இஞ்சி மாதிரி… ஆனா இஞ்சி இல்ல…!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 9 Second

‘‘நம்முடைய வாழ்வின் பாரம்பரியத்திலிருந்தே உணவென்பது தனியாக, மருந்தென்பது தனியாக இருந்ததில்லை. இரண்டும் ஒன்றோடொன்று இரண்டற கலந்ததாகவே இருக்கிறது. உதாரணம் இன்று வரை எல்லோர் வீட்டிலும் இருக்கும் அஞ்சறைப் பெட்டி. அந்த அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றுள்ள ஒன்றுதான் சித்தரத்தை’’ என்று சித்தரத்தைக்கு அறிமுகம் கொடுக்கிறார் சித்த மருத்துவர் பானுமதி.

சித்தரத்தை உடல் நலத்திற்கு நன்மை பயப்பதாயினும், பலருக்கும் சளி, இருமல், ஜலதோஷம் உண்டாவது பரவலாகக் காணப்படுகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் இது போன்ற நோய்கள் தோன்றுகிறது. அந்தச் சமயங்களில் நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியினுள் இருக்கும் ‘சித்தரத்தை’ என்று அழைக்கப்படும் Leser galangal மிகவும் பயன் அளிப்பதாகும். அரத்தை பல நூற்றாண்டுகளாக இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. குடும்ப வீட்டு வைத்திய முறையிலும் சித்தரத்தை மிக உயர்ந்த, முக்கிய இடத்தை வகிக்கிறது.

சித்தரத்தையில் காணப்படும் வேதிப் பொருட்கள் :

சித்தரத்தையில் காணப்படும் வேதிப் பொருட்களான Galangin,  Quercetin ஆகியவை அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாகின்றன. அது மட்டுமல்லாமல், இந்த வேதிப் பொருட்களினால் சித்தரத்தைக்கு Anti – inflammatory, Anti -oxidant, Anti – microbial ஆகிய குணங்கள் உண்டாகிறது. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்பது சித்தரத்தையின் பெருமையைச் சொல்லும் மிகவும் பழைய பழமொழி ஆகும். எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது.

சித்தரத்தை என்ற பெயரைக் கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இதனைச் ‘சீன இஞ்சி’ என்றும் அழைக்கிறார்கள். அரத்தை இயற்கையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலையின் கிழக்குச் சரிவுகளில் விளைகிறது. சித்தரத்தை செடி வகையைச் சார்ந்தது. அரத்தை இலைகள் நீண்டு, அகலத்தில் குறுகிய தோற்றமுடையது. இலையின் நடுநரம்பு வன் மையானது. சித்தரத்தை வேர்க்கிழங்குகள் மணமுள்ளவை. இது காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. வேர்க்கிழங்குகள் காய்ந்த நிலையில் நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும். மருத்துவத்தில் வேர்க் கிழங்குகளே பெரிதும் பயன்படுகிறது.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியைத் தூண்டும். மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படும். சிறுவர்களுக்கான சுவாச நோய்கள், வாத நோய்கள், குடல் வாயு, தொண்டை நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகமாகிறது. கரப்பான், தலை நோய், சீதளம் மற்றும் பல வகைப்பட்ட சுரங்களையும் குணமாக்கும். மேலும், வயிற்று நோய்களுக்கு மருந்தாகவும், கிருமிநாசினியாகவும், குடல் புழுக்களை வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது.

சித்தரத்தையை வெயிலில் நன்கு காயவைத்து, பொடி செய்து  தேனுடன் கலந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாகும். அடிபட்ட வீக்கம், வலி இவற்றிற்கு சித்தரத்தையை வெந்நீர் விட்டு அரைத்து பசைபோல செய்து அந்த இடத்தில் பூசி வர அவை நன்கு குறையும். நுரையீரல் மூச்சு குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்து, மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. ஒரு துண்டு சித்தரத்தையை வாயிலிட்டுச் சுவைக்க தொண்டையில் கட்டும் கோழை, வாந்தி, இருமல் ஆகியவை குறையும்.

பித்தத்தோடு உண்டாகும்  கோழைக் கட்டுக்கு இதனை கற்கண்டோடு சேர்த்து வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல் இவற்றிற்கு இதனை தேன், தாய்ப்பால் கலந்து புகட்டுவது நல்லது. சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி ஆகிய மூலிகைகளை நீர் விட்டு அரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர குத்திருமல், தலைவலி, சீதளம், காய்ச்சல் நீங்கும். சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை லேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் அனுபானித்துக் கொடுக்க இருமல், இரைப்பு நோய்கள் குணமாகும்.

நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக் கொண்டு, இந்தப் பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர எலும்புகள் வன்மை பெறும். சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தொண்டை புண், தொண்டை வலி,இருமல் போன்றவை விரைவில் குணமாகும். குழந்தைகளின் இளைப்பு சளி போன்ற துன்பங்கள் விலக உலர்ந்த சித்தரத்தையை  விளக்கெண்ணெயில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் கலந்து, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

இதன் சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வழங்கப்படும் பிரசவ லேகியத்தில் சித்தரத்தை சேர்க்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய கொடுக்கப்படும் உரை மாத்திரையில் சித்தரத்தை மிக முக்கியமான சேர்மானமாக இருக்கிறது. சுவாச நோய்களுக்கான மருந்துகள், இருமல் மருந்துகள், வலி நோய்களுக்கான மருந்துகளில் சித்தரத்தை சேர்க்கப்படுகிறது. உடலுக்கு சிறந்த சக்தியளிக்கும் மருந்தாகும், இந்த சித்தரத்தை என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மையை அதிகரிக்கும் ஓரிதழ் தாமரை! (மருத்துவம்)
Next post கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)