வலியேதும் இல்லா வாழ்க்கை!(மருத்துவம்)

Read Time:12 Minute, 30 Second

வீன வாழ்க்கையும், கணினிமயமும் எல்லோரையும் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கிறது. இதனால் பலவிதமான வேலைகளும் ஒரு இடத்தில் அமர்ந்தபடி பார்க்கும் நிலை. நீண்ட நேரம் தொடர்ச்சியாக அமர்ந்தபடி வேலை பார்ப்பவர்கள் ஒரு சில ஆண்டுகளில் பலவிதமான வலிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
முதுகுத் தண்டு பகுதியில் உண்டாகும் பிரச்னைகளின் தொடர்ச்சியாகக் கழுத்து வலி, தோள்ப்பட்டை வலி மற்றும் முதுகு வலியும் உண்டாகிறது.
பெண்கள் வீட்டு வேலைகளுடன் அலுவலகப் பணிகளையும் கவனிப்பதால் அவர்களுக்கு இடுப்பு வலியும் சேர்ந்து கொள்கிறது. இதற்கான தீர்வுகள் என்ன?விளக்கம் அளிக்கிறார் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் பாணி கிரண்.

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில், லட்சக்கணக்கான மக்கள் வேலையின்போதும் பயணத்தின்போதும், வீட்டிலும் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழலில் உள்ளனர். தினமும் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருந்தால், அது நமது உடல்நலத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீரிழிவு, இதய நோய்  மற்றும் மனச்சோர்வு, புற்றுநோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தபட்சம் 8 மணிநேரம் முதல் 10 மணி நேரம் வரை தனது வேலைகளை உட்கார்ந்தே கவனிக்கிறார். இவ்வாறு அதிக நேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது முதுகு அல்லது கழுத்துவலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் அது முதுகெலும்பின் தசைகள், தசைநார்கள், வட்டுகள் மற்றும் மூட்டுகளை பாதிக்கிறது. தொடர்ச்சியாக உட்கார்ந்து பணியாற்றும்போது அது முதுகெலும்பு, வயிறு மற்றும் பின் தொடை தசைகள் ஆகியவற்றை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகள் நெகிழ்வுத்தன்மையை இழந்து மரத்துப் போய் விடுகின்றன. இதனால் முதுகின் கீழ்ப்பகுதில் வலி ஏற்படுகிறது. உட்காரும்போது முன்னோக்கி சரிந்த நிலையில் உட்காருதல் அல்லது முதுகு வளைந்த நிலையில் உட்காருதல், நாற்காலியின் விளிம்பில் உட்காருதல் மற்றும் பின்புறமாக அதிக சாய்ந்த நிலையில் உட்காருதல், கம்ப்யூட்டர் ஸ்கிரீனை கழுத்தை  வளைத்து கீழ் நோக்கி அல்லது மேல் நோக்கி பார்த்தல் ஆகியவை முதுகெலும்பில் உள்ள தசைகள் மற்றும் கட்டமைப்பிற்கு பாதிப்பை உண்டாக்கும். இதனால் முதுகு, கழுத்து அல்லது தோள்ப்பட்டையில் வலி ஏற்படும்.

மொபைல் போனில் பேசும்போது கழுத்தை முன்னோக்கிய நிலையில் வைத்துப் பேசுவோம். அவ்வாறு நீண்ட நேரம் பேசும்போது, அது முதுகெலும்பு மற்றும் தோள்ப்பட்டை தசைகளுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மேற்புற முதுகுவலி கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்படுகிறது. சரியான முறையில் உட்காராத போது இடுப்பு வட்டுக்கள் அதிக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக வட்டுகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய வாழ்க்கைமுறையில் உடல் பருமனும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உடல் பருமனால் முதுகெலும்பு பாதிக்கப்படுவதால் முதுகு வலி உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் நிபுணராக இருந்தால், பல மணி நேரம் உட்கார்ந்திருப்பதால் உண்டாகும் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி முதுகு வலியைத் தடுக்க முடியும்.

நல்ல தோரணை

வீட்டு வேலைகள், உட்கார்ந்து செய்யும் வேலைகள், வளைந்து செய்யும் வேலைகள் மற்றும் அதிக எடைகளைத் தூக்குதல், பயணம் செய்தல் போன்ற அன்றாட வழக்கமான நடவடிக்கைகளின் போது சரியான பொஷிஷனில் அதாவது சரியான தோரணைகளைக் கடைபிடிக்க வேண்டும். உட்கார்ந்து வேலை செய்யும்போது முதுகிற்குப் போதுமான ஆதரவு, தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை ஒரே நேர் புள்ளியில் இருக்கும்படி வைத்துக் கொள்ளலாம். முதுகு, தொடை ஆகியவற்றுக்கு ஏற்ற நமது தேவைக்கு ஏற்ற வகையில் உயரத்தை சரி செய்து கொள்ளும் மற்றும் கைகளுக்கு ஓய்வு அளிக்கக் கூடிய நாற்காலிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நாற்காலியில் இருந்து எழுந்து சென்று கை கால்களை நீட்டி மடக்குவது முக்கியம். முதுகிற்கு வலி ஏற்படாமல் உடலை வளைக்கவும், எடைகளைத் தூக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

முதுகெலும்பு தசைகள், வயிற்று தசைகள் மற்றும் முக்கியத் தசைகளை வலிமைப்படுத்த வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அது முதுகுவலி ஏற்படாமல் தடுக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், குழந்தை பெற்ற பெண்கள், வயதான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடுப்பு, தோள், கழுத்து ஆகியவற்றின் தசைகள் பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் முதுகெலும்பு மற்றும் பின்புற தசைகளில் உள்ள கட்டமைப்புகளில் அதிக அழுத்தம் உண்டாக வாய்ப்புள்ளது. இதனாலும் முதுகுவலி ஏற்படலாம். உடற்பயிற்சியே இதற்குச் சரியான தீர்வு. முதுகெலும்பு தசைகள், வயிற்று தசைகள் மற்றும் முக்கிய தசைகளை வலிமைப்படுத்தி வலிகளில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சியைத் தொடருங்கள்.

தூக்கம்

நமது தூக்கத்தின் போது முழு நாளின் அழுத்தத்தில் இருந்து முதுகெலும்பு மீட்கப்படுகிறது. நாம் நேரான தோரணையில் இருக்கும் பொழுது முதுகெலும்புத் தசைகள் நாள் முழுவதும் வேலை செய்கின்றன. அடுத்த நாள் அவை தயாராக இரவு தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். முதுகெலும்பில் உள்ள வட்டுகளின் நீர் சத்துக் குறைகிறது. நாம் தூங்கும் போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ வட்டுகள் இழந்த நீரை மீட்டெடுக்கின்றன. போதுமான தூக்கம் இல்லாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்தம் தசை சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் வட்டு சிதைவு ஏற்படும். முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்க குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்.

உணவு மற்றும் சூரிய ஒளி

உடலில் நீர் இழப்பைத் தடுக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியமாகும். முதுகெலும்பில் உள்ள வட்டுகளின் செயல்பாடு அதன் மேட்ரிக்சில் போதுமான நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனைப் பொறுத்ததே. இந்தத் திறனை இழப்பது என்பது வட்டு சிதைவு மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்களை நோக்கிய முதல்படியாகும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த சீரான உணவு தசை மற்றும் எலும்புகளின் வலிமைக்கு அவசியமானதாகும். போதுமான சூரிய ஒளியைப் பெறாதது மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கம் ஆகியவை காரணமாக வைட்டமின் டி குறைபாடு என்பது நம்மிடையே பொதுவான ஒன்றாக இருக்கிறது. இக்குறைபாடு வயதானவர்களுக்கு பெரிய ஆபத்தினை விளைவிக்கிறது. அவர்களது தசைகளின் ஒருங்கிணைப்பு பாதிக்கப்படுகிறது. எலும்புகளில் கால்சியம் குறைபாடு என்பது எலும்பு பலவீனமாதல், எலும்பு முறிவு மற்றும் வட்டு சிதைவுகளுக்கும் வழிவகுக்கிறது. சூரிய ஒளியைப் பெறுங்கள், ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வதோடு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

புகைப்பிடித்தலை நிறுத்தவும்

மரபணு அல்லாமல், ஆரம்ப வட்டு சிதைவுக்கு புகைப்பிடித்தல் என்பது முக்கியக் காரணியாக உள்ளது. முதுகெலும்பில் உள்ள வட்டுக்களுக்கு அவற்றின் சொந்த ரத்த வழங்கல் இல்லை. அது ஆக்சிஜன், க்ளுக்கோஸ் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு அருகில் உள்ள முதுகெலும்பின் மையப் பகுதியைச் சார்ந்துள்ளது. புகைப்பிடிப்பதால் முதுகெலும்பிற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இது வட்டுக்களில் ஊட்டச்சத்துக்களின் ஊடுறுவலை பாதிக்கிறது. இதனால் வட்டுசிதைவு மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். புகைப்பிடிப்பவர்களுக்கு எலும்பு பலவீனமாகும் ஆபத்து அதிகம். இதனால் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உடனடியாக நிறுத்தவும். மேலே கூறப்பட்ட ஐந்து பழக்கங்களையும் கடைபிடித்து முதுகு கழுத்து மற்றும் தோள்பட்டை வலி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். முதுகெலும்பு வலிக்கு வேறு காரணங்கள் இருந்தால் மேலும் அதன் அறிகுறிகள் தொடர்ந்தால் அல்லது மீண்டும் வந்தால் அது தொடர்பான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Time is Brain!(மருத்துவம்)
Next post உச்சி முதல் பாதம் வரை!! (மகளிர் பக்கம்)