அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ரோஜாரமணி!! (மகளிர் பக்கம்)
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் தங்கள் சுட்டித்தனமான நடிப்பால் கோலோச்சியிருக்கிறார்கள். பேர் சொல்லும் நட்சத்திரங்களாக ஜொலித்திருக்கிறார்கள். ஆனால், எல்லாமே ஒரு பத்தாண்டுகளுக்குள் நிறைவு பெற்று விடும். குழந்தைப் பருவம் கடந்து இளமைப் பருவத்தின் (Adolescent) தலைவாசலில் அடியெடுத்து வைக்கும்போது ஒரு இரண்டும் கெட்டான் நிலையாக, இளைஞனாகவோ, பருவ மங்கையாகவோ பிரதான பாத்திரங்களை ஏற்க முடியாத நிலையையும் அவர்கள் சந்திக்க நேரும்.
கதாநாயகன், கதாநாயகியாக திரையில் தோன்ற முடியாத நிலையில் கிடைத்த வாய்ப்புகளை ஏற்று நடிக்கும் நிலையை எதிர்கொள்ள வேண்டும். அல்லது திரையுலகை விட்டே காணாமல் போகவும் நேரிடலாம். சிலர் திரையுலகிலேயே வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு காலம் முழுவதும் தாக்குப் பிடிக்கலாம். இங்கு ஒரு சிலர் மட்டுமே நாயக நாயகிகளாகத் தொடரும் வாய்ப்பினையும் அதிர்ஷ்டத்தையும் பெற்றவர்கள்.
1960களில் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த குழந்தை நட்சத்திரங்களில் மாஸ்டர் தசரதன், மாஸ்டர் தர், மாஸ்டர் ராஜ்குமார், மாஸ்டர் காதர் (பகோடா), மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் ராமு, குட்டி பத்மினி, ரோஜாரமணி, பேபி ராணி, பேபி ஸ்ரீ தேவி போன்றவர்களுக்கு பெரும் பங்குண்டு. இவர்களில் ரோஜாரமணி, ஸ்ரீ தேவி இருவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து அடுத்த நிலையிலும் இடைவெளி ஏதுமில்லாமல் கதாநாயகி என்னும் இடத்தைச் சட்டென்று கைப்பற்றியவர்கள்.
ஸ்ரீதேவி 13 வயதில் ’மூன்று முடிச்சு’ படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து அடுத்தடுத்த நிலையை நோக்கி ஏறுமுகம் கண்டவர். அவரைப் போலவே ரோஜா ரமணியும் 13 வயதில் மலையாளத் திரையுலகில் ‘செம்பரத்தி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாகவே 70 படங்கள் வரை நடித்தவர். பின்னர் கதாநாயகி, குணச்சித்திர வேடங்களேற்று நடித்தவர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 16, செப்டம்பர் 1959 ஆம் ஆண்டில் பிறந்தவர் ரோஜா ரமணி. தந்தையார் சென்னையில் உள்ள ’பேசும் படம்’, ‘Picture Post’ சினிமா பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார், கோடம்பாக்கம் பகுதியிலேயே அப்பத்திரிகை அலுவலகம் இருந்ததால் திரைத்துறை சார்ந்தவர்களுடனும் அவருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. ரோஜாரமணி ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோதே தாயாருடன் சென்னைக்கு வந்து சேர்ந்தவர் அதன்பின் சென்னை வாசியாகவே மாறியவர்.
பள்ளிக்குச் செல்லும் வயதில் படப்பிடிப்பு ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், தன்னுடைய மகன்கள் முருகன், குமரன், சரவணன் இவர்களுடன் இணைந்து பாகவத புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, தெலுங்கில் ‘பக்த பிரகலாதா’ திரைப்படத்தை 1965ஆம் ஆண்டில் தொடங்கினார். இரண்ய கசிபுவாக எஸ்.வி.ரங்காராவ், இரண்யன் மனைவி லீலாவதியாக அஞ்சலி தேவி, பிரகலாதனாக புதுமுகமாக ஐந்து வயது ரோஜாரமணியைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்தினார்.
ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக 1967 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று படம் வெளியானது. தாமதமாக வெளி வந்தாலும் 100 நாட்களைக் கடந்து ஓடி வசூலில் சக்கைப்போடு போட்டது. ஒரே படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரம் ரோஜாரமணி ஸ்டார் அந்தஸ்து பெற்று உச்சத்துக்குச் சென்றார். தெலுங்குப் படத்தின் வெற்றியை ருசித்த மெய்யப்பச் செட்டியார், தமிழிலும் இந்தியிலும் சிறு சிறு மாற்றங்களுடன் படத்தை டப்பிங் செய்து வெளியிட்டார். மூன்று மொழிகளிலும் சிறுமி ரோஜாரமணி தன் சொந்தக் குரலிலேயே அற்புதமாகப் பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்காக 1967 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் ஆந்திர மாநிலத்தின் நந்தி விருதையும் பெற்றார்.
மகாராஜா – மகாராணியின் செல்லக்குட்டி ராணி
‘பக்த பிரகலாதா’ படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், படம் வெளி வரத் தாமதமானதால் ரோஜாரமணி நடித்த ‘இரு மலர்கள்’ படம்தான் முதலில் வெளியானது. சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா இவர்களுடன் இணைந்து நடித்தார். அப்பா (சிவாஜி) மீது மாறாத நேசமும் அதேசமயம் புதிதாக வரும் அழகிய குணவதியான டீச்சர் உமா (பத்மினி) மீது அன்பும் மரியாதையுமாக இருக்கும் கீதா (ரோஜாரமணி), தன் தந்தைக்கும் டீச்சருக்கும் இடையில் இருக்கும் ஏதோ ஒரு சொல்ல முடியாத உறவைப் புரிந்துகொண்டு டீச்சரை வெறுத்து ஒதுக்குவதில் துவங்கி, அப்பா பொய் சொல்லத் துவங்கும்போது அவளின் வெறுப்பு அவர் மீதும் மடை மாறுகிறது.
ஒரு சிறு குழந்தை தனக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கும் மனித மனங்களின் உணர்வுகளை இனம் காண முடியாமல் தவிக்கும்போதும் மிகச் சிறப்பாகத் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரோஜாரமணி. இந்தப் படமும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம். இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றோர் அம்சம், சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, ரோஜாரமணி இணைந்து ஆடிப் பாடும் ‘ஒரு மகாராஜா ஒரு மகாராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி… குட்டி ராணீ…’ பாடல். இது பலருக்கும் பிடித்தமான எவர்க்ரீன் பாடலும் கூட. இதில் ரோஜா ரமணிக்காக பின்னணி பாடிய சிறுமி எஸ்.என்.ஷோபா (பின்னாளில் ஷோபா சந்திரசேகர், நடிகர் விஜய்யின் தாயார்) ஆவார்.
‘என் தம்பி’ படத்திலோ சிவாஜியின் செல்லக் குட்டித் தங்கை. போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தை. தன் தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன், மாற்றாக அதேயளவு அன்பை அண்ணன் மீது பொழியும் தங்கை என பரஸ்பரம் இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்வது அண்ணன் உயிரிழந்து விட்டதாக வரும் தகவல் அறிந்து தங்கையும் தன் நிலை மறந்து ஒற்றைக் காலுடன் கோயில் தூணில் ஏறி அதில் கட்டப்பட்டிருக்கும் கண்டாமணியைப் பிடித்துத் தொங்கியவாறே மணியடித்து கடவுளிடம் அண்ணனின் உயிரை மீட்டுத் தரும்படி மன்றாடுவது போன்ற காட்சிகள் சற்றே மிகைப்படுத்தல்தான் என்றாலும் படம் வெளியான காலகட்டத்தில் வியந்து பார்க்கப்பட்ட, ரசிக்கப்பட்ட காட்சியாகத்தான் இருந்தது.
துலாபாரம் – உணர்வுப்பூர்வமான நடிப்பின் வெளிப்பாடு
’துலாபாரம்’ படத்தில் தந்தையை இழந்து, வறுமையின் பிடியில் வயிற்றுக்குச் சோறில்லாமல், கிழிந்த பாவாடை சட்டையும் எண்ணெய் காணாத பரட்டைத் தலையுமாக பஞ்சைப் பராரிக் கோலத்துடன் காட்சியளிப்பார். தன்னை விட இளையவனான தம்பியைக் கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு தம்பியை இடுப்பில் சுமந்து கொண்டு பசி பொறுக்க முடியாமல் பஸ் ஸ்டாண்ட் பக்கம் சென்று பிச்சை கேட்டுக் கையேந்துவது படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களைக் குளமாக்கி விடும் உணர்வுப்பூர்வமான காட்சி. பிள்ளைகள் இவ்வாறு கையேந்துவது கண்டு சுயமரியாதையுடன் கையில் கோலெடுத்து வெளுத்து வாங்கும் தாய் (சாரதா), பின்னர் குழந்தைகளை அடித்துவிட்டோமே என்று கண்ணீர் உகுப்பதும் மிகவும் உணர்வுப்பூர்வமான காட்சிகள்.
மீண்டும் பசி பொறுக்க முடியாமல் டீக்கடையில் வடையைத் திருடியதற்காக கடைக்காரனால் சூடு வைக்கப்படுவது இன்னமும் கொடூரமான காட்சி. இல்லாமையின் கொடுமையை இந்தக் காட்சிகள் பிரதிபலித்ததுடன், உண்மையிலேயே சோற்றுக்கில்லாத ஒரு குடும்பத்தின் குழந்தையைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார் ரோஜாரமணி. அவ்வளவு தத்ரூபமான சற்றும் மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பை ஒரு குழந்தை வெளிப்படுத்துவது என்பதெல்லாம் வேறு ரகம். இக்காட்சியில் தாயாக நடித்த சாரதா இன்னும் ஒரு படி மேலே சென்று நிஜமாகவே ரோஜாரமணியை அடித்து விளாசியிருக்கிறார். அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாகக் காட்சியில் ஒன்றிப் போயிருக்கிறார். பின்னர் தன் தவறை உணர்ந்து, ஒரு குழந்தையை அடித்து விட்டோமே என்று மனமார ரோஜாரமணியிடம் மன்னிப்பும் கேட்டு மன்றாடியிருக்கிறார்.
நடிகையர் திலகம் சாவித்திரியின் சொந்தத் தயாரிப்பு, திரைக்கதை, இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ’சின்னாரி பாப்பலு’ பின்னர் அதன் தமிழ் வடிவமான ‘குழந்தை உள்ளம்’ என இரு படங்களிலும் ஆதிவாசிக் குழந்தையாக நடித்திருப்பார். குழந்தையின் இயல்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத தியாக வடிவமாக இக்கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும். தெலுங்கில் பெற்ற வெற்றியை தமிழில் இப்படம் பெறவில்லை.
‘எதிரொலி’ படத்திலும் ஒரு கொலையை நேரில் பார்த்ததன் விளைவாக வாய் பேச்சிழந்து, உணர்வற்று இருக்கும் குழந்தையாக படத்தின் இறுதிக் காட்சிகளில் நடித்திருப்பார். இதன் பின்னர் அவர் நடித்த பல படங்களில் பல குழந்தைகளில் ஒருவராக, அல்லது சில நிமிடங்களே வந்து செல்லும் பாத்திரமாக அமைந்தது. 1969ல் தெலுங்கில் என்.டி.ராமாராவ், ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘கதாநாயகடு’ அதே ஆண்டில் தமிழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடிக்க ‘நம் நாடு’ என ரீமேக் செய்யப்பட்டது. இவ்விரு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் குட்டி பத்மினி. இப்படம் 1972ல் ‘அப்னா தேஷ்’ என இந்தியில் தயாரிக்கப்பட்டது. ராஜேஷ் கன்னா, மும்தாஜ் இணைந்து நடிக்க, குட்டி பத்மினி ஏற்ற வேடத்தை ரோஜா ரமணி செய்தார்.
நாயகியாக மலையாளத்தில் அறிமுகம்.
முன்னதாக ‘பூம்பாட்டா’ வில் ரோஜா ரமணி, பேபி ஸ்ரீதேவி இருவரும்தான் பிரதான பாத்திரங்கள். தொடர்ந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ‘செம்பரத்தி’ படம் அவரை நாயகியாக்கியது. மலையாளத்தில் ரோஜாரமணி என்ற பெயருக்கு மாற்றாக நாயகியாக அறிமுகமான படத்தின் பெயரிலேயே செம்பரத்தி என்றும் ஷோபனா என்றும் பெயர் மாற்றம் நிகழ்ந்தது. மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் ‘லாட்ஜ்’ என்ற சிறுகதையைத் தழுவி உருவான இப்படம் வசூலில் சாதனை படைத்த மாபெரும் வெற்றிப் படமாகும். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்படம் தெலுங்கில் ‘கன்யா வயசுலு’ தமிழில் ‘பருவ காலம்’ என்ற பெயர்களில் சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டது. மலையாளம், தெலுங்கு அளவுக்குத் தமிழில் இப்படம் பெரிய அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து 35 மலையாளப் படங்களில் நடித்துப் பேரும் புகழும் பெற்றார். தாய் மொழியான தெலுங்கிலும் அதே அளவு படங்களும் வெற்றியும் தொடர்ந்தன.
தமிழில் மின்ன முடியாத தாரகை
குழந்தை நட்சத்திரமாகத் தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவருக்கு ஒரு கதாநாயகியாக பெரிய அளவு வெற்றிகளைப் பெற முடியாமல் போனது சோகம்தான். ‘ஆயிரம் வாசல் இதயம்’ ஆனந்தவிகடன் வார இதழில் அதே பெயரில் தாமரை மணாளன் எழுதிய தொடர் கதை. இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை; படுதோல்விப் படமாக ஆனது. ராதிகா, ரோஜாரமணி இரு நாயகிகள். ‘வயசுப் பொண்ணு’; இதுவும் ஆனந்தவிகடனில் மணியன் எழுதிய ‘லவ் பேர்ட்ஸ்’ என்ற தொடர்கதை.
லதா, ரோஜாரமணி என இரு நாயகிகள். முத்துராமன், ஜெய் கணேஷ் இரட்டை நாயகர்கள். இதுவும் வெற்றி பெறாமல் போனது. ஆனால், கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ‘காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து…’ பாடல் மட்டும் வானொலியின் வாயிலாகப் பட்டிதொட்டி எங்கும் ஒலித்துப் பிரபலமானது. பேரறிஞர் அண்ணாதுரையின் ‘வண்டிக்காரன் மகன்’ அதே பெயரில் கலைஞர் கருணாநிதி வசனத்தில் படமாக்கப்பட்டது.
ஜெய்சங்கர், ஜெயசித்ரா, ரோஜாரமணி நடிக்க படம் ஓரளவு ஓடி வெற்றி கண்டது. அதற்கு படத்தின் அரசியல் பின்னணியும் கலைஞரின் வசனங்களும் முக்கியமான காரணம். ஜெயசித்ரா நாயகியாக நடிக்க, ரோஜாரமணி நாயகன் ஜெய்சங்கருடன் ஒருதலைக் காதல் கொண்டு கனவினில் ஒரு டூயட் பாடுவதுடன் அவரது பங்களிப்பு முடிந்து போனது. ஆனால், ‘மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே..’ எஸ்.பி.பி, வாணி ஜெயராம் குரல்களில் ஒலித்த அந்த டூயட் பாடல் மட்டும் வெகு பிரபலமானது. ‘நீதிக்குத் தலை வணங்கு’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கை போன்ற வேடம், ‘என் மகன்’, ‘சங்கிலி’, ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ போன்ற சிவாஜியின் படங்களிலும் அவருக்குத் தங்கை. அதற்கு மேல் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவு படங்கள் தமிழில் அமையாமல் போயின. சிவாஜி கணேசனுடன் மட்டும் 9 படங்களில் நடித்துள்ளார்.
கமலஹாசனுடன் பல படங்களில் நாயகியாக நடித்தார். ‘பருவ காலம்’, ‘சிவப்புக்கல் மூக்குத்தி’, தெலுங்கு டப்பிங் படமான ‘இரு நிலவுகள்’; இதிலும் இரட்டை வேடக் கமலுக்கு ஜெயசுதா, ரோஜா ரமணி என இரு நாயகிகள். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் கமலுடன் நாயகியாக நடித்தவர் ரோஜாரமணி அனைவரையும் வியக்க வைத்தவள் கோகிலா
1977ல் வெளியான ‘கோகிலா’ குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு படம்.
கமல், ஷோபா, ரோஜா ரமணி என மூவருமே தங்கள் நடிப்பால் வியக்க வைத்தார்கள். சென்னையில் முதன்முதலாக 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட முதல் கன்னடப் படம், பாலு மகேந்திரா இயக்கிய முதல் படம், பின்னாளில் ‘மைக் மோகன்’ என அழைக்கப்பட்ட மோகன் அறிமுகமான படம், ஈழத் தமிழரான பாலு மகேந்திரா, தமிழின் கமலஹாசன், கன்னடத்து மோகன், தெலுங்கின் ரோஜா ரமணி, மலையாளத்து ஷோபா, வங்கத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி என தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாகப் பல கலைஞர்களையும் ஒருங்கிணைத்த படம் ‘கோகிலா’. சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பாலு மகேந்திராவுக்குப் பெற்றுத் தந்த படம். சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக அரசின் விருது பெற்ற படம் என பல சிறப்புகள் ‘கோகிலா’வுக்கு உண்டு.
திருமணத்துக்குப் பின் டப்பிங் துறையில் காலூன்றியவர்
ஆந்திரத்தில் பிறந்து, ஒரிஸாவின் வைசாக் நகரில் வளர்ந்த சக்கரபாணி ஒரிய மொழித் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகன். ஒரிய மொழியில் 5 படங்களில் சக்கரபாணியுடன் இணைந்து நாயகியாக நடித்தார் ரோஜாரமணி. அவற்றில் பலவும் புராணப் படங்கள். அவை பெரும்பாலும் தெலுங்கில் என்.டி.ராமாராவ் நடித்த படங்களின் ரீமேக். சக்கரபாணி சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பயின்றவர். 200 படங்களுக்கு மேல் நடித்தவர். சில படங்களின் இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். இரு குடும்பத்தார் ஒத்துழைப்புடனும் சம்மதத்துடனும் 1981ல் ரோஜாரமணியை மணந்து கொண்டார்.
6 வயதில் நடிக்கத் தொடங்கிய ரோஜாரமணி, 22 வயது வரை இடைவெளியின்றித் திரையுலகில் இயங்கியவர். திருமணத்துக்குப் பின் சற்றே ஓய்வு வேண்டுமென விரும்பி இரண்டு ஆண்டுகள் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தவர்; மகன் தருண் பிறந்த பின் முற்றிலும் நடிப்பை விடுத்து 1983 முதல் டப்பிங் கலைஞராகத் தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் திரைப்படங்களின் பின்னணியில் பணியாற்றத் தொடங்கினார்.
அனைத்து மொழிகளிலுமாக அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 130. ஆனால், டப்பிங் பேசிய படங்களின் எண்ணிக்கையோ 400. முன்னணி நாயகிகளாக தெலுங்கில் நடித்த அத்தனை நடிகைகளுக்கும் டப்பிங் பேசியவர். 80களில் தொடங்கி, 2000த்தைக் கடந்தும் டப்பிங் பேசிக் கொண்டிருப்பவர். தெலுங்கின் சிறந்த டப்பிங் கலைஞர் என பாராட்டப்பட்டவர். எந்தப் படம் திரையிடப்பட்டாலும் கதாநாயகிகள் ரோஜாரமணியின் குரலில் பேசிக் கொண்டிருப்பதால், தானே நடிப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றுவதாகவே ரோஜாரமணி குறிப்பிட்டிருக்கிறார்.
ரோஜாரமணி – சக்கரபாணி தம்பதியருக்கு தருண், அமுல்யா என இரு பிள்ளைகள். மகன் தருண், 7 வயதில் ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்புக்காக தேசிய விருதுடன், ஆந்திர மாநிலத்தின் நந்தி விருதையும் பெற்றவர். தாயைப் போலவே பிள்ளையும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். பின்னர் ‘நுவ்வே காவாலி’ படத்தின் நாயகனாகவும் நடித்தார்.
ரோஜாரமணி முதன்முதலாக அறிமுகமான ‘பக்த பிரகலாதா’ வெளியாகி 55 ஆண்டுகளைக் கடந்து விட்ட பின்னரும் அப்படத்தை மறக்காமல் ரசிகர்கள் ‘பிரகலாதனின் மகன்’ என்றே தருணையும் அழைக்கிறார்கள் என்றால், பிரகலாதா திரைப்படமும் ரோஜாரமணியும் எந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறார்கள் என்பது சொல்லாமல் விளங்கும். திரைக்கு முன்னால் தோன்றி நடிக்காவிடினும், தன் குரலின் மூலம் திரைக்குப் பின் இருந்து உணர்வுப்பூர்வமான வசனங்களைப் பேசி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரோஜா ரமணி.
ரோஜா ரமணி நடித்த திரைப்படங்கள்
பக்த பிரகலாதா, இரு மலர்கள், என் தம்பி, துலாபாரம், குழந்தை உள்ளம், சாந்தி நிலையம், எதிரொலி, விளையாட்டுப் பிள்ளை, எங்க மாமா, ஜானகி சபதம், நம்ம குழந்தைகள், பாபு, அன்புச் சகோதரர்கள், பருவ காலம், என் மகன், நீதிக்குத் தலை வணங்கு, வயசுப் பொண்ணு, வண்டிக்காரன் மகன், சிவப்புக்கல் மூக்குத்தி, இரு நிலவுகள், தெய்வீக ராகங்கள், ஆயிரம் வாசல் இதயம், முறைப்பொண்ணு, சங்கிலி, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு.