மாடலிங் செய்ய அழகு திறமை 50/50 தேவை! (மகளிர் பக்கம்)
அழகு என்பது வெளிப்பூச்சு இல்லை. அகத்தின் ஒளி… இதனை நம் கண் முன்னே உண்மையாக்கும் நிகழ்வுகள் தான் ஃபேஷன் உலகம். தமிழகத்தில், இன்றைய இளம் பெண்களின் ஆர்வத்துக்கும், நம்பிக்கைக்கும் உரியதாக மாடலிங் துறை மாறியுள்ளது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண்களும் கூட பலர் இன்று மாடலிங் துறையில் ஈடுபட்டு முன்னேற கனவு காண்கின்றனர். முயற்சியினால் எதனையும் சாத்தியம் ஆக்கலாம் என்பதே மாடலிங் துறையில் ஈடுபடுபவர்களின் நம்பிக்கை. இவர்களது நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் ஃபேஷன் துறை குறித்தான ஒர்க்ஷாப்ஸ், க்ரூமிங் வகுப்புகள் மூலம் வழிகாட்டி வருகிறார் ரொனால்டு ராஜ தேவன்.
‘‘நான் சென்னை பையன். திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக வர வேண்டும் என்கிற கனவில் விஸ்காம் படிச்சேன். கொஞ்ச காலம் சினிமாவில் ஸ்டில் போட்டோகிராஃபராகவும் வேலைப் பார்த்து வந்தேன். அந்த நேரத்தில், ‘திரைக்கு பின்னால் இருக்கும் நீ, ஏன் திரைக்கு முன்னால் வரக் கூடாது? ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாமே!’ என்று பலர் சொன்னார்கள். நமக்கு ஃபேஷன் ஷோ என்றால் F டி.விதான்.
ஆனால் நண்பர்கள் ஊக்குவிக்க அவர்களின் உதவியுடன் சில ஷோ-க்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய பர்பாமென்ஸ் பிடிச்சதால, நிறைய ஷோக்கள் செய்ய ஆரம்பிச்சேன். அதில் எனக்கு டைட்டில்களும் கிடைச்சது. ஃபேஷன் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. இது போன்ற நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள ஆரம்பிச்ச பிறகு அதில் உள்ள நுணுக்கங்களை நானே ஒவ்ெவான்றாக கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன்.
என்னையே நான் கினேன் என்று தான் சொல்லணும். அதன் பிறகு மாடலிங் ஒருங்கிணைப்பாளரா ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். மேடைமேல் நடப்பது ஒரு கலை என்றால், அப்படி நடப்பவர்களை ஒருங்கிணைப்பது மற்றொரு கலை. அதில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பெரிய நிகழ்ச்சியினை இயக்க வாய்ப்பு கிடைச்சது. முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், செய்ய முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல பிரபலங்கள் எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. அது எனக்கு ஒரு நல்ல வரவேற்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நிறைய ஷோக்களை செய்ய ஆரம்பிச்சேன்” என்ற ரொனால்டு மாடலிங் துறையில் தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் கற்றுத் தரவேண்டும் என்று விரும்பியவர் ‘ரே ஃபேஷன் ஈவன்ட்’ என்கிற நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தார்.
‘‘மாடலிங் என்பது எல்லா பெண்களின் பெரிய கனவு. ஆனால் அதில் ஜெயிப்பது அவ்வளவு சுலபமில்லை. சிலர் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன்னு ஏமாற்றுவாங்க. இந்த துறையைப் பொறுத்தவரை தரமான பயிற்சி மற்றும் திறமைக்கான வாய்ப்பு அவசியம். அந்த வாய்ப்பினை என்னால் முடிந்த வரை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பினேன். அதனால் ஃபேஷன் துறை சார்ந்த ஒர்க்ஷாப்ஸ் நடத்தினேன். சென்னையில் ஃபேஷன் குறித்தான ஒர்க்ஷாப்ஸ் இருந்தாலும் அது வசதிப் படைத்தவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
மற்றவர்களுக்கும் இந்த துறைப் பற்றி பயிற்சி கிடைக்க வேண்டும் என்று குறைந்த விலையில் பயிற்சி அளித்து வருகிறேன். தனியாக வகுப்புகள் எடுப்பதோடு மட்டுமல்லாமல், பல கல்லூரிகளிலும் ஒர்க் ஷாப்கள் நடத்தி வருகிறேன். நிறைய பேர் ஃபேஷன் துறையில் மிளிர வேண்டும் என்ற கனவோடும், அதே சமயம் அதிக அளவில் பணம் செலவு செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த அளவில் கட்டணம் பெற்று, பயிற்சி அளித்து அவர்களையும் ஒரு மாடலாக வலம் வர வைக்க வேண்டும்” என்கிறவர் ஃபேஷன் துறையில் உள்ள சவால்களை பகிர்கிறார்.
‘‘ஃபேஷன் என்பது ஒரு க்ளாம் இண்டஸ்ட்ரி. குறிப்பாக ஃபேஷன் என்றால் குட்டி குட்டியா உடை உடுத்தணும். உடம்பை வெளிப்படுத்தணும் என்று தவறான கருத்துள்ளது. இங்கு முக அழகு தான் முக்கியம். மேடையில் அவர்கள் நடக்கும் போது தங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியம். உடை என்பது இந்த துறையில் ஒரு அங்கம் மட்டுமே. இதில் பல பிரிவுகள் உள்ளன. ஒருவரின் உயரம் மற்றும் உடல் அமைப்பிற்கு ஏற்ப அவர்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. மேடையில் ராம்ப்வாக் செய்பவர்கள் என்றால் ஆண்கள் 5.11, பெண்களுக்கான 5.7 உயரம் இருக்க வேண்டும். அந்த உயரம் இல்லாதவர்கள் விளம்பரங்கள், போட்டோஷூட் போன்றவைகளுக்கு செல்வார்கள்.
மாடலிங்கின் அடுத்த முன்னேற்றம் தொலைக்காட்சி தொடர் மற்றும் சினிமா. ஆனால் ஒரு சிலர் மட்டுமே சினிமாவினை தேர்வு செய்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் மாடலிங் துறையிலேயே இயங்கி பல சாதனைகள் செய்து வருகிறார்கள். பொதுவாக மாடலிங் துறைக்கு வருபவர்களுக்கு என்னுடைய அட்வைஸ், ஆரம்ப நிலையில் மாடலிங் மட்டுமே உங்களின் வாழ்வாதாரமாக எடுத்துக் கொள்ளாமல், வேலை பார்த்துக் கொண்டோ அல்லது படித்துக் கொண்டு செய்யலாம். இதில் முழு அனுபவம் பெற்ற பிறகு முழு நேரமாக தொடரலாம். மாடலிங் ஒருவரை உயரத்தில் கொண்டு போய் நிறுத்தும். அதே சமயம் பாதாளத்தில் தள்ளிவிடவும் செய்யும்.
இதில் ஸ்மார்ட்டாக தன்னம்பிக்கையோடு வேலை பார்ப்பது முக்கியம். எங்களிடம் பயிற்சி பெற வருபவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுப்பது தன்னம்பிக்கை. அதன் பின் பர்சனால்டி டெவலப்மென்ட். அதாவது அழகு, திறமை, அறிவு… மூன்றும் அவசியம். மில் இந்தியா மற்றும் வேர்ல்ட் போன்ற அழகிப்போட்டியில் 50% அழகு என்றால், மீதி 50% அவர்கள் எவ்வளவு திறமையாக பதில் அளிக்கிறார்கள் என்பதைக் குறித்து தான் தீர்மானிப்பார்கள். சமகால விஷயங்களோடு, பொது அறிவும் ஃபேஷன் துறைகளில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்’’ என்றவர் ஃபேஷன் அழகிகள் கண்டிப்பாக தங்களின் சருமத்தினை பாதுகாக்க வேண்டும் என்றார்.
‘‘சமூக வலைத்தளங்கள், யூ டியூப் வளர்ச்சியினால் இன்று எல்லோருமே சரும நிபுணர்கள், ஃபிட்னஸ் நிபுணர்களாக மாறியுள்ளனர். ஆனால், இதை பார்த்து பின்பற்றுவது ஆபத்தானது. முதலில் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து மருத்துவர்களிடமோ அல்லது சரும நிபுணர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். அடுத்து ஃபிட்னஸிற்கு நிச்சயம் ஒரு ஜிம் ட்ரைனரை அணுகுவதும் சிறந்தது. மாடலிங் துறைக்கு ஸ்கின், ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். சரும நிறம் மாடலிங் துறையில் முக்கியம் கிடையாது. சருமம் எந்த நிறமாக இருந்தாலும் அது பளிங்கு ேபால் இருப்பது அவசியம்.
சிலர் தங்களின் நிறம் மீது நம்பிக்கை இல்லாமல் தேவையில்லாத சிகிச்சை எடுக்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். உண்மையை சொல்லப் போனால் நம்மூரில் இருக்கும் சருமம் யாருக்குமே கிடையாது. ஆனால், அதை கெடுத்துக் கொள்கிறார்கள். சருமத்தில் பிரச்னை இருந்தால் மட்டுமே அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். மேக்கப் போட்டுக் கொள்ளலாம், அதற்காக சருமத்தின் அமைப்பையே மாற்றுவது தான் ஆபத்தானது’’ என்று எச்சரிக்கும் ரொனால்டு ராஜ தேவனுக்கு எதிர்காலத்தில் மாடலிங் சார்ந்த ஒரு அகாடமியினை திறக்க வேண்டும் என்பது ஆசையாம்.
Average Rating