குழந்தைப்பேற்றுக்கு பின் பெண்களுக்கு மன அழுத்தம் வருமா?!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 50 Second

எனது குழந்தைக்கு நான் ஒரு நல்ல தாயாக இருக்க முடியவில்லை. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு நல்ல பெண்ணாகவும் என்னால் இருக்க முடியவில்லை..! – டாக்டர் சௌந்தர்யா

டா க்டர் சௌந்தர்யா நீரஜ்..! கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி. பெங்களூரில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றில் அவர் அறுவை சிகிச்சை நிபுணர். இவரது கணவரும் மருத்துவரே. முப்பது வயதுகூட ஆகாத சௌந்தர்யா புத்திசாலிப் பெண். எல்லாவற்றுக்கும் மேலாக ஆறு மாதம் முன்புதான் ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். ஆனால் கடந்த வாரம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கைகளில் மருத்துவ படிப்பு, மனநிறைவான பணி, அந்தஸ்து நிறைந்த குடும்பம், அன்பான கணவன், அழகான குழந்தை எல்லாம் இருந்தும் ஏன் டாக்டர் சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டார்?  என்ற கேள்விக்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சொல்லும் காரணம், சௌந்தர்யாவுக்கு ஏற்பட்டது பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு வரக்கூடிய, போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் (postpartum depression) எனும் பின்பேறுகால மன அழுத்தம் என்று.

இது என்ன புதிதாய் இருக்கிறது.?

புத்தம்புது உயிர் ஒன்று தன்னுள்ளே கருவாகி, உருவாகி, உயிராகிப் பிறப்பது பெண்ணுக்கு மகிழ்ச்சியைத் தராமல் மன அழுத்தம் தருமா? என்ற நமது கேள்விக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது மருத்துவ அறிவியல். குழந்தைப் பிரசவத்துடன் தொடர்புடைய போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் என்ற பின்பேறுகால மனஅழுத்தம் குறித்து நாம் தெரிந்துகொள்ளும் முன் கர்ப்பகால ஹார்மோன்கள் குறித்து தெரிந்து கொள்வதும் இங்கே அவசியம்.ஒரு பெண் கருத்தரித்த நாளிலிருந்து, கருவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் ஹார்மோன்களான, ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ப்ரொஜஸ்டிரான்கள் கர்ப்பகாலம் முழுவதும் பெண்ணின் உடலில் தொடர்ந்து சுரந்து, கிட்டத்தட்ட 10 மடங்குகள் அதிகமாகி, கருத்தரிப்புக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் கூடுதலாக சுரக்கின்றன.

கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையை விரிவடையச் செய்து, கருவை ஒன்பது மாத காலம் பிரச்சினைகளின்றி சுமக்க உதவும் இந்த ஹார்மோன்கள்தான், பெண்ணின் மார்பகங்களை பாலூட்டுவதற்கும் தயார்படுத்தி, இடுப்பு தசைகளையும் வலுவாக்குகிறது. அதேசமயம் கருத்தரித்த பெண்ணின் மூளையில் உள்ள செரடோனின், டோப்பமைன், ஆக்சிடோசின் போன்ற ஹேப்பி ஹார்மோன்களையும் ஊக்குவித்து, கருவுற்ற பெண்ணின் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கவும் பெரிதும் துணை நிற்கின்றன.

பிரசவமான அன்றே இந்த ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ப்ரொஜஸ்டிரான்கள் சுரப்பு அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே பத்து மடங்கு சடசடவென குறைந்து, கர்ப்பகாலத்திற்கு முன்பு இருந்த பழைய நிலையை அடைந்து விடுகிறது. ஏற்கனவே பிரசவ வலியுடன் இருக்கும் தாய்க்கு, ஹார்மோன்கள் உற்பத்தியில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், கர்ப்பகால ஹேப்பி ஹார்மோன்களின் பணியையும் பாதிக்க, பெண்ணின் மனதில் மகிழ்ச்சி குறைந்து மன அழுத்தம் கூடுகிறது.

அதே நேரம், பிறந்த குழந்தையின் பசிஅழுகையால் ஏற்படும் பெண்ணின் தூக்கத்தில் உருவாகும் மாறுபாடுகள் மற்றும் பசி மறந்த நிலை பெண்ணுக்கு ஒரு மன அழுத்த நிலையை தற்காலிகமாக உருவாக்குகிறது.  இதை ‘பேபி ப்ளூஸ்’ என்று குறிப்பிடும் மருத்துவ அறிவியல், திடீர் கோபம், திடீர் அழுகை, துக்கம், படபடப்பு, சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை போன்ற எல்லாமே இவற்றின் அறிகுறிகளே என்பதுடன் இந்த பேபி ப்ளூஸ் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களில் பத்தில் எட்டுப் பேரை (80%) பாதிக்கிறது என்றும் கூறுகிறது. ஆனால், இவையனைத்துமே தற்காலிகமானதுதான் என்பதுடன், பிரசவித்த 10 நாட்களுக்குள் குறையத் தொடங்கிவிடும் என்பதால், பேபி ப்ளூஸுக்கு பிரத்யேக சிகிச்சை ஒன்றும் தேவையில்லை என்கிறது.

ஆனால் இவர்களில் 10 முதல் 15 சதவிகிதம் பெண்களுக்கு மட்டும், இந்த எதிர்மறை எண்ணங்களும், பேபி ப்ளூஸ் அடையாளங்களும் குறையாமல் மாதங்கள் கணக்கில் நீள்வதுடன், இவர்களுக்கு மன அழுத்தத்துடன் அதீத கவலை, அதீத சோர்வு, ஆர்வமின்மை, கவனமின்மை, சந்தேக மனப்பான்மை, குழந்தையிடமிருந்து விலகி இருத்தல், தனிமையை நாடுதல், தற்கொலை எண்ணங்கள் போன்றவை வலிமையாகி, மனவியல் நோயாக, போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனாக உருவெடுப்பதுடன், எனது குழந்தைக்கு நான் ஒரு நல்ல தாயாக இல்லை, குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு நல்ல பெண்ணாகவும் இல்லை என எண்ணத் துவங்குகிறார்கள்.

போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் எனும் பேறுகால மன அழுத்தம், ப்ளூ பேபீஸ் போல தானாகவே குணமடைவதில்லை என்பதால், இதற்கு மனவியல் மருத்துவரின் உதவியும், தொடர் மனவியல் ஆலோசனைகளும், மருந்துகளும் அவசியம் தேவைப்டுகின்றன. பொதுவாக, பிரசவித்த பெண்களுக்கு, குழந்தை பிறந்த 4 முதல் 5 வாரங்களில் உண்டாகும் இந்த போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனுக்கு முன்காரணமாக இருப்பது அனைத்தும் கர்ப்பம் குறித்த பய உணர்வுகள் தான்.

அடுத்தடுத்த கருச்சிதைவு, கர்ப்பகாலத்தில் தொடர்ந்து சிகிச்சைகள் தேவைப்படும் நிலைகள், இரட்டைக் கர்ப்பம், செயற்கை முறை கருத்தரிப்பு, முந்தைய கர்ப்பத்தில் மனநிலை பாதிப்பு போன்றவை பிரசவத்திற்கு முன்னரே மன அழுத்தங்களைத் ஏற்படுத்தி, அதுவே போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனுக்கும் காரணமாகிறது.

ஆனால், பேபி ப்ளூஸ், போஸ்ட் பார்ட்டம்

டிப்ரெஷனைத் தாண்டி, இன்னுமோர் அபாயகரமான நிலை உள்ளது. ‘போஸ்ட் பார்ட்டம் சைக்கோஸில்’  (Postpartum Psychosis) என அழைக்கப்படும் இந்த மனவியல் நோய், பிள்ளை பெறுபவர்களில் ஆயிரத்தில் ஓரிருவருக்கு மட்டுமே ஏற்படும் என்றாலும், மேலே கூறிய அறிகுறிகள்  தோன்றினாலும் இது பிறந்த குழந்தையின் உயிருக்கே தீங்கு விளைவிக்கும் அளவிற்கு தாய்மார்களைத் தள்ளும் என்பதால், இந்த சைக்கோஸில் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் தாமதிக்காமல் சிகிச்சைகளை ஆரம்பிப்பது அவசியம்.

ப்ளூஸ், டிப்ரெஷன், சைக்கோஸில் என தாயின் நிலை எதுவாக இருந்தாலும், அவரை குணப்படுத்த பெண்ணின் கணவர் மற்றும் உடனிருப்பவர்களின் அனுசரணையான அணுகுமுறை மட்டுமே போதும் என்பதை உணர்வதுடன், இவர்களுக்கு உணவுமுறை மாற்றங்கள், தியானம், யோகா, இசை அல்லது அரோமா தெரபி போன்றவற்றில் ஈடுபடுத்துவது துரித முன்னேற்றத்தைக்  கொடுக்கும்.

பெண்களின் மறக்க முடியாத அனுபவமான பிள்ளைப்பேறு, டிப்ரெஷன்களாக மாறிவிடக் கூடாது என்றால், கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போது அந்தப் பெண்ணின் மீது காட்டப்படும் அக்கறை, பாசம், பராமரிப்பு போன்றவை பேறுகாலத்திற்குப் பின்பும் கொடுக்க வேண்டியது அவசியம். இதை குடும்பத்தினர் முதலில் உணர வேண்டும். அதேசமயம் பெண்ணின் கர்ப்பகாலத்தையும், பேறுகாலத்தையும் நோயுற்ற நிலை போலக் கருதாமல், இயல்பாக ஏற்று நடப்பது பெண்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்காது.

கருத்தரித்த பெண்கள் இதை உணர்ந்தாலே மகப்பேறுக்குப் பின் பெண்ணிற்கு பிரச்னைகள் இருக்காது.ஆம். பிரசவித்த பெண்கள் தங்களது கைகளில் குழந்தையை ஏந்தும்போது கூடவே நம்பிக்கையையும் சேர்த்து ஏந்த, அனைவரும் உதவினாலே மீண்டும் இதுபோன்ற இன்னொரு இழப்பை நாம் தவிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு!
Next post உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!!! (அவ்வப்போது கிளாமர்)