Time is Brain!(மருத்துவம்)
மருத்துவத்தில் மாரடைப்பு, ஸ்ட்ரோக் இவற்றுக்கான சிகிச்சையை எந்த அளவிற்கு முன்னதாக தொடங்குகிறோமோ, அந்த வேகத்தில் அந்த நோயாளியை காப்பாற்ற முடியும். இதை Time is Brain மற்றும் Golden Period என்று சொல்வோம். என்னிடம் வந்த நோயாளி ஒருவர். 60 வயதான ரிட்டயர்டு ஹெட்மாஸ்டர் அவர். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இரண்டும் உண்டு. அவற்றுக்கான மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டு வருவார். ஒருநாள் அதிகாலை 5 மணி அளவில் தூங்கி எழ முயற்சித்தபோது, அவரால் எழ முடியவில்லை. இடது கையையும் காலையும் அசைக்க முடியவில்லை. தனக்கு ஏதோ நேர்ந்து விட்டதை உணர்ந்து கொண்டு தனது மனைவியை கூப்பிடுகிறார். உடனடியாக அவரது மனைவியும் மகனும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இரவு நேர பணியில் இருந்த இளம் மருத்துவர் அவரைப் பார்த்தவுடனேயே அவருக்கு பக்கவாதம்(stroke) ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்கிறார். உடனடியாக நோயாளிக்கு நாடித்துடிப்பு, ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவை சோதிக்கப்பட்டது.
நோயாளிக்கு முதலில் என்னென்ன அறிகுறி ஏற்பட்டது? எத்தனை மணிக்கு முதல் அறிகுறி ஏற்பட்டது? தற்போது அந்த அறிகுறி அதிகமாக உள்ளதா அல்லது குறைந்துள்ளதா? அறிகுறி ஏற்பட்ட போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? நினைவில் ஏதும் மாற்றம் இருந்ததா? வலிப்பு வந்ததா, இதற்கு முன்பு இதே மாதிரியான அறிகுறிகள் எப்பாவது ஏற்பட்டிருந்ததா? அப்படி ஏற்பட்டிருந்தால் எத்தனை முறை வந்தது? மற்ற நோய்கள் ஏதேனும் உள்ளனவா? அதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்கிறாரா? புகைப்பழக்கம், குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஏதேனும் உள்ளதா? குடும்பத்தில் பக்கவாதம் தாக்கிய நபர்கள் உள்ளனரா? – என நோயாளியைப் பற்றிய பல கேள்விகளை கேட்டுக் கொண்டே மின்னல் வேகத்தில் செயலாற்றினார்.
நோயாளிக்கு உடனடியாக சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, எனக்கு போன் செய்து நோயாளியின் நிலைமையைப் பற்றி கூறினார். அதன்பின் நோயாளிக்கான ஆய்வுகள் அனைத்தும் துரித வேகத்தில் நடந்தது. ரத்த ஆய்வுகள் எடுக்கப்பட்டன, சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. நோயாளி உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவை அனைத்தும் மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு 30 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. நோயாளியின் மனைவியிடம் அவரது கணவருக்கு மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அவரது இடது கை, கால் வேலை செய்யவில்லை என்பதையும், இது பக்கவாதம் என்ற தகவலையும் சொன்னோம். பக்கவாதம் 80 சதவீதம் ரத்தக் குழாய் அடைப்பினாலும் 20 சதவீதம் ரத்தக்குழாய் கசிவினாலும் ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு முதல் நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனையை வந்தடைந்தால் மூளையில் உள்ள ரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை உடனடியாக மருந்து செலுத்தி நீக்க முடியும். எவ்வளவு விரைவாக அந்த மருந்தை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.
சிடி ஸ்கேன் எடுத்ததற்கு முக்கிய காரணம் நோயாளியின் மூளையில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளதா அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கே. ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான சிகிச்சைகள் வேறு. ரத்தக்குழாய் அடைப்பை கரைக்கும் மருந்தான RTPA (Recombinant Tissue Plasminogen Activator) என்ற மருந்தினை உடலில் செலுத்தி தடைபட்டுப்போன ரத்த ஓட்டத்தை சீர் செய்ய முடியும். எனவேதான் இந்த முதல் நான்கரை மணி நேரத்தை Golden Period(கோல்டன் பீரியட்) என்று கூறுகிறோம். இந்த மருந்தை செலுத்துவதற்கு முன்பு, நோயாளிக்கு போதிய உடல் தகுதி உள்ளதா என்பதை முதலில் அறிந்த பின்பே மருந்தை செலுத்துவோம். உதாரணமாக, நோயாளி முந்தைய மூன்று மாதங்களில் எந்த அறுவை சிகிச்சையும் செய்திருக்கக்கூடாது. ரத்தம் உறையும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்ககூடாது என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வோம்.
அந்தப் பெண்மணி காலம் கடத்தாமல் தகுந்த நேரத்தில் அவரது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவருக்கு rtPA மருந்தினை கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது என்பதை அவருக்கு தெளிவுபடுத்தினோம். பக்கவாதம் ஏற்பட்ட நோயாளியின் ரத்த அழுத்தம் வெகுவாக அதிகரிக்கும் என்பதால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்த்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. முதல் மூன்று நாட்களுக்கு பக்கவாத நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே தான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவம் பார்க்கப்படுகிறது. rtPA மருந்தை செலுத்தி 24 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்கப்படுகிறது மற்றும் நோயாளியின் தன்மைக்கு ஏற்றவாறு வேறு சில மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. மேற்கூறிய அனைத்தும் எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும் என்று கூற முடியாது.
பக்கவாத நோயின் தன்மையானது அடைப்பு ஏற்பட்ட ரத்தக்குழாயின் சுற்றளவு மற்றும் மூளையின் எந்தப்பகுதி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொருத்து வேறுபடுகிறது. சிறிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு பல நேரங்களில் சீக்கிரம் சரியாகிவிடுகிறது. இந்த நோயாளிக்கு மருந்து செலுத்தி 24 மணி நேரம் கழித்து நோயாளியை பார்த்தபோது அவரால் அவரது இடது கையையும் காலையும் அசைக்க முடிந்தது. முதல்நாள் இருந்ததைவிட அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். ஐந்தாவது நாள் முடிவில் அவரால் எழுந்து நடக்க முடிந்தது. இடது கையை நன்றாக அசைக்க முடிந்தது. இவ்வாறு முன்னேற்றம் ஏற்பட்டதை மருந்துகளின் மாயாஜாலம் என்றே கூறலாம்.
Time is brain காலம் பொன்னானது என்பதற்கான அர்த்தத்தை பக்கவாதத்திற்கான சிகிச்சையில் முழுமையாக உணர முடியும். எனவேதான் பக்கவாதத்திற்கான அறிகுறிகளை மக்கள் விழிப்புணர்வோடு தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நேரத்தை வீணடிக்காமல் செய்யப்படும் சிகிச்சை நோயாளியின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை பொதுமக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
பக்கவாதத்திற்கான மற்ற சிகிச்சைமுறைகள்
தற்பொழுது பக்கவாதம் ஏற்பட்டு நாலரை மணி நேரத்தை தாண்டி வரும் நோயாளிகளுக்கு rtPA மருந்தினை தொடையில் இருக்கும் ரத்தக்குழாய் வழியாக மேலே மூளையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் ரத்தக்குழாய் வரை கொண்டு சென்று நேரடியாக அடைப்பின் மீது மருந்தினை பீச்சி அடிப்பதன் மூலம் அடைப்பை உடைத்து ரத்த ஓட்டத்தினை சீர் செய்ய முடியும். இதனை இன்ட்ரா ஆர்டிரியல் த்ராம்போலைசிஸ்(Intra arterial thrombolysis) என்று சொல்வோம். மற்றொரு முறையானது மெக்கானிக்கல் த்ராம்பக்டமி(Mechanical thrombectomy). அதாவது ஒரு நுண் கம்பியைக் கொண்டு மேலே சொன்னபடி தொடையில் உள்ள ரத்தக் குழாய் மூலமாக மேலே மூளை வரை சென்று ரத்தக்கட்டை உறிஞ்சி அப்படியே வெளியே எடுத்து வந்துவிடுவது. மேற்கூறிய இரு மருத்துவ முறைகளும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் செய்யக்கூடியன.
24 மணி நேரம் கழித்து, அதாவது பக்கவாதம் ஏற்பட்டு ஒரு நாள் கழித்து வரும் நோயாளிகளுக்கு மேற்கூறிய சிகிச்சைகள் செய்ய முடியாது. அவர்களுக்கு பெரும்பாலும் மூளையின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் மாத்திரைகள், மூளையின் அழுத்தத்தை குறைப்பதற்கான மாத்திரைகள் மற்றும் கொழுப்பினால் ரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்க கொழுப்பை குறைப்பதற்கான மாத்திரைகள் ஆகியன முதன்மையாக கொடுக்கப்படும். மேலும் நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு, சிறுநீரகக்கோளாறு போன்றவற்றில் ஏதேனும் இருந்தால் அதற்குத் தக்கவாறு சிகிச்சை அளிக்கப்படும். ரத்தக் கசிவினால் ஏற்படும் பக்கவாத நோய்க்கு முக்கிய காரணம் உடலில் ரத்தக் கொதிப்பு அதிகமாகி சரியாக மாத்திரை எடுத்துக் கொள்ளாததால் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி ரத்தக்குழாய் வெடிப்பதே… மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் மூளையின் அழுத்தம் அதிகமாகி, வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.
ரத்தக் கசிவினால் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் மூளையை பாதிக்கிறது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிய CT ஸ்கேன் உதவுகிறது. ரத்தக்கசிவுக்கான சிகிச்சை முறைகள் வேறு விதமானவை. முதன்மையாக ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் செலுத்தப்படும். பின்பு மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் செலுத்தப்படும். வலிப்பு வராமல் இருப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். 2 நாட்கள் கழித்து மறுபடியும் சி.டி ஸ்கேன் தேவைப்பட்டால் எடுத்து பார்க்கப்படும். ஏனெனில் ரத்தக் கசிவின் அளவு அதிகமாக உள்ளதா குறைந்துள்ளதா அல்லது அப்படியே உள்ளதா என்பதைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். பக்கவாத நோய்க்கான சிகிச்சையில் மூளைக்கான எம்.ஆர்ஐ ஸ்கேன்(MRI Scan) பற்றி தெரிந்துகொள்வது அவசியம். சிடி ஸ்கேன் என்பது ஆரம்பகட்ட பரிசோதனை.
சிடி ஸ்கேன் அனைத்து மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இருக்கும். சிடி ஸ்கேனிற்கான பரிசோதனை செலவு சற்று குறைவு. எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது மூளையில் ஏற்பட்டிருக்கும் தொந்தரவினை மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டும் கருவி. மூளை ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பினால் வரும் மாற்றங்களை மிகத்துல்லியமாக வினாடிகளுக்குள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்க முடியும். எம்.ஆர்.ஐ ஸ்கேனில் பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. அதன்மூலம் மூளையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு புதிதாக ஏற்பட்டதா அல்லது முன்னமே ஏற்பட்டதா, ரத்தக்கசிவின் அளவு எவ்வாறாக உள்ளது, மூளையில் ஏற்பட்டிருப்பது ரத்தக்கசிவா அல்லது கால்சியம் படிவமா என்பதை பிரித்தாராய்வதற்கும், பின்பகுதி மூளையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆகியவற்றை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மிக நேர்த்தியாக தெரிந்து கொள்ள முடியும்.