குழந்தைகளுக்கான நம்ம ஊரு த்ரிஃப்டிங்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 7 Second

ஒரு குழந்தை பிறந்ததும், பலரும் அந்த குழந்தைக்கு அதிகப்படியான உடைகளை, விளையாட்டுப் பொருட்களை, அவர்களுக்கு தேவைப்படும் என பல பொருட்களை வாங்கி குவித்துவிடுகிறோம். இது போக, குழந்தையை பார்க்க வரும் பலரும் மீண்டும் அதே விளையாட்டுப் பொருட்களை வாங்கி வருவார்கள். ஆனால் குழந்தையின் உடலும், மூளையும் ஒவ்வொரு மாதமும் வளர்ச்சி அடைந்து இன்று குழந்தைக்கு பிடித்த விளையாட்டுப் பொருள் நாளை பிடிக்காமல் போய் விடுகிறது. இப்படி சேர்த்து வைத்த பொருட்களை என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த நம்ம ஊரு த்ரிஃப்டிங் – bagitall_letsthrift எனும் இன்ஸ்டாகிராம் பக்கம்.

சமீபத்தில் த்ரிஃப்டிங் (Thrifting), ப்ரீ லவ்ட் (Pre-Loved), ப்ரீ ஒண்ட் (Pre Owned), அப்-சைக்கிள் (UpCylcle) போன்ற பல புதிய வார்த்தைகளை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இதற்கெல்லாம் ஒரே அர்த்தம் தான். ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய பொருளை, குறைந்த விலையில் வாங்கி அதனை மீண்டும் பயன்படுத்திக் கொள்வது.

கீர்த்தனா கிருஷ்ணசாமி, பொறியியல் பட்டதாரி. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் 8 ஆண்டுகள் பணிபுரிந்து தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றவர். இவர் சீனாவில் சில நாட்கள் இருந்த போது, அங்கே த்ரிஃப்ட் கடைகளில் தனக்கு தேவையான பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் தமிழ்நாட்டில் திருப்பூரில் வந்து செட்டிலான போது, இங்கேயும் ஏதாவது த்ரிஃப்ட் ஷாப்பிங் செய்ய முடியுமா என அலசிய கீர்த்தனா, சரியான தளங்கள் எதுவும் இல்லாமல் தவித்துள்ளார்.

‘‘மற்ற நாடுகளில் Decluttering என்ற முறை உள்ளது. அதாவது நமக்கு அவசியமான பொருட்களை மட்டுமே வைத்துக்கொண்டு தேவையில்லாத பொருட்களை இலவசமாக கொடுத்துவிடுவார்கள். அந்த பொருட்கள் யாருக்கு தேவையோ அவர்கள் அதை எடுத்துசெல்வார்கள். ஒரு பொருள், ஒருவருக்கு தேவையில்லாமல் இருக்கலாம். அதனை பயன்படுத்தாமல் வீட்டில் வைத்துக்கொண்டு இருந்தால் அனாவசியமான குப்பை தான் சேரும்.

ஆனால் அதுவே மற்றவர்களுக்கு உண்மையிலேயே பயன்படும் போது தான் அதன் மதிப்பு கூடுகிறது. பழைய தேவையில்லாத பொருட்களை நம் வாழ்க்கையில் இருந்து நீக்கி டிகிளடர் செய்து, புதிய பயனுள்ள பொருட்களை வாழ்க்கையில் சேர்ப்பது போல, நம் மனதில் இருக்கும் தேவையில்லாத எண்ணங்களை நீக்கி, பயனுள்ள நல்ல எண்ணங்களை சிந்திக்கலாம் என்பது தான் இதன் சித்தாந்தம்.

இப்படி அவசியமில்லாமல் நம் எல்லாருடைய வீட்டிலும் குவிந்து இருப்பது குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் மகப்பேறு சாதனங்களும் தான். இவற்றை முழுமையாக ஒரு வருடம் கூட பயன்படுத்தி இருந்திருக்கமாட்டோம். விலையும் அதிகம். மேலும் பத்து ஆண்டுகள் கூட நீடித்து உழைக்கும். ஆனால் குழந்தைகள் வளர்ந்து அது உபயோகம் இல்லாமலே இருக்கும். இதேப்போல் திருமணத்தின் போது வாங்கிய அலங்கார நகைகள் மற்றும் உடைகளை கூட அந்த ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தி, மீண்டும் உபயோகப்படுத்தாமல் அப்படியே வைத்திருப்போம். இது போன்ற பல பொருட்கள் பயனில்லாமல் அலமாரியில் தூங்கிக் கொண்டு இருக்கும். அதை அப்படியே வைத்திருந்து, ஆண்டுகள் பல கழித்து குப்பையில் தூக்கி வீசுவதற்கு பதில், குறைந்த விலையில் விற்கும் போது, கல்லூரி மாணவர்களில் தொடங்கி, யாருக்கு அந்த பொருள் பயனுள்ளதாக இருக்குமோ அவர்கள் வாங்கி மீண்டும் பயன்படுத்த முடியும்.

குழந்தைக்கு போர்டு புக்ஸ், பேபி ஸ்ட்ராலர், குழந்தைகளுக்கான கார் சீட், மரத் தொட்டில், விளையாட்டு பொம்மைகள், குழந்தைகளின் மூன்று சக்கர வாகனம், குழந்தை டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட உயரமான சேர் எனப் பல பொருட்கள் ஒரு வருடத்திற்கு மேல் உபயோகப்படாமலே பாழாகிவிடும். இதில் அவர்களை பார்க்க வருபவர்களும் ஒரே மாதிரியான பரிசுப் பொருட்களை கொண்டு வருவார்கள்.

குழந்தைகளுடைய பொருட்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அவர்களுக்கான மேக்கப் பொருட்களை வாங்கும் போது, அது அவர்களின் சருமத்திற்கு தகுந்ததாக இருக்காது. அதிக விலை கொடுத்து வாங்கிய பிராண்டட் லிப்ஸ்டிக் அவர்களுடைய ஸ்கின் டோனிற்கு செட் ஆகாமல் அப்படியே வைத்து இருப்பார்கள். இந்த பொருட்கள் காலாவதி ஆன பின் எடுத்து அப்படியே குப்பையில் போட்டுவிடுவார்கள். அதே போல, ஸ்போர்ட்ஸ் கருவிகள், இசைக் கருவிகள் போன்றவற்றையும் த்ரிஃப்ட் ஷாப்பிங்கில் குறைந்த விலையில் விற்கும் போது, அது தேவையுள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அதனால், ஒருவர் ஆசை ஆசையாய் அதிக விலை கொடுத்து வாங்கிய பொருளை தூக்கிப் போட மனமில்லாமல் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே அந்த பொருளின் தேவை இருப்பவரை நான் என் சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்துவேன். விற்பவர்கள், பொருளின் போட்டோவையும், விலையையும் நிர்ணயித்து, எனக்கு அனுப்புவார்கள். நான் அதை என்னுடைய பக்கத்தில் பதிவு செய்வேன். அந்த பொருளை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்கள் என்னை அணுகி அந்த பொருளை வாங்கிக் கொள்வார்கள்.

இவர்கள் வாங்கும் பொருள், சேதமடையாமல் இருக்கிறதா என நான் உறுதி செய்து, அந்த பொருளுக்கு அந்த விலை சரியானதுதானே என்பதையும் ஒரு முறை சரிபார்த்த பின்னரே, அதை என் பக்கத்தில் பதிவிடுவேன். இதனால், வாடிக்கையாளர்கள் எந்த கவலையும் இல்லாமல் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். இதனை என்னிடம் தான் விற்க வேண்டும் என்றில்லை. உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியிலும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். ஆன்லைன் மட்டுமில்லாமல் திருப்பூர், கோவையில் ஸ்டால்கள் அமைத்தும் பொருட்களை விற்பனை செய்கிறேன்.

சிலர் என்னிடம் வாடகைக்காகவும் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். குழந்தையுடன் ஒரு வாரம் காரில் டூர் செல்பவர்கள், குழந்தைக்கான கார் சீட்டை ஒரு வாரத்திற்கு வாடகைக்கு கேட்பார்கள். இது போல குறைந்த நாட்கள் மட்டுமே பயன்படும் பொருட்களை வாடகைக்கும் கொடுத்து வருகிறேன். த்ரிஃப்ட் ஷாப்பிங் மூலம், பல நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்து வாங்க முடியாத பொருட்களை குறைந்த விலையில், முழுமையாக பயன்படுத்த முடியும். பொதுவாக எல்லாருமே தங்களின் குழந்தைக்கான பொருட்களை பார்த்து பார்த்து அன்புடன் வாங்குவார்கள். அந்த பொருட்களை உங்களுக்கு கொடுக்கும் போது அதே அன்பு மற்றும் மகிழ்ச்சியும் உணரமுடியும் என்பது தான் என்னுடைய த்ரிஃப்ட் ஷாப்பிங்கில் நான் அடிக்கடி சொல்லும் கருத்து.

ஒரு பொருளை விற்பனை செய்ய விரும்புபவர், அந்த பொருளைப் பற்றிய விவரங்கள்… அதாவது முதல் முறையாக எப்போது வாங்கினார்கள், விற்பனை விலை, எவ்வளவு காலம்/முறை பயன்படுத்தி இருப்பார்கள் போன்ற விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும். அதன் பிறகு பயன்படுத்தும் நிலையில் தான் இருக்கிறது என்பதை நான் உறுதி செய்ததும், அந்த பொருளின் புகைப்படத்தை அதன் விவரங்களுடன் தளத்தில் பதிவு செய்வோம்.

டெலிவரிக்கு செலவாகும் பணம், 200 ரூபாய்க்குள் இருந்தால், அதை விற்பனையாளரே ஏற்றுக்கொள்வார். அதைவிட அதிகமாக இருக்கும் போது, அந்த டெலிவரி காசை விற்பனையாளரும் வாடிக்கையாளரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் வாடிக்கையாளருக்கு தேவை என்ன என்று கேட்போம். மறுநாள் பொருட்களின் விவரங்களை வெளியிடுவோம்.

ஒரு பொருளை விற்கலாமா வேண்டாமா, இது மற்றவருக்கு பயன்படுமா என தயக்கத்திலேயே இருப்பவர்கள், எங்களின் பதிவைப் பார்த்ததும், அதை விற்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள். தற்போது பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டதால், த்ரிஃப்டிங் செய்வதன் மூலம், சுற்றுச் சூழலை பாதுகாத்து, நம் செலவினையும் கட்டுப்படுத்தலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கேன்’’ என்று கூறும் கீர்த்தனா குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நம்ம ஊரு த்ரிஃப்டிங்கில் விற்பனை செய்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அறிவோம் ஆட்டிசம்… அலர்ட்டாய் இருப்போம்!(மருத்துவம்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)