மனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 29 Second

பட்டுப்புடவை என்றாலே நம் நினைவில் முதலில் வருவது காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்தான். இந்த புடவைகள் மேல் இன்றும் பெண்கள் மத்தியில் மோகம் ஏற்பட முக்கிய காரணம்… அந்த புடவைகள் அனைத்தும் கையால் நெய்யப்படுவதுதான். ஒவ்வொரு இழையும் இணைத்து கையால் நெய்யப்படும் நேர்த்தி இயந்திரங்களால் கொண்டு செய்தாலும் அதற்கு இணையாகாது. அப்படி பாரம்பரிய முறையில் நெய்யப்படும் புடவைகளை இன்றைய மார்டன் பெண்களுக்கு ஏற்ப வடிவமைத்து அளித்து வருகின்றனர் ஜி.ஆர்.பி பட்டு சில்க்ஸ். இந்த பட்டு சாம்ராஜ்யத்தின் இணை நிர்வாக இயக்குநரான ஜெயஸ்ரீ பாலாஜி தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து விவரித்தார்.

‘‘என் மாமனாரின் அப்பா காலத்தில் இருந்தே நாங்க பட்டுப் புடவை தயாரிப்பில் இருந்து வருகிறோம். தாத்தாதான் முதலில் ஆரம்பித்தார். அதன் பிறகு என் மாமனார் இதை எடுத்து நடத்தி வந்தார். ஆரம்பத்தில் மொத்த விற்பனையில்தான் புடவைகளை தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தோம். அதாவது நாங்க நெசவாளர்களிடம் இருந்து புடவையினை நெய்து அதை கடைகளுக்கு சப்ளை கொடுத்து வந்தோம். பிசினஸ் நன்றாகத் தான் இருந்தது.

ஒரு காலக்கட்டத்தில் தறி துறையில் ஏற்பட்ட சரிவு நிலை காரணத்தால் எங்களால் இந்த தொழிலை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. அதனால் என் மாமனார் புடவைகளை தயாரிப்பதை நிறுத்தி விட்டு விநியோகஸ்தர் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்பாவின் வழியை பின்பற்றி என் கணவரும் படிப்பு முடித்த கையோடு அவருக்கு உதவியாக அதே துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட 15 வருஷம் நாங்க புடவை தயாரிப்பு துறையில் இருந்து விலகி இருந்தோம் என்றுதான் சொல்லணும்’’ என்றவர் ஒரு வருடத்திற்கு முன் மறுபடியும் தங்கள் குடும்ப தொழிலை கையில் எடுத்துள்ளனர்.

‘‘என்னதான் மற்ற தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் பரம்பரை தொழில் என்பது நமக்கான ஒரு கவுரவம் தான். என் மாமனார் மறைவுக்கு பிறகு என் கணவர் மறுபடியும் பட்டுத் துறையில் தன்னை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் அவருக்கு பட்டுத் தொழில் பற்றி எதுவுமே தெரியாது. அதனால் ஒரு நான்கு மாதம் ஜவுளிக் கடையில் விற்பனைத் துறையில் வேலை பார்த்தார். இதன் மூலம் ஒரு கடையை எப்படி துவங்கணும், துணிகள் பற்றிய விவரம், மக்களின் விருப்பம், கடையை எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும்… என அனைத்தும் தெரிந்து கொண்டார். அதன் பிறகு நெசவாளர்களை சந்தித்து, எங்களுக்கான புடவைகளை வடிவமைத்து தரச்சொன்னோம்.

எல்லாம் நல்லபடியா நடக்க கடந்த ஆண்டு ஜி.ஆர்.பி பட்டு கோலாகலமாக துவங்கப்பட்டது. குருசுவாமி, ரவி, பாலாஜி என்பதன் சுறுக்கம் தான் ஜி.ஆர்.பி. அதாவது தாத்தாவின், மாமா மற்றும் என் கணவர் மூவரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை கொண்டு தான் எங்க கடைக்கு பெயர் வைத்திருக்கிறோம்’’ என்றவர் தங்களின் பட்டுப்புடவைகளின் சிறப்பை பற்றி விவரித்தார்.

‘‘எங்களின் முக்கிய சிறப்பம்சம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமமைத்து தருவது. சமூக வலைத்தளத்தில் ஒரு டிசைன் பார்த்து அதில் கலர் காம்பினேஷன் மற்றும் டிசைனில் சின்ன மாற்றம் செய்து தரச்சொல்வாங்க. அதைப் போல் கஸ்டமைஸ்ட் புடவைகளை நாங்கள் வடிவமைத்து தருகிறோம். அது மட்டுமில்லாமல் எங்களின் கடையில் ரூ.500 முதல் 2.50 லட்சம் வரையிலான புடவைகள் உள்ளன. காரணம் எங்க கடை காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இருப்பதால், பலதரப்பட்ட மக்கள் கடைக்கு வருவாங்க. அவங்க யாரும் வெறும் கையோடு போகக்கூடாது என்பதால் அனைத்து தரப்பினராலும் வாங்கக் கூடிய விலையில் பட்டுப்புடவைகள் எங்களிடம் உள்ளது’’ என்றார்.

இவர்களின் சிறப்பம்சமே இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்கு ஏற்ப பட்டுப்புடவைகளை நெய்வது தான். இந்த காலத்து பெண்கள் பேஸ்டல் நிறங்களை தான் அதிகம் விரும்புகிறார்கள். மணப்பெண்கள் உட்பட. சிவப்பு, பச்சை, மஞ்சள் எல்லாம் அவர்கள் விரும்புவதில்லை. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல கலர் காம்பினேஷனில் எங்களிடம் கல்யாண புடவைகள் உள்ளன. கூரைப்புடவைகளும் பட்டில் உள்ளது. நாலு கிராம் தங்க ஜரிகைக் கொண்ட புடவைகள், ஃபேன்சி பட்டுப் புடவைகள், ரைசிங் புடவை, 3டி பார்டர் புடவை, லைட்வெயிட் பட்டுப்புடவை என பல ரகங்கள் உள்ளன.

எங்களின் சிறப்பம்சமே இன்னும் பாரம்பரியம் மாறாமல், கையால் புடவையை நெய்து தருவது தான். காஞ்சிபுரம் பொறுத்தவரை இங்குள்ள நெசவாளர்கள் ஒவ்வொரு புடவையையும் தங்களின் குழந்தை போல் பார்ப்பார்கள். ஒரு இழை நகர்ந்தாலும் ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க. பவர் லூம் அறிமுகமானாலும், காஞ்சிபுரம் பொறுத்தவரை அதற்கு மாறக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான் எங்களின் ஒரு கல்யாண புடவை மட்டுமே நெய்ய 25 நாட்கள் ஆகும். ஆனால் தரத்தில் என்றுமே குறைவு இருக்காது’’ என்றவர் பட்டுப்புடவைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும் டிப்ஸ் வழங்கினார்.

பட்டுப்புடவைகளை ஒரு முறை கட்டியவுடன் துவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான்கு முறை கட்டிய பிறகே அலசலாம். அதுவும் நாம் சோப்பு போட்டு எல்லாம் அலசக்கூடாது. டிரைவாஷிங்கில் தான் கொடுக்க வேண்டும். ஒரு முறை கட்டினால் அதை அப்படியே கொடியில் போட்டு காய வைக்கலாம். வியர்வை மற்றும் ஈரம் காய்ந்ததும் மடித்து வைக்கலாம். புடவையை மடித்து வைக்கும் போது, ஒரு காட்டன் வேஷ்டி அல்லது புடவையில் மடித்து வைக்கலாம். காரணம் காஞ்சிபும் ஜரி தூய்மையானது என்பதால் ஜரி கறுத்திடும். அவ்வாறு கறுக்காமல் இருக்க இப்படி மடித்து வைக்கணும். இரண்டு மாதம் ஒரு முறை புடவையை எடுத்து மறுபடியும் மாற்றி மடித்து வைக்கணும். இதனால் புடவை பல காலம் வரை பாழாகாமல் இருக்கும்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோவிட் 19 எதிர்க்க உதவும் நுண்ணூட்டச் சத்துக்கள்!! (மருத்துவம்)
Next post தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)