மார்கழி மாத சமையல்!! (மருத்துவம்)
மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கென்றே ஒதுக்கப்பட்ட மாதமாகும். அதனால் மார்கழியை ‘பீடுடைய மாதம்’ என்று போற்றினர். மார்கழி மாதத்தில் விடியற்காலையில் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன. ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் உரைத்தார். மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் ஆலயங்களில் வெண்பொங்கல் செய்து படைத்து விநியோகம் செய்வர்.
மார்கழி மாதத்தில் கூடாரவல்லி, ஏகாதசி, துவாதசி, திருவாதிரை, ஹனுமத் ஜெயந்தி, போகிப்பண்டிகை என (ஆன்மிக பண்டிகைகளும் அதற்கு ஏற்ற சமையலும் செய்து ஆண்டவனுக்குப் படைப்பர்) பண்டிகைகளும் அணிவகுத்து வரும். இறைவனுக்கு ஏற்ற மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளுக்கு என்ன பிரசாதங்கள் படைக்கலாம் என்று விவரிக்கிறார் சமையல் கலைஞர் ராஜகுமாரி.
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2 கப்,
பயத்தம்பருப்பு -1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
நெய் – 4 டேபிள் ஸ்பூன்,
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சித்துருவல் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 10 இதழ்கள்,
முந்திரித்துண்டுகள் உடைத்தது – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
வெறும் வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் லேசாக வறுத்து 5 கப் நீர் விட்டுக் குழைய வேக விடவும். வேகும்போதே உப்பு சேர்க்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் கொரகொரப்பாகப் பொடித்து வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம், இஞ்சித்துருவல், பெருங்காயம், முந்திரித்துண்டுகள், கறிவேப்பிலை அனைத்தையும் வறுத்துப் பொங்கலில் சேர்த்துக் கலக்கி இறக்கவும். பகவானுக்குப் படைப்பதற்கு ஏற்ற வெண் பொங்கல் தயார்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 2,
தேங்காய்த்துருவல் – 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
வரமிளகாய் – 2,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 6 இதழ்கள்.
செய்முறை
சர்க்கரைவள்ளிக்கிழங்கினைத் தோல் சீவி துண்டுகளாக அரிந்து உப்பு சேர்த்து நீர் சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த கிழங்கையும் சேர்த்து ஒருமுறை போட்டு புரட்டி தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும். அனைத்தையும் நன்றாகக் கலந்துவிடவும். போகிப்பண்டிகை அன்று படைக்கவும்.
ஏகாதசி மாவு
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்,
துருவிய வெல்லம் – 1¼ கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்.
செய்முறை
பச்சரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் (நீர் விடாமல்) நைசாக அரைக்கவும். வெல்லம், தேங்காய்த்துருவல் இரண்டையும் 1/4 கப் நீர் விட்டு ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு இரண்டு கொதி விட்டு இறக்கி ஏலப்பொடி சேர்த்து ஆறியதும் வறுத்து அரைத்த மாவினைச் சேர்த்துப் பிசையவும். இதனை வைகுண்ட ஏகாதசியன்று செய்து பெருமாளுக்குப் படைப்பது ஐதீகம். இந்த மாவினை மட்டும் சாப்பிட்டு விட்டு விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று சமையல் செய்து சாப்பிட்டு விரதத்தை முடிப்பர்.
தேன் நெல்லிக்காய்
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 10,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
துருவிய வெல்லம் – 1 கப்,
தேன் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
நெல்லிக்காயைக் கழுவி நீரில்லாமல் சுத்தமாக துடைத்து வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு (அடுப்பை குறைந்த தணலில் வைத்து) நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் நன்றாக வதங்கியதும் இறக்கி ஆறியதும் நெல்லிக்காயை ஊசியால் இரண்டு மூன்று இடங்களில் குத்தி விடவும். துருவிய வெல்லத்தை 1/4 கப் நீர் விட்டு கம்பிப்பதம் பாகு வைத்து இறக்கவும். ஆறியதும் தேன் சேர்த்து நெல்லிக்காய் சேர்த்து கலந்துவிடவும். இந்தத்தேன் நெல்லிக்காய் வெளியில் வைத்தால் குறைந்தபட்சம் 2 வாரங்கள் வரையிலும் ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரையிலும் கெடாது. ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருப்பதால் ஏற்பட்ட பித்தம் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்ைடக்காய் சாப்பிடுவதால் நீங்கும்.
அகத்திக்கீரை உசிலி
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்து அரிந்த அகத்திக்கீரை – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
துவரம்பருப்பு – 1/4 கப்,
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்,
பயத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் – 2.
தாளிக்க
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்(தூள்),
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை
துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, வரமிளகாய் மூன்றையும் கழுவி நீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். அகத்திக்கீரையை உப்பு சேர்த்து அளவான நீர் விட்டு வேகவிட்டுத் தனியே வைக்கவும். ஊறிய பருப்புகளில் உள்ள நீரை வடிகட்டி உப்பு, மிளகாயுடன் கொரகொரப்பாக அரைத்து மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து இட்லித்தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேக விட்டு எடுக்கவும். மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த அகத்திக் கீரை, சுற்றிய பருப்பு சேர்த்து வதக்கவும். கீரையும், பருப்பும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும். அகத்திக்கீரை உசிலி தயார்.
சுண்டைக்காய் துவையல்
தேவையான பொருட்கள்
பிஞ்சான சுண்டைக்காய் – 1 கப்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
உளுந்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை
வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை முழுதா அப்படியே வதக்கவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை ஆப் செய்துவிடவும். பொடித்த பொடியுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றிப்பிறகு வதக்கிய சுண்டைக்காயைச் சேர்த்து உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். துவாதசிக்குப் படைப்பதற்கு ஏற்ற சுண்டைக் காய் துவையல் தயார்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்,
துருவிய வெல்லம் – 3 கப்,
பால் – 5 கப்,
நெய் – 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
பயத்தம்பருப்பு,
முந்திரித்துண்டுகள் – தலா 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்துத் தனியே வைக்கவும். பிறகு மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பயத்தம்பருப்பை வறுத்துத்தனியே வைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அரிசியைக்கழுவி அதில் சேர்த்து வேக விடவும். பாலில் அரிசி பாதியளவு வெந்ததும் வறுத்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். இடையிடையே நெய்யினைச் சேர்க்கவும். அரிசியும், பருப்பும் பாலில் நன்றாகக் குழைய வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து மீதியுள்ள நெய் முழுவதையும் சேர்த்து விடவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரித்துண்டுகள் சேர்த்து இறக்கவும். மற்ற நாட்களில் செய்வதைவிட கூடாரவல்லி அன்று செய்யும் சர்க்கரை பொங்கல் விசேஷமானது.
திருவாதிரைக்களி
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்,
துருவிய வெல்லம் – 1½ கப்,
பாசிப்பருப்பு – 1/4 கப்,
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்,
உடைத்த முந்திரித்துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
நெய் – 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
அரிசி, பருப்புகளை தனித்தனியே வெறும் வாணலியில் மிதமாக வறுத்து இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு உடைக்கவும். வெல்லத்தைப் பொடியாக சீவி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். (3 கப்) பின்னர் உடைத்த அரிசி, பருப்பு ரவையைச் சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் 3 டேபிள் ஸ்பூன் நெய், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் 1 டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரித்துண்டுகள் வறுத்துச் சேர்த்து ஏலப்பொடி தூவி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும்.
திருவாதிரை தாளகக்குழம்பு
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய்,
வாழைக்காய்,
சர்க்கரைவள்ளிக்கிழங்கு,
சேப்பங்கிழங்கு,
சேனைக்கிழங்கு,
கொத்தவரங்காய்,
பூசணிக்காய் ஒரே அளவாக நறுக்கியது – 3 கப்,
திக்கான புளி கரைசல் – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
வெல்லம் துருவியது – 1 டேபிள் ஸ்பூன்.
வறுத்து அரைப்பதற்கு:
பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்,
கருப்பு எள் – 1 டேபிள் ஸ்பூன்,
துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 10 இதழ்கள்.
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் பச்சரிசி, எள் இரண்டையும் தனித்தனியே வறுத்து வைக்கவும். பிறகு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்த அனைத்துப் பொருட்களையும் வறுத்து முதலில் வறுத்து வைத்த அரிசி, எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் நீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் அரிந்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வேக விடவும். காய்கள் அரை வேக்காடு வெந்ததும் புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விடவும்.
புளியுடன் சேர்ந்து காய்கள் வெந்ததும் அரைத்த விழுதினையும் சேர்த்து துருவிய வெல்லத்தினையும் சேர்த்துக் கொதித்து வந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்துக் கலந்து இறக்கவும். திருவாதிரைக் குழம்பிற்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் காய்களை (நாட்டுக்காய்கள்) சேர்த்துத் தயாரிக்கவும். திருவாதிரைக்களியுடன் இந்தத் தாளகக்குழம்பையும் சேர்த்துப் படைத்து, பின்னர் களிக்கு இந்தக் குழம்பைத் ெதாட்டு சாப்பிடவும்.
தேங்காய் போளி
தேவையான பொருட்கள்
பூரணம் செய்வதற்கு:
தேங்காய்த்துருவல் – 1½ கப்,
துருவிய வெல்லம் – 2 கப்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்.
மேல் மாவு செய்வதற்கு:
மைதா மாவு – 1 கப்,
வெள்ளை ரவை – 3 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
லெமன் புட்கலர் – 1/4 டீஸ்பூன்,
ஓரங்களில் ஊற்றுவதற்கு:
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், இரண்டையும் கலந்து வைக்கவும்.
செய்முறை
மேல் மாவிற்குக் கொடுத்தவற்றை நீர் விட்டு சப்பாத்தி மாவினைவிட சற்றுத் தளர்வாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். ஒரு பாத்திரத் தில் வெல்லத்துடன் சிறிதளவு நீர் விட்டு ஒரு கொதி விட்டு கல், மணல் நீக்கி வடிகட்டி தேங்காய்த்துருவல் சேர்த்து மீண்டும் கொதி விட்டு சேர்ந்து வந்ததும் ஏலப்பொடி தூவி இறக்கவும். பூரணம் தயார். மேல் மாவில் இருந்து சிறிதளவு எடுத்து வாழை இலையில் வட்டமாகத் தட்டி மேலே பூரணம் 2 டீஸ்பூன் வைத்து மூடவும்.
மறுபடியும் அதனை வட்டமாகத் தட்டி தவாவில் போட்டு ஓரங்களில் எண்ணெய், நெய் கலந்த கலவையில் இருந்து 1 டீஸ்பூன் ஓரங்களில் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். ஓரங்களில் எண்ணெய், நெய் கலந்து ஊற்றுவதற்குப் பதில் முழுவதுமாக நெய்யும் ஊற்றலாம். (அ) வெறும் எண்ணெயும் ஊற்றலாம். போகிப்பண்டிகைக்குப் படைப்பதற்கு ஏற்ற தேங்காய் போளி தயார்.
Average Rating