ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 27 Second

மாறிவரும்  ஃபேஷன்  குறித்து  அலசுகிறார் ஃபேஷன்  டிசைனர்  ஷண்முகப்பிரியா

ஃபேஷன் என்றாலே பெண்களுக்கானது என்று சொல்வது வழக்கமாகி விட்டது. தொன்றுதொட்டு வரலாற்று காலத்தில் இருந்தே ஃபேஷன் பெண்களுக்கு மட்டும் என்றே பல உடைகள் மற்றும் டிசைன்களை அந்த துறை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளது. மேலும் அந்த காலத்தில் இருந்தே அவர்களின் உடலில் என்ன உடையினை அணிய வேண்டும், அணியக்கூடாது என்று சட்டத்திட்டங்களும் விதிக்கப்பட்டிருந்தன. அதே சமயம் ஆண்களுக்கும் தனிப்பட்ட ஃபேஷன் உள்ளது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு சிரமப்பட்டு உடைகளை அணிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. அதனால் இந்த இதழில் பெண்களே… உங்களுடையவர்கள் என்ன மாதிரியான உடைகளை எப்போது அணியலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆண்களுக்கான உடை அலங்காரத்தினை ஸ்மார்ட் கேஷ்வல் லுக் மற்றும் அலுவலக லுக் என்று வேறுபடுத்தலாம். இதன் மூலம் அவர்கள் தங்களின் உடையினை அந்தந்த இடத்திற்கு ஏற்ப எப்படி அணியலாம் என்பதற்கான ஒரு கைட்லைனாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.கேஷ்வல் டிரஸ் கோட்  கேஷ்வல் என்பது ரொம்ப ரிலாக்சாக அணியக்கூடிய உடை. இந்த உடையினை பொதுவாக எல்லா ஆண்களும் விரும்பி அணிவார்கள். கேஷ்வல் உடை மிகவும் எளிமையாக அணிந்து கொள்ளக்கூடிய உடை.

மேலும் இந்த உடையினை எப்படி அணிந்தாலும் அது தவறாக அமையாது. பொதுவாகவே எந்த உடையாக இருந்தாலும் ஆண்களின் கேஷ்வல் உடைகள் தான் மிகவும் ஸ்டைலிஷான உடைகள் என்று சொல்லப்படுகிறது. இந்த உடைகள் ஃபேஷன் உலகைவிட்டு எப்போதும் வெளியே செல்லவே செல்லாது. ஜீன்ஸ், ஸ்னீக்கர்ஸ், போலோ டி-ஷர்ட் அல்லது ரவுண்ட் நெக் கொண்ட டி-ஷர்ட்கள் இந்த உடைகளை எந்த விதமான காம்போவில் ஆண்கள் அணிந்தால் அனைத்தும் பார்க்க ரொம்ப ஸ்டைலாக இருக்கும். இந்த உடைகள் அனைத்து ஆண்களுக்கும் ஒரு வித சவுகரியமான உணர்வினை கொடுக்கும்.

அலுவலக கேஷ்வல் டிரஸ் கோட்  

பொதுவாக அலுவலகம் செல்பவர்கள் கோடு அல்லது கட்டம் போட்ட சட்டைக்கு ஏற்ப பேன்ட் மற்றும் டக்கின் செய்யப்பட்ட சட்டை அதற்கு ஏற்ப பெல்ட் மற்றும் ஷூக்கள் அணிந்து செல்வதுதான் அலுவலக உடையாக இருந்து வந்தது. காலம் மாற மாற அலுவலகங்களுக்கு அணிந்து செல்லும் உடைகளும் மார்டனாகிவிட்டது. ஸ்ரிக்டான உடைகள் அணிவதை தவிர்த்துவிட்டு, அலுவலகம் செல்பவர்களும் ரிலாக்சான உடைகளை அணிய ஆரம்பித்துவிட்டார்கள். அலுவலகத்திற்கும் கேஷ்வல் உடைகளை அணியலாம் என்ற எண்ணம் இப்போது பல ஆண்கள் மத்தியில் வந்துவிட்டாலும், இந்த உடைகளை சரியாக தேர்வு செய்து அணியவேண்டும்.

 காரணம் முன்பு அலுவலகத்துக்கு என தனிப்பட்ட ஸ்டைல் உடைகள் இருந்து வந்தது. ஆனால் அலுவலகத்திற்கு கேஷ்வல் உடைகளை அணியும் போது, அதை எவ்வாறு அணிய வேண்டும் என்ற சந்தேகங்கள் பலரின் மனதில் நிலவுகிறது. இரண்டுமே கேஷ்வல் உடைகள் தான் என்றாலும் இவை இரண்டிற்கும் கேக்கிய வித்தியாசங்கள் உள்ளன. கேஷ்வல் உடைகள் பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் அலுவலகத்திற்கு அணியும் கேஷ்வல் உடைகளில் அதன் தனிப்பட்ட சிறப்பு வெளிப்படையாக தெரிய வேண்டும். நீங்கள் சாதாரணமாக அணியக்கூடிய உடைகளில் இருந்து கொஞ்சம் சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

அதே சமயம் அணியும் போது சவுகரியமாகவும் இருக்கணும். இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட உடைகளை சேர்த்து அணியலாம். அதாவது ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் மட்டும் அணிந்தால் அது கேஷ்வல் உடை. அந்த டி-ஷர்ட் மேல் பிளேசர் அணிந்தால் அது அலுவலக கேஷ்வல் உடை. சிலர் சினோஸ் பேன்டிற்கு சாம்பிரே ஷர்ட் அணிகிறார்கள். இந்த ஸ்டைல் உடைகளும் இப்போது அலுவலகங்களில் வரவேற்கப்படுகிறது. அலுவலகம் அணியும் ஷர்ட்டினை தேர்வு செய்யும் போது, நீலம், பிங்க், பிரவுன் போன்ற கிளாசிக் நிறங்கள் கொண்டு பிளைன் ஷர்ட் மற்றும் கட்டம் போட்ட ஷர்ட்களை அணியலாம். உங்கள் தோற்றம் முழுமையடைய  லெதர் காலணிகளை பயன்படுத்தலாம். ஆனால் எதுவாக இருந்தாலும், நீங்கள் தேர்வு செய்யும் உடை அலுவலகத்திற்கு அணியக்கூடிய ஸ்மார்ட் உடையாக இருக்கவேண்டும்.

பிசினஸ் ஃபார்மல் டிரஸ் கோட்  

பிசினஸ் உடைகள் என்பது அலுவலகத்திற்கு சாதாரணமாக கேஷ்வலாக அணியக்கூடிய உடைகள் கிடையாது. பார்க்க கொஞ்சம் மிடுக்காகவும் அதே சமயம் பிசினஸ் ேபசுவதற்காக மட்டுமே வந்திருப்பதை உணர்த்துவது போல இருக்க வேண்டும். இந்த உடைகள் பொதுவாக கார்ப்பரேட் சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் ேபாது மட்டும் அணிவது வழக்கம். இதற்கு அடர் நிறம் கொண்ட அதாவது அடர் நீலம் அல்லது கறித்துண்டு நிறமுடைய சூட் அணியலாம். இதனுடன் வெள்ளை மற்றும் நீலம் நிற சட்டை எடுப்பாக இருக்கும். உங்களுக்கு ஒரு முழுமையான தோற்றம் அளிக்க சூட்டிற்கு ஏற்ற டை மற்றும் கருப்பு நிற லெதர் ஷூக்கள் அணியலாம். இதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் எந்த நிற ஷூ அணிகிறோமோ அதே நிறத்தில் பெல்ட் அணியவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

எந்த நேரத்தில் என்ன உடை அணியலாம் என்பதை தெரிந்து கொண்டோம். இதில் சின்ன சின்ன மாற்றங்கள் மற்றும் சில விஷயங்களை கடைப்பிடித்தால், நம்முடைய தோற்றம் மேலும் அழகாகவும் எடுப்பாகவும் இருக்கும். குறிப்பாக ஆண்கள். இவர்களில் ஒரு சிலரைத் தவிர உடை அலங்கார விஷயத்தில் பெண்கள் போல் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. பெண்களைப் போல் நாமும் நம்மை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி தான் எல்லா ஆண்களின் மனதிலும் இருக்கிறது.

பெண்களைப் போல் மேக்கப்பின் மேல் அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை என்றாலும், தாங்கள் அணியும் உடை மேல் எல்லா ஆண்களும் கண்டிப்பாக அக்கறை செலுத்த வேண்டும். கிடைக்கும் உடை கசங்கிய நிலையில் இருந்தாலும் பரவாயில்லை என்று அணிந்து செல்லக்கூடாது. பழைய உடையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக அணியும் போது மிடுக்கான தோற்றத்தினை கொடுக்கும். அந்த வகையில் சாதாரணமாக உடை அணிந்தாலும் அதை அழகாக எவ்வாறு அணியலாம் என்பதைப் பற்றி எல்லா ஆண்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

* வாங்கும் உடையினை அணியுங்கள் : பொதுவாக எல்லா ஆண்களின் மத்தியில் நிலவும் சாதாரண பிரச்னை என்னவென்றால், தான் வாங்கும் உடையினை அணியாமல் இருப்பது. இதற்காக அதிக செலவு செய்வார்கள். ஆனால் அவ்வளவு காசு கொடுத்து வாங்கிய உடையை அணிய வேண்டுமா என்று யோசிப்பார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் கசங்கிவிடும், அழுக்காயிடும் அல்லது தொலைந்துவிடும். இதெல்லாம் ஒரு காரணமா என்று யோசிக்க தோன்றும். ஆண்களே விலை உயர்ந்த உடை பாழாகிவிடும் என்று கவலைப்படுவதை முதலில் நிறுத்துங்க. அதிக அளவு செலவு செய்து வாங்கும் உடை உடுத்தி அழகு பார்க்கத்தான். அந்த உடை உங்களின் அலமாரியில் தூசி படிந்து இருப்பதற்கு அந்த உடையினை அதிக விலை கொடுத்து வாங்காமலே இருக்கலாம்.

* பிட்டான உடையை தேர்வு செய்யுங்கள் : ஒரு சிலருக்கு தங்களின் ஷர்ட்டின் அளவு என்ன என்றே தெரியாது. ரெடிமேட் அல்லது டெய்லர் மூலமாக தைத்து அணிந்தாலும், சரியான பிட் இல்லாமல் இருப்பது போல் தோன்றும். ஒரு ஷர்ட் வாங்கும் போது முக்கியமான இரண்டு அளவுகளை மட்டும் நினைவில் கொள்வது அவசியம். சட்டையின் கழுத்து மற்றும் கையின் அளவு, அவ்வளவுதான். இந்த இரண்டுமே சரியாக பொருந்திவிட்டால், உங்களின் சட்டை பிட்டாக இருக்கும். அதற்கு மேல் உடம்பளவு சரியாக இல்லை என்று நினைத்தால், அதை எளிதாக அட்ஜஸ் செய்து கொள்ளலாம். அதே சமயம் உடலின் அளவை மட்டும் கொண்டு சட்டை வாங்கிவிட்டு, கழுத்து மற்றும் கையின் அளவு சரியாக இல்லை என்றால் அந்த சட்டை அணிந்தாலும் உங்களுக்கு பிட்டாக இருக்காது.

* அணிகலன்களை குறையுங்க: சிலர் கழுத்து நிறைய செயின், கையில் மெகா சைஸ் பிரேஸ்லெட், அனைத்து விரல்களிலும் மோதிரம் என்று மினி நகைக்கடை போல் வலம் வருவார்கள். இவ்வாறு உடம்பை முழுதும் மறைக்கும் அளவுக்கு நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் அணியும் உடை மற்றும் அணிகலன்கள் இரண்டும் சரியான பேலன்சில் இருக்க வேண்டும். மணிக்கட்டில் வாட்ச், மற்றொரு கையில் பிரேஸ்ெலட், இரண்டு மோதிரம் அவ்வளவு தான். இந்த அலங்கார விதியினை பின்பற்றினாலே போதும். ஆண்களும் பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பார்கள்.

*கசங்கிய உடைக்கு நோ சொல்லுங்க: ஆண்கள் அனைவரும் தங்களின் உடை மட்டும் ஸ்டைலாக இருந்தால் போதாது. அவை உங்களின் அலமாரியில் பார்க்கும் போதே மிகவும் நேரத்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதற்கு உங்களின் ஒவ்வொரு ஷர்ட் மற்றும் பேன்ட்கள் அனைத்தும் ஐயர்ன் செய்யப்பட்டு இருக்கணும். காலையில் எழுந்து அலுவலகம் செல்லும் போது இது ஒரு எக்ஸ்ட்ரா வேலையா என்ற சோம்பேறித்தனம் படாமல் தினமும் அன்று அணியும் உடையினை ஐயர்ன் செய்ய வேண்டும். கசங்கிய அழுக்கான சட்டை மற்றும் பேன்ட் அணிந்து செல்லும் மனிதனை விட மோசமானது எதுவுமில்லை.

* சட்டை பட்டனை போடுங்கள் : கிளிவேஜ் தெரியாமல் அதனை மறைக்கும் படி உடைகள் பெண்கள் அணியவேண்டும் என்ற விதி ஆண்களுக்கும் கண்டிப்பாக பொருந்தும். எந்தப் பெண்ணிற்கும் ஆண்களின் முடிகள் நிறைந்த மார்பகத்தினை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்காது. மாறாக அவர்களுக்கு அது ஒரு சங்கடமான உணர்வை மட்டுமே ஏற்படுத்தும் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வது அவசியம். அதனால் அவர்கள் எந்த சட்டை அணிவதாக இருந்தாலும், காலர் பட்டன் மற்றும் அதற்கு கீழ் இருக்கும் பட்டன் என இந்த இரண்டு பட்டன்களை மட்டும் போடாமல் இருந்தால் போதும். மற்றபடி பாதி நெஞ்சு தெரியும் அளவிற்கு ஃபேஷன் ஷோவில் வருவது போல் வரக்
கூடாது.

*பனியன் மற்றும் உள்ளாடைகளில் கவனம்:
பனியன் அணியும் பழக்கம் ஆண்களில் பலருக்கு உள்ளது. ஆனால் சில ஆண்கள் அதை அணிவதை தவிர்க்கிறார்கள். ஒவ்வொரு ஆண்களும் ஷர்ட் அணியும் போது கண்டிப்பாக பனியன் அணிவதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். பனியன் ஸ்லீவ்லெஸ் மற்றும் அரைக்கை கொண்டு இரு டிசைன்களில் கிடைக்கிறது. முழுக்கை சட்டை அணிந்தால் அதற்கு ஸ்லீவ்லெஸ் மற்றும் அரைக்கை கொண்ட பனியன்களை அணியலாம்.
அதே சமயம் அரைக்கை சட்டை அணியும் போது ஸ்லீவ்லெஸ் பனியன் அணியலாம். காரணம் அரைக்கை பனியன் சட்டையின் கைப்பகுதிக்கு வெளியே தெரிந்தால் பார்க்க நன்றாக இருக்காது. பனியனின் நெக்லைன் சட்டையின் முதல் இரண்டு பட்டனுக்கு கீழ் இருக்க வேண்டும். அப்போது தான் முதல் இரண்டு சட்டை பட்டன் போடாமல் இருந்தாலும், பனியன் வெளியே தெரியாது. அடுத்து உள்ளாடைகளை தரமான பிராண்டுகளாக தேர்வு செய்வது அவசியம். தினமும் இதனை மாற்றி அணிய வேண்டும். அதே சமயம் நன்றாக துவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும்.

*கைக்கடிகாரம்: ஒரு ஆண் ஊர் சுற்ற ஒரு டீஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்தால் போதுமானது. எந்த உடையாக இருந்தாலும் கையில் கைக்கடிகாரம் அணிய வேண்டும். ஒரு ஆணின் பர்சனாலிட்டியை அழகாக எடுத்துக்காட்டுவதில் கைக்கடிகாரத்திற்கு முக்கிய பங்குண்டு. அந்த ஒரு கைக்கடிகாரம் ஆணைப்பற்றிய பல செய்திகளை எடுத்துக்காட்டும்.

* சென்ட்டினை அள்ளிப் பூசாதீர்கள் : ஒருவர் கடக்கும் போது மற்றவரின் மனதை கவரும் நறுமணம் அவசியம். அதற்காக சென்ட் பாட்டிலை உடல் முழுக்க பூசிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்களின் சென்ட் வாசனையை விட ஆண்களின் வாசனை திரவியம் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும். அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது உங்கள் மேல் அதிக அளவு வாசனை வெளிப்படுவது மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கு அசவுகரியமாகவும், முகம் சுளிக்கவும் தோன்றும்.

* சுத்தமாக இருங்க: உங்களின் உடை நன்றாக துவைக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அழுக்கான மற்றும் துர்நாற்றம் வீசும் உடைகளை எப்போதும் அணியக்கூடாது. அடுத்து மிகவும் முக்கியமானது… உங்களின் கை விரல் நகங்கள். இவற்றில் அழுக்கு சேராமல் சீராக வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் நகம் தான் நீங்கள் சுத்தமானவரா என்பதை குறிப்பிடும்.

* ஷூக்கள் : உடையை தவிர நீங்கள் அணியும் ஷூ மற்றும் பெல்ட் எல்லாம் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். கருப்பு ஷூ அதற்கு பிரவுன் பெல்ட் அணியக்கூடாது. அதே போல் ஸ்னீக்கர்ஸ் போன்ற ஷூக்கள் அணிந்தால், அதற்கேற்ப பெல்ட்டினை தேர்வு செய்யலாம். இவை சரியாக இருந்தாலே உங்களுக்கு ஒரு ஃபர்பெக்ட் தோற்றத்தினை கொடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!(அவ்வப்போது கிளாமர்)
Next post சிப்பி சுகந்தி! (மகளிர் பக்கம்)