லப் டப்… லப் டப் சொல்லும் பெர்ஃபியூசன் டெக்னாலஜி! (மருத்துவம்)
மருத்துவத்தில் லைஃப் சயின்ஸ் கல்வி நோயாளியோடு நேரடித் தொடர்பில் இருப்பது. ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி என்பது ஆறு மணி நேரத்தைக் கடந்து நடைபெறும் விசயம். சர்ஜரி நடந்து முடியும் மொத்த மணித்துளிகளும் நோயாளிகளின் லப்டப்… லப்டப் சொல்லும் இதய துடிப்பு இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த இயந்திரத்தின் கட்டுப்பாடு பெர்ஃபியூஷன் டெக்னாலஜிஸ்ட்டான எங்களிடத்தில் இருக்கும் என பேசத் தொடங்கினர் பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையின் பெர்ஃபியூசன் டெக்னாலஜிஸ்ட் மாணவிகளில் சிலர். ஒவ்வொரு இதய அறுவை சிகிச்சை நிகழும்போதும் ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர்கள் மற்றும் தலைமை செவிலியர்களோடு நோயாளிகளுக்கு மிக அருகாமையில் நாங்களும் இருப்போம் என்கின்றனர் இவர்கள்.
இதய நோயாளிகளுக்கு இரண்டுவிதத்தில் அறுவை சிகிச்சை நிகழும். ஒன்று ஓப்பன் ஹார்ட் சர்ஜரி மற்றொன்று குளோஸ்டு ஹார்ட் சர்ஜரி. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி என்பது ஹார்ட்டை ஓப்பன் செய்து இதயத்தில் இருக்கும் நான்கு சேம்பரில் எதில் பிரச்சனை என்பதை பாயின்ட் செய்து அந்த இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது.
இதயத்தை ஓப்பன் செய்யும்போது ரத்தம் வெளியேறினால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. எனவே இதயத்திற்கு வரும் ரத்த ஓட்டத்தை தடை செய்யும் அந்த நொடியில் இருந்து, மனித இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் செயலை ஒரு நொடிக்கு எத்தனை முறை லப்டப்… லப்டப் சத்தத்திற்கு இடையில் இதயம் செய்கிறதென கணக்கிட்டு, அந்த வேலையினை கனகச்சிதமாக செய்ய
வைப்பதே பெர்ஃபியூஷன் மெஷின்.
அறுவை சிகிச்சை முழுமையாக நடந்து முடியும்வரை இருக்கும் இடைவெளியில், நோயாளியின் இதயமும் நுரையீரலும் செய்யும் வேலையை பெர்ஃபியூஷன் மெஷின் மூலமாக செய்ய வைக்கிறோம். இந்த வேலையினைச் செய்யும் நாங்கள் பெர்ஃபியூசன் டெக்னாலஜிஸ்ட் என அழைக்கப்படுகின்றோம். அறுவை சிகிச்சையின்போது இதயத்திற்கு மட்டுமல்ல, இதயம் வழியாக மனித உடலின் மற்ற பாகங்களுக்கு செல்லும் ரத்தமும் இந்த முறையிலே செலுத்தப்படுகிறது.
பெர்ஃபியூசன் டெக்னாலஜி என்பது நான்காண்டு பட்டப் படிப்பு. எந்த மருத்துவக் கல்லூரியை படிக்கத் தேர்ந்தெடுக்கிறோமோ அங்கேயே நுழைவுத் தேர்வும் நேர்முகத் தேர்வும் நடைபெறும். +2வில் 60% முதல் 70% மதிப்பெண்கள் இருந்தாலே இதற்குப் போதுமானது. முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் படிக்கும் அதே அடிப்படை மருத்துவக் கல்லூரி பாடத்திட்டமே எங்களுக்கும். இரண்டாம் ஆண்டிலிருந்து துறை சார்ந்து படிக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்திற்குள்ளே நேரடி பயிற்சிகளும்(practical classes) உண்டு.
பெர்ஃபியூசன் டெக்னாலஜி தவிர்த்து டயாலிசிஸ் டெக்னாலஜி, மெடிக்கல் ரேடியேஷன் டெக்னாலஜி, கார்டியாக்கேர் டெக்னாலஜி, ரேடியாலஜி, அனஸ்தீஷியா, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி மற்றும் நியூரோ டெக்னாலஜி, பிஸிசன் அசிஸ்டென்ட் என பல்வேறு படிப்புகள் மருத்துவத் துறை சார்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் லேப், பார்மஸி, மருந்தாளுநர் தொடர்பான பாராமெடிக்கல் படிப்புகளும் ஏராளமாக உள்ளன. இவை குறித்தும் மாணவர்கள் முழுமையாக அறிந்து மருத்துவத் துறை சார்ந்த இந்தப் படிப்புகளை பயின்று நம்மை நம்பி வரும் நோயாளிகளுக்கு சேவை மனப்பான்மையுடன் பணி செய்யலாம் என விடைபெற்றனர்.
நீட் தேர்வின் அவலங்கள் விரக்தியின் மனநிலைக்கு மாணவர்களைக் கொண்டு செல்வது அனைவரும் அறிந்ததே. பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு நடுவே இரவு பகலாய் கண் விழித்துப் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் எட்டாக் கனியாக மாறிவரும் நிலையில், மாணவ சமுதாயம் சட்டெனத் திரும்பிப் பார்ப்பது பொறியியல் துறைகளை மட்டுமே.
உங்களின் மருத்துவக் கனவு நிறைவேறவில்லையா? பரவாயில்லை. அதனாலென்ன? மருத்துவத் துறை சார்ந்த யு.ஜி. பி.ஜி. மற்றும் ஓராண்டு, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புகள் அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பாராமெடிக்கல் கோர்ஸ் பிரிவுகளில் ஏராளமானவை மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள்ளே இயங்கி வருகின்றன.