அவல்… அவல்…!! (மகளிர் பக்கம்)
நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளில் மிகவும் சிறப்பானது அவல். இதனை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு சாப்பிட்டு வந்துள்ளனர். அரிசியினை இடிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் இந்த அவல் வெள்ளை மற்றும் சிவப்பு அரிசிகளில் தயாரிக்கப்படுகிறது. வைட்டமின், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவல் மூலம் சுவையான உணவுகளை தோழியருக்காக விருந்தளித்துள்ளார் சமையல் கலைஞர் ஜெயலட்சுமி.
அவல் லட்டு
தேவையானவை:
அவல்,
சர்க்கரை – தலா ½ கிலோ,
முந்திரி – (நெய்யில் வறுத்துக் கொள்ளவும்) 25 கிராம்,
நெய் – 200 கிராம்,
ஏலத்தூள்+ஜாதிக்காய் தூள் – தலா சிறிதளவு.
செய்முறை:
சிறிது நெய்விட்டு வாணலியில் அவலை சிவக்க வறுத்து பொடிக்கவும். சர்க்கரையையும் பொடித்துக் கொண்டு குழியான பாத்திரத்தில் பொடித்த அவல், சர்க்கரை தூள், ஏலத்தூள், ஜாதிக்காய் தூள் கலந்து முந்திரியையும் கலந்து கொள்ளவும். நெய்யை சூடாக்கி, அதனை அவல் கலவையில் சிறுக சிறுக சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும்.
அவல் தோசை
தேவையானவை:
அவல் – 1 கப், இட்லி அரிசி,
பச்சரிசி – தலா ½ கப்,
உளுந்து – 1 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு,
நெய்+எண்ணெய் கலந்து – தேவைக்கு,
புளித்த மோர் – ½ கப்.
செய்முறை:
அவலை சுத்தம் செய்து புளித்த மோரில் ஊற விடவும். இருவகை அரிசி, உளுந்து மூன்றையும் கலந்து அலசி, தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய அரிசி, பருப்பு, கலவையுடன் புளித்த தயிரில் ஊறிய அவலையும் சேர்த்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து எடுக்கவும். 1 மணி நேரம் கழித்து நெய்+எண்ணெய் கலந்த எண்ணெய் விட்டு தோசை வார்க்கவும். முறுகலாக எடுத்து காரசட்னி, சாம்பார் சேர்த்து சூடாக பரிமாறவும்.
அவல் பாயசம்
தேவையானவை:
அவல் – 1 கப்,
வெல்லம் – ½ கப்,
வறுத்த முந்திரி,
பிஸ்தா,
பாதாம்,
துருவல் – தலா 5,
நெய் – 2 டீஸ்பூன்,
பால் – 2 கப்,
ஏலத்தூள் – ½ டீஸ்பூன்.
செய்முறை:
1 டீஸ்பூன் நெய்விட்டு அவலை வறுத்து, மிக்சியில் கரகரப்பாகப் பொடிக்கவும். பாலில் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பால் மிதமான சூட்டில் இருக்கும் போது, பொடித்த அவல், சிறிது வெந்நீர் சேர்த்து கிளறி இறக்கவும். மீதியுள்ள நெய்யில் முந்திரி, பிஸ்தா, பாதாம் துருவலை லேசாக புரட்டி சேர்த்து ஏலத்தூள் கலந்து சூடாக்கி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரவைத்தும் பருகலாம். விரும்பினால் தேங்காய்ப் பால் சேர்த்தும் செய்யலாம்.
அவல் கஞ்சி (இனிப்பு + உப்பு)
தேவையானவை:
அவல் – 1 கப்,
பொட்டுக்கடலை,
கசகசா – தலா 1 டீஸ்பூன்,
துருவிய வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலத் தூள் – சிறிது,
மோர் – 2 டம்ளர்,
உப்பு,
பெருங்காயம் – சிறிது.
செய்முறை:
வெறும் வாணலியில் அவல், பொட்டுக் கடலை, கசகசாவைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். கனமான கடாயில் பாலை விட்டு, காய்ந்தவுடன் அவல் கலவையைச் சேர்த்து கிளறி ஏலம், வெல்லம் சேர்க்கவும். நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து பருகலாம். உப்பு கஞ்சி – பொடித்த அவல் கலவையை 2 டம்ளர் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்தவுடன் இறக்கி, உப்பு, பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து பருகவும். சிவப்பு அவல் என்றால் மிகவும் நல்லது.
அவல் பால் கொழுக்கட்டை
தேவையானவை:
அவல் மாவு – 1 கப்,
பால் – 500,
பாதாம் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் – தேவைக்கு,
ஏலத்தூள் – சிறிது,
நெய் – 1 ஸ்பூன்.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அவல் மாவை போட்டு (அவலை மிக்சியில் திரித்தால் அவல் மாவு) ஒரு சிட்டிகை உப்பு, நெய் விட்டு கொதிக்கும் நீர் சிறிது விட்டு கரண்டி காம்பால் கிளறவும். நன்றாக கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் செய்யவும். பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லத்தை தூள் செய்து போட்டு கிளறி, ஏலத்தூள் சேர்க்கவும். உருட்டின உருண்டைகளை போட்டு மிதமான தீயில் கிளறி இறக்கி, ஆறவிடவும். பாலுடன் உருண்டைகளை சுவைத்தால் ருசியோ ருசி.
அவல் வடாம்
தேவையானவை:
அவல் – ¼ கிலோ,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 100 கிராம்,
பச்சை மிளகாய் – 5 (விழுதாக அரைக்கவும்),
ஓமம் – 1 டீஸ்பூன்,
துருவிய வெள்ளைப் பூசணி – ½ கப்,உப்பு – தேவைக்கு.
செய்முறை:
அவலை வெள்ளைத் துணியால் துடைத்து ½ கப் சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும். அத்துடன் துருவிய பூசணி, பச்சை மளகாய் விழுது, ஓமம், உப்பு சேர்த்து கலந்து, பிளாஸ்டிக் ஷீட்டில் சின்னதாக கிள்ளி வைத்து, வெயிலில் வைத்து காய்ந்தபின் எடுத்து வைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
கருப்பட்டி சம்பா அவல்
தேவையானவை:
சம்பா கெட்டி அவல் – 1 கப்,
பனை வெல்லம் (கருப்பட்டி) – ½ கப்,
தேங்காய்துருவல் – ½ கப்,
நெய் – 1 ஸ்பூன்.
செய்முறை:
அவலை நன்கு நீரில் அலசி, ஒரு கப் வெந்நீரில் ஊறவிடவும். கருப்பட்டியை துருவி, சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும். கருப்பட்டி கரைசலில் ஊறவைத்த அவலை நீர் இல்லாமல் பிழிந்து போட்டு மிதமான தீயில் லேசாக கிளறி தேங்காய் துருவல், நெய் விட்டு கிளறி சுருள வந்தவுடன் இறக்கி பரிமாறவும். மிகுந்த சத்துள்ளது கூட!
அவல் புளியோதரை
தேவையானவை:
புளிக்கரைசல் – ½ கப்,
மஞ்சள் தூள் – சிறிது,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த தனியா,
எள்ளு – தலா 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
வறுத்து உடைத்த வேர்க் கடலை,
முந்திரி – தலா 1 டீஸ்பூன்.
உப்பு,
எண்ணெய்,
கறிவேப்பிலை – தேவைக்கு,
அவல் – ¼ கிலோ,
பெருங்காயம் தூள் – சிறிது.
செய்முறை:
அவலை சுத்தம் செய்து, அதில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வறுத்த முந்திரி, வேர்க்கடலையைத் தவிர்த்து விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அவலை அதில் கொட்டிக் கிளறவும். வறுத்த முந்திரி, வேர்க்கடலை, பெருங்காயத் தூள், எள்ளு, தனியாத் தூள் சேர்த்து தூவி, கிளறி இறக்கவும். சுவை, மணம் நிறைந்த புளியோதரை அவல் தயார். இது போல் தயிர் அவல், எலுமிச்சை அவல், பால் கற்கண்டு சேர்ந்த இனிப்பு அவலும் தயாரிக்கலாம்.
கேரட் அவல் அல்வா
தேவையானவை:
துருவிய கேரட் – 1 கப்,
நெய்யில் வறுத்துப் பொடித்த அவல் – ¾ கப்,
பால் – 1 கப்,
நெய் – ¼ கப்,
ஊறவைத்து அரைத்த முந்திரி விழுது – 4 டீஸ்பூன்,
சர்க்கரை – 3 கப்,
ஏலத்தூள் – ½ டீஸ்பூன்,
வறுத்த முந்திரி,
பிஸ்தா – தலா 10.
செய்முறை:
1 டீஸ்பூன் நெய் விட்டு கேரட் துருவலை ஈரம் போக வதக்கவும். குக்கரில் வதக்கிய துருவலுடன் பால் சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவைத்து எடுக்கவும். பொடித்த அவலை அதனுடன் சேர்த்து பால் வற்றும் வரை கிளறி, சர்க்கரை, முந்திரி விழுது, நெய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, பிஸ்தா சேர்த்து கலந்து தட்டில் கொட்டி, ஆறியவுடன் சுவைக்கவும். புதுமையான சுவையுடன் ருசிக்கும். ஏலக்காய் தூளுக்கு பதில் ரோஸ்/பாதாம்/வெனிலா எஸன்ஸ் சேர்க்கலாம்.
சிவப்பரிசி அவல் ஃபரூட் சாலட்
தேவையானவை:
பழக்கலவை – ஆப்பிள் பாதி,
பச்சை திராட்சை,
கறுப்பு திராட்சை,
மாதுளை முத்துக்கள் தலா – ¼ கப்,
பச்சைப் பழம் – ஒன்று,
கொட்டை நீக்கிய பேரீச்சை – 4, (துண்டுகள் செய்யவும்),
உலர் திராட்சை – 10,
விதை நீக்கிய பலாசுளை – 2,
மாம்பழத் துண்டுகள் – 4,
சிவப்பரிசி அவல் – 1 கப்,
நாட்டு சர்க்கரை – ¼ கப்,
தேன் – 2 டேபிள் ஸ்பூன்,
பால் – 1/4 கப்.
செய்முறை:
சிவப்பரிசி அவலைக் களைந்து 10 நிமிடம் ¼ கப் பாலில் ஊறவிடவும். வாழைப்பழம், ஆப்பிள், பலா சுளைகளை துண்டுகள் போடவும். பெரிய அகன்ற கிண்ணத்தில் பழக்கலவைகளைப் போட்டு தேனும், நாட்டு சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, ஊறிய அவலை நன்கு கலந்து கிளறி 5 நிமிடம் ஊறிய பின் பரிமாறவும். கோடைக்கு ஏற்ற சிற்றுண்டி.
அன்னாசிப்பழ அவல் புட்டு
தேவையானவை:
பொடியாக நறுக்கிய அன்னாசிப் பழம் – 1 கப்,
கெட்டி அவலை ரவையாகப் பொடித்தது – 2 கப்,
துருவிய கொப்பரைத் தேங்காய் துருவல் – 1 கப்,
துருவிய வெல்லம் – ½ கப்,
நெய் – ¼ கப்,
ஏலப் பொடி – 2 டீஸ்பூன்,
முந்திரி,
காய்ந்த திராட்சை – தலா 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
மிதமான தீயில் பொடித்த அவலை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த அவல் மாவில் 1½ கப் தண்ணீர் தெளித்து பிசிறி பத்து நிமிடம் ஆவியில் வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, 1½ கப் தண்ணீர் கொதிக்க வைக்கவும். துருவிய கொப்பரைத் துருவல், ஏலத்தூள், அன்னாசித் துண்டுகள் கலந்து உதிர்த்த அவல் மாவை சேர்த்து மிதமான தீயில் கிளறவும். பொல ெபால வென்று உதிர்ந்து வரும் போது இறக்கி நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்தும் போட்டு அகன்ற தட்டில் கொட்டி ஆற விட்டு பரிமாறவும். சாப்பிடச் சாப்பிட அலுக்காது!