துப் பயிற்றுவித்தனர். அவர்கள் அளித்த பயிற்சிக்குப் பின் ருஷ்யேந்திர மணி, சிந்தாமணி நாடகத்தில் சித்ராவாகவும், சாவித்திரி நாடகத்தில் வாசந்தியாகவும் மிகச் சிறப்பாக நடித்துப் பேரும் புகழும் பெற்றதுடன் நாடக உலகில் தவிர்க்க முடியாதவராக மாறினார்.
தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகம்
1931 ஆம் ஆண்டு அக்கால வழக்கப்படி 14 வயதில் ருஷ்யேந்திர மணிக்கு ஜாவடி ராமகிருஷ்ணா ராவ் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. சக நாடகக் கலைஞரான அவர் ஒரு ஹார்மோனியக் கலைஞரும் கூட. நாடகங்களுக்கு இசையமைப்பவர். இருவருக்குமே நாடகத்தின் மீது தீராத காதல் இருந்ததால் கணவனும் மனைவியுமாக இணைந்தே நாடகங்களில் பங்கேற்று வந்தனர். நாடகங்களைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் ராஜாராவ் நாயுடு மூலமாகத் திரையுலக வாய்ப்பும் ருஷ்யேந்திர மணியைத் தேடி வந்தது. ‘ ஸ்ரீகிருஷ்ண துலாபாரம்’ தெலுங்குப் படத்தில் 17 வயதில் சத்யபாமா வேடமேற்று நாயகியாகத் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கல்கத்தாவில் நடைபெற்றது. திரைப்படத்துக்கான ஸ்க்ரிப்ட் அளிக்கப்பட்டு, அதை நன்கு மனப்பாடம் செய்து, ஒத்திகைகள் முடிந்த பின்னரே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. காட்சிகள் அனைத்துமே ஒரே டேக்கில் ஓ.கே. செய்யப்படும். அடுத்த ஷாட், ரீ – டேக் என்ற பேச்சுக்கெல்லாம் அப்போது இடமேயில்லை. 1935ல் வெளியான இப்படம் வியாபார ரீதியாகத் தோல்வியடைந்தாலும், அபாரமான நடிப்பு மற்றும் இனிமையாகப் பாடும் திறனால் கதாநாயகியாக ருஷ்யேந்திர மணி பாஸ் மார்க் வாங்கி வெற்றி பெற்றார். இவருடன் இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் ரேலங்க்கி (ஆர்.வெங்கட் ராமய்யா), லட்சுமி ராஜ்யம், காஞ்சன மாலா போன்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்குமே இதுதான் முதல் திரைப்படம். பின்னாளில் இவர்கள் அனைவருமே தெலுங்குத் திரையுலகில் தங்கள் நடிப்பாற்றலால் புகழ் மிக்க நட்சத்திரங்களாக மின்னியவர்கள்.
கணவர் ராமகிருஷ்ண ராவுக்கு தன் மனைவி திரைப்படங்களில் நடிப்பதில் விருப்பமில்லை. நாடகமே போதும் என்பது அவரது கருத்தாக இருந்தது. ருஷ்யேந்திர மணியின் எண்ணமும் அதுவே என்பதால் மீண்டும் நாடகங்களில் நடிப்பதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினார். ராயலசீமா ராணி என கொண்டாடப்பட்டவர் அந்த நேரத்தில் நடிகை பசுப்பலேட்டி கண்ணாம்பாவும் அவருடைய கணவர் காடறு நாகபூஷணம் இருவரும் வெற்றிகரமாக நடத்தி வந்த ராஜ ராஜேஸ்வரி நாட்டிய மண்டலி நாடகக் குழுவில் இணைந்து அவர்களுடன் தன் கலைப்பயணத்தைத் தொடர்ந்தார் ருஷ்யேந்திர மணி. அந்தக் குழுவினர் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒரிஸா, தமிழ்நாடு என தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயணித்து தங்கள் நாடகங்களை வெற்றிகரமாய் நடத்தி வந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவை ‘ரங்கூன் ரௌடி’, ‘சாவித்திரி’ போன்ற நாடகங்கள்.
இவ்விரு நாடகங்களிலும் பிரபாவதி மற்றும் நாரதர் வேடங்களை ஏற்றுத் தன் நடிப்பால் சிறப்பித்தார் ருஷ்யேந்திரமணி. அதற்காகவே அவர் ‘ராயலசீமா ராணி’ என்று அன்றைய ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டார். அதன் பின்னர் தானே சொந்தமாகவும் ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார். தெலுங்கு மொழியில் நாடகங்கள் நடத்தியதோடு மட்டுமல்லாமல் இந்தியிலும் பல நாடகங்களை நடத்தியவர். இதில் ‘சந்திரகுப்தா’ என்ற நாடகம் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இவ்வாறு நாடகம் மட்டுமே முதன்மை விருப்பமாக இருந்த தம்பதிகளின் மனநிலையை மாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சௌந்தர்ராஜ அய்யங்கார் மற்றும் ஒப்பனைக் கலைஞர் மங்கய்யா இருவருமாவர்.
மீண்டும் திரைப்படங்களில் மின்னிய ருஷ்யேந்திர மணிதிறமையான நடிகையான அவரை மீண்டும் திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட சௌந்தர்ராஜன். திரைப்படங்களில் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்து அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதற்கு பதில் கூட எழுத விரும்பவில்லை ருஷ்யேந்திரமணி தம்பதியர். இச்செய்தியறிந்த பிரபல மேக்கப் மேன் மங்கய்யா, ருஷ்யேந்திரமணியின் கணவரை அழைத்துக் கடிந்து கொண்டார். ‘‘கணவனும் மனைவியும் நாடகப் பைத்தியங்களாக இருக்கிறீர்களே… நாடகக்கலை உயர்வானதுதான். ஆனால், திரைப்படம் அதைவிட பெரும் வீச்சுடன் மக்களைச் சென்றடையும் வீரியம் கொண்டது. அதனால் இருவரும் திரைத்துறைக்கு வாருங்கள்” என்று அறிவுறுத்தியதுடன் வலுக்கட்டாயமாக இருவரையும் அழைத்து வந்துள்ளார்.
1941 வரை சிறு சிறு வேடங்கள் கிடைத்து வந்த நிலையில், 1942ல் ‘பத்னி’ திரைப்படம் அவரை மேலும் மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்த்தது. இது தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் கதையே. கண்ணகியாக ருஷ்யேந்திரமணி மிகச் சிறப்பாக நடித்த படம். கோவலனாக வேடமேற்று நடித்தவர் கே.எஸ்.பிரகாஷ் ராவ். (இவர் பின்னர் தெலுங்கு, தமிழ் என 48க்கும் மேற்பட்ட படங்களின் இயக்குநராக மாறியவர்.
தமிழில் வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம், ஹரிச்சந்திரா உட்பட மேலும் பல படங்களையும் இயக்கியவர்.) கண்ணகியின் தொன்மம் தெலுங்கில் மிகப் பெரும் வீச்சாக மாறி வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியான சில மாதங்களிலேயே பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடிப்பில் இளங்கோவன் வசனத்தில் ‘கண்ணகி’ தமிழ்த்திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ருஷ்யேந்திரமணி, கண்ணாம்பா என தெலுங்கு பேசும் இரு பெண்மணிகளும் கண்ணகியாக நடித்து சிலப்பதிகாரத்துக்குச் சிறப்புச் சேர்த்தார்கள்.
தயாரிப்பாளர் சௌந்தர்ராஜன் தயாரிப்பில் 1943ல் வெளியான ‘செஞ்ச்சு லட்சுமி’ தெலுங்கு திரைப்படத்தில் பிரதான பாத்திரமேற்று ருஷ்யேந்திரமணி நடித்தார். இது ஒரு வெற்றிப் படமும் கூட. இதே பெயரில் மீண்டும் 1958ல் வெளியான படத்தின் நாயக நாயகியாக நடித்தவர்கள் நாகேஸ்வர ராவ் – அஞ்சலி தேவி. இப்படத்திலும் ருஷ்யேந்திர மணி ஏற்று நடிக்க ஒரு முக்கியமான பாத்திரம் காத்திருந்தது.
1944ல் வெளியான ‘சீதாராம ஜனனம்’ நாகேஸ்வர ராவ் நடித்த முதல் படம். இதில் ராமன் வேடம் அவருக்கு; ராமனின் தாயார் கௌசல்யாவாக நடித்தவர் ருஷ்யேந்திரமணி. கணவர் ராமகிருஷ்ணாராவ் 1939ல் வெளியான ‘மாத்ருபூமி’ தமிழ்த் திரைப்படத்தில் இசையமைப்பாளர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்றினார், பின்னர் பல படங்களிலும் இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டார். கம்பீரம் குறையாத சுபத்திரைசிறு வேடம் என்றாலும் மனமுவந்து ஏற்று நடித்தார். தனக்கு இந்த வேடம்தான் வேண்டுமென்று எதையும் விரும்பிக் கேட்டவரில்லை. அதேபோல் கொடுக்கப்பட்ட எந்த வேடத்தையும் ஏற்க மறுத்தவரும் இல்லை. ஆனால், ‘மாயா பஜார்’ திரைப்படத்தில் பலராமன் மனைவி ரேவதி பாத்திரம் அவருக்கு அளிக்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்து விட்டார்.
விஜயா – வாஹினி நிறுவனத் தயாரிப்பாளர் சக்கரபாணியை அணுகி, ஆடம்பரமும் அகங்காரமும் மிக்க மகாராணி பாத்திரத்தை ஏற்று நடிப்பதை விட தனக்கு சுபத்திரை வேடம் பொருத்தமாக இருக்கும் என்று விரும்பிக் கேட்டு தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்தார். அதற்கு முற்றிலும் தகுதியானவராகவும் இருந்து அந்த வேடத்துக்கு அவர் நியாயம் செய்தார், கடோத்கஜனை எதிர்த்துப் போருக்குத் தயாராகக் கணை ஏந்தி நிற்கும் அந்த கம்பீரம் அவருக்கே உரித்தானது. அதேபோல் மகன் அபிமன்யுவுக்கு பெண் தர மறுத்து அண்ணன் பலராமனும் அண்ணி ரேவதியும் பேசும்போது மனம் உடைந்து போனாலும் குரல் உடைந்து விடாமல் சற்றும் கம்பீரம் குறையாமல் அந்தக் காட்சியில் தோன்றுவார்.
ஏற்று நடித்த பல்வேறு பாத்திரங்கள்
இதே நிறுவனத்தின் ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்திலோ அமைதியான குடும்பத்தலைவியாக, தங்கள் மூத்த மகள் மகாலட்சுமியை (சாவித்திரி) மாசி மகத் திருவிழாவில் குழந்தைப் பருவத்தில் தொலைத்து விட்டு மீண்டும் அவள் கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தை பல ஆண்டுகளாக முகத்தில் தேக்கி வைத்திருப்பவர். அந்த அன்பு முழுவதையும் இளைய மகள் சீதா (ஜமுனா) மீது கொண்டு செலுத்தத் தவறாதவர். கணவர் (எஸ்.வி.ரங்காராவ்) வார்த்தைக்கு வார்த்தை ‘இஞ்சாரு… இஞ்சாரு..’ என்று அன்பு மிளிர அழைப்பதை மென்முறுவலுடன் ஏற்று அவரைப் பின் தொடர்பவராக அற்புதமாக நடித்திருப்பார்.
விஜயா – வாஹினியின் மற்றொரு மாபெரும் வெற்றிப் படைப்பும் இரு மொழித் திரைப்படமுமான ‘ராமுடு பீமுடு’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என இரு படங்களிலும் அப்பாவிக் கதாநாயகர்களான என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர். இருவரின் தாயாக கண்டிப்பும் ஊடே அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக நடித்தார்.
சிவாஜி ஒன்பது வேடங்கள் ஏற்று நடித்த ‘நவராத்திரி’ திரைப்படம் நடிகையர் திலகம் சாவித்திரியின் தயாரிப்பில் தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடிப்பில் வெளியானது. இதில் சாவித்திரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக நைச்சியமாகப் பேசி அழைத்துச் செல்லும் பாலியல் தொழில் நடத்தும் பெண்ணாகவும் நடித்திருப்பார். இது சிறு வேடம் தான். ஆனால் நடிப்பு என வந்து விட்டால் எந்த வேடத்தையும் ஏற்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம் இவ்வேடம். நடிக்க வந்த புதிதில் கதாநாயகியாக நடித்தவர் 1940கள் தொடங்கி 1960கள் வரை திரைப்படங்களில் தவிர்க்க முடியாதவராகவும் இருந்தார்.
1974 ஆம் ஆண்டில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் வெளியான ’பூதய்யன மக அய்யு’ கன்னடப் படத்தில் ருஷ்யேந்திரமணியுடன் அவருடைய பேத்தி பவானியும் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமாகி நடித்தார். இதில் பவானியின் மாமியாராக ருஷ்யேந்திரமணியே நடித்திருந்தார். நன்கு வாழ்ந்த குடும்பம் நிலத்தகராறில் கோர்ட், கேஸ் என அலைந்து பொருளாதாரத்தை இழந்து நலிந்து போன நிலையில் மகன், மருமகளுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறும் பாத்திரம் ருஷ்யேந்திரமணிக்கு. இப்படம் நன்கு ஓடி வசூலை வாரிக் குவித்துப் பெரும் வெற்றி பெற்றது. அறிமுகக் கதாநாயகி பவானி சிறந்த நடிகைக்கான விருதையும் ருஷ்யேந்திரமணி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் இப்படத்துக்காகப் பெற்றனர்.
பின்னர் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பாக இப்படம் தமிழில் முத்துராமன், மஞ்சுளா, ஜெயந்தி நடிப்பில் ‘எல்லோரும் நல்லவரே’ என வெளியாகிப் படுதோல்வியைச் சந்தித்ததுடன், அதுவே ஜெமினியின் இறுதிப் படமாகவும் அமைந்தது. ஒரு மொழியில் பெருவெற்றி பெறும் ஒரு திரைப்படம், அதையே பிற மொழியில் எடுக்கும்போது படுதோல்வியடைவது என்பதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத புதிர்தான்.
1935ல் தொடங்கிய இவரின் திரையுலகப் பயணம் 1986 வரை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. தான் பெரிதும் நேசித்த நடிப்புத் தொழிலை இடைவிடாமல் செய்தவர் அவர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், இந்தி என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகுக்குத் தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தவர். 1986 வரை திரைப்படங்களில் நடித்து வந்த ருஷ்யேந்திரமணி அதன் பின்னர் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
தமிழில் கோடீஸ்வரன், மாங்கல்யம், குண சுந்தரி, அபலை அஞ்சுகம், தீபாவளி, தாலி பாக்கியம், பெண்ணரசி, காவேரி, கொஞ்சும் சலங்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மிகக் குறைவான படங்களே நடித்திருந்தாலும் அவை அனைத்துமே மறக்க முடியாத படங்கள்.
சென்னை வாசியாகவே வாழ்ந்தவர்
சென்னைக்கு நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ராயப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்தவர், பின்னர் தேனாம்பேட்டையில் சொந்தமாக வீடு வாங்கிக் குடியேறினார். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் என குடும்பத்துடன் அன்பு மாறாமல் குறைவற வாழ்ந்தவர். கோடை விடுமுறைக் காலங்களில் வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவது, தமிழ், இந்தி போன்ற பிற மொழிகளைக் கற்பிப்பது, மகளும் மருமகனும் பணி மாறுதல் பெற்று வெளி மாநிலங்களுக்குச் சென்றபோதும், பொறுப்புடன் பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வது என அனைத்தையும் நிறைவாகச் செய்தவர். 1998 ஆம் ஆண்டில் கணவர் ராமகிருஷ்ணா ராவ் மறைவுக்குப் பின் தனிமை அறியாமலே வாழ்ந்தவர், 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று 85 வது வயதில் முதுமையின் காரணமாகக் காலமானார்.
நடிகை பவானி, ருஷ்யேந்திரமணியின் மகள் வயிற்றுப் பேத்தி ஆவார். எம்.ஜி.ஆரின் ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் தமிழில் அறிமுகமானார். மதுரைவீரன் வேடமேற்று இவர் ஆடிப்பாடும் ஒரு பாடல் மிகச் சிறப்பு. வழக்கமாக ஆண்களே மதுரை வீரன் வேடமேற்று நடிப்பார்கள். ஒரு பெண் இவ்வேடம் தரித்து நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பத்ரகாளி’, ‘இரட்டை மனிதன்’ என பல படங்களில் தொடர்ந்து நடித்தார். பாட்டியைப் போலவே பன்மொழி நடிகையாகவும் திகழ்ந்தார்.