வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)
வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட வாழ்வியல் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது? அதிலும் அவசர அவசரமாக இயங்கிவரும் மனிதர்கள், இன்றைக்கு வலி பற்றிய போதிய விழிப்புணர்வுடன்தான் இருக்கிறார்களா? அதிலும் வலியின் காரணம் கண்டறிந்து அதனை சீர் செய்யாமல் வலியை குறைக்க மட்டுமே உதவும் பல வழிகளை பின்பற்றுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? வலி ஏன் வருகிறது? அதற்கு எத்தகைய தீர்வுகள் பலன் தரும்? போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது மிக அவசியம். அதனை விரிவாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
வலியும், சில புரிதலும்…
கழுத்து வலி, முதுகு வலி, கால் மூட்டு வலி, தோள் பட்டை வலி என நம்மில் அனைவருக்கும் குறைந்தது ஒரு வலியாவது வந்திருக்கும். எப்படி தொடுதல் என்பது ஓர் உணர்வோ அதுபோல வலியும் ஓர் உணர்வுதான். முட்களினால் நம் கையில் கிழித்துக் கொண்டால் அங்கு காயம் ஏற்பட்டு வலி உண்டாகும். வலி என்பது ஓர் அறிகுறி. இதில் வலி ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது முட்களும், கிழிந்த நம் தோலும் தான். இந்தக் கருத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கழுத்தில் வலி ஏற்படுவது ஓர் அறிகுறி தான். அது எதனால் ஏற்படுகிறது, நம் உடலில் உள்ள உறுப்புகள் காரணமாகவா அல்லது வெளியே உள்ள வேலை பளு போன்ற சூழல் காரணிகளா, அதற்கு எத்தகைய தீர்வு முறையைக் கொண்டு இந்த காரணங்களை சீர் செய்ய வேண்டும். மேலும் வராமல் தடுக்க என்னென்ன வழிகளைத் தொடர வேண்டும் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது அனைத்து வலிகளுக்கும் பொருந்தும்.
வலியின் தன்மை…
வலியில் பல வகைகள் உண்டு. இயற்கையாகவே தோன்றும் உதிரப்போக்கு வலி, பேறுகால வலி முதல் நோய் மற்றும் கோளாறுகளால் தோன்றும் உடல் வலி வரை வலிகளில் பல வேறுபாடுகள் உண்டு. அதைப்போலவே வலியின் தாக்கம், அளவு, தன்மை என ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக இருக்கும். உதாரணமாக காது வலியின் தன்மை வேறு, அயற்சியினால் வரும் தசை வலியின் தன்மை வேறுவிதமாக இருக்கும்.
வலிக்கு வழியாகும் காரணங்கள்
* இன்று இளம் வயதினரிடம் 60 சதவிகிதம் முதுகு மற்றும் கழுத்து வலிக்கு காரணமாக இருப்பது தசைகள் தான்.
* நம் உடலில் உள்ள தசைகள் சமச்சீரான நிலையில் இல்லாமல் ஒரு பக்கம் தளர்ந்தும், மறுபக்கம் இருக்கமாகவும் இருப்பது.
* தசைகள் சமச்சீராய் இல்லையெனில் தசைகளில் வலி ஏற்படும்.
* மேலும் சமச்சீரின்மையால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்படும்போது மூட்டு வலியும் அதிகமாகும்.
* தசைகள் சமச்சீராக இல்லாததற்கு காரணம் தசைகள் வலிமையாக இல்லாமல் இருப்பது.
* தசைகள் வலிமையுடன் இருக்கும்போது அது இருபுறமும் தூண் போல் மூட்டுகளை காத்து உடல் இயக்கங்களை சீராய் மேற்கொள்ள உதவும்.
ஆபத்துக் காரணிகள்
இன்றைய இயந்திர உலகில் பல சுகாதார சிக்கல்கள் வாழ்வியல் முறை மாற்றத்தின் காரணமாகவே வருகிறது. அதில் வலிகளுக்கு, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, அதிக நேரம் அமர்ந்தோ, நின்றோ வேலை செய்வது போன்றவற்றை மிக முக்கியக் காரணமாக சொல்லலாம்.
எச்சரிக்கை மணி அடிக்கும் தவறுகள்
* போதிய மருத்துவர் பரிந்துரையின்றி நாமாகவே மருந்து கடைகளில் வலி நிவாரணி மருந்துகள் வாங்கி உட்கொள்வது.
* எந்தவித வலி ஏற்பட்டாலும் மருத்துவர் ஏற்கனவே சொன்ன வலி நிவாரணி மருந்துகளையே அதற்கும் பயன்படுத்துவது.
* தொடர்ந்து மருத்துவர் ஆலோசனையின்றி நாமாகவே மருந்துகள் நீண்ட நாட்களுக்கு உட்கொள்வது.
* நாமாகவே இயன்முறை மருத்துவரின் போதிய ஆலோசனையின்றி பயிற்சிகளை மேற்கொள்வது. குறிப்பாக யுடியூப் போன்றவற்றைப் பார்த்து பயிற்சிகளை தவறான முறையில் செய்வது.
தீர்வு தரும் இயன்முறை மருத்துவம்…
* வலி நிவாரணி மருந்துகளால் உடல் உள் உறுப்புகளில் பாதிப்பு மற்றும் பக்கவிளைவுகள் தோன்றும். மேலும் வலி ஏற்படுவதற்கான காரணத்தை சீர் செய்யாமல் வலியை மட்டும் குறைப்பதினால் எந்த பயனும் இல்லை. அதனால் பிரச்சனை தசைகளில் உள்ளதா, இல்லை வேறு ஏதேனும் உறுப்புகளில் உள்ளதா எனத் தகுந்த இயன்முறை மருத்துவர் மூலம் கண்டறிந்து அதற்கு ஏற்ப தீர்வு வழங்க வேண்டும்.
* இயன்முறை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் வேறு சில பிரத்யேக நுட்பங்கள் வலியை குறைப்பதற்கு உதவுக்கூடும். மேலும் அவை எந்த விதமான பக்கவிளைவுகளும் அற்றவை என்பதால் அனைவருக்கும் எளிதில் பரிந்துரைக்கலாம். அத்துடன், மகப்பேறு காலங்களில் ஏற்படும் முதுகுவலி முதல் கொண்டு கால் மூட்டுவலி, தோள்பட்டை வலி என யாவற்றுக்கும் மிக எளிதில் தீர்வு காணலாம்.
* மீண்டும் வலி வராமல் இருப்பதற்கு தசைகளை வலிமை செய்வதற்கான பயிற்சிகளும், சில தசை தளர்வுப் பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் தசைகள் சமநிலையில் இருக்கக்கூடும். இதனால் மீண்டும் வலி வருவதற்கு வழி இல்லை. எனவே ஒருவர் சாதாரண வலிதானே என வலியை அலட்சியமாக விட்டுவிடாமல் தகுந்த இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப் பெற்று தீர்வு பெற வேண்டியது மிக அவசியம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
Average Rating