குழந்தைகளை முன்னிலைப்படுத்தும் மான்டிசரி கல்விமுறை!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 2 Second

மோனிஷா மணிகண்டராஜன், அமெரிக்காவில் மைக்ரோசாஃப்டில் வேலை செய்யும் இவரின் பூர்வீகம் கன்னியாகுமரி. சென்னையில் படிப்பை முடித்து திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர் மான்டிசரி கல்வி பயிற்சியாளரும் கூட. இரண்டு வயதில் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. வெளிநாட்டில் வசிப்பதால், தன் குழந்தைக்கு நம்முடைய மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மோனிஷாவும் அவரது கணவரும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதற்கு முன்னோடியாக தமிழ் கற்றுக்கொடுக்க நினைத்தவர்களுக்கு அமெரிக்காவில் தமிழ் மொழிக்கான சரியான புத்தகங்கள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து வருவித்தாலும், மொழியுடன், கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுக்கும் வகையில் அவர் எதிர்பார்த்த புத்தகங்கள் கிடைக்கவில்லை. அதனால் அவரே குழந்தைகளுக்கான தமிழ் மான்டிசரி புத்தகங்களை உருவாக்க ஆரம்பித்தார்.

‘‘நான் கல்லூரியில் படிக்கும் போதே, ஒரு மான்டிசரி கற்பித்தல் நிலையத்தில் சேர்ந்து Montessori Assistant Course என்ற பயிற்சியினை முடித்தேன். அதில் மூன்று முதல் ஆறு வயது குழந்தைகளுக்கு மான்டிசரி கல்வி முறையில் எப்படி பயிற்சியளிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். அங்க பயிற்சி எடுத்த போது தான் எனக்கு புரிந்தது சின்ன வயசில் நானும் மான்டிசரி முறையில்தான் படித்து வளர்ந்தேன் என்பது. ஆனால் அப்போது மான்டிசரி கல்வி முறையில் சரியான இடைநிலை பள்ளிகள் இல்லாததால், அதில் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து அதே மான்டிசரி முறையில் கற்பிக்க பயிற்சியில் இணைந்தபோது தான், இந்த கல்வி முறை குறித்த முழு பயன்களை கண்டு ஆச்சரியமடைந்தேன்.

இதனை இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளரும், மனோதத்துவ மருத்துவருமான மரியா மான்டிசரி தான் முதல் முறையாக தன்னுடைய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்ணும் இவர் தான். குழந்தைகளுக்கு இயற்கையாகவே கற்றல் திறன் இருக்கும். அதை ஊக்குவிக்கும் வகையில் தான் கல்வி முறை அமைந்திருக்க வேண்டுமே தவிர அவர்களுடைய கற்றல் திறனையே மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் இந்த கல்வி முறை. கல்வி என்றாலே தினமும் ஸ்கூலுக்கு போவது புத்தகங்களை படித்து மனப்பாடம் செய்து அதை தேர்வில் எழுதி மதிப்பெண்கள் பெறுவது என இல்லாமல், குழந்தைகள் அனுபவ ரீதியாக கல்வியை கற்க வேண்டும் என்றவர் மரியா மான்டிசரி. குழந்தைகள் கற்கும் கல்வி, அவர்களுடைய மதிப்பெண்களை தாண்டி வாழ்க்கைக்கும் உதவியாக இருக்க வேண்டும்.

மான்டிசரியில் எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் திருமணமாகி அமெரிக்கா வந்ததும், இங்கு ஐ.டி துறையில் வேலையில் சேர்ந்தேன். பின், ஒரு நாள் எனக்கு குழந்தை பிறக்கும் சமயத்தில்தான் மீண்டும் மான்டிசரி முறைக் கல்வி மீதான ஆர்வம் அதிகரித்தது. உடனே மீண்டும் மான்டிசரி பயிற்சி நிலையத்தில் சேர்ந்து இந்த முறை 0-3 வயது குழந்தைகளுக்கும், 6-12 வயது குழந்தைகளுக்கு மான்டிசரி முறையில் கல்வி கற்பிக்கும் பயிற்சியை பெற்று AMI – Assisted Montessori Training சான்றிதழை பெற்றேன். மான்டிசரி கல்வி முறையில் சேர்ந்து ஒருவர் 24 வயது வரை முழுமையான கல்வியை பெற முடியும். என்னால் பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க முடியாததால், என்னுடைய குழந்தைக்காவது மான்டிசரி கல்வி முறையில், அதன் வாழ்க்கை முறையில் வளர்க்கலாம் என முடிவு செய்தேன்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக என் அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த போது, இங்கிருக்கும் நிறைய பெற்றோர்கள் அவர்கள் குழந்தையையும் மான்டிசரி கல்வி முறையில் வளர்க்க விரும்பினர். அதனால் அவர்களுக்கு தேவையான சில விவரங்களையும் குறிப்புகளையும் தனியாக ஒரு பக்கத்தில் ஷேர் செய்ய ஆரம்பித்தேன். ஒரு பள்ளியில் சென்று மான்டிசரி பயிற்சியாளராக இருந்திருந்தால் கூட 30-40 குழந்தைகளுக்கு மட்டுமே பயிற்சி அளித்திருப்பேன். ஆனால் இப்போது ஆன்லைனில் பல நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் என் பக்கத்தை தினமும் பார்க்கின்றனர்.

மான்டிசரி என்றாலே, எஸ்.பி, சி.பி.எஸ்.இ போல ஏதோ மாநில அல்லது மத்திய கல்வி முறை என்று நினைக்கிறார்கள். ஆனால், மான்டிசரி கொள்கையின் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கென தனித்துவமான ஒரு வளர்ச்சி பாதை இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு கட்டத்தில் பேசுவார்கள், நடப்பார்கள், தவழுவார்கள். அவர்களை நாம் யாரோடும் ஒப்பிட்டு இப்போது நீ தவழ வேண்டும், இந்த வயதில் நீ பேசவும், நடக்கவும் ஆரம்பிக்க வேண்டும் என அவர்களை ப்ரோக்ராம் செய்யக்கூடாது. குழந்தைகளின் வளர்ச்சியைப் பொருத்து அதற்கான தகுந்த ஆதரவைநாம் கொடுத்தாலே போதும்.

என் மகளுக்கு இரண்டு வயதாகிறது. எனக்கு அடுத்து ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தையை என் முதல் குழந்தையுடன் சேர்த்து நான் நிச்சயம் ஒப்பிட மாட்டேன். இரண்டு குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளாக இருந்தாலுமே அவர்களுடைய கற்றல் திறனும், வளர்ச்சி முறையும் வேறுபடும்’’ என்றவர் மான்டிசரி முறையில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விவரித்தார்.

‘‘ஒரு குழந்தை பிறந்தவுடனே அந்த சந்தோஷத்தில் வீடு முழுக்க பொம்மையாக நிரப்பிவிடுவார்கள். குழந்தைகள் பிறந்த இரண்டு மாதத்தில் பாதி நேரம் சாப்பிட்டு தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் விளையாட ஆரம்பிக்கும் நேரத்தில் வாங்கிக் கொடுத்தாலே போதும். அதே சமயம் குழந்தைகளுக்கு பொம்மைகளை கையில் கொடுத்து விளையாட விட்டுவிட்டு நாம் அவர்களுடன் பேசுவதையும் விளையாடுவதையும் விட்டுவிடக் கூடாது.

பொதுவாகவே பெரியவர்கள் செய்யும் வேலைகளைதான் குழந்தைகள் ஆர்வமாக கவனிப்பார்கள். அதைத்தான் மீண்டும் செய்ய நினைப்பார்கள். அவர்களிடம் நாம் விளையாட்டுப் பொருட்களை கொடுத்து, அங்கே போய் இதை வைத்து தனியாக விளையாடு என அவர்களை ஒதுக்கக்கூடாது. நீங்கள் வீட்டை பெருக்கி கூட்டும் போது, குழந்தையின் கையிலும் ஒரு சிறிய துடைப்பத்தைக் கொடுத்து பெருக்கச் சொல்லுங்கள். அவர்களுக்கு அப்போது, அம்மா-அப்பா செய்யும் வேலைகளை நாமும் செய்யலாம் என மகிழ்ச்சியுடன் அதை செய்வார்கள்.

தவிர, இப்படி ஒரு ஆக்டிவிட்டியை குழந்தைகள் செய்யும் போது, அவர்களுடைய கைகளும் உடலும் திடமாகுவதுடன், குழந்தையின் தசைகளின் இயக்கங்களும் செயல்பாடுகளும் மேம்படும். எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் துடைப்பத்தை பிடித்து பெருக்க முடியும். எந்த திசையில் பெருக்க வேண்டும் போன்ற திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்வது மட்டுமில்லாமல், முழுமையான வளர்ச்சியையும் பெறுவார்கள்.

குழந்தையை பின்பற்றுங்கள் (Follow The Child) என்பது தான் மான்டிசரியின் முக்கிய கரு. உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து, அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்கிறது இந்த கல்வி முறை. தமிழ் மான்டிசரி கல்வி, குழந்தை வளர்ப்பை தாண்டி, நம் தமிழ் கலாச்சாரத்திற்கும் மான்டிசரிக்கும் கூட நிறைய தொடர்புகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது. குழந்தைகள் நடக்க பயன்படுத்தப்படும் நடை வண்டி மான்டிசரி முறை கல்விக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இப்போது இளம் பெற்றோர்கள் பலர் குழந்தைக்கு வாக்கர்தான் வாங்கி கொடுக்கின்றனர். எழுந்து நிற்க கூட முடியாத குழந்தையை தூக்கி, பெற்றோர்கள் அந்த வாக்கரில் உட்கார வைத்து விடுகின்றனர். உட்கார்ந்த நிலையில் இருக்கும் குழந்தை, லேசாக காலால் தரையை தள்ளி அந்த வாக்கரில் வேகமாக முன்னேறி போக முடியும். ஆனால் அது குழந்தை நடை பயில எந்த உதவியையும் செய்வதில்லை.

ஆனால் நம் நடை வண்டியில் குழந்தை தன்னால் எப்போது எழுந்து நிற்க முடிகிறதோ அப்போது தான் நடை வண்டியை தள்ளி நடக்க முடியும். நடை வண்டியில் யாருடைய உதவியும் இல்லாமலேயே சொந்த முயற்சியில் குழந்தை எழுந்து நிற்க முயலும். அந்த நடை வண்டியை குழந்தை தன் முழு பலத்தை வைத்து தள்ளி நடந்தால் தான், முன்னேறி செல்லும். ஒரு குழந்தை யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த முயற்சியில் எழுந்து நின்று நடை பழக உருவாக்கப்பட்டது தான் இந்த நடை வண்டி. ஆனால் நாம் அதை பழைய ஃபேஷன் என ஒதுக்கி வைத்துவிட்டோம்’’ என்றவர் குழந்தை வளர்ப்புக்கு தேவையான பல பயனுள்ள தகவல்களை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

‘‘பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எப்படியாவது குழந்தைகளுக்கு அவர்களுடைய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என முயற்சிப்பார்கள். தமிழ்நாட்டில் வசிக்கும் பெற்றோர்களுக்கு எப்படியும் தங்கள் குழந்தைகள் அவர்களுடைய கலாச்சார பின்னணியில் தான் வளரப்போகிறார்கள் என்பதால் அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடன் இருப்பார்கள்.

ஆனால் இங்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு எப்படியாவது தாய் மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அந்த சமயத்தில்தான், என் குழந்தைக்கும் தமிழ் மொழியுடன், கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுக்கும் சில புத்தகங்களை தேடினேன். ஆனால் எனக்கு சரியான புத்தகங்கள் கிடைக்கவில்லை. அதனால் கூகுளின் உதவியுடன் என் குழந்தைக்கு நானே தமிழ் மான்டிசரி கல்வி முறையை உருவாக்கினேன்.

அதை ஒரு புத்தகமாக வடிவமைத்து என் குழந்தைக்கு அதிலிருந்து சொல்லிக் கொடுத்தேன். இதைப் பார்த்த என் மற்ற தமிழ் நண்பர்கள், அவர்கள் குழந்தைகளுக்கும் இந்த மாதிரியான புத்தகங்களை உருவாக்கித் தர கேட்டார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த தமிழ் மான்டிசரி புத்தகங்கள். இது வரை பொங்கலோ பொங்கல், வாழை இலை விருந்து என இரண்டு புத்தகங்களை மான்டிசரி கல்வி முறையில் உருவாக்கி வெளியிட்டுள்ளேன்.

வாழை இலை விருந்து புத்தகம், நம் தமிழர்கள் விழாக் காலங்களில் வாழை இலையில் விருந்து சாப்பிடுவது வழக்கம். அதை அடிப்படையாக கொண்டு, உணவு மூலம் எழுத்துகளை குழந்தைகளுக்கு இந்த புத்தகம் மூலம் அறிமுகம் செய்திருக்கேன். இந்த புத்தகம் 2021 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய சிறுவர் புத்தகங்களின் போர்டு புக் பிரிவில் (0-3 வயது குழந்தைகள் பிரிவில்) வெற்றிப் பெற்று டோகாபாக்ஸால் (Tokabox) அங்கீகரிக்கப்பட்டது.

என்னுடைய அடுத்த புத்தகமான ‘பொங்கலோ பொங்கல்’ மூலம் வண்ணங்களை சொல்லிக் கொடுக்கிறேன். இந்த புத்தகங்களை தேஜஸ்வினி எனும் கலைஞர்தான் அழகாக வடிவமைத்துள்ளார். தமிழ்நாட்டில் வசிக்கும் என் தோழி, அவருடைய ழகரம் பதிப்பகத்தின் மூலமாக இந்த புத்தகங்களை இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார்” என முடிக்கிறார் மோனிஷா.

இப்போது பல பெற்றோர்களும் மோனிஷாவிடம் மான்டிசரி பயிற்சி வகுப்புகளை நடத்தச் சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர். கூடிய சீக்கிரம், சரியான நேரம் வரும் போது பெற்றோர்கள், குழந்தை பராமரிப்பிற்கான மான்டிசரி கல்வி முறையில் எப்படி குழந்தையை வளர்ப்பது எனும் பயிற்சியை அளிக்க உள்ளார் மோனிஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ரோஜாரமணி!! (மகளிர் பக்கம்)
Next post பெண்களை தாக்கும் வழுக்கைக்கு குட்பை! (மருத்துவம்)