பாடம் சொல்லிக் கொடுக்கும் வண்ண வண்ண மீன்கள்! (மகளிர் பக்கம்)
“பறவைகள், விலங்குகள், மீன்கள் என எல்லா உயிரினங்களுமே மனிதர்கள் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்பதை, அந்த உயிரினங்களை நெருங்கி அணுகும் போது உணர முடியும்” என்கிறார், வண்ண மீன்கள் வளர்ப்பகம் நடத்தி வருபவரும், சமூக சேவகருமான மேன்லின் புளோரா. “சிறு வயதிலிருந்தே மனிதர்களை தாண்டி மற்ற உயிரினங்கள் மேல் அதிகம் பாசம் கொண்டவளாகவே வளர்ந்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த வயதில், எங்க வீட்டில் ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டி முட்டை பொரிச்சிருந்தது.
ஒரு நாள் கூட்டில் இருந்த குஞ்சு ஒன்று கீழே விழுந்தது. நான் அதை எடுத்து மறுபடியும் கூட்டில் வச்சேன். ஆனால் அந்த குஞ்சு பறவை கூட்டில் நில்லாமல் கீழே விழுந்து கொண்டே இருந்தது. எதனால் கீழே விழுகிறது என்று எனக்கு புரியல. அதனால் சிறகு முளைக்கும் வரை அதை எப்படியாவது பாதுகாக்க வேண்டுமென்று என் மனதில் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். ஒரு அட்டை டப்பாவில் போட்டு அதற்கு சிறகு முளைக்கும் வரை வளர்த்தேன். உயிரினங்கள் மீது எனக்கான அக்கறை வந்ததற்கான காரணம் என் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த நிகழ்வு தான்’’ என்கிற பாம்பன் பகுதியை சேர்ந்த மேன்லின் புளோரா, மீன் வளர்ப்பின் மீதான தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை பகிர்ந்தார்.
‘‘என் கணவர் அடிப்படையில் ஒரு மீனவர். நான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக மீன் வளர்ப்பு துறையில் இயங்கி கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் என் மகன் தான். அவனுக்கு வீட்டில் ஒரு மீன் தொட்டி வைக்கவேண்டும்னு விருப்பம். நாங்க அவனுக்கு கொடுத்த பாக்கெட் மணியில் ஒரு ஃபைட்டர் ஜோடி மீன் வாங்கி வந்தான். என் கணவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிடுவார். என் மகன் பள்ளிக்கு போயிடுவான். எனக்கு துணையாக இந்த மீன் தான் வீட்டில் இருக்கும்.
வீட்டு வேலை முடிச்சிட்டு பாட்டிலில் இருக்கும் இந்த மீனை பார்ப்பது தான் என்னுடைய பொழுதுபோக்கு. மயில் தோகைப் போல் அதன் துடுப்பு அழகாக விரிந்திருக்கும். மேலும் அதன் நிறங்களும் மனதை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். ஒரு முறை இந்த மீன்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமாக இருந்தது. அதன் பிறகு இதனை உன்னிப்பாக பார்க்க ஆரம்பிச்சேன். மீன்கள் இனம் சேர்வது, பூக்கள் மலர்வது போன்றது, எப்போது எப்படி நடக்கும்னு தெரியாது. அதனால் நான் இவற்றை அதிக நேரம் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் புரிந்தது. ஆண் மீன் பெண் மீனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கும்.
அதற்கு பெண் மீன் இசைந்து கொடுக்கும். அப்படி என்றால் இணை ேசர தயார் என்று புரிந்து கொள்ள வேண்டும். சில சமயம் பெண் மீன் சண்டையிடும். அந்த சமயத்தில் அதனை இரண்டு, மூன்று நாட்கள் தனியாக எடுத்து வைத்து உணவு கொடுத்து மீண்டும் அதனுடன் சேர்க்க வேண்டும். அதன் பிறகு ஆண் மீன் தண்ணீர் குமிழ்களை வெளியிடும். அதில் பெண் மீன் முட்டையிடும். அந்த சமயத்தில் சிலர் முட்டைகளை பாதுகாக்க பிளாஸ்டிக் துண்டுகளை போடுவாங்க. அதற்கு பதில் வாழை இலையை போடலாம். முட்டையினை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வெண்மை நிறத்தில் இருப்பதால், நீரோடு நீராக இருப்பது போன்ற தோற்றமளிக்கும். பெண் மீன் முட்டையிட்ட பின் ஆண் மீனின் பங்களிப்புதான் அதிகம். பெண் மீனிடம் சண்டையிட்டு அதை தனியாக அனுப்பிடும். முட்டை அருகே நெருங்க விடாது.
பெண் மீன் சில சமயங்களில் முட்டையிட்ட பசியில் முட்டைகளையே சாப்பிட்டுவிடும். முட்டையிட்ட பிறகு பெண் மீனை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளலாம். முட்டையினை அடைகாத்து குஞ்சு பொரிக்கும் வரை அதை பாதுகாப்பது ஆண் மீனுடைய வேலை. முட்டைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், உடனே கோபமாகும். அதனால் தான் உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த சிறு உயிரினம் மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மீன்கள் மனிதர்களுக்கு மிகப்பொிய உதாரணம். சில குடும்பங்களில் அப்பாக்கள் பொறுப்பில்லாமல் இருப்பாங்க. அவர்கள் அடுத்த தலைமுறையினரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்கி வருகின்றனர்” என்கிற மேன்லின் புளோரா, ஒவ்வொரு மீன்களும் இனப்பெருக்க முறைகளில் தனித்துவம் கொண்டவையாக இருக்கின்றன என்கிறார்.
கண்ணாடி தொட்டிகள் மூலமாக வீடுகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவுகள் கொடுப்பது? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றலாம்? மீன் தொட்டிகளில் என்னென்ன பொருட்கள் வைக்கலாம்? போன்றவைகள் குறித்து விரிவாக பகிர்கிறார் மேன்லின் புளோரா.“வீட்டில் கண்ணாடி தொட்டிகளில் வளர்க்கும் போது பத்து நாள் வரை மாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு தண்ணீர் மாற்றும் போது ஏற்கனவே இருக்கும் நீரில் ஒரு இரண்டு கப் எடுத்து தனியாக வைத்து, தொட்டி சுத்தம் செய்யும் வரை அதிலேயே மீன்களை எடுத்து வைத்திருக்கலாம். குறிப்பாக மீன்களை நெட் மூலமாக மட்டுமே எடுக்க வேண்டும். கைகளினால் எடுக்கக் கூடாது.
சுத்தம் செய்த தொட்டியில் புது தண்ணீர் விட்ட பிறகு, ஏற்கனவே நாம் எடுத்து வைத்திருக்கும் நீரை அதனுடன் சேர்க்க வேண்டும். அப்போது தான் மீன்கள் தனக்கு பழக்கப்பட்ட இடம் என்பதை உணரும். அதே போல் கடைகளிலிருந்து மீன்களை வாங்கி வரும் போது கூட அந்த மீனை விட்ட பின், அந்த தண்ணீரிலிருந்து பாதி தண்ணீர் மட்டும் விட்டால் போதும். முழுவதும் விட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் சில இடங்களில் மருந்துகள் கலந்து கொடுப்பார்கள்.
சுத்தம் செய்யும் போது ஃபில்டர்களையும் சேர்த்து சுத்தம் செய்யயும். பிளாஸ்டிக் பாசிகளுக்கு இயற்கை பாசிகள் பயன்படுத்தலாம். இவை மீன்களின் தேவையற்ற கழிவுகளை உள்வாங்கி நல்ல தண்ணீரை வெளிகொடுக்கும். அடுத்து ஆண் மீன்கள் துரத்தும் போது பெண் மீன்கள் இளைப்பாறுவதற்கும், சில மீன்கள் மறைந்து வாழ்வதற்கும் இந்த பாசிகள் பயன்படுகின்றன. கோல்டன் ஃபிஷ், பசு மாடு போன்றது. எப்போதும் அசை போட்டுக் கொண்டிருக்கும். அது போன்ற மீன்களுக்கு இந்த பாசிகள் உணவாகவும் இருக்கின்றன.
இதற்கடுத்து தொட்டி வைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் சூரிய வெப்பம் படும்படியான இடத்தில் வைக்கக் கூடாது. வெளிச்சம் இருக்கலாம், ஆனால் சூரிய வெப்பம் இருக்கக்கூடாது. அவ்வாறு வைக்கும் போது நீரின் வெப்பநிலை அடிக்கடி மாறுவதால் மீன்கள் இறப்பதற்கும், அதிக அளவில் தேவையில்லாத பாசி பிடித்து தொட்டி அழுக்காக வாய்ப்புண்டு. மீன்களுக்கு கொடுக்கப்படும் உணவும் ஒரு நேரம் மட்டும் போட்டால் போதும். அதுவும் மீனின் அளவு என்னவாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ற அளவில் கொடுக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் மீன் ஓட்டத்திலிருக்கும் போதே அந்த உணவை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் மீத உணவு மிதந்து கொண்டிருந்தால் அதை வலை வைத்து எடுத்துவிடணும். இல்லையென்றால் தண்ணீர் கெட்டு போய் மீன்கள் இறக்க நேரிடும்.
இதற்கடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஒரு மீன் தொட்டியின் கீழ் பகுதியிலோ அல்லது நடுப் பகுதியிலேயோ இல்லாமல் மேல் பகுதியில் மட்டும் நீந்திக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு உடம்பு சரியில்லை என அர்த்தம். அந்த சமயங்களில் அந்த மீனை மட்டும் தனியாக எடுத்து, ஒரு வாளியில் விட வேண்டும். அந்த நீரில் ஒரு சொட்டு அளவு புளூ மெடிசன் விட்டால் கொஞ்ச நேரத்தில், சரியாகிவிடும்” என்கிற மேன்லின் புளோராவிற்கு, இந்த வண்ண மீன்களோடு கடலில் இருந்து கிடைக்கக்கூடிய அறிய வகை மீன்களையும் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்பது தன் லட்சியமாம்.
“உலகின் மற்ற இடங்களில் கிடைக்காத 364 அறியவகை வண்ண மீன்கள் நம் பவளப் பாறைகளை சார்ந்து இருப்பதாக சொல்கிறார்கள். நல்ல தண்ணீர் மீன்களை விட கடல் தண்ணீர் மீன்கள்தான் ரொம்ப அருமையானது, அழகானதும் கூட! மீன் பிடிக்கப் போகும் போது இது போன்ற மீன்கள் மாட்டிக் கொள்ளும். அதை எடுத்து அப்படியே கரையில் போட்டுவிடுவார்கள். பார்க்க பாவமா இருக்கும். அதனால் மீனவர்களிடம் வலையில் இது போன்ற மீன்கள், சின்ன பாசி, சங்கு அல்லது சிப்பியினை மீண்டும் கடலுக்குள் விட்டுவிடும் படி கேட்டுக்கொள்வேன்.
காரணம் இதனை எடுத்து வந்துவிட்டதால் தான் நாம் நிறைய ஆமைகளை இழந்துவிட்டோம். கடல் ஆமைகள் வலையில் சிக்கிக் கொள்ளும் போது அதை எடுத்து கடலில் விட்டுவிட்டு அதை வீடியோவாக எடுத்து மீனவர்களுக்கான ‘கடலோசை எஃப்.எம்’மில் கொடுத்தால், அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1000-ம் ‘கடல் காப்பான்’ என்கிற விருதும் கொடுக்கிறார்கள்” என்கிறவர், கடல்களில் போடும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்.
‘‘நிலத்தை முற்றிலும் சீரழித்துவிட்டோம். காய்கறி என்ற பெயரில் விஷத்தை சாப்பிடுகிறோம். ஆனால், கடல் மட்டும் தான் சுத்தமான, சத்தான உணவை கொடுக்கிறது. அதையும் சீரழிக்க பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை கலந்துவிடுகிறோம். கடலுக்கு போகும் மீனவர்கள் வழியெல்லாம் பாலிதீன் கவர்தான் அதிகமா மிதக்குதுன்னு சொல்லும் போது அதிர்ந்து போவேன். இயற்கையை சீண்டாதீர்கள். நாம் மட்டும் வாழவில்லை. மற்ற உயிரினங்களும் இருக்கின்றன. நம்முடைய அடுத்த சந்ததிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாது இயற்கையை தொந்தரவு செய்யாமல், அதன் துணையோடு வாழ்வோமே…” என்கிறார் மேன்லின் புளோரா.
Average Rating