மகிமை தரும் மஞ்சள் பிள்ளையார்!(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 41 Second

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையாருக்கு அலங்காரம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி அன்று அவரை வழிபட்டால் வேண்டிக்கொள்ளும் வரங்களை மறக்காமல் நமக்குத் தந்து அருள்வார் கணநாதன் என்பது நம்பிக்கை. முழுமுதற் கடவுளான இவரை எந்த விசேஷத்திற்கும் முதலில் மஞ்சளில் பிடித்து வழிபட்ட பிறகுதான் மற்ற காரியங்களை ஆரம்பிப்பது ஐதீகம். எல்லாருடைய செல்லக் கடவுளான விநாயகரை ஈகோ ஃப்ரெண்ட்லி முறையில் மஞ்சளில் நாமே எவ்வாறு வடிவமைத்து பூஜை செய்யலாம் என்று விளக்குகிறார்
சுதா செல்வகுமார்.

தேவையானவை

பூசு மஞ்சள் தூள் – 1 கப்,
மைதா மாவு- ½ கப்,
எலுமிச்சை சாறு- ½ மூடி பிழிந்தது,
சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை- ¼ கப்,
மிளகு- 2 (கண்களுக்கு),
அலங்காரத்திற்கு (நம் விருப்பம்) – குந்தன் கற்கள்,
மணிகள்,
ஜரிகை,
பூநூல்,
பிள்ளையார் குடை.

குறிப்பு:

எலுமிச்சை சாறு, சர்க்கரை சேர்த்து பிசைவதன் நோக்கம் பூஞ்சை எளிதில் வராது, மஞ்சள் தூள் நிறம் கறுத்துப் போகாமலும், விரிசலை தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மாவு உதிரியாக விழாமல் நல்ல கெட்டியாக பிடிக்க மைதா பயன்படுகிறது.

செய்முறை

1 ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா, மஞ்சள் தூள், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

2 சிறு சிறு உருண்டையாக பிரித்து உருட்டிக் கொள்ளவும். அதாவது வயிறு பகுதிக்கு பெரிய உருண்டை, கை, கால் சேர்த்து சிறிய உருண்டை (2+2) நான்கு, முகத்திற்கு ஒன்று, காதிற்கு சீடை  அளவு இரண்டு, கிரீடத்திற்கு கூம்பு இப்படி செய்து கொள்ளவும். இதனால் பிள்ளையார் செய்வது இன்னும் சுலபமாகிறது.

3 ஏதாவது ஒரு இலை. வாழை இலை, வெற்றிலை அல்லது பீடம்/பித்தளை தட்டு எதிலாவது வயிற்று பகுதிக்காக உருட்டிய உருண்டையை எடுத்து வைக்கவும். உருண்டையின் மத்தியில் ஒரு சிறு துளை விரலால் போடவும். அதுவே பிள்ளையார் தொப்புள்.

4 கால் பகுதிக்கு 2 உருண்டையை எடுத்து விரல் மாதிரி உருளையாக உருட்டி நுனி பகுதியில் அழுத்தம் தரவும். இது பாதம். இவை இரண்டையும் வயிற்றின் அடிப்பகுதி வலது, இடது புறத்தில் வைத்து அழுத்தி விடவும்.இப்பொழுது பிள்ளையாருக்கு வயிறு, கால் பகுதி தயார்.

5 காலின் மேல் வேஷ்டி செய்ய சிறிது பிசைந்த மஞ்சள் தூளை எடுத்து சதுரமாக பரப்பி நடுவில் வெட்டி வலது கால் மேல் ஒரு பகுதி, இடது கால் மேல் ஒரு பகுதி வைக்கவும்.

6 வலது கை, இது கைக்கு செய்து வைத்த இரு மஞ்சள் உருண்டைகளை எடுத்து கால் செய்த மாதிரி ஆனால் கொஞ்சம் ஒல்லியாக விரல் மாதிரி செய்து நுனியில் அழுத்தம் கொடுத்து ஆசிர்வாதம் செய்வது மாதிரி வலது கையும், கொழுக்கட்டை/மோதகம் பிடித்துக் கொள்வது மாதிரி இடது கையும் ஒட்டவும். அதாவது வயிறு பகுதியின் மேற்புறம் மற்றும் காலிற்கு மேல் இதை செய்ய வேண்டும்.

7 முகத்திற்கு உருட்டி வைத்துள்ள மஞ்சள் உருண்டையை எடுத்து கீழ்புறம் துதிக்கை, மேற்புறம் நெற்றி மாதிரி வடிவம் கொடுக்கவும். பிள்ளையார் ஃப்ரெண்ட்லி (Friendly) கடவுள் நாம் எப்படி செய்தாலும் ஏற்றுக் கொள்வார்.

8 பிறகு காது செய்யவும். இரு உருண்டைகளையும் தனித் தனியே எடுத்து விரலால் அழுத்தம் கொடுத்து வலது, இடது நெற்றியின் இரு புறமும் ஒட்டவும்.

9 கிரீடத்திற்கு கூம்பு மாதிரி செய்து ஒட்டவும். தந்தம், வலது, இடது புறம் சிறு துண்டுகள் ஒட்டவும். வலது புறத்தில் உடைந்த மாதிரி சிறிய தந்தம் ஒட்டணும். பூநூல் போடவும். கண்களுக்கு மிளகு ஒட்டவும். திருநீறு பட்டை பேப்பரில் வெட்டி ஒட்டலாம். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைக்கவும்.

நம் விருப்பப்படி குந்தன் கற்கள், மணிகள், ஜரிகை ஒட்டி அலங்கரிக்கலாம். வேஷ்டிக்கு ஜரிகை ஒட்டவும். கை, கால்களுக்கு விரல் மாதிரி தெரிய சிறிய கோடு மாதிரி எதிலாவது அழுத்தம் தந்து வரையவும். மோதகம், தந்தத்திற்கு வெள்ளை வண்ணம் கூட அடிக்கலாம். பின்புறம் சிறிய குடை சொருகவும். இப்படி நம் விருப்பப்படி அலங்கரித்துக் கொண்டே போகலாம்.

குறிப்பு: இது மஞ்சள் தூள் என்பதால் செய்யும்போது விரிசல்விடும். அப்பொழுது தண்ணீர் தொட்டு அதன் மீது தடவி ஸ்மூத் செய்து கொள்ளலாம். சாமி கும்பிட்டு முடித்தபின் இந்த பிள்ளையாரை தண்ணீரில் கரைப்பது மிகவும் சுலபம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! (அவ்வப்போது கிளாமர்)
Next post கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)