சத்தான பாகு உருண்டைகள்!! (மகளிர் பக்கம்)
குழந்தைகளுக்கு பள்ளி திறந்தாச்சு. ஆனால் முழுநேரமாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் இவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய உருண்டை வகைகள் குறித்த சமையல் குறிப்பினை தோழி வாசகிகளுக்காக அளித்துள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி. அனைத்தும் வெள்ளப்பாகு கொண்டு செய்வதால் இரும்புச் சத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இவை அனைத்தும் பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை கொண்டு செய்யப்பட்டு இருப்பதால் குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.
அரிசிப் பொரி உருண்டை
தேவையானவை :
அரிசிப் பொரி- 3 கப்,
வெல்லம்(பொடித்தது)- 1 கப்,
ஏலப்பொடி- 1 ஸ்பூன்,
சுக்குப் பொடி- ½ ஸ்பூன்.
செய்முறை:
முதலில் அரிசிப் பொரியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் 1 கப் வெல்லத்துக்கு ¼ கப் நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி நன்கு கெட்டியாக உருட்டுப் பதம் வருமாறு காய்ச்சி ஏலம், சுக்கு சேர்த்து பொரியில் ஊற்றி உருண்டைகளாக உருட்ட வேண்டும். சூட்டில் பிடிப்பதற்கு கையில் அரிசி மாவு அல்லது நெய் தடவிக் கொண்டு பிடிக்க வேண்டும். முதலில் சூட்டில் சுமாராகப் பிடித்து விட்டு ஆறிய பின் அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே அரிசிப் பொரி உருண்டை.
அவல் பொரி உருண்டை
தேவையானவை :
அவல் பொரி- 3 கப்,
வெல்லத் தூள்- 1 கப்,
ஏலப்பொடி,
சுக்குப் பொடி- தலா 1 ஸ்பூன்,
தேங்காய்ப் பல்- 6 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் பொரியை மண் போக சலித்து எடுக்க வேண்டும். பிறகு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் பற்களை சிவக்க வதக்க வேண்டும். (எள் சேர்க்க விரும்புபவர்கள் 2 ஸ்பூன் எள்ளை வெறும் வாணலியில் பட பட வென்று பொரிய வறுத்து பாகில் சேர்த்துக் கொள்ளலாம்). பிறகு வெல்லத்தில் ¼ கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிப் பாகு செய்ய வேண்டும். பாகில் தேங்காய் பற்கள், எள் சேர்த்து உருட்டுப் பதம் வந்ததும் இறக்கி ஏலம், சுக்கு சேர்த்து தட்டிலுள்ள பொரியில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கையில் அரிசிமாவு அல்லது நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.
நெல் பொரி உருண்டை
தேவையானவை :
நெல் பொரி- 4 கப்,
பொடித்த வெல்லம்- ¾ கப்,
கறுப்பு எள்- 2 ஸ்பூன்.
தேங்காய் பல்- 4 ஸ்பூன்,
சுக்குப் பொடி,
ஏலப்பொடி- தலா ½ ஸ்பூன்.
செய்முறை:
நெல் பொரியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேறு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி பின் பாகு காய்ச்சவும். பாகில் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் பற்களை வறுத்து இரண்டையும் பாகில் சேர்க்கவும். பாகு உருட்டுப் பதம் வந்ததும், சிறிது சிறிதாக பொரியில் ஊற்றி கரண்டியால் கலந்து விடவும். கையில் நெய் அல்லது அரிசி மாவு தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டவும்.
பொட்டுக்கடலை உருண்டை
தேவையானவை :
பொட்டுக்கடலை- 1 கப்,
பொடித்த வெல்லம்- ¾ கப்,
ஏலப்பொடி,
சுக்குப் பொடி- 1 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் பொட்டுக்கடலையை (உடைத்த கடலை) ஒரு பாத்திரத்தில் போடவும். வேறு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது நீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகில் ஏலம், சுக்குப் பொடி சேர்த்து நன்கு உருட்டுப் பதம் வரும் வரை காய்ச்சவும். பாகு காய்ந்ததும் பொட்டுக் கடலையில் ஊற்றி கரண்டியால் கலந்து விடவும். கையில் அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு உருட்டவும்.
வேர்க்கடலை உருண்டை
தேவையானவை :
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கப்,
பொடி செய்த வெல்லம்- ¾ கப்,
தண்ணீர்- ¼ கப்,
ஏலம்,
சுக்குப் பொடி
தேவைப்பட்டால்- தலா ½ ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒரு தட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். உருட்டுப்பதம் வந்ததும் கடலையில் ஊற்றி கரண்டியால் கிளறி நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.
முந்திரிப் பருப்பு உருண்டை
தேவையானவை :
முந்திரிப் பருப்பு- 1 கப்,
பொடித்த வெல்லம்- 1 கப்,
நெய்- 2 ஸ்பூன்,
ஏலப்பொடி- 1 ஸ்பூன்.
செய்முறை:
முந்திரியை 2 ஸ்பூன் நெய்யில் சற்று வறுத்து, உருட்டுப் பதத்தில் வெல்லப் பாகு வைத்து, ஏலம் சேர்த்து பாகில் முந்திரியைப் போட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ைகயில் அரிசிமாவு தொட்டுக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். முதலில் லேசாக உருட்டி வைத்து விட்டு சற்று ஆறியதும் இறுக்கி அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே முந்திரிப் பருப்பு உருண்டை.
மனோகரம் உருண்டை
தேவையானவை :
உடைத்த தேன்குழல்- 2 கப்,
பொடித்த வெல்லம்- 1 கப்,
ஏலம்,
சுக்குப்பொடி- தலா 1 ஸ்பூன்,
தண்ணீர்- ¼ கப்.
செய்முறை:
முதலில் தேன்குழல் செய்து அதை உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தில் ¼ கப் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி பாகாக காய்ச்ச வேண்டும். உருட்டுப் பதம் வந்ததும் ஏலம், சுக்குப் பொடி சேர்த்து தேன்குழலில் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு, கையில் நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்க வேண்டும். முதலில் சூட்டுடன் லேசாகப் பிடித்து விட்டு, பிறகு நன்கு அழுத்திப் பிடிக்க வேண்டும். (சிலர் தேங்காய் பற்களை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்துப் பாகில் சேர்ப்பதுண்டு. இது அவரவர் விருப்பம்).
பொரி விளங்காய் உருண்டை
தேவையானவை:
களைந்து நன்கு காயவைத்த அரிசி- 2 கப்,
வெல்லம்- 1 கப்,
எள்- 4 ஸ்பூன்,
பொட்டுக் கடலை,
வேர்க்கடலை- தலா கைப்பிடி,
பாசிப்பருப்பு- ¼ கப்,
தேங்காய் பல்- ½ கப்,
ஏலப்பொடி- 2 ஸ்பூன்,
சுக்குப் பொடி- 1 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுக்க வேண்டும். பின் அதே வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்க வேண்டும். பிறகு எள்ளைப் போட்டு படபடவென வறுத்தும், பொட்டுக் கடலையை லேசாக வறுத்து எடுத்து, அதே போல் வேர்க்கடலையையும் வறுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். அரிசியை நன்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாசிப் பருப்பையும் அதே மாதிரி நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிப் பாகு காய்ச்ச வேண்டும். தக்காளிப் பதத்தில் பாகு காய்ச்ச வேண்டும். தேங்காய் பற்களை சிறிது நெய்யில் வறுத்து, பாக்கிப் பொருட்களையும் சேர்த்து பாகில் போட வேண்டும். மாவில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டை பிடிக்க வேண்டும். சூட்டில் சுமாராகப் பிடித்து விட்டு, பின் நன்கு அழுத்தி கெட்டியாகப் பிடிக்க வேண்டும். நன்கு ஆறியதும் உருண்டை கெட்டியாகி விடும். எனவே இதை கெட்டி உருண்டை எனவும் சொல்வதுண்டு.
எள்ளுருண்டை
தேவையானவை:
எள்- 1 கப்,
பொடித்த வெல்லம்- ¾ கப்,
நீர்- ¼ கப்,
ஏலப்பொடி- 1 டீஸ்பூன்.
செய்முறை:
வெள்ளை அல்லது கறுப்பு எள்ளை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி களைந்து வடிகட்டி ஈரம் காய்ந்ததும் வெறும் வாணலியில் போட்டு படபடவென வெடிக்கும் வரை காத்திருந்து (கருகிவிடாமல்) எடுத்து தட்டில் கொட்டவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். ஏலப்பொடி சேர்த்து பாகில் 1 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். பாகு நன்கு காய்ந்ததும், எள்ளில் சிறிது சிறிதாக ஊற்றி கரண்டி காம்பால் கிளறி கையில் அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். எள்ளுருண்டை தயார்.
Average Rating