சிறுகதை-பூமராங் ! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 6 Second

காலிங்பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்தான் வாசு. வெளியே  நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து, “சொல்லுங்கம்மா… என்ன வேணும்?” என்றான்.‘‘தம்பி! என் பெயர் பார்வதி. நான் பக்கத்து வீட்டிற்கு குடி வரப்போறேன். நானும் என் கணவரும் வாடகைக் காரில் இங்கு வந்துட்டோம். சாமான்களை ஏற்றிக் கொண்டு எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இன்னும் வரவில்லை. டிரைவரோட போன் ஸ்விட்ச் ஆப் ! எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு.என்ன பண்றதுனு புரியல” என்றவளின் முகத்தில் ஆயிரம் குழப்பங்கள்.“முதல்ல உள்ளே வாங்கம்மா…” என்ற வாசு “கீதா! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா….!’’ என்றான் மனைவியிடம்.

 “சாரு… ! இங்க வாம்மா…பக்கத்து வீட்டு வாசலில் ஒரு தாத்தா இருப்பார். அவரை  நம்ம வீட்டிற்கு அழைச்சிட்டு வா” என்று மகளிடம் கூறினான்.“இந்தாங்கம்மா! கொஞ்சம் தண்ணீர் குடிங்க. கவலைப்படாதீங்க. இவர் விசாரிச்சு சொல்வார்” என்ற கீதாவின் இதமான பேச்சால் பார்வதியின் மனது சற்று ஆறுதலடைந்தது.அந்த பேக்கர்ஸ் & மூவர்ஸ்  நம்பரை இன்டர்நெட்டிலிருந்து எடுத்து விசாரித்த வாசு, “அம்மா! லாரி டயர் பஞ்சராம். அதனால தான் லேட்டாம்.இன்னும் அரை மணியில் சாமான்கள் வந்திடும்” என்றான்.

“வாசு தம்பி! உங்களுக்கு ரொம்ப நன்றி. முன்ன பின்ன தெரியாட்டியும் இவ்வளவு உதவுறீங்களே.! ‘தெய்வம் மனுஷ ரூப’ ங்கறது சரிதான் “ என்றார் ராகவன், பார்வதியின் கணவர்.
“இதிலென்ன சார் இருக்கு! உதவிங்கறது பூமராங் மாதிரி. அன்போடு மற்றவங்களுக்கு உதவினால் , நமக்கு தேவைப்படும்போது நம்மிடம் தானாக திரும்பி வரும்” என்றான் வாசு.
“நல்லா சொன்னீங்க தம்பி! இது என் பெண் பூரணியின் வீடு. அவள் குவைத்தில் இருக்கிறாள். இன்னும் ஒரு மாதத்திற்குள் நாங்களும் அங்கே போகப் போகிறோம்” என்றாள் பார்வதி. இருவரும் அன்று வாசுவின் வீட்டிலேயே மதிய உணவு அருந்திவிட்டுச் சென்றனர். வாசுவும் கீதாவும் வீட்டை செட் செய்ய  உதவியதில் அவர்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதனால் அவர்களது பயணமும் கேன்சல் ஆனது.அவ்வப்போது வாசு தன் குடும்பத்துடன் பக்கத்து வீட்டிற்குச் செல்வான்.அப்படி ஒரு நாள் சென்றிருந்தபோது “நாளைக்கு எனக்கு ஒரு பெரிய கம்பெனியில் இன்டர்வியூ! செலெக்டானால் பாரின் கூட போகலாம். சாருவின் ஆசைப்படி அவளை பாரினில் மேற்படிப்பு படிக்க வைக்கலாம் ” என்று கூறி இருவரிடமும் ஆசி பெற்றான். “உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்’’ என்று அவர்கள் ஆசீர்வதித்தனர்.

“கொஞ்சம் இருங்க…காபி கொண்டு வரேன்” என்று எழுந்த பார்வதியிடம் “அதெல்லாம் கஷ்டப்பட வேண்டாம். நீங்க உட்காருங்க” என்றான் வாசு. “இதிலென்னப்பா கஷ்டம்“ என்று கூறி கிச்சனுக்குள் சென்றாள் பார்வதி. “சாகப் போறவன் வாயில் பாலை ஊத்தாம என் பார்வதியோட காபியை ஒரு வாய் ஊத்தினா பிழைச்சிடுவான்” என்று ராகவன்  உரக்க சிரித்துக் கொண்டே தமாஷாக பார்வதியின் காபிக்கு புகழாரம் சூட்டினார்.

மறுநாள் காலை டை கட்டிக் கொண்டிருந்தவனிடம் வந்த கீதா,‘‘ஏங்க! ஆன்லைனில் தானே இன்டர்வியூ! எதுக்கு இத்தனை அலட்டல்?” என்று கிண்டலாகக் கேட்டாள். அப்போது “எழுந்திருங்க..கண்ணைத் திறந்து என்னைப் பாருங்க…” என்று பார்வதி அம்மாவின் கதறல் உரக்கக் கேட்டது.

ஓடிப் போய் பார்த்த வாசு அப்படியே உறைந்து விட்டான். கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பார்வதியம்மாளின் மடியில் கண்கள் நிலைகுத்தப் படுத்திருந்தார் ராகவன்.
சற்றும் தாமதிக்காமல் செயல்பட்டான் வாசு. “கீதா..சீக்கிரம் கார் சாவியைக் கொண்டு வா” என்று கூறிக் கொண்டே ராகவனைத் தன் தோளில் போட்டுக் கொண்டு காரை நோக்கி
ஓடினான்.

ஆஸ்பிட்டலில் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ராகவனின் உயிர் பிரிந்தது.பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்து விட்டாள் பார்வதி. அவர்களின் மகள் பூரணியாலும் வர இயலாத சூழலில் பெற்ற பிள்ளையைப் போல் ராகவனுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்தான். பார்வதியை தன் வீட்டிலேயே தங்கவைத்துப் பார்த்துக் கொண்டான். டெத் சர்ட்டி
ஃபிகேட்,  ஆஸ்பிட்டல் பார்மாலிட்டீஸ் மற்ற அனைத்தையும் பார்த்துக் கொண்டான் வாசு.

பூரணி வாசுவிற்கு ஆயிரம் முறையாவது போன் செய்து இருப்பாள். ஒருநாள், “சார்! நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்? வீட்டிற்கு குடிவந்த முதல் நாளிலிருந்து அவங்களுக்கு நீங்க ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. பெரிய கம்பெனியோட இன்டர்வியூ கூட  மிஸ் பண்ணிட்டு அப்பாவை ஆஸ்பிட்டலில் சேர்த்தீங்க.இப்ப அம்மாவை கவனிச்சுக்கிறீங்க.நான் இனிமேல் உங்களை ‘அண்ணா’ என்று கூப்பிடப் போறேன்’’ என்று தழுதழுத்தாள்.

“அம்மாவால் தனியாக இருக்க முடியாது. அதனால் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டுடுங்க. லாக்டவுன் முடிந்தவுடன் முதல் ஃபிளைட்டில் வந்து அழைத்துப் போகிறேன்” என்றாள். “இப்போதான அண்ணானு சொன்ன. அப்ப அவங்க எனக்கும் அம்மா தான். நீ வர வரைக்கும் நான் பார்த்துக்கறேன்.எங்க வீட்டிலேயே இருக்கட்டும்” என்று கூறினான் வாசு. விமான சேவை தொடங்கியதும் பார்வதியை அழைத்துப் போக குவைத்திலிருந்து வந்தாள் பூரணி. வாசு வீட்டினரும் வழியனுப்ப ஏர்போர்ட் சென்றிருந்தனர்.

அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குத் திரும்பும் போது ஏற்பட்ட கார் விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான் வாசு. காயங்களுடன் உயிர் தப்பினாள் கீதா. சாருவிற்கு வலது காலில்
பலத்த அடி.எதிர்பாராது நிகழ்ந்த விபத்தால் ஆடிப் போய்விட்டாள் கீதா. “கடவுளே! இது என்ன சோதனை! எப்பவுமே நல்லதே நினைக்கிற எங்களுக்கு ஏன் இந்த தண்டனை? அவரில்லாமல் இந்தப் பெண்ணை எப்படி ஆளாக்கப் போறேன்?” என்று எதிர்காலத்தை நினைத்து மலைத்துப் போனாள்.சில நாட்களில் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு அம்மா வீட்டுடன் தன் சொந்த ஊருக்குச் சென்று விட்டாள் கீதா.  வாடகையைத் தவிர வேறு வருமானம் இல்லை. சாருவின் கல்லூரிப் படிப்பும் நின்றுவிட்டது.

ஒரு வருடம் ஒரு நிமிடமாக  ஓடிவிட்டது. “எல்லாம் நல்லதுக்குத்தான்னு சொல்வியே… இப்போ உன் பெண்ணோட கதியைப் பாரு. யாரோ பக்கத்து வீட்டம்மாவை பார்த்துகிட்ட மாப்பிளைக்கு இப்படி ஒரு கதியா..! உங்க ரெண்டு பேரையும் அம்போனு தவிக்க விட்டுட்டு, கடவுள் அவரை அழைச்சிட்டுப் போய்ட்டாரே! நொண்டி நொண்டி நடக்கற இவளை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்? வரதட்சணை கொடுக்க நம்ம கிட்ட கொட்டியா கிடக்கு? எனக்கப்புறம் உங்களுக்கு யார் இருக்கா?” என்று கீதாவின் வயதான அம்மா வழக்கம் போல் வேதனை தாளாமல் புலம்பினாள்.

அப்போது அந்த சிறிய வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவள் ஓட்டமாய் ஓடி வந்து கீதாவை அப்படியே தழுவிக் கொண்டு கதறினாள். “இவ்வளவு நாளா நீங்க ஏன் எங்களுக்கு ஒரு போன் கூட செய்யல?  நாங்க குவைத் போய் சேர்ந்ததிலிருந்து உங்க கிட்ட பேச எவ்வளவோ முயற்சி செய்தோம்.  ஆனால் பேச முடியலை.  போன் எப்பவுமே சுவிட்ச் ஆப்னு வரும்.இப்போ நானும் என் மகனும் வீட்டை விற்பதற்காக வந்தோம். அப்போதான் உங்க வீட்ல குடியிருக்கிறவங்க சொன்ன விவரத்தைக் கேட்டு பதறிப்போய் இங்க ஓடி வந்தோம்” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள் பூரணி.

“அவர் போனதுக்கப்புறம் என்ன செய்யறதுனு புரியாம அம்மாவோடு இங்க வந்துட்டேன். அவரோடு என் வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு. சாருவின் எதிர்காலத்தை நினைத்தால்தான் கவலையாக இருக்கு” என்று கண்கலங்கிய கீதாவை இடைமறித்து “என் அண்ணன் மகளைப் பற்றிய கவலையை விடுங்க! சேகர்!இங்க வாப்பா.இவன் என் மகன். சாருவை இவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க உங்களுக்கு சம்மதமா?” என பட்டென்று கேட்ட பூரணியை விழிகள் விரியப் பார்த்தாள் கீதாவின் அம்மா.

“கால் ஊனமுற்றவளை கட்டிக்க உங்க மகன் சம்மதிப்பாரா?” என்ற கீதாவின் கேள்விக்கு, “ஆன்ட்டி… ஊனம் மனசிலதான் இருக்கக் கூடாது.உடம்பில் இருந்தால் தவறில்லை.இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் நான் தான் மனதளவில் ஊனமுற்றவன்” என்று சேகர் கூறியதைக் கேட்டதும்,  “எதிர்பார்ப்பு இல்லாமல் அன்போட மற்றவங்களுக்கு உதவினால், நாம் செய்த உதவி, நமக்கு தேவைப்படும்போது நம்மிடம் பூமராங் போல் தானாக திரும்பி வரும்” என்று வாசு போட்டோவிலிருந்து சொல்வது போல் இருந்தது.

இளநீர்… இளநீர்!

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.

* இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு மருந்து போன்றது. இளநீரும், வாழைப்பழமும் சாப்பிட்டால் அதைவிட சிறந்த சத்துணவு வேறு இல்லை.

* இளநீரில் மிகுந்த அளவில் தாதுச்சத்து உள்ளதால் இது உடலுக்கு அழகூட்டும் தன்மை கொண்டது. நரம்பு வியாதிகளைப் போக்கி நரம்புகளுக்கு சக்தியைக் கொடுக்கும்.

* தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை அலசினால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்றவை மறைந்து முகம் பொலிவு பெறும்.

* கோடைக் காலத்தில் அதிக தாகம், உடல் தளர்ச்சி, அசதி போன்ற உபாதைகள் நமக்கு விரைவில் ஏற்படுகின்றன. இச்சமயத்தில் நாம் இளநீர் குடித்தால் இதில் இருக்கும் தாதுப்பொருட்கள் வியர்வை மூலம் வெளியேறிய தாதுக்களை ஈடு செய்கிறது.

* கோடையில் ஏற்படும் சிறுநீர் கடுப்பைப் போக்க தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் போகும்.

* உடம்பின் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியூட்ட இளநீர்தான் பெரிதும் உதவுகிறது. இளநீரிலிருக்கும் சத்துக்களும், தாதுக்களும் இதயத் தசைகளை வலுப்படுத்துகின்றன. இதயத்துடிப்பை சீராக்குகின்றன.

*  குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். தினமும் இளநீர் குடித்தால் உடல் சூடு தணியும். சோர்வு நீங்கும். வயிற்றுப்புண் ஆறும். தாகத்தை தணிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வாழ்க்கை+வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)