முதல்வரின் பிறந்தநாள் கேக்கை உருவாக்கியவர் இவர்தான்! (மகளிர் பக்கம்)
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு, மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அனிலா கோபால். மும்பையில் படிப்பை முடித்து, பூனாவிலிருக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், பெங்களூரில் சில வருடங்கள் வேலை செய்தார். பின் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு இப்போது சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.
சிறுவயதிலிருந்தே சமையல் கலையில் ஆர்வம் கொண்ட இவர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் போட்டிகள், நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்து வளர்ந்துள்ளார். சமையல் செய்வதை தாண்டி புதிய உணவுகளை ருசிப்பதிலும் இவருக்கு ஆர்வமிருந்துள்ளது. ஆனால் அதுவே தன்னுடைய முழு நேர தொழிலாக மாறும் என அனிலா நினைத்ததே இல்லை. ‘‘ஒரு முறை தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அதில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட டிசைனர் கேக்குகளைப் பார்த்தேன். அப்போதுதான் கேக்கில் இப்படி அழகான கலை அலங்காரம் செய்யலாம் என தெரிய வந்தது.
பின் தொடர்ந்து இது போன்ற சமையல் நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்து, நானே வீட்டிலும் அதை செய்ய தொடங்கினேன். முதலில் சாதாரண கேக்குகளை செய்ய ஆரம்பித்து, பின் பேக்கிங் புத்தகங்களை வாங்கி அதிலிருக்கும் புதிய வெரைட்டி கேக்குகளை செய்ய ஆரம்பித்தேன். வீட்டிலிருப்பவர்களுக்கும், என்னுடன் வேலை செய்தவர்களுக்கும் கேக் செய்து கொடுத்து வந்தேன். கேக் அலங்காரங்கள் மற்றும் டிசைன்களை கற்க மட்டும் சில வகுப்புகளுக்குச் சென்றேன். திருமணத்திற்குப் பின், என் ஐ.டி வேலையைவிட்டு, இப்போது முழு நேர பேக்கராக இருக்கிறேன். 2018ல் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) சான்றிதழை பெற்றதும், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை Annie’s Cake and Cookies (அணீஸ் கேக் அண்ட் குக்கீஸ்) எனும் அதிகாரப்பூர்வ பிஸினஸ் பக்கமாக மாற்றினேன்.
எந்தவொரு மகிழ்ச்சியான தருணத்திற்கும் இப்போது கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் உருவாகி இருக்கிறது. பிறந்தநாள் மட்டுமில்லாமல் திருமணம், புதுமனை புகுவிழா என அனைத்து விசேஷங்களுக்கும் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. அதனால் வாடிக்கையாளர்கள் எந்த நிகழ்ச்சிக்கு கேக் கேட்டாலும், அதை அழகாக வடிவமைத்து கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். கேக் வெரைட்டிகளை சென்னையிலிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வருகிறேன்.
மற்றபடி நான் தயாரிக்கும் குக்கீஸ் மற்றும் ப்ளம் கேக்குகளை இந்தியா முழுவதுமே கொடுக்கிறேன்’’ என்றவரின் சிக்னேச்சர் கேக் வெரைட்டிகள் வெனிலா, சாக்லேட், பட்டர்ஸ்காட்ச், ராஸ்பெரி போன்ற க்ளாசிக் கேக் ஃப்ளேவர்களாம். அனைவருக்கும் பழக்கமான கேக் ஃப்ளேவரில், வெரைட்டியான கஸ்டமைஸ்ட் டிசைனர் கேக் செய்து கொடுப்பதுதான் இவருடைய ட்ரேட்மார்க். அந்த டிசைனர் கேக்குகளுக்காகவே இவருக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
அவர்களது வீட்டில் எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், அனிலாவின் அணீஸ் கேக் தான் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. ‘‘அப்படி என் வாடிக்கையாளர்களில் ஒருவர் தான் தமிழக அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவும், அவர்களது மகள் காவியா பாலாஜியும். நான் ஏற்கனவே அவர்களது அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் கேக் செய்து கொடுத்துள்ளேன்.
அவர்கள் இருவரும் சேர்ந்துதான், தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் கேக் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டனர். இந்த கேக்கிற்கான ஐடியாவையும், டிசைனையும் வழங்கியவர்களும் அவர்கள் தான். நான் அவர்களது சிந்தனையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறேன்.
முதலில் டாக்டர் பூங்கோதை, முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு ஏதாவது சுவாரஸ்யமான கேக் வழங்க வேண்டும் என நினைத்தார். அப்போது அவரது மகள் காவியா பாலாஜிதான் என் பெயரை அவரது தாய்க்கு பரிந்துரைத்தார்’’ என்றவர் கேக்கின் அலங்காரம் மற்றும் அதன் விவரங்களைப் பகிர்ந்தார்.
கேக்கின் அடித்தளத்தில் முதலமைச்சரின் மாணவப் பருவத்தில் சமூக ஆர்வலராக இருந்து இன்று முக்கிய தலைவராக உயர்ந்திருக்கும் அந்தப் பயணத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். இரண்டாவது லேயரில் உதய சூரியனின் சின்னமும், சின்னத்துடன் சேர்ந்து வேலை செய்யும் மருத்துவர்கள், கல்வியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கலைஞர்கள் என உழைக்கும் மக்களை கவுரவிக்கும் படங்கள் இருக்கும்.
மூன்றாவது லேயரில், சமூக-ஜனநாயக, சமூக நீதிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி இடம்பெற்றுள்ளது. இதை அனைத்தையும் பிரதிபலித்து கழகத்தில் தலைவராக இருக்கும் முதல்வர் அவர்களின் உருவப் பொம்மை கேக்கின் உச்சியில் இடம்பெற்றிருந்தது. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் எப்போதுமே ஒரு பெண் இருக்கிறார் என்பதற்காக முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் உருவ பொம்மையும் வைத்திருந்தேன்.
இந்த கேக்கை உருவாக்க பல நாட்கள் ஹோம் வொர்க் தேவைப்பட்டது. முதல்வர் மற்றும் அவரது மனைவியின் உருவ பொம்மைகளை தத்ரூபமாக கொண்டு வர ரொம்பவே சிரமப்பட்டேன். கேக்கை தயாரித்து முடித்ததும் அதை நானே நேரில் சென்று முதல்வரின் இல்லத்தில் டெலிவரி செய்தேன். எனக்காக பூங்கோதை மேடம் ஸ்பெஷல் அனுமதி பெற்றுக் கொடுத்தார். உற்சாகம் கலந்த ஒரு பதட்டத்தில் தான் அங்கு சென்று வந்தேன்.
யாராவது தெரியாமல் கேக்கை சேதப்படுத்திவிட்டால் என்ன செய்வது என்று பதட்டமாகவே இருந்தது. இது பத்திரமாக இருக்குமா என பல சந்தேகங்கள் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் மறுநாள் காலை நாளிதழ்கள் மற்றும் நியூஸ் சேனல்களில் முதல்வரும் அவரது குடும்பத்தினரும் என்னுடைய கேக் பக்கத்தில் நின்றிருப்பதை பார்த்து துள்ளிக் குதித்தேன்’’ எனப் பூரிக்கிறார் அனிலா.
இவர் டிசைனர் கேக்குகளுடன் ஸ்கல்ப்டெட் கேக்குகளையும் செய்கிறார். பார்ப்பதற்கு தத்ரூபமான சிற்பங்கள் போலவே இருக்கும் இந்த ஸ்கல்ப்டெட் கேக்குகளை அப்படியே சாப்பிடவும் செய்யலாம். “என்னுடைய தனிப்பட்ட க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக்கொள்ளவே ஸ்கல்ப்டெட் கேக் செய்ய ஆரம்பித்தேன். அப்போது எனக்கு முதலில் செய்து பார்க்க தோன்றியது புத்தரின் உருவம் தான். நான் ஒரு புத்தரின் ஓவியத்தை பார்த்த போது தான் அதை கேக்காக வடிவமைக்கலாம்னு எண்ணம் தோன்றியது.
என்னுடைய இந்த கேக்கிற்கு நான் வைத்த பெயர் பட்டர்க்ரீம் புத்தா. இதைத்தாண்டி திருமணங்களுக்கென மணமக்களின் வாழ்க்கையை அல்லது அவர்களது கொள்கைகளை பிரதிபலிக்கும் டிசைன் கொண்ட ஸ்பெஷல் லேயர் கேக்குகளை உருவாக்கி தருகிறேன். கப் கேக்ஸ் மற்றும் குக்கீஸ்களையும் கஸ்டமைஸ் செய்து டிசைனர் கேக் அண்ட் குக்கீஸ்களாக வழங்கி வருகிறேன்” என்கிறார் அனிலா கோபால். எதிர்காலத்தில் இது போல மனதிற்கு நெருக்கமான, அர்த்தமுள்ள கேக்குகளை தயாரித்து வாடிக்கையாளர்களை ருசியிலும், வண்ன டிசைன்களாலும் மகிழ்விக்க வேண்டும் என்பது அவரின் விருப்பமாம்.
Average Rating