இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 15 Second

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்றும் தான் ஒரு மனிதனுக்கு மிகவும் அடிப்படையான விஷயம். அதில் மிகவும் முக்கியமானது விவசாயம். உழவன் வயலில் கால் வைத்தால் தான் நாம் சாப்பாட்டில் கை வைக்க முடியும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. ஆனால் சில காலமாக அதிக விளைச்சல் வேண்டி ரசாயனத்தை நம்பி தங்களின் நிலத்தில் பயிர் செய்தனர்.

விளைவு நிலங்கள் எல்லாம் தன்னுடைய சக்தியினை இழந்து… ஒரு கட்டத்தில் விவசாயம் பொய்த்து போனது. இனி தாமதித்தால் விவசாயம் அழிந்துவிடும் என்ற விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இவர்களுக்கு உதவியாக பலரும் கைக்கொடுக்க மீண்டும் விவசாயம் உயர்ந்து எழ ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் தன்னுடைய நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார் ஜெயக்கொண்டானை சேர்ந்த இந்திரா.

‘‘எங்களுடையது விவசாய குடும்பம். கிராமம் என்பதால் அந்த சூழலில் தான் நான் வளர்ந்தேன். அதனால் சின்ன வயசில் இருந்தே எனக்கு விவசாயத்தின் மேல் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. ஆனால் எங்க வீட்டில் என்னை விவசாயம் செய்ய விடவில்லை. மாறாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்னு விரும்பினாங்க. நானும் எம்.ஏ வரலாறு படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். ஐந்தாண்டுகள் வேலைப் பார்த்தேன்.

ஆனாலும் எனக்கு ஆசிரியர் பணியில் பெரிய அளவில் ஈடுபாடு ஏற்படவில்லை. எனது ஆர்வம் கனவு ஆசை எல்லாம் விவசாயமாத்தான் இருந்தது. ஆசிரியை பணியை ராஜினாமா செய்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. என் கணவருக்கு ஜெயங்கொண்டத்தில் 25 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் விவசாயம் செய்யலாம்ன்னு முடிவு செய்தேன். கணவரிடம் சொன்ன போது, அவர் ஏன் ஒரு கூட்டுப் பண்ணையாக ஆரம்பிக்கக்கூடாதுன்னு சொன்னார்.

அவரின் ஐடியாபடி அந்த நிலத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்க ஆரம்பித்தோம். அதன் பிறகு இயற்கை விவசாயம் தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்ததால், அதன் அடிப்படையில் கத்திரி, வெண்டை, பூசணி, பாகர்காய், பீர்க்கங்காய் வாழை சாகுபடி, நிலக்கடலை, எள் போன்ற பயிர்களை பயிரிட ஆரம்பித்தோம். இந்த பயிர்கள் ஆண்டு முழுதும் விளைச்சல் தரும். மேலும் செம்மரம், தேக்கு, மா, பலா, வாழை மட்டுமில்லாமல், சவுக்கு, மலை வேம்பு போன்ற நாட்டு மரங்களையும் பயிரிட்டு வருகிறோம்’’ என்றவர் பெண்களுக்கு தன்னுடைய பண்ணையில் வேலை வாய்ப்ைபயும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

‘‘ஒரு பெண்ணான நான் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால், பெண்களுக்கு அதிக வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்ன்னு விரும்பினேன். எங்க பண்ணையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கிறார்கள். உழவு செய்வது, மூட்டை தூக்குவது போன்ற ஒரு சில கடினமான வேலைகளைத் தவிர பெரும்பாலான வேலைகளுக்கு பொண்களைத்தான் பயன்படுத்துகிறேன்.

விவசாயம் மட்டுமல்லாமல் இது கூட்டுப் பண்ணை என்பதால், அரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து உயர் ஜாதி பசு மற்றும் எருமை மாடுகளை வாங்கி வந்து இங்கு அதற்ெகன 15 ஆயிரம் சதுரடியில் தனியாக கொட்டகை அமைத்து பராமரித்து வருகிறேன். ஒரு நாளைக்கு 1200 முதல் 1600 லிட்டர் பால் உற்பத்தி செய்து தனியார் நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வருகிறோம்.

மாடுகளுக்கு இயற்கை முறையில் விளையும் தீவினம் கொடுப்பதால் மாடுகளும் ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது. பால் மட்டுமில்லாமல் தயிர், மோர், நெய் வரை உற்பத்தி செய்கிறோம். இதன் மூலம் மாதம் சுமார் ரூ. 3 லட்சம் வருமானம் பார்க்க முடிகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். இது கூட்டுப்பண்ணை என்பதால், வேளாண்மை கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இண்டர்ன்ஷீப் பயிற்சிக்காக எங்கள் பண்ணைக்கு வந்து விவசாய நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள்’’ என்றவர் ஏழு ஆண்டுகள் தன்னுடைய கடுமையான முயற்சியால் இந்த பண்ணையை அமைத்துள்ளார்.

‘‘கூட்டுப்பண்ணையின் சிறப்பே ஒரு பயிர் மூலம் இழப்பு ஏற்பட்டால் இன்னொரு பயிர் மூலம் லாபம் பார்க்க முடியும். தினசரி வருமானத்திற்கு மாடுகள் கைகொடுக்கின்றன. எங்களின் கூட்டுப்பண்ணையை உலக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.செல்லம், காவல்துறை அதிகாரிகள், வேளாண்மை ஆராய்ச்சி மையம் வல்லுநர்கள் ஆகியோர் பார்வையிட்டு பாராட்டியுள்ளனர். விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கவலைப்படுவதை தவிர்த்து சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டுப் பண்ணை முறையில் விவசாயம் செய்வதால் போதிய வருமானம் பார்க்க முடியும்’’ என்ற இந்திரா லயன்ஸ் கிளப்பின் சாதனைப்பெண், மேதாபட்கரிடம் சிறந்த விவசாயி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிறிஸ்துமஸ் டிரீ அலங்கார குக்கீஸ்! (மகளிர் பக்கம்)
Next post FRESH DATES!! (மருத்துவம்)