சுவையான கோதுமை உணவுகள்! (மகளிர் பக்கம்)
கோதுமை மாவு என்றால் சப்பாத்தி மற்றும் பூரி செய்வது தான் பெரும்பாலான வீட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. கோதுமை மாவில் சப்பாத்தி மட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பல வித்தியாசமான உணவுகளை செய்யலாம். கோதுமை மாவு மற்றும் ரவையில் சுவையான உணவுகளை வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் மீனாட்சி.
கோதுமை – மசாலா சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – 300 கிராம்,
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 6,
வெங்காயம் – 1 கப் (அரிந்தது),
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 50 கிராம்,
தண்ணீர் – 1 டம்ளர்,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மெல்லிய சப்பாத்திகளாய் இட்டு, எண்ணெய் விட்டு பொன்நிறமாய் சுட்டு எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.
கோதுமை மாவு முறுக்கு
தேவையானவை :
கோதுமை மாவு – 200 கிராம்,
பச்சரிசி மாவு – 200 கிராம்,
உப்பு – தேவைக்கு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
எண்ணெய் – 200 மிலி.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, சீரகம் சேர்த்து அதில் வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும். பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நீர் விட்டு, பிசைந்து, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு முறுக்கு தயார்.
கோதுமை ரவை உப்புமா
தேவையானவை:
வறுத்து கோதுமையை மிக்ஸியில் ரவையாக உடைத்தது – 2 டம்ளர்,
பச்சை மிளகாய் – 6,
வெங்காயம் நறுக்கியது – 1 கப்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
கடுகு,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு – தாளிக்க,
உப்பு – தேவைக்கு,
மோர் – 2 கப் நீர்க்க.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து வதக்கி வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாய் வதக்கவும். பின்பு அதில் மோர் விட்டு கொதித்ததும் உடைத்த கோதுமை ரவை சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவை உப்புமா ரெடி. இதற்கு வெங்காய சட்னி நன்றாக இருக்கும். சுவையும் சத்தும் நிறைந்தது. இது சர்க்கரை நோய்க்கும், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது.
சப்பாத்தி வெஜ் ரோல்
தேவையானவை:
கோதுமை மாவு – 300 கிராம்,
கேரட்,
பீன்ஸ்,
கோஸ்,
வெங்காயத்தாள்,
காலிஃபிளவர்,
வெங்காயம் – தலா 50 கிராம்,
இஞ்சி,
பூண்டு,
பச்சை மிளகாய் பேஸ்ட் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கு,
புதினா,
கொத்தமல்லி – 1/2 கப்,
எண்ணெய் – 50 கிராம்.
செய்முறை:
கோதுமை மாவை உப்பு சேர்த்து, எண்ணெய், தண்ணீர் விட்டு, நன்கு பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்ட் வதக்கி, அத்துடன் வெங்காயம் சேர்க்கவும். பின்பு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, அத்துடன் துருவிய காய்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது கோதுமை மாவில் மெல்லிய சப்பாத்தி இட்டு, இதனை பொன்னிறமாக சுட்டு, அதன் நடுவில் காய்கறி கலவையை வைத்து நன்கு சுருட்டி, Silver Paper-ல் சுருட்டி பிள்ளைகளுக்கு கொடுத்தால் சத்து நிறைந்த சப்பாத்தி ரோல் தயார். தேவைப்பட்டால் சப்பாத்தி மேல் புதினா சட்னி மற்றும் மேயனீஸ் தடவிக் கொடுக்கலாம்.
கோதுமை ரவை வடை
தேவையானவை:
கோதுமை ரவை – 250 கிராம்,
வெங்காயம் – 100 கிராம்,
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 100 கிராம்,
கேரட்,
கோஸ்,
துருவியது – 1 கப்,
பச்சை மிளகாய்,
இஞ்சி,
பூண்டு,
கரம் மசாலா தேவைக்கேற்ப.
சோம்பு 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 200 மிலி.
செய்முறை:
கோதுமை ரவையுடன் வெங்காயம், துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், மசாலாத்தூள், கொத்தமல்லி, சோம்பு, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். இதனை வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சிறு சிறு வடைகளாய் தட்டி, பொன்னிறமாய் எடுக்கவும். தொட்டுக்கொள்ள புதினா சட்னி சுவையாக இருக்கும்.
கோதுமை மாவு – புட்டு
தேவையானவை:
வறுத்த கோதுமை மாவு – 200 கிராம், (நெய்யில்),
தேங்காய்த்துருவல் – 1 மூடி,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
முந்திரி (or) கடலை – 1/2 கப், (வறுத்தது),
உப்பு – 1 சிட்டிகை,
சர்க்கரை பொடித்தது- 1 கப்,
கேசரி பவுடர் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
வறுத்த கோதுமை மாவில் சிட்டிகை உப்பு சேர்த்து, அதில் கேசரி பவுடரை சேர்த்து தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து, பிசிறி ஒரு வெள்ளைத்துணியில் மூட்டை கட்டி, அதனை இட்லி தட்டில் வைத்து 7 நிமிடம் ஆவி கட்டவும். பின்பு அதனை எடுத்து, உதிர்த்து அத்துடன் வறுத்த முந்திரி (or) கடலை, தேங்காய்த்துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்தால் சுவையான கோதுமை மாவு புட்டு ரெடி. இதனை சம்பா ரவையிலும் செய்யலாம்.
கோதுமை மாவு பக்கோடா
தேவையானவை:
கோதுமை மாவு வறுத்தது – 1 டம்ளர்,
வெங்காயம் (நீள வாக்கில் நறுக்கியது) – 1/4 கிலோ,
பச்சை மிளகாய் – 6 (நீளவாக்கில் நறுக்கியது),
கறிவேப்பிலை – 1 கொத்து,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
உப்பு,
டால்டா – தேவைக்கேற்ப,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 200 கிராம்.
செய்முறை:
கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு, டால்டா, சேர்த்து நன்கு பிசிறி வைத்துக்கொள்ளவும். தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பிசிறி வைத்துள்ள பக்கோடா மாவை எடுத்து உதிர்த்து போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையும் சத்தும் நிறைந்த இந்த பக்கோடா வத்தக்குழம்பு மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்றது.
புதினா பூரி
தேவையானவை :
கோதுமை மாவு – 250 கிராம்,
புதினா – 1 கட்டு,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 6,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் 200 மிலி.
செய்முறை :
புதினா, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் இவைகளை நன்கு விழுதாக அரைத்து அதில் உப்பு சேர்த்து, அதனை கோதுமை மாவில் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துகொள்ளவும். இதனை சிறு சிறு பூரிகளாய் இட்டு வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். சுவையான புதினா வாசனையுடன் அருமையான பூரி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.
கோதுமை மாவு தட்டை
தேவையானவை:
வறுத்த கோதுமை மாவு – 250 கிராம்,
சீரகம்,
மிளகு – 1 டீஸ்பூன் (கரகரப்பாய் பொடிக்கவும்),
ஊற வைத்த கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – 200 மிலி.
செய்முறை:
வறுத்த கோதுமையுடன் மேற்கூறிய பொருட்களை சேர்த்து அதில் கொஞ்சமாக எண்ணெய் காய்ச்சி கொட்டி நன்கு பிசையவும். பின்பு அதனை சிறிய சிறிய தட்டைகளாய் பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மிளகு தட்டை தயார். இது மழை காலத்திற்கு ஏற்ற திடீர் நொறுக்குத்தீனி ஆகும்.
ஆலு பூரி
தேவையானவை :
கோதுமை மாவு – 250 கிராம்,
உருளைக்கிழங்கு – 250 கிராம்,
எள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பச்சை மிளகாய் – 6,
வெங்காயம் – 1 (பொடியாக அரிந்தது),
எண்ணெய் – 200 மிலி.
செய்முறை:
மசித்த உருளைக்கிழங்குடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் கோதுமை மாவு, உப்பு, எள் இவைகளை சேர்த்து நன்றாகப் பிசையவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு, சிறு பூரிகளாய் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதில் பச்சையாக நறுக்கி போட்ட வெங்காயம் எண்ணெயில் பொரிந்து மொறு மொறுவென்று சாப்பிடும் போது, தனி சுவை கொடுக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய, பூண்டு காரசாஸ் சுவையாக இருக்கும்.
Average Rating