எனக்கு தகுதி இருக்கா?(மருத்துவம்)
வெற்றி கிடைத்துவிட்டால் ‘எல்லாமே என்னால்தான்’ என்று நினைப்பவர்களை அதிகம் பார்த்திருப்போம். ஆனால், வெற்றி கிடைத்த பிறகு இதற்கு நான் தகுதியான நபர்தானா என்று சந்தேகம் கொள்கிறவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதற்கு Impostor Syndrome என்கிறது உளவியல்.
சினிமா, அரசியல், வர்த்தகம் என்று பல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கும் பல ஜாம்பவான்களுக்கே இந்த பிரச்னை உண்டு என்பது அதிர்ச்சி தகவல். மேலைநாடுகளில் சிலர் இதுகுறித்து வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மனநல மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம்.
இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது என்ன?
உலகளவில் தத்தமது துறைகளில் முன்னேறி சாதனைகளைப் படைத்து வெற்றி வாகை சூடிய பலரது மனதிற்குள் உட்புகுந்தால் அங்கே ஒரு ரகசியம் அடைபட்டுக் கிடக்கிறது. அதுவே Imposter Syndrome எனும் உளவியல் சிக்கல். Imposter எனும் ஆங்கில வார்த்தைக்கு மோசடிக்காரன் என்பது பொருள். அந்த அர்த்தத்தில் இந்த Imposter Syndrome எனும் பிரச்னையால் அவதிப்படுபவர்களும் உள்ளுக்குள் தங்களை ஒரு மோசடிப் பேர்வழி என்றே எண்ணுகிறார்கள்.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்…
ஒரு நபர் மாதம் 10 ஆயிரம் சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி… 10 கோடி வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும் சரி… முனைப்பும், முழு முயற்சியும் இல்லாமல் வெற்றியைத் தொட்டுவிட முடியாது. பல வருட உழைப்பும், அனுபவங்களும், யுக்தியுமே வெற்றிக்கு அருகில் அந்த நபரை அழைத்துச் செல்லும் என்பது உலக நியதி. இதற்கு மாறாக இம்போஸ்டர் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டோர், தங்களது வெற்றியும் சாதனைகளும் அதிர்ஷ்டத்தினாலோ அல்லது தற்செயலாக கடவுள் ஆசீர்வாதத்தாலோ தமக்கு கிடைத்ததாக நினைப்பர். கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும் சமீபத்தில் ஆராய்ச்சிகளும், அவர்களது நேர்காணல்களும் இதை நிரூபணப்படுத்தி இருக்கிறது.
ஏன் இப்படி உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள்?
திறமைகளும் சாதனைகளும் தங்களது கரங்களில் இருந்தபோதும், தங்களை தோல்வியுற்றவராகவும், திராணியற்றவர்களாகவுமே உள்ளுக்குள் இவர்கள் நினைத்துக்கொள்வர். இதனால் தங்களது வாழ்வில் முக்கியமாக உத்தியோகம் சம்பந்தப்பட்ட இடங்களில் பல சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள்.
இது நீண்ட காலமாகவே இருக்கும் பிரச்னையா?
கடந்த 10, 15 வருடங்களுக்குள்ளேயே இந்த Imposter Syndrome எனும் வார்த்தை பேசு பொருளாகி உள்ளது. ஆரம்ப கட்டங்களில் மெத்தப் படித்த மேல்மட்ட பெண்களிடையே இது அதிகமாக ஆராயப்பட்டது. தொழில்களிலும், பல்வேறு துறைகளிலும் பெண்கள் மேலோங்கி சாதனைகள் பல குவித்திருந்தாலும், அவர்களில் சிலருக்கு ‘தான் இதற்கு தகுதியற்றவர், ஏதோ நல்ல நேரம் என்பதால் உயர்ந்துவிட்டோம், மற்றபடி நாம் சராசரி அல்லது அதற்கும் கீழ்தான்’ என்ற எண்ணங்கள் அவர்களது உள்மனதை துளையிட்டுக் கொண்டிருந்தன. அதுவே பின்னாட்களில் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாகவும் நின்றுகொண்டிருந்தது.
தாழ்வு மனப்பான்மைக்கும் இதற்கும் தொடர்பு உண்டா?
Inferiority complex என்பதைப் போல இது ஒரு வகை உளவியல் நோய்க்கூறு. எளிய வகையில் சொல்ல வேண்டுமென்றால் தாழ்வு மனப்பான்மையைப்(Inferiority Complex) போன்றது எனலாம். தன்னம்பிக்கையையே சீர்குலைக்கும் ஆயுதமாகவும் இருக்கிறது. இதுவே நாளடைவில் மனப்பதற்றம் மற்றும் மனச்சோர்வு நிலைக்கு தள்ளிவிடும்.
இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்ற வார்த்தை முதன்முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது?
1978-ல் Pauline R.Clance என்ற வல்லுநரால் இம்போஸ்டர் சிண்ட்ரோம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிண்ட்ரோம் ஆரம்பத்தில் பெண்களிடையே தென்படுகிறது என்று கூறப்பட்டாலும், இரு பாலினரையும் பாதிக்கக்கூடியதாகவே இருக்கிறது. ஏனென்றால் மனம் ஆண், பெண் இருபாலினருக்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது.
இம்போஸ்டர் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதிக்கப்பட்டோரின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்?
இந்த பாதிப்பு மூன்று விதமாக இருக்கலாம். நான் ஒரு ஏமாற்றுக்காரன் என்பது முதல் வகை. இந்த சிந்தனைக்குத் தீனி போடுவோர் ‘தான் தகுதியற்றவன், மோசடிப் பேர்வழி’ என்ற சிந்தனையை முன்னிறுத்துவார்கள். தங்கள் குட்டு என்றாவது ஒருநாள் வெளிப்பட்டு, தங்களது முகத்திரை கிழியும் என்று எண்ணுவார்கள்.
இரண்டாவதாக அதிர்ஷ்டமே கைகொடுத்தது என்று நினைப்பார்கள். இவர்கள் தங்களது வாய்ப்புகளும், வெற்றிகளும் சந்தர்ப்பத்தினால் கிட்டியவையே தவிர ‘நான் அதற்கு சரிப்பட்டு வர மாட்டேன்’ என்று வடிவேலுவின் வசனத்தைப்போல் நினைப்பவர்கள்.மூன்றாவதாக அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க என்பார்கள். இவர்கள் அதீத தன்னடக்கம் கொண்டவர்கள். எத்தகைய சாதனைகளையும் சிறியதாகவே நினைப்பவர்கள். Google CEO பதவி கிடைத்தால்கூட ‘இதெல்லாம் என்னங்க பெரிய விஷயம்’ என்று பேசுபவர்கள்.
சரி… இதனால் அப்படி என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும்?
கட்டாயம் பெரிய பாதிப்புகள் உள்ளது. ஆம்… இந்த இம்போஸ்டர் சிண்ட்ரோம் உங்களது தன்னம்பிக்கையையும், முயற்சிகளையும், வாய்ப்புகளையும் மெல்ல மெல்ல மென்று தின்றுவிடும். நாம் ஒரு மதிப்பற்றவர் என்று நினைக்க வைத்துவிடும். நாளடைவில் மன உளைச்சலுக்கும், பதற்றத்துக்கும் வழிவகுத்துவிடும்.
‘எவர் ஒருவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரோ, அவருக்கே வானம் வசப்படும்’ என்று ஒரு பொன்மொழியுண்டு. நம்மை விளம்பரப்படுத்தாவிடினும்,நம் மதிப்பை நாம் அறிந்தே இருக்க வேண்டும். அதற்கு இம்போஸ்டர் சிண்ட்ரோம் மனநிலையை தூக்கி எறிய வேண்டும்.
இம்போஸ்டர் சிண்ட்ரோமில் இருந்து எப்படி மீள்வது?
இம்போஸ்டர் சிண்ட்ரோமில் இருந்து வெளி வர 7 வழிகள் உள்ளன. இவை நடைமுறை வாழ்வில் சாத்தியமே என்பதால் பின்பற்றுவதும் எளிதுதான்.
1. மௌனம் கலையுங்கள்…
இது ஒரு தேவையற்ற மனநிலை என்பதை உணருங்கள். களை எடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை உறுதிப்படுத்துங்கள். தனியாக, உள்ளுக்குள்ளேயே புழுங்காதீர்கள்.
2. உண்மையையும் உணர்வையும் பிரித்துப் பாருங்கள்
நீங்கள் திறமையானவர். பலகட்ட முயற்சிகளுக்குப் பின்னே உயர்ந்தவர். மற்றவர்களைவிட தனித்துவமானவர். இதுவே உண்மை. ‘நான் தகுதியற்றவன்’ என்பது உங்கள் உணர்வு. உண்மையும், உணர்வும் வேறு வேறு. குழப்பிக் கொள்ளாதீர்கள்.
3. பரிபூரணத்திற்கு முயற்சி செய்யுங்கள்; ஆனால் முட்டிக் கொள்ளாதீர்கள்
எந்த ஒரு காரியத்தையும் மிகச் சிறப்பாக, பரிபூரணமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதையே பிடித்துத் தொங்காதீர்கள். இதையே ஆங்கிலத்தில் Obsessive perfectionism என்கிறார்கள். இந்த மனநிலையால் தேங்கி நின்று விடாதீர்கள். கடந்து வாருங்கள். நடந்துகொண்டே இருங்கள்.
4. வெற்றிகளையும், மதிப்புகளையும் தராசில் வையுங்கள்
குறைகளையும், சந்தேகங்களையும் மட்டுமே உற்று நோக்கிக்கொண்டிருக்காதீர். மனம் எப்போதுமே தன்னிடத்தில் உள்ள குறைகளையே அசை போட்டுக் கொண்டிருக்கும். அதை நிறுத்திடுங்கள். உங்களிடத்திலுள்ள நல்ல விஷயங்களை பட்டியலிடுங்கள். அதை உங்கள் கண் முன்னால் தினமும் ஓட விடுங்கள்.
5. தோல்வியால் துவண்டு விடாதீர்கள்
தோல்வியெனும் கல்லிலே உங்களது முதற்படிக்கட்டை செதுக்கிடுங்கள். யாரும் இங்கே முதல் முயற்சியிலேயே உச்சாணிக் கொம்பில் ஏறிவிடவில்லை. உலகமறிந்த பல சரித்திர சாதனைக் கதைகள் உண்டு. உங்களது கதையை எழுத ஆரம்பியுங்கள்.
6. யாரும் இங்கே குறையற்றவர் இல்லை
தவறு செய்வதிலும் தடுக்கி விழுவதிலும் ஒரு அவமானமும் இல்லை. எழுந்து நடந்துகொண்டே இருங்கள். யாருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். திறன்களை மேம்படுத்திக்கொண்டே செல்லுங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றை கற்றுக்கொடுப்பார். கற்றுக்கொண்டே இருங்கள்.
7. கற்பனை செய்யுங்கள், கனவு காணுங்கள்
நீங்கள் செய்யும் அனைத்து செயலின் இறுதியில் கிடைக்கப்போகும் வெற்றியையும், மாலை விழும் தருணங்களையும் கண் முன்னே கற்பனை செய்யுங்கள். முறுக்கேற்றும் இளையராஜாவின் இசையோ ஏ.ஆர்.ரகுமானின் தாளமோ மனதிற்குள் கேட்கட்டும். கனவுகளுக்கு உயிரூட்டட்டும். உங்களை நீங்களே தட்டிக்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை உரம் போட்டு வளருங்கள்.
இவை எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியைப்போல் Imposter மனநிலையிலிருந்து உங்களைக் காக்கும். அதற்கு மேலும் சிரமப்பட்டால் உதவி செய்ய நிறைய மனநல துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்ளார்கள். அவர்களிடம் ஆலோசனை பெற்று, வாழ்க்கையில் முன்னேறுங்கள்.