இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிக்கலாம்… இரட்டிப்பான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 12 Second

சென்னையில் பிறந்த சரண்யா கோபாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி படித்து முடித்தவர். படிப்பைத் தொடர்ந்து உணவு தரம் உறுதி பிரிவில் அதிகாரியாக 10 ஆண்டு வேலைப் பார்த்துள்ளார். உணவு உற்பத்தி செய்யும் இடங்களுக்கு சென்று அங்கு தரமான உணவுகளை வழங்குகிறார்களா என்று ஆய்வு செய்வது தான் இவரின் வேலையாக இருந்து வந்தது.

குறிப்பாக பல்வேறு நட்சத்திர ஓட்டல் கிச்சனில் சரண்யாவின் கொடி உச்சாணியில் பறந்தது. தர உறுதி தன்மையில் சரண்யா ரொம்பவே ஸ்ட்ரிக் ஆபீசர் என்பதால், அவரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் இதர ஓட்டல்களில் உணவு தரம் சிறப்பாக விளங்கியதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் சிறப்பாக பார்த்து வந்த மிகவும் கவுரவமான வேலையை ராஜினாமா செய்தவர் தற்போது வளர்ந்து வரும் ஒரு இளம் தொழில்முனைவோராக பெண்களுக்கு ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறார்.

‘‘பட்டப்படிப்பு முடித்தவுடன் எங்க வீட்டில் எனக்கு திருமணம் செய்துவச்சுட்டாங்க. எனக்கு இரண்டு மகன்கள். திருமணமாகும் ேபாதே நான் சென்னையின் பிரபலமான நட்சத்திர ஓட்டலில் தரக்கட்டுப்பாடு மேலாளராக பணியில் வேலைப் பார்த்து வந்தேன். எங்க ஓட்டலின் உணவு மட்டுமில்லாமல் அதன் அனைத்து தரத்தையும் உயர்த்தும் வகையில் நான் வேலைப் பார்த்து வந்த சமயத்தில் தான் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த என் சகோதரியால் என்னுடைய பாதை மாறியது என்று சொல்லலாம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக சென்னைக்கு வந்திருந்தார் அவர். நானும் அவரும் ஷாப்பிங் போன போது தான், அவர் கூறிய பல விஷயங்கள் என்னுடைய மனதில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. காரணம் அவர் தேடி தேடி இயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதன மற்றும் உணவுப் பொருட்களை மட்டுமே வாங்கினார். அது குறித்து கேட்ட போது, உணவுப் பொருட்களில் உள்ள பாரஃபின், கார்சினோஜன் மற்றும் பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களான க்ரீம் மற்றும் பவுடர்களில் நம் உடலை பாதிக்கக்கூடிய பல ரசாயனப் பொருட்கள் இருப்பதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விவரித்தார்.

அவர் சொன்னதை கேட்டதும் நான் ஒரு நிமிடம் பதைபதைத்துப் போனேன். நம்மை நாமே கெடுத்துக் கொள்ளும் ரசாயனப் பொருட்களை தினமும் பயன்படுத்துவது இதற்கு மேலும் உகந்ததல்ல என்று முடிவு செய்தேன். இது தெரியாமலே பிள்ளைகளையும் இத்தனை நாள் வளர்த்து வந்துள்ளோமே என எனக்குள் அச்சமும், பயமும் ஏற்பட்டது. அந்த ஒரு கணத்தில் என் பாட்டி தான் என் மனத்தில் மின்னல் போல் தோன்றினார். அவருக்கு அறுபது வயது. ஆனால் அவரின் சருமத்தில் சிறிது சுறுக்கம் கூட இருக்காது. சருமம் கண்ணாடி போல் பளபளவென்று மின்னும்.

அவ்வளவு ஏன் இந்த வயதிலும் ஒரு வெள்ளை முடியைக் கூட அவரது கூந்தலில் தேடி எடுக்க முடியாது. சருமத்தில் சின்ன அலர்ஜி வந்தாலும் உடனே குப்பைமேனி இலையை மையாக அரைத்து சாறு பிழிந்து அதை உடல் முழுக்க பூசி பிறகு குளிப்பாங்க. அலர்ஜி மாயமா மறைஞ்சிடும். அதேப் போல முகத்துக்கு பப்பாளி பழத்தை கசக்கி பிழிந்து அதனுடன் செம்பருத்தி இதழ்களையும் சேர்த்து தேய்த்துக் கொள்வதும் உண்டு. பாட்டி அந்தக் காலத்தில் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாரம்பரிய உணவு முறைகளும், வைத்திய சிகிச்சைகளும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது நினைவில் நட்சத்திரங்களாக தோன்றி கண் சிமிட்டின’’

என்றவருக்கு கைவினைப் பொருட்கள் செய்வது மேல் அலாதி பிரியமாம். சின்ன வயசில் மெழுகுவர்த்தி, டெரகோட்டா வடிவமைப்பு போன்றவற்றை தன்னுடைய பொழுது போக்கிற்காக செய்து வந்துள்ளார். தன்னுடைய நேரத்தை அநாவசியமாக கழிக்காமல், இது போன்ற கைவினைப் பொருட்கள் செய்யலாம் என்று அதனை முறையாக கற்றுள்ளார் சரண்யா. ‘‘நான் அப்ப ஹாபியாக கற்றுக் கொண்டது தான் இப்போது நான் ஒரு தொழில்முனைவோராக பயணிக்க காரணமாக உள்ளதுன்னு சொல்லலாம். என் சகோதரி சொன்னதைக் கேட்டதில் இருந்தே… இந்த ரசாயனப் பொருட்களை எவ்வாறு தவிர்க்கலாம்… அதற்கான மாற்று என்ன என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.

அந்த சமயத்தில் தான் நாமே ஏன் இயற்கை வளம் கொண்டு சோப்புகளை தயாரிக்ககூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அது குறித்த ஆய்வில் முழுமையாக இறங்க ஆரம்பித்தேன். முதலில் எங்க குடும்ப உபயோகத்திற்காகத்தான் சோப்பினை தயாரித்தேன். பிறகு அதை என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் அதைப் பயன்படுத்தி பார்த்துவிட்டு. கடையில் கிடைக்கும் சோப் வகைகளுக்கும், நீ கொடுத்த சோப்புக்கும் ஏராளமான வித்தியாசம் தெரிகிறது என்றார்கள். என்னுடைய முதல் தயாரிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், மேலும் அது குறித்து தெரிந்து கொள்ள வர்க்‌ஷாப் மற்றும் பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன்.

அப்படித்தான், ‘விஷாரா’ உருவானது. தற்போது இந்த பிராண்ட் பெயரில் ஃபேஸ் வாஷ், ஃபேஷியல் கிட், ஃபேஸ் மாஸ்க், பாடி ஸ்கிரப், பாதவெடிப்பு மற்றும் பாதங்கள் மிருதுவாக இருக்க தேவையான பொருட்களை எல்லாம் தயாரிக்கிறேன். இது எல்லாமே என்னுடைய தயாரிப்பு. ஒவ்வொன்றுக்கும் என்ன கலக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து தயாரித்து இருக்கிறேன்’’ என்றவர் தொழில்முனைவோருக்கான இவரின் எதிர்கால திட்டங்கள் விரிவடைந்ததால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக இதில் இறங்கியுள்ளார்.

‘‘நான் தயாரிக்கும் குப்பைமேனி மற்றும் கற்றாழை சோப்புகளுக்கு நல்ல டிமாண்ட். அதே போல் வறண்ட சருமத்திற்காக தேன் மற்றும் ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் வாஷ் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை அளித்துள்ளது. இந்த ஊக்கம் தான் என்னை மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. இது எனக்கு பெரிய அளவில் மனதாலும், வருமானத்திலும் திருப்தியினை ஏற்படுத்தி இருக்கிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்த்து சமுதாயம் ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் காண வேண்டி தொழில் செய்கிறோம் என்ற மன நிம்மதியுடன் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளேன்.

மேலும் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்திருக்கேன். என்னுடைய எதிர்கால திட்டம், குறைந்தது பத்து லட்சம் குடும்பங்களுக்கு விஷாராவை கொண்டுபோய் சேர்க்கணும் என்பதுதான். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் கணவர் மற்றும் பெற்றோரின் பங்களிப்பும் உள்ளது. அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் என்னை மேலும் மேலும் தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திஉள்ளது’’ என்கிறார் சரண்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மெஹந்தி வரையலாம்…கலர்ஃ புல் லான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post குட்டிக் கடலையில் கொட்டிக் கிடக்கும் சத்துகள்!! (மருத்துவம்)