வறண்ட சருமத்தை வெல்வோம்!(மருத்துவம்)
வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். இதனை தக்க சமயத்தில் கவனிக்கத் தவறிவிட்டால், சருமம் தொடர்பாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வறண்ட சருமத்தை பாதுகாத்து, அழகான தோற்றத்தை பெற முத்தான எளிய வழி முறைகள்.
வறண்ட சருமம் ஏற்பட காரணம்?
வறண்ட சருமத்தை பற்றி வருத்தப்படுவதை தவிர்த்து, எதனால் சருமம் வறண்டு போகிறது என்ற காரணத்தை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
* தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக குளிர் காலம் மற்றும் கோடைக் காலம்.
* காற்று மண்டலம் வறண்டு இருப்பது, ஈரத்தன்மை இல்லாமல் இருக்கும் பகுதியில் நீங்கள் வாழ்வது.
* அதிகம் ஹீட்டர் பயன்படுத்துவது. இதனால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் வற்றி காற்று வறட்சியாவது.
* சுடு தண்ணீரில் அதிகம் குளிப்பது.
* குளோரின் கலந்த தண்ணீர் இருக்கும் நீச்சல் குளத்தை பயன்படுத்துவது.
* அதிகம் ரசாயனங்கள் இருக்கும் சோப்புகள் மற்றும் க்ளென்சர் பயன்படுத்துவது.
* சொரியாசிஸ், சரும நோய் மற்றும் எக்சிமா போன்ற பிரச்சனைகளால் சருமம் வறண்டு போகலாம்.
வறண்ட சருமத்திற்கான விட்டமின்கள்
சரும ஆரோக்கியத்திற்கு விட்டமின்கள் அவசியம். குறிப்பாக வறண்ட சருமத்தை பாதுகாக்க சில குறிப்பிட்ட விட்டமின்களின் உதவி அவசியம்.
விட்டமின் E
* இது சருமத்தை மிருதுவாகவும், ஈரத்தன்மையோடும் , ஆக்சிஜனேற்றத்தோடு வைத்திருக்கவும் உதவும்.
* ஊதா கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
* வறண்ட சருமம் மற்றும் தோல் உரிதல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
விட்டமின் C
* இதில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளது
* சுருக்கம், வறட்சி மற்றும் சோர்வை போக்கும்.
* வயதான தோற்றத்தை மாற்றும் தன்மை உள்ளது.
* சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
* சொரியாசிஸ், எக்சிமா போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.
பயோடின் அல்லது விட்டமின் B7
* தலை முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
* சருமத்திற்கு நீர் சத்து அதிகம் கிடைக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் நல்ல பொலிவையும், தோற்றத்தையும் பெற உதவும்.
எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
வறண்ட சருமத்தை போக்க நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு சில விஷயங்களை செய்யலாம்.
* விரைவாக குளித்து விட்டு வர வேண்டும். அதிக நேரம் தண்ணீரில் இருந்து குளிக்கக் கூடாது.
* சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்ப்பது மிக முக்கியம்.
* சுடு தண்ணீர் சருமத்தில் இருக்கும் எண்ணை மற்றும் ஈரப்பதத்தை குறைத்து, சருமத்தை வறண்டு போக செய்யும்.
* குளிப்பதற்கு முன், நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தேய்த்து, சிறிது நேரம் கழித்து பின் குளிக்க செல்லலாம்.
* வறண்ட சருமத்துக்கென்றே இருக்கும் சோப்பை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.
* குளித்த பிறகு, உடலை கடுமையாக துடைக்க கூடாது.
* இயற்கை மூலிகைகள் கொண்ட மாய்ச்சரைசர் பயன்படுத்துவது அவசியம். இது சருமத்தை ஈரத்தன்மையோடும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
வாக்சிங்
* பெண்கள் சருமத்தில் இருக்கும் மெல்லிய முடிகளை வாக்சிங் செய்வது இன்றைய காலத்தில் இயல்பாகி விட்டது. வறண்ட சருமம் இருப்பவர்கள் இப்படி செய்தால், அது உங்கள் சருமத்தை மேலும் பாதிக்கும். வாக்சிங் செய்த பின், சோப்பு மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை உடனடியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆன்டி ஏஜிங் கிரீம்
* ஆன்டி ஏஜிங் கிரீம்களை வறண்ட சருமம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இது உங்கள் சருமத்தை மேலும் வறண்டு போக செய்யும். சருமத்தில் ஒவ்வாமை, அரிப்பு, தடிப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்தலாம்
உதடுகள்
* சருமம் வறண்டால், அது உதடுகளையும் பாதிக்கும்.
உதடுகளில் தோல் உரிவது, எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும். சரியான லிப் பாம் பயன்படுத்தி உதடுகளை ஈரத்தன்மையோடு வைத்துக்கொள்ள வேண்டும். தேன், சர்க்கரை, வெண்ணை போன்று வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உங்கள் உதடுகளுக்கு ஈரத்தன்மையை அதிகப்படுத்துங்கள் முகப் பராமரிப்பு
* எப்போதும் முகத்திற்கு தொடர்ந்து மசாஜ் மற்றும் ஃபேசியல் செய்து கொண்டே இருக்காதீர்கள்.
* வாரம் இரண்டு முறை ஸ்க்ரப் செய்தால் போதுமானது.
* இறந்த அணுக்களை சருமத்தில் இருந்து உதிர அவகாசம் கொடுங்கள்.
இப்படி சற்று இடைவேளை கொடுத்து ஃபேசியல் மற்றும் ஸ்க்ரப் செய்வதால் உங்கள் சருமம் பாதுகாப்பாகவும், ஈரத்தன்மையோடும் இருக்கும்.
சன் ஸ்க்ரீன் லோஷன்
*வறண்ட சருமம் விரைவாக சுறுக்கம் ஏற்படும். இதனால் வயதான தோற்றம் விரைவாக தோன்றும். சரியான சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் சூரிய கதிர் மற்றும் ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாப்புப் பெறும். எனினும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தும் முன் நீங்கள் மாய்ச்சரைசர் பயன்படுத்துவது அவசியம்.
மேக்கப் பொதுவாக வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகளுடன் மேக்கப் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களது வறண்ட சருமத்திற்கு மேக்கப் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், இதை கவனியுங்கள்.
*மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை அதற்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக, சருமம் அதிகம் வறண்டு இருந்தால், முதலில் அதனை ஈரப்பதமாக்க வேண்டும். மாய்ச்சரைசர் பயன்படுத்தி மசாஜ் செய்யும் போது, உங்க சருமம் மேக்கப்பிற்கு தயார் நிலைக்கு வரும். சரும சீரம் ெகாண்ட பவுண்டேசன் பயன்படுத்தவும்.சாதாரண ஃபவுண்டேஷன் எவ்வளவு தரமானதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தாலும், அது மேலும் வறண்டு போக செய்யும்.
அதனால் எப்போதும், சீரம் சார்ந்த ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்யாது, மேலும் நல்ல ஈரப்பதத்தைத் தரும். முடிந்த வரை தூள் சார்ந்த ஒப்பனை பொருட்களை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் சருமத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணைத் தன்மையை குறைத்து உங்கள் சருமம் மேலும் வறண்டு போக செய்யும். அதனால் க்ரீம் மற்றும் சீரம் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை மிதமான ஒப்பனை செய்வது நல்லது. இது வறண்ட சருமத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.
Average Rating