ஆசாரப் பாட்டி கற்றுக் கொடுத்த ஆரோக்கியம்! (மருத்துவம்)

Read Time:8 Minute, 48 Second

திருவல்லிக்கேணியில் ஓடு வேய்ந்த 2 கட்டு வீடு. தந்தை வெளிமாநிலத்தில் இருந்ததால், நான், பாட்டி, மாமா, மாமி, குழந்தைகள் என 52 வருடங்களுக்கு முன் கூட்டுக் குடும்பமாக அந்த வீட்டில் வாழ்ந்த நாட்கள் அனைத்தும் இன்பமானவை. பெரியவர்கள் 7 பேர், குழந்தைகள் 10 பேர்… சந்தோஷத்திற்கும் குறைவில்லை. எங்க மீனாட்சி பாட்டிக்கு 82 வயது. ஆசாரப் பாட்டி என்று எல்லோராலும் அறியப்பட்டவர். எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும் வரவு செலவு கணக்குகளை விரல் நுனியில் வைத்திருப்பார். நல்ல ஞாபக சக்தி. கண்டிப்புடன் எதையும் கையாளுவார். கண்ணாடி போட மாட்டார். காது நன்றாக கேட்கும். தாத்தா இறந்தபின் நார்மடி புடவை, தலையில் முட்டாக்கு, ருத்ராக்ஷ மாலையும், ஸ்படிக மாலையும் ஜபம் செய்ய போட்டிருப்பார்.

அலாரம் இல்லாமலேயே காலை 4 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து, பச்சை தண்ணீரில் குளித்து, அவர் உடுத்தி இருந்த புடவையை அவரே அலசிவிடுவார். அந்த புடவையை மற்ற உடைகளோடு உலர்த்தமாட்டார். தனியாக அவருக்கு என்று ஒரு கொடி உயரத்தில் இருக்கும். அதில் தான் காயப்போடுவார். எப்பொழுதும் மடிபுடவை. வீட்டில் யாரும் அவரைத் தொடக்கூடாது. தப்பித்தவறி தொட்டுவிட்டால் மறுபடியும் குளித்த பிறகு தான் சாப்பிடுவார். சின்னக் குழந்தைகளைத் தூக்க விரும்பினால் ‘சட்டையைக் கழட்டிக் கொடு, நான் கொஞ்சநேரம் வெச்சுக்கறேன்’ என்பார்.

பாட்டி எப்படியோ அப்படித்தான் சமையலறையும் இருக்கும். சமையலறை தான் ஆரோக்கியத்தின் பெட்டகம் என்பதால், அங்கு சில சட்டத்திட்டங்கள் உண்டு. வீட்டில் பெரியவர்களுக்கு மட்டும் தான் காபி. குழந்தைகளுக்கு கஞ்சிதான். மேலும் இந்தப் பாத்திரத்தில் தான் சமைக்க வேண்டும் என பாட்டி உறுதியாக இருப்பார். சாதத்திற்கு வெண்கலப்பானை, மூடிவைக்க வடிக்க சிப்பல் தட்டு, வத்தக் குழம்பு வைக்க கல்சட்டி, சாம்பார் வைக்க ஈயம் பூசிய பித்தளை அடுக்கு, ரசம் பண்ண கண்டிப்பாக ஈய சொம்பு, காய்கறி வதக்க சீனாச்சட்டி, தாளித்துக் கொட்ட இரும்புக் கரண்டி… இப்படி ஒவ்ெவாரு உணவுக்கும் தனிப்பட்ட பாத்திரம் உண்டு.

தினமும் சமையல் முடித்து காக்கைக்கு சாதம் வைத்தபின் குழந்தைகளுக்கு சாப்பாடு பறிமாறுவார். பருப்பு, காய்கறி, சாதம், நெய், குழம்பு, ரசம். மோர் என்று வரிசையில் பறிமாறுவார். மாவடு, வேப்பிலைக்கட்டி, மாகாளி கிழங்கு போன்ற ஊறுகாய் வகைகளும் உண்டு. சாப்பாட்டை சிந்தவோ மிச்சம் வைக்கவோ கூடாது போன்ற சட்டங்கள் உண்டு. அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவர் தான் கழுவ வேண்டும். அதன் பிறகு மறுபடியும் பாட்டி கழுவி எடுத்து வைப்பார். சாப்பிட்ட இடத்தை சாணிபோட்டு சுத்தம் செய்வது வழக்கம்.

நாங்கள் யாருமே டாக்டர் வீடு என்று போனது கிடையாது. பாட்டியின் கைவைத்தியம் தான். வயிற்று வலிக்கு கொதி கஞ்சியில் பனங்கற்கண்டு போட்டு தருவார். அல்லது ஒரு வெற்றிலையில் கொஞ்சம் ஓமம், உப்புக்கல் வைத்து சுருட்டி மெல்லச் சொல்லுவார். தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவுவார். வேப்பம் பூவும், சுண்டை வற்றலும் நெய்யில் வறுத்து முதல் 2 கவளம் சாதத்துடன் சாப்பிட நாக்குப்பூச்சி வெளியேறும் என்று கொடுப்பார்.

தலைவலிக்கு சுக்கு, பித்தத்திற்கு இஞ்சி, எலுமிச்சம்பழம் சாறு, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் விளக்கெண்ணை குடிக்க வேண்டும். அன்று பருப்பு துவையல், சீரக ரசம், மணத்தக்காளி வற்றல் என மதிய சமையல் இருக்கும். வெள்ளிக்கிழமை பெண்களும், சனிக்கிழமை ஆண்களும் எண்ணெய் ஸ்நானம் செய்ய வற்புறுத்துவார். குளித்த தலையை சாம்பிராணி புகை போட்டு பைப்பின்னல் பின்னி விடுவார். ஒரு பொழுதும் தலை விரிகோலமாக இருப்பதை அனுமதிக்கமாட்டார்.

ஏகாதசியன்று பாட்டி முழுபட்டினி இருந்தாலும் அன்றும் அவர் தான் சமைப்பார். துவாதசி பாராயண மெனு எப்பொழுதும் மாறாது. பருப்பு, சுண்டைக்காய் குழம்பு, நெல்லி முள்ளி பச்சடி, அகத்திக் கீரை கறி, ரசம், மோர், ஊறுகாய் என சரிவிகித உணவு இருக்கும். அப்பளம், தின்பண்டம் எதுவாகிலும் கையினால் விண்டு சாப்பிட வேண்டும். கடித்து சாப்பிடுவது தவறு என்பார். தண்ணீர் காபியாக இருந்தாலும் எச்சில் செய்து குடிக்க அனுமதிக்க மாட்டார்.

இவை பாட்டியின் எழுதப்படாத சட்டங்கள். அதே போல் முறுக்கு, சீடை, தட்டை, தேன் குழல், பயத்தம் லாடு, பொருள் விளங்கா உருண்டை… அனைத்தும் அவரே செய்வார். கடைகளில் தின்பண்டங்கள் வாங்க அனுமதி கிடையாது. இரவு 7 மணிக்கெல்லாம் இரவு உணவு சாப்பிட்டுவிட வேண்டும். இந்த நல்ல பழக்க வழக்கங்களுக்கு ஆசாரம் என்று பெயர் சூட்டினாலும் அதிலுள்ள விஞ்ஞான பூர்வமான உண்மையை யாரும் மறுக்க முடியாது. விடியல் காலையில் எழுதல், காலைக் கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் குளித்து சுத்தமாக துவைத்த புடவையை உடுத்தி இறைபக்தியுடன் தியானம் செய்து அந்த நாளை துவங்குவது உடலுக்கும், மனதுக்கும் அமைதி, ஆரோக்கியம்.

எல்லாவித கீரைகள், காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வது, நேரத்திற்கு சாப்பாடு உடல் ஆரோக்கியத்தை காக்கும். பழைய சாப்பாட்டை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் சூடுபண்ணி பரிமாறும் அவலம் இல்லை. எளிமையான சமையலாக இருந்தாலும் சத்துமிகுந்த சாப்பாடு. உடலுக்கு ஆரோக்கியமானது. உணவே மருந்து, மருந்தே உணவாகிறது. கை வைத்தியம் செய்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும் செயல்.

நல்ல பழக்க வழக்கங்கள் இவை அனைத்தும், பாட்டி 91 வயது வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததிற்கான ரகசியம். ஒழுக்க முறைகளை வீட்டில் சர்வ சாதாரணமாக கடைபிடித்து வந்தனர் நம் முன்னோர், நோய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ்ந்தனர். நாமும் அவற்றைக் கடைபிடித்து நோய் தொற்றை மற்றவருக்கு தராமலும் நாம் பெறாமலும் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் நாடும், வீடும் மகிழ்ச்சி பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூன்றடுக்கு முகக்கவசம்!!(மருத்துவம்)
Next post இண்டர்வெல் டிரெயினிங்…!!(மருத்துவம்)