வாழ்க்கை+வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)
ஒவ்வொரு நாளும் நாம் கடந்து செல்லும் வாழ்க்கைப் பயணம் வரலாறாகிறது. நமக்கான நல்ல திட்டங்களை, இயக்கங்களை அரசும், வங்கிகளும் வழங்கும்போது அவற்றை நாம் முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் ஒரு பூரணத்துவம் இருக்கும். எனவே நம்மோடு பயணிக்கும் வங்கிச் சொற்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்:
காசோலைகள் (Cheques)
பணமாக பரிமாற்றங்கள் வங்கிகளில் அதிகம் செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தல்களும், கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ள இந்த காலத்தில் காசோலைகளும், இணையவழிப் பரிமாற்றங்களும்தான் பெருவாரியாகக் கையாளப்படுகின்றன. நாம் காசோலைகளைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.
கணக்கின் வழி மட்டுமே பெறல் (Account Payee)
காசோலைகள் அல்லது உண்டியல் என்னும் டிராப்ட்களில் இடது மேற்புறம் ‘Account Payee’ என்று எழுதி மேலும் கீழும் கோடு போட்டிருப்பார்கள். காசோலையில் குறிப்பிட்ட தனிநபர் அல்லது நிறுவனத்துடைய பெயர் பணம் பெறுபவர் இடத்தில் எழுதப்பட்டுள்ளதோ அவரின்/ நிறுவனத்தின் கணக்கில்தான் செலுத்தவேண்டும், மற்றவர் பெறமுடியாது. இவ்வாறு எழுதப்பட்டுள்ள கட்டளை குறித்து இந்திய செலாவணிச் சட்டத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் வங்கிகள் நடைமுறையாக இதைப் பின்பற்றுகின்றன. காசோலையில் பணம் பெறவேண்டியவரின் கணக்கு தவிர மற்றவருக்கு செலுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், பணம் பெறுபவர் கையொப்பமிட்ட ஒப்புதலுடன் மற்றவர் கணக்கில் செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும்போது காசோலையை சேகரிக்கும் வங்கியாளரே இந்த மாற்றத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்கின்றார். மேலும் இவ்வாறு உரியவர் கணக்கின் வழியில் காசோலை மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பானது.
காசோலையில் இடது மேற்புறம் இரண்டுகோடுகள் போடுவதை ‘செக் கிராஸிங்’ (Cheque Crossing) என்பர். அவ்வாறு இரண்டு கோடுகள் போட்டுவிட்டால் அந்த காசோலையை வங்கியிடம் வழங்கி நேரிடையாகப் பணம் பெறமுடியாது. பணம் பெறவேண்டியவரின் கணக்கில்தான் வரவு வைக்கவேண்டும். ஒருவருக்கு வங்கியில் கணக்கில்லை என்றால் காசோலையை வழங்கியவர் இரு கோடுகளை நீக்கிவிட்டு பணம் தருக (Pay Cash) என்று எழுதி அதன் கீழே கையொப்பமிடவேண்டும். எந்தக் காசோலை வழங்கினாலும் அதன் இடப்பக்கமே ‘‘இரு கோடுகள்” வரைவது பாதுகாப்பானதாகும்.
வங்கியாளர் காசோலை (Banker’s Cheque) / வரைவோலை (Demand Draft)
ஒரு வங்கிக்கிளை வேற்றூரில் உள்ள அதே வங்கியின் கிளையில் பணம் பெறுவதற்காக எழுதி வழங்கப்படும் ஒரு பணக்கருவியே டிராப்ட் என்னும் வரைவோலையாகும். இது ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு பணம்பெற அந்தக் கிளையின் பெயரை குறிப்பிட்டு அங்கீகரிக்கப்பட்ட வங்கி அலுவலர் கையொப்பமிட்டு வழங்கப்படும். ஒரு ஊரில் வங்கியின் ஒரு கிளை மட்டுமுள்ளது என்றால், அந்த ஊரிலேயே ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கு பணம் தரவேண்டுமெனில் வங்கியாளர் காசோலை மூலம் பணம் செலுத்திப் பெறலாம். காசோலையை வழங்கிய வங்கியேதான் பணம் பெறவேண்டியவர் வரும்போது அல்லது அவரது கணக்கில் அதற்குரிய பணத்தை வழங்கவேண்டும்.
1976ல் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கியாளர் காசோலையை அதில் குறிப்பிட்டவர் தவிர பிறரின் கணக்கில் செலுத்தமுடியாது. கல்விக்கட்டணம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி ஆகியவை செலுத்த வங்கியாளர் காசோலை பெரிதும் பயன்படுகிறது. ஆனால் தற்போது இணையவழி பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் வங்கியாளர் காசோலையின் பயன்பாடு குறைந்துவிட்டது.
மேஜர் / மைனர் (Major / Minor)
வயது நிர்ணயித்தின்படி பதினெட்டு வயது பூர்த்தியானவரை ‘மேஜர்’ என்றும் பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களை ‘மைனர்’ என்பர். ஒருவரின் தந்தையும் தாயும் இறந்துவிட்டால் அவருக்கு நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வப் பாதுகாவலர் நியமிக்கப்பட்டால் அவர் இருபத்தோரு வயது பூர்த்தியாகும்போதுதான் ‘மேஜர்’ என்னும் தகுதி பெறுவார். இந்திய செலாவணிச் சட்டம் (Negotiable Instruments Act 1881), சொத்து பரிமாற்றச் சட்டம் (Transfer of Property Act 1882), நிறுவனச் சட்டம் (Companies Act 1956 & 2013), கூட்டுநிறுவனச் சட்டம், (Partnership Act 1932), இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act ) உள்ளிட்ட பல சட்டங்கள் ஒருவரின் வயதையொட்டித்தான் ஆவணங்களை எழுதி கையொப்பமிட்டு செயல்படுத்த வரையறை வகுத்துள்ளன.
சட்டப்பூர்வப் பாதுகாவலர் (Legal Guardian)
18 வயது பூர்த்தியாகாதவரின் பணம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பாதுகாக்கவும், அவற்றிலிருந்து வரும் வருமானத்தின் கணக்குகளை நிர்வகிக்கவும், மைனரின் வளர்ச்சிக்குத் துணைநிற்க நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர். தந்தை அல்லது தாய் உயிரோடு இல்லாத நிலையில் இத்தகைய சட்டப்பூர்வப் பாதுகாவலர் நியமனம் அவசியமாகிறது. வங்கிகள் சட்டப்பூர்வப் பாதுகாவலர் நியமிக்கப்பட்ட கணக்குகளுக்கான ஆவணங்களைப் பெற்று உரியமுறையில் அத்தகைய கணக்குகளை நிர்வகிப்பதை உறுதி செய்வதோடு நீதிமன்றத்தால் எழுத்துப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுவதில் கவனமாகச் செயல்படவேண்டும். சட்டப்பூர்வப் பாதுகாவலர், நீதிமன்றத்தின் அசல் ஆணையை அவரது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். வங்கியிடம் சான்றொப்பமிட்ட (Certified / Attested) நகலைத்தான் வழங்கவேண்டும்.
பிரமாணப் பத்திரம் (Affidavit)
பிரமாணப் பத்திரம், வழக்கறிஞர், மாஜிஸ்திரேட், ஆலோசகர் அல்லது நோட்டரி பப்ளிக் என்னும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டவரின் முன்னிலையில் சத்யபிரமாணத்தின் பேரில் எழுதி வழங்கப்படும் அறிவிப்பாகும். உறுதிமொழி அளிப்பவர் அந்தந்த மாநில முத்திரைச் சட்டம் (Stamp Act) அறிவுறுத்தியபடி முத்திரைத் தாளில் எழுதி கையொப்பமிட்டு நோட்டரி பப்ளிக் என்னும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம் உள்ளவரின் சான்றொப்பத்துடன் அந்த பிரமாணப் பத்திரத்தினை வங்கியிடம் வழங்கவேண்டும்.
பொதுவாக, இறந்தவரின் கணக்கில் உள்ள பணத்திற்காக வாரிசுதாரர் உரிமைகோரி விண்ணப்பிக்கும்போது இந்த பிரமாணப் பத்திரம் தேவைப்படும். மேலும் ஒருவரின் பிறந்த தேதியினை குறிப்பிடும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் இல்லையென்றால் உரிய நபர் பிரமாணப் பத்திரத்தின் மூலம் அதை உறுதிப்படுத்தலாம். உறுதிமொழி அளிப்பவரை சட்டரீதியாக கட்டுப்படுத்தும் ஆவணமே அவர் எழுதிக் கையொப்பமிட்ட பிரமாணப் பத்திரமாகும்.
இழப்பெதிர்காப்பு (Indemnity)
‘இண்டெம்நிட்டி’ என்பதை ‘பொறுப்புறுதி’ என்று கூறலாம். பொறுப்பை உறுதி செய்வதோடு இழப்பையும் ஈடு செய்வேன் என்னும் உத்தரவாதம் வழங்குவதால் ‘‘இழப்பெதிர்காப்பு” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவணம் இரு நபர்களுக்கிடையே அல்லது ஒருநபர் மற்றும் ஒரு நிறுவனத்துக்கிடையே அல்லது இரு நிறுவனங்களுக்கிடையே எழுதி வழங்குவதாகும்.
எழுதி வழங்குபவர் மற்றவருக்கு ஆவணத்தில் குறிப்பிட்ட செயல் / பணி/ பணவிவகாரம் ஆகியவற்றில் இழப்பீடு ஏற்பட்டால் அதனை ஈடுசெய்வதற்கு அதன் இழப்பை ஏற்பதாக எழுதி இழப்பெதிர் காப்பு உறுதி கூறுவதாகும். இழப்பீட்டு ஒப்பந்தம் குறிப்பிட்ட காலவரையறைக்குள், இடவரையறைக்குள் செல்லுபடியாகும் என்பதும் இதற்கான முத்திரைத்தாள் மதிப்பு அந்தந்த மாநிலத்தின் சட்டவடிவைப் பொறுத்ததாகும்.
அதிகாரப் பத்திரம் (Power of Attorney)
ஒரு குறிப்பிட்ட நபர் தனக்கான ஒரு முகவரை நியமித்து, அவ்வாறு நியமிக்கப்பட்டவர் தனக்காகச் செய்யவேண்டிய பணிகளுக்கு அதிகாரம் வழங்கும் ஆவணமே அதிகாரப் பத்திரம். குறிப்பிட்ட செயலுக்கு, குறிப்பிட்ட காலவரையறைக்கு, குறிப்பிட்ட இடத்தில செயலாற்ற என்று இந்த ஆவணத்தில் எழுதப்பட்டிருக்கும். முத்திரைத்தாளில் பதியப்படும் இந்த ஆவணம் அரசுப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்படவேண்டும். இது பொது அதிகாரப் பத்திரம் என்றும் குறிப்பிட்ட அதிகாரப் பத்திரம் என்றும் இரண்டு வகையாக தேவைக்கேற்ப எழுதி பதிவு செய்து வழங்கலாம். இந்திய சான்றுகள் சட்டத்தின் (Indian Evidence Act 1872) பிரிவு 85ன் படி இந்த ஆவணம் நோட்டரி பப்ளிக் / மாஜிஸ்திரேட் / நீதிபதி / அங்கீகரிக்கப்பட்ட தூதரக அதிகாரி ஆகிய எவராவது ஒருவரால் சான்றொப்பமிடப்பட வேண்டும்.
வாடிக்கையாளர் சேவைக் குழு வாடிக்கையாளர் சேவையின் தரத்தை உயர்த்தவும், குறைகளைத் தீர்க்கவும் வங்கிகள் தமது ஒவ்வொரு கிளையிலும் வாடிக்கையாளர் சேவைக் குழுவை அமைத்து, அவர்களை அழைத்து ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்திக் கருத்துகளைப் பதிவு செய்யவேண்டும். இந்திய வங்கியியலில் 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயல்பாட்டுத் திட்டம் ஒவ்வொரு கிளையிலும் சரியாக நடத்தப்படுகிறதா என்பதனை ரிசர்வ் வங்கி மற்றும் அந்தந்த வங்கியின் தணிக்கைத் துறை கண்காணித்து அறிக்கை வழங்கவேண்டும். இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாகும். நாம் இந்தக்கூட்டத்தில் பொதுமக்களில் ஒருவராக, பயன்பாட்டாளராகக் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
இந்தக் குழுவினைத் தவிர வாடிக்கையாளர் பரிந்துரை / புகார் பெட்டியினை வங்கிக் கிளையில் பொதுமக்களின் பார்வையில் படும்படி அமைத்திருக்க வேண்டும். வங்கியால் பெறப்படும் வாடிக்கையாளர் பரிந்துரைகள் மற்றும் புகார்களின் மேல் உரிய நடவடிக்கையை ஏழு நாட்களுக்குள் எடுத்துத் தீர்வு தரவேண்டும் என்பது பொது விதியாகும். இதேபோல அந்தந்த வங்கியில் மண்டல மற்றும் வட்டார / மாநில/ மைய வாடிக்கையாளர் சேவைக் குழுக்களும் செயல்படுகின்றன.
(தொடரும்!)
சுவையான தகவல்கள்
வங்கிகளைப்பற்றி தெரிந்துகொள்ளும்போது சில சுவையான தகவல்களையும் அறிவது மகிழ்ச்சியும் வரலாற்றின் நினைவூட்டலும் ஆகும். ரூ.250 நோட்டு என்று சொன்னவுடன் ‘அப்படி ஒரு ரூபாய் நோட்டே இல்லையே’ என்று பதில் வரும். புழக்கத்தில் இருந்த அந்த நோட்டுக்கள் 1861ம் ஆண்டு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு வங்கிகளால் திரும்பப் பெறப்பட்டன. முதன்முதலில் ரூ.500 நோட்டு பணமதிப்பு நீக்கப்பட்டது 1948ம் வருடம்.
ரூ.10000 பணமதிப்பிழப்பானது 1978ல். நாடெங்கிலும் இயங்கும் 700 பொதுத்துறை வங்கிக்கிளைகளில் பொதுமக்கள் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி பயன்படுத்தக்கூடிய பணத்தாள்களைப் பெரும்முறை அறிமுகமானது 1986ல். தேசத்தலைவர் அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் உருவப்படத்துடன் ரூபாய் நோட்டுக்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் முதன் முதலில் 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டன. பேங்க் ஆப் மதராஸ் தனது வெளிநாட்டுக்கிளையை சிலோனில் 1869ம் ஆண்டு துவக்கியது. ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னராகப் பணியாற்றியவர் ஒரு வெளிநாட்டவர், ஆஸ்போனியர்கர் சுமித் (1935).
வைப்புக்கணக்கிற்கு வாரிசுதாரர் நியமனம் செய்யும் வசதி 29-03-1985 அன்று அறிமுகமானது. அதே ஆண்டுதான் எம்.ஐ.சி.ஆர் (MICR) காந்தப் பதிவின் மூலம் காசோலைத் தீர்வுகாணும் (Cheque Clearance) வழிமுறை அறிமுகமானதால் காசோலைப் பரிமாற்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்பெற துவங்கினர். செயற்கைக்கோள் உதவியுடன் 62 நாடுகளில் இயங்கும் பல்வேறு வங்கி கிளைகளுக்கிடையே பணப்பரிமாற்றம் (SWIFT) செய்யும் வசதி தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் ப்ரெசெல்ஸ் நகரில் அமைந்தது.
அதன் ஒருங்கிணைப்பில் இந்திய வங்கிகள் 1989 ஆம் ஆண்டு இணைந்தன. அன்றுமுதல் அயலகப் பணப்பரிமாற்றம் விரைவாக நடைபெற்று வருகிறது. அதே ஆண்டு வங்கி வாடிக்கையாளர் வழங்கிய காசோலை கணக்கில் பணமில்லாமல் திருப்பப்பட்டால் வாடிக்கையாளர் மீது பணம் பெறவேண்டியவர் நடவடிக்கை எடுக்கலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. பணம் பெறவேண்டியவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், திரும்பி வந்த காசோலையை வங்கி உடனடியாக பாதிக்கப்பட்டவருக்கு அனுப்பவேண்டும்.
பொதுத்துறை வங்கிகள் பொதுமக்கள் வீடுகட்ட சலுகை வட்டி விகித்தில் கடன் வழங்க உத்தரவு 1988ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அயல்நாட்டு வங்கிக் கிளைகள் இந்தியாவில் முன்னுரிமைத் துறைகளான விவசாயம், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவேண்டும் என்று 1988ம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. வங்கிகளுக்கான நிதியாண்டு (Accounting Year) ஜனவரி முதல் டிசம்பர் என்பதை ஏப்ரல் முதல் மார்ச் வரை என்று மத்திய அரசு சட்டத்தின் மூலம் 1989ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
வங்கிக் குறைதீர்ப்பு மையம் (Banking Ombudsman)
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் வழிகாட்டுதலின்படி இந்திய ரிசர்வ் வங்கி 1995ம் ஆண்டு வங்கி குறைதீர்ப்பு மையத்தை (Banking Ombudsman) நிறுவியது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சேவைக்குறைகளைத் தீர்ப்பதற்காக அதற்குரிய சட்டப் பாதுகாப்பு, சேவைக்குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆகியவற்றுடன் இந்த வங்கிக் குறைதீர்ப்பு மையம் துவக்கப்பட்டு செயல்படுகிறது. மாநிலத் தலைமையிடங்களில் செயல்படும் இந்த அமைப்பு வங்கி சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளிலும் சிறந்த, நிர்ணயிக்கப்பட்ட சேவையின் தரத்தை உறுதி செய்கிறது. அதற்குரிய தலைமை அதிகாரம் இந்த அமைப்பிற்கு உள்ளது.
வாடிக்கையாளர் சுட்டிக்காட்டிய சேவைக்குறைபாடு நிரூபிக்கப்பட்டால் இயக்கத்தில் குறையுள்ள வங்கியின் பேரில் அபராதம் விதிக்க வங்கிக் குறைதீர்ப்பு மையத்திற்கு அதிகாரம் உள்ளது. பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு ஏதும் நிர்ணயிக்கப்பட்டால் அதனையும் வங்கி வழங்கவேண்டும் என்றும் இந்த மையம் தீர்ப்பு வழங்கலாம். புகார் பெறப்பட்ட ஏழு நாட்களுக்குள் அந்தப்புகாரின் பேரில் தீர்வு காணப்பட வேண்டும்.
குறை தீர்க்கப்பட்டது என்பதை இந்த மையம் நேரில் வந்து ஆய்வு செய்து தெரிந்துகொள்ளும் அதிகாரமும் அதற்குள்ளது. வங்கிகள் , வங்கிக் கணக்குகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை கடல்போல நிறைய இருக்கின்றன. கடலும் வளமிக்கதுதானே. வாழ்க்கையின் வளத்திற்காக வங்கிகளைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுவோம்.