கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 51 Second

*கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த்துருவலுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து சாம்பார் செய்தால் வெங்காயச் சாம்பார் மாதிரி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

*முள்ளங்கியை தோல் சீவி கொப்பரை சீவலில் போட்டு துருவினால் பூப்பூவாய் இருக்கும். பொரியல் செய்தால் பார்க்க கோஸ் கறிபோல் இருக்கும். தேங்காய்த்துருவல் சேர்த்து செய்தால், சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். மணமும், ருசியும் சுவைபட இருக்கும்.

*மோர் மிளகாய் போடும்போது தயிருடன், துவரம்பருப்பை ஊற வைத்து அரைத்து மிளகாயுடன் கலந்து செய்தால், வறுக்கும்போது மிளகாய் காரமில்லாமல் இருக்கும். மொறுமொறுவென்று சுவைபட இருக்கும். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

– பிச்சை சுவாமிநாதன், சென்னை.

*மாவு சற்று புளித்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு ஊத்தப்பமாக ஊற்றி எடுக்கலாம். ருசியாக இருக்கும்.

*ஆப்ப மாவு அரைக்கும்போது கைப்பிடி அளவு அவலையும் ஊற வைத்து அரைத்து சேர்த்தால் ஆப்பம் புஸு புஸு என்று மிக மிருதுவாக இருக்கும்.

*முருங்கைக்காயை வேக விட்டு அதன் விழுது எடுத்து கூட்டு, பொரியல் செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.

– கே.நாகலட்சுமி, சென்னை.

*கொத்தமல்லி, கறிவேப்பிலை தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

*முட்டைக்கோஸ் கறிக்கு அரிவாள் மனையிலோ, கத்தியிலோ  நறுக்குவதைவிட கேரட் சீவியில் சீவுவது எளிது. பார்க்க ‘யூனிபார்மாகவும்’ பொரியல் ருசியாகவும் இருக்கும். விரைவில் வெந்தும் விடும்.

*பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துகூட காய்ச்சலாம்.

– கே.ராகவி, வந்தவாசி.

*சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காமல், அடை மாவில் கலந்து அடை தயாரித்து விடலாம்.

* தனியா, சீரகம், வற்றல், மிளகாய், பொட்டுக்கடலை, பெருங்காயம் ஆகியவற்றைப் பொடி செய்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு பொரியலில் கடைசியில் தூவி எடுக்க பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.

*சப்பாத்தி மாவு இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு செய்தால் மிருதுவாக இருக்கும். பூரி செய்வதாக இருந்தால் மாவு பிசைந்த உடனே பூரி போட்டால் எண்ணெய் குடிக்காது.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*அப்பளத்தை பொரித்து ஸ்டீல் டப்பாவில் போட்டு டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் நமத்துப் போகாமல் இருக்கும்.

*சிப்ஸ், காராபூந்தி போன்றவற்றை செய்யும்போது மிளகாய்த் தூளுக்குப் பதிலாக மிளகுத்தூளை உபயோகப்படுத்தலாம். உடம்புக்கு நல்லது.

*கொத்தமல்லித் தழையை ரசத்தில் போட்டுவிட்டு தண்டை வீணாக்காமல் காய வைத்து ரசப்பொடியில் சேர்த்து அரைக்கவும்.  வாசனையாக இருக்கும்.

– ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

*வெயில் ஆரம்பித்து விட்டது. வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறு மொறுப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.

* வடகக்கூழில், வாழைத்தண்டை பொடியாக அரிந்து, அதிலுள்ள நீரைப் பிழிந்து விட்டு, போட்டுக்கிளறி, கிள்ளிக்கிள்ளி வைத்து நன்கு காய்ந்ததும் எண்ணெயில் பொரித்தால் கரகரப்பான வாழைத்தண்டு வடகம் தயார். இது உடலுக்கு மிகவும் நல்லது.

* வடகத்துக்கு கூழ் ரெடி செய்துவிட்டு, அதில் சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து போட்டு நன்கு கிளறி கிள்ளிக்கிள்ளி வைத்து நன்கு காய விட்டு எண்ணெயில் பொரித்து மாலையில் சிற்றுண்டிபோல் சாப்பிடலாம். இதற்கு ‘பக்கோடா வடகம்’ என்று பெயர்.

– சாயிநாதன், சென்னை.

செட்டிநாடு கேரட் குழிப்பணியாரம்..!

பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு. அந்த வகையில் செட்டிநாடு கேரட் குழிப்பணியாரத்தை வீட்டில் இருந்தபடியே எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை :     

இட்லி மாவு – 2 கப்,
வெங்காயம் – 2(நறுக்கியது),
கேரட் – 1 துருவியது,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,  
உளுந்து – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு(நறுக்கியது),
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பிறகு இட்லி மாவுடன் தாளித்த கலவையை சேர்த்து கலக்கவும். இதனுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கடைசியாக, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை ஊற்றி அதன் மேல் கேரட் துருவலை தூவி இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான செட்டிநாடு கேரட் குழிப்பணியாரம் தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறந்து போன பாட்டி வைத்தியம்!!(மருத்துவம்)
Next post கோடைக்கு இதம் தரும் மோர்!! (மகளிர் பக்கம்)