இயற்கை விவசாய பொருள் விற்கலாம்! இனிய வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 4 Second

ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் எவ்வளவு அவசியமோ… அதே போல் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிகவும் முக்கியமாகிவிட்டது. இவை மூன்றையும் பெறுவதற்கு கல்வி, பணவசதி, வயது, நேரம் இவை எதுவுமே தடை இல்லை. முயற்சி ஒன்று இருந்தால், எந்த நேரத்திலும், வயதிலும் நாம் அதை நோக்கி பயணிக்க முடியும் என்கிறார் நாகர்கோயில், சுதீநந்திரம் அடுத்த தேரூரில் வசித்து வரும் அம்பிகா. இவர் சுரபி இயற்கை அங்காடி என்ற பெயரில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்து வருகிறார்.

‘‘எனக்கு இரண்டு சின்ன பசங்க. அவங்கள தனியா விட்டு வேலைக்கு போக முடியாத சூழல், வீட்டிலேயே இருக்கணும் அதே சமயம் ஒரு வருமானமும் ஈட்ட வேண்டும். இன்றைய சூழலில் ஒருவரின் வருமானம் மட்டுமே போதாது. மேலும் என்னுடைய சின்ன கைசெலவிற்கு கூட கணவரை எதிர்பார்க்க வேண்டும்.

அவருக்கும் என்னால் ஏற்படும் ஒரு வருமானத்தினால் பாரத்தை குறைக்கலாம்னு திட்டமிட்டேன். அந்த சமயத்தில் தான் கடைகளில் நைட்டிக்கான துணியினை மொத்த கொள்முதலில் விலையில் வாங்கி, அதை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தைத்து கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் என்னுடைய முதல் ெதாழிலுக்கான பயணம் ஆரம்பித்தது’’ என்றவர் இயற்கை அங்காடி மூலம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பொருட்களை தற்போது விற்பனை செய்து வருகிறார்.

‘‘ஒரு நிறுவனத்தில் வேலைக்கு போனால், மாத வருமானம் தடையில்லாமல் கிடைக்கும். ஆனால் அங்கு நாம் இருக்கும் எட்டு மணி நேரமும் பல விஷயங்களை சமரசம் செய்தாகணும். அதை விட நம் உழைப்பை நம்பி என்ன செய்தால் இன்னும் சிறப்பா வருமானம் ஈட்டலாம் என்ற யோசனை தான் என்னுள் அதிகமானது. அதற்காக மார்க்கெட்டில் கிடைக்கும் எல்லா பொருட்களையும் நான் வாங்கி சந்தைப்படுத்த விரும்பல.

தரம், ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கணும், என்னிடம் பொருட்களை வாங்குபவர்களும் நன்மை பெறவேண்டும். ஒரு முறை வாங்கியவர்கள் மீண்டும் என்னையே நாடி வாங்க வேண்டும். இயற்கை உணவுப்பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தும் விற்கலாம் என பல யோசனைகள் என்னுள் எழுந்தது. ஆனால் இதை எப்படி செய்ய வேண்டும் என்று புரியவில்லை. நண்பனிடம் யோசனை கேட்ட போது… அவங்க நீ ஆர்டரை எடு, நான் டெலிவரி செய்றேன்னு சொன்னாங்க. அப்படித்தான் எங்க கடையின் பொருட்களை பல
ஊர்களுக்கு சந்தைப்படுத்த துவங்கினேன்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இயற்கையுடன்தான் ஒன்றி வாழ்ந்து கொண்டு இருந்தான். காலங்கள் மாற நாமும் தொழில்நுட்பத்திற்கு அடிமையானோம். இயற்கை அளித்துள்ள வளத்தை நம்மால் முடிந்தவரை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் இயற்கை அங்காடியை ஆரம்பிச்சேன். அதோடு நில்லாமல் இதனை மற்ற பெண்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களுக்கும் ஒரு வருமானம் ஈட்டித் தரவேண்டும் என்ற நோக்கில் தன்னார்வத்தொண்டு நிறுவனம் துவங்கினேன். அதன் மூலம் துணிப்பைகள் தயாரிப்பு பயிற்சி அளித்து வருகிறேன்.

பிளாஸ்டிக் விற்பனை தடை செய்யப்பட்டதும் துணிப்பையின் தேவை அதிகரிச்சது. முதலில் பழைய பொருட்களை விற்கும் கடைகளில் இருந்து வேஷ்டி மற்றும் புடவைகளை வாங்கி அதில் தான் துணிப்பைகளை தயாரித்து வந்தோம். திருப்பூர், சோமலூர், கோவை, ஈரோடு போன்ற இடங்களில் உள்ள தறி மில்லுக்கே சென்று பைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் துணிகளின் விவரங்களை பெற்றுவந்தேன். அதை என்னுடைய தொழிலில் புகுத்தினேன்’’ என்றவர் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு இதன் மூலம் ஒரு வருமானத்தை ஈட்டித் தருகிறார்.

‘‘மொத்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட துணியினை சைஸ் வாரியாக வெட்டி பைகளை தைத்து வந்தோம். சில பெண்கள் என்னுடைய யூனிட்டில் வேலைப் பார்த்துவந்தனர். இங்கு வந்து வேலைப் பார்க்க முடியாதவர்களுக்கு சைஸ் வாரியாக துணிகளை வெட்டிக் கொடுத்திடுவோம். அவர்கள் அதை பையாக தைத்து கொடுப்பார்கள். ஒரு பைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை நிர்ணயித்து கொடுத்திடுவேன். கடந்த ஒரு வருடம் எல்லா வேலைகளும் முடங்கி போயின.

எதிர்பார்த்த அளவு விற்பனை செய்ய முடியவில்லை. இப்போது மறுபடியும் விற்பனை கொஞ்சம் ெகாஞ்சமா ஆரம்பித்துள்ளது. மெடிக்கல், உணவகங்கள், துணிக்கடைகள், மார்க்கெட் கடைகள், பேக்கிரினு எல்லா இடமும் துணிப்பைகள் தேவை அதிகரித்துள்ளது. தேவைப்படுவோருக்கு அவர்களின் கடையின் பெயர் மற்றும் முகவரியோடு பிரின்ட் செய்து கொடுக்கிறோம்.

என்னாலும் வருமானம் ஈட்ட முடியும்ன்னு சில பெண்களுக்கு நம்பிக்கை தந்திருக்கேன். சிலரில் இருந்து பலராக மாறணும் என்பதுதான் என்னுடைய ஆசை. தற்போது வியாபாரங்களை அதிகமாக்க உதவியதில் சமூக வலைத்தளங்களுக்கு மிகுந்த பங்குண்டு. அதில் நான் அவ்வப்போது பதிவேற்றிவிடுவதால், தரத்தை பார்த்து மக்களும் வாங்க முன் வருகிறார்கள்’’ என்றவர் தன்னுடைய இயற்கை அங்காடியில் பைகள் மட்டுமல்லாமல், மரவள்ளிக்கிழங்கு மாவு, நேந்திரன் மாவு, கிழங்கு அப்பளம், 35 இயற்கை தானியங்கள் சேர்த்த ஹெல்த் பூஸ்டர், மூலிகை கூந்தல் தைலம், குளியல் பொடி என பலதரப்பட்ட இயற்கை உணவுகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘என்னுடைய அப்பா சமையல் கலைஞர். திருமணங்கள் முதல் விசேஷங்களுக்கு சமைத்து தருபவர். அவரிடம் பலகாரங்கள் எப்படி செய்வதுன்னு கற்றுக் கொண்டேன். நேந்திரன் வத்தல், மனோகரம், காரச்சேவ், முந்திரிக்கொத்து, முறுக்கு, மிக்சர், ஓமப்பொடி, அதிரசம்னு பாரம்பரிய பலகாரங்களும் ஆர்டர்களுக்கேற்ப செய்து தருகிறேன்.

இயற்கை உணவுகளை மதிப்புகூட்டி வருமானம் ஈட்ட எல்லாராலும் முடியும். கொரோனா பெருந்தொற்று நமக்கு விட்டுச்சென்ற பாடம் இயற்கையோடு வாழணும் என்பதே. துரித உணவுகளுக்கேற்ப நாம் பல நோய்களால் துன்புறுகிறோம். நாம் இருக்கும் இடத்தில் நம்மைச் சுற்றி கிடைக்கும் முருங்கை, வேம்பு, துளசி, ஆவாரம் பூ, செம்பருத்தி, கற்றாழை போன்றவற்றை பொடியாகவும், காயவைத்தும் கூட விற்கலாம்.

இயற்கை சோப்புகள் தயாரித்தும், பூந்திக்கொட்டை மூலம் பாத்திரம் கழுவும் ஜெல் தயாரித்தும் வருமானம் ஈட்டலாம். முதலில் அருகிருப்பவர்கள், உறவினர்கள், நட்புவட்டம் என்று விற்க ஆரம்பித்து படிப்படியாக வளர்ச்சியடைய முடியும். ஒருவேளை விற்பனையில் ஈடுபாடில்லை என்றால் கூட மொத்தமாக இயற்கை அங்காடிகளுக்கு தந்தும் பலன் பெறலாம். நம் தேவைகளுக்கான வருமானத்தை நாம் இருக்கும் இடத்தில் இருந்தே ஈட்டிட முடியும்’’ என்று பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்குவதற்கான ஆலோசனை அளித்தார் அம்பிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்)
Next post கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது!(மகளிர் பக்கம்)