பதக்கம் வென்ற பாக்சிங் பதுமைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 29 Second

உலக விளையாட்டரங்கில் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு இது நல்லநேரம் போலும். குறிப்பாக இந்திய வீராங்கனைகளுக்கு என்று சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் காட்டில் தொடர்ந்து “பதக்க மழை” பொழிந்து கொண்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020-ம் ஆண்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி நிறுத்தப்பட்டது. தொற்று கொஞ்சம் ஓய்ந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில் தொடங்கியது இந்திய இளம் வீராங்கனைகளின் “பதக்க வேட்டை”… இது வெற்றிகரமாக தற்போது கடந்த மாதம் பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டி வரை தொடர்ந்துள்ளது.

ஒலிம்பிக் திருவிழாவில், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றும், பளுதூக்கும் போட்டியில் வீராங்கனையான மீராபாய் சானு தன் பங்கிற்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றும், குத்துச் சண்டை போட்டியில் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் என்று பதக்கங்களை வென்று இந்திய வீராங்கனைகளின் பதக்க வேட்டைக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளிலும், இந்திய வீராங்கனைகள் தன் பங்கிற்கு வெற்றி வாகை சூடினர். இந்தப் போட்டியில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி என பதக்கங்களுடன் வென்றனர்.

இந்தியாவிற்கு கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகள் எல்லாம் ஏறுமுகமாக இருந்து வந்தது. இந்நிலையில் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல்கேரியாவின் சோபியா நகரில் 73வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. இதில் 60, 66, 75 மற்றும் 81 ஆகிய கிலோ பிரிவுகளில் இந்திய வீராங்கனைகள் போட்டியிட்டனர். இந்தப் ேபாட்டியில் தங்களின் பங்கிற்கு இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் இறங்கினர் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனைகள் மீனா ராணி, அஞ்சலி துஷிர், சவிட்டி மற்றும் நந்தினி. இவர்களுடன் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான நிகாத் ஜரின் 52 கிலோ எடைப்பிரிவிலும், நித்து 48 கிலோ எடைப் பிரிவிலும் பங்கேற்றனர்.

81 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இளம் புயலான நந்தினி கால் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானைச் சேர்ந்த வாலெரியா ஆக்ஸ்னோவாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே தனது பலம் வாய்ந்த ‘பஞ்ச்’களால் எதிராளியை திணறடித்த இவர் 3-வது சுற்றில் போட்டியை நிறுத்திய நடுவரால் வெற்றி பெற்றவராக  அறிவிக்கப்பட்டார்.  இதனை அடுத்து இந்தியா சார்பில் முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற இவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்து, பதக்க வேட்டையை வெற்றிகரமாக  துவக்கி வைத்தார்.

இவரைத் தொடர்ந்து 52 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட நிகாத் ஜரீன், 3 முறை ஐரோப்பிய சாம்பியனான, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த டெடியானோர் காப்பை, தனது அசுர தாக்குதலால் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றார். இவரைப் போன்று, 48 கிலோ எடைப்பிரிவில் களம் கண்ட நித்து, இத்தாலியைச் சேர்ந்த எரிக்கா பிரிஸ்சின்ட்ராவோவை 5-0 என்ற புள்ளியில் நிலைகுலையச் செய்து, தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.ஒலிம்பிக் போட்டிகள், பாராலிம்பிக்ஸ் மற்றும் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் என இந்திய மங்கைகளின் தொடரும் பதக்க வேட்டையைக் காணும்போது, இனி வரும் காலங்களிலும் இப்பதக்க வேட்டை வெற்றிகரமாக தொடரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)
Next post கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?(அவ்வப்போது கிளாமர்)