தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்! (மகளிர் பக்கம்)
ஃபேஷன்… எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கக்கூடிய விஷயம். சாதாரண நூல் புடவையில் கூட அழகான ஃபேஷனை திணிக்க முடியும். காலத்திற்கு ஏற்ப ஃபேஷன் மாறினாலும், ஒவ்வொரு இடத்திற்கு என தனிப்பட்ட பாரம்பரியம், கலாச்சாரம் என்றுள்ளது. அதை மாறாமல் கொடுப்பது தான் ஃபேஷன் என்கிறார் ஆர்யா கிரி. சென்னையை சேர்ந்த இவர் தன் தாத்தாவின் சட்டையைக் கொண்டு அழகான ஃபேஷன் உடைகளை ‘பை ஆர்யா’ என்ற பெயரில் வடிவமைத்து வருகிறார்.
‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான் என்றாலும், நான் பல நாடுகளுக்கு பயணித்திருக்ேகன். காரணம் என்னுடைய பெற்றோர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாங்க. ஆனால் எங்கு சென்றாலும் என் சொந்த மண்ணான இந்தியாவின் கலாச்சாரத்தை மட்டும் மறக்கவே கூடாதுன்னு அம்மா சொல்வாங்க. அம்மாவின் சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசில் இருந்தே நெசவாளர்களை எங்க வீட்டில் பார்த்து தான் வளர்ந்தேன்.
எங்க வீட்டில் எந்த விசேஷமானாலும் நேரடியாக நெசவாளர்களை அழைத்து அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப புடவையினை வடிவமைப்பது வழக்கம். அப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும். ஒரு முறை அம்மா அவங்க தோழி மீனா ஆன்டிக்கு அப்போது தான் நெய்யப்பட்ட அழகான காஞ்சிபுரம் பட்டுப்புடவை ஒன்றை காண்பித்துக் கொண்டு இருந்தார். பட்டு ஜரி கொண்ட அந்த புடவையின் பளபளப்பு என் கண்களில் பிரகாசமாக ஒளிர செய்தது. உடனே நான் என் அறையில் இருந்த ஆரிகாமி பேப்பரில் கிளிப்பச்சை மற்றும் பர்பில் நிறத்தைக் இணைத்துக் கொண்டு வந்து மீனா ஆன்டியிடம் காண்பித்து, அவர்களுக்கு இந்த நிறம் அழகாக இருக்கும்ன்னு சொன்னேன்.
அவங்க நான் விளையாடுறேன்னு நினைத்துக் கொண்டு பிங்க் நிறம் இருந்தால் நல்லா இருக்குமேன்னு சொல்ல… அன்று முதல் நான் நிறங்களோடு விளையாட ஆரம்பித்தேன். அந்த விளையாட்டு தான் ‘பை ஆர்யா’ என்ற பிராண்ட் உருவாக காரணமாகவும் இருந்தது’’ என்று கூறும் ஆர்யாவின் ரோல் மாடல் அவங்க அம்மா பிந்து.
‘‘அம்மா அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்தார். கைத்தறி மேல் ஏற்பட்ட காதலினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கு வந்து தனக்கான ஒரு பிராண்டினை உருவாக்க ஆரம்பித்தார். அவருக்கு காஞ்சிபுரம் பட்டு மேல் தனி மோகம் என்பதால், அதிலேயே பல டிசைன்களை உருவாக்க ஆரம்பித்தார். இதை எல்லாம் பார்த்து வளர்ந்த நான் மட்டும் எப்படி வேறு திசையில் பயணிப்பேன். அதனால் சிங்கப்பூரில் பிரபல கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் படிச்சேன்.
இறுதியாண்டு படிக்கும் போது கொரோனா காரணத்தால் சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆன்லைன் வகுப்பு போக எஞ்சி இருந்த நேரத்தில் எனக்கான பிராண்டினை உருவாக்க திட்டமிட்டேன். நான் பல நாடுகள் பயணித்து இருந்தாலும், என் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மாறாமல் அதே சமயம் இந்த தலைமுறையினருக்கான ஃபங்கி டிசைன்களை உருவாக்க திட்டமிட்டேன். அப்படித்தான் கபூடில் என்ற டிசைனர் ஷர்களை வடிவமைச்சேன்.
கபூடல்… எல்லா காலத்திலும் ஆண்,பெண் என இருபாலரும் அணியக்கூடிய ஷர்ட்கள். சின்ன வயசில் என் தாத்தாவின் அலமாரியை பார்த்து இருக்கேன். அவரிடம் இருக்கும் ஷர்ட்கள் அனைத்தும் விசேஷங்கள் மட்டுமல்ல எல்லா காலத்திற்கும் அணியக் கூடியதாக இருக்கும். அந்த ஒரு ஸ்பார்க்தான் கபூடல் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்த ஷர்ட்கள் எல்லாம் கண்களை பறிக்கும் நிறங்களில் அமைத்திருக்கேன். மேலும் அதில் காந்தாரி என்ற எம்பிராய்டரி டிசைன்களையும் இணைத்திருக்கேன். பெண்களின் உடைகளில் மட்டும் தான் எம்பிராய்டரி டிசைன் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அதை ஆண்களின் உடைகளிலும் பயன்படுத்த முடியும் என்பதை என்னுடைய கபூடல் உருவாச்சு. இந்த ஷர்ட்களை ஹனிமூன், பயணம் செய்யும் போது, நண்பர்களை சந்திக்கும் போது, பார்ட்டிக்கு செல்லும் போது என எல்லா நாட்களிலும் அணியலாம்’’ என்ற ஆர்யா ‘டாட்டிங் த லைன்’ மற்றும் ‘த ஃபெமினைன் ஃபோர்ஸ்’ என்ற இரண்டு டிசைன்களையும் அறிமுகம் செய்துள்ளார்.
‘‘பெண்களை எப்போதும் காளி தேவிக்கு ஒப்பிடுவார்கள். சக்தியின் மறுஉருவம். ஒரு தனிப்பட்ட நபரின் பலம் என்பதை குறிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டது தான் த ஃபெமினைன் ஃபோர்ஸ் கலெக்ஷன்ஸ். தேவி காளி என்றால் சிகப்பு தான் நினைவுக்கு வரும். அதனால் இந்த உடைகள் எல்லாம் சிகப்பு மற்றும் சாக்லெட் பிரவுன் நிறங்கள் கொண்டு வடிவமைச்சேன். அடுத்து டாட்டெட் லைன்ஸ். நம்முடைய கைத்தறி நெசவாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட டிசைன்.
இவை அனைத்தும் ஸ்லேட் மற்றும் கற்களின் நிறங்களான கருப்பு, அடர்த்தி பச்சை மற்றும் கிரே போன்ற நிறங்கள் கொண்டு இருக்கும். அனைத்து உடைகளும் கைத்தறி முறையில் நெசவு செய்யப்படுகிறது என்பது தான் இதன் சிறப்பம்சம். காரணம் அழிந்து வரும் நெசவாள துறைக்கு ஒரு ஊன்றகோலாக இருக்க வேண்டும். 20 நெசவாளர்கள் எங்களின் யூனிட்டில் வேலைப் பார்த்து வருகிறார்கள்’’ என்று கூறும் ஆர்யா வருவது வெயில் காலம் என்பதால் அதற்கான சிறப்பு கலெக்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதா தெரிவித்தார்.
Average Rating