செல்லுலாய்ட் பெண்கள்-94!!(மகளிர் பக்கம்)
1957ல் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை பத்மினி ப்ரியதர்சினி, அகன்ற கண்களும் அழகான புன்னகை சிந்தும் வட்ட முகமும் நல்ல உயரமும் வாளிப்பான உடற்கட்டும் கொண்டவர். ஒரு சாயலில் சற்றே இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோற்றம் அவரிடம் தென்பட்டது. நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு நாட்டியத்தாரகையாகவே அவர் அறிமுகமானார். பல படங்களில் அவர் ஆடிய தனி நடனங்கள் குறிப்பிடத்தக்கவை. பத்மினிகளால் நிரம்பிய திரையுலகம்ஏ.வி.எம். நிறுவனம், 1949ல் வைஜெயந்தி மாலாவைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்தி தமிழில் தயாரித்த பெரும் வெற்றி பெற்ற ‘வாழ்க்கை’ திரைப்படத்தை இந்தியில் ‘பஹார்’ என்ற பெயரில் தயாரித்தது. அது 1951 ஆம் ஆண்டில் வெளியானது. ‘ஏ.வி.எம். பெருமையுடன் அறிமுகப்படுத்தும் வைஜெயந்தி மாலா & பத்மினி’ என்று டைட்டிலில் ஆங்கிலத்தில் மிகப் பெருமையாக, அருமையாக இரு பெண்களை நடிகைகளாக அறிமுகப்படுத்தியது. முதலாமவர் யாரென்பது அனைவரும் அறிந்தது; பத்மினியாக இந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நாட்டியப் பேரொளி பத்மினி அல்ல.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ஹரிதாஸ்’ தொடங்கி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவரும், சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமான நடிகை பண்டரிபாய் தான் அவர். இப்படத்தின் டைட்டிலிலும் கூட ‘பண்டரிபாய் (பத்மினி)’ அடைப்புக் குறிக்குள் பத்மினி என்பதும் தவறாமல் குறிப்பிடப்பட்டிருக்கும். படிப்படியாக பண்டரிபாய் என்ற பெயரிலேயே அதன் பின்னர் வெளியான படங்களில் அவர் அறியப்பட்டார்.
பத்மினி என்றால், நாட்டியப் பேரொளி பத்மினியின் பெயரே திரையுலகில் மிகப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த காலத்தில் அந்தப் பெயரில் வேறு எந்த ஒரு நடிகையும் – அது பெற்றோர் சூட்டிய அசல் பெயர் என்றாலும் கூட புகழ் பெற முடியவில்லை என்பதுதான் உண்மை. பார்க்கப் போனால் நடிகை பத்மினியின் நினைவாகவே பலரும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டி அழகு பார்த்தவர்கள். அதன் பின்னரும் பத்மினி என்ற பெயரில் நடிக்க வந்த பல நடிகைகளும் கூட வேறு ஏதோவொரு முன்னொட்டு அல்லது பின்னொட்டுப் பெயர்களுடனேயே அறிமுகமாகிப் பிரபலமானார்கள். அவர்களில் ஒருவர்தான் நடிகை பத்மினி ப்ரியதர்சினி.
இவருக்குப் பின்னர் பேபி பத்மினியாக ‘பாசமலர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக பேபி பத்மினி என அறிமுகமாகி தன் கருவண்டுக் கண்களாலும் துறுதுறுப்பான நடிப்பு மற்றும் பேச்சாற்றலாலும் பெரும் புகழை அறுவடை செய்தவர் குட்டி பத்மினி. இவர் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்துக்கு மாறிய பின் குமாரி பத்மினியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாமல், 60 களில் குமாரி பத்மினி என்ற பெயரிலேயே மற்றொரு நடிகையும் அறிமுகமாகி பிரபலமும் ஆகியிருந்தார். (நன்கு வளர்ந்து வந்த நிலையில் பின்னர் 1980களில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.) குமாரி பத்மினி பிரபலமாக இருந்ததால் பேபி பத்மினி குட்டி பத்மினியானார்.
1970களில் வி.கே. பத்மினி என்றொரு நடிகையும் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். 1980களில் அறிமுகமான சென்னையைச் சேர்ந்த ராணி பத்மினி என்ற நடிகையும் பல மொழிப் படங்களிலும் நடித்து வந்த நிலையில், சொந்த வீட்டிலேயே பணிபுரிந்த பணியாளர்கள் சிலரால் படுகொலை செய்யப்பட்டு இல்லாமலே போனார். ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் இப்படி பல்வேறு பத்மினிகள் தென்னிந்தியத் திரையுலகைத் தங்கள் நடிப்பால் சிறப்பித்திருக்கிறார்கள்.
1944, செப்டம்பர் 8 அன்று கேரளத்தின் மாவேலிக்கரா என்ற ஊரில் பிறந்தவர் பத்மினி ப்ரியதர்சினி. கேரளத்தில் பிறந்தவர் என்றாலும், குடும்பம் சென்னையில் குடியேறியதால் வளர்ந்ததெல்லாம் சென்னை மாநகரில்தான். ஆரம்பத்தில் அவருக்கு நாட்டியம் கற்பித்தவர் சொக்கலிங்கம் பிள்ளை. வழுவூர் ராமையா பிள்ளை பாணியிலேயே பத்மினிக்கு நடனம் கற்பிக்கப்பட்டது. பின்னர் வழுவூராரிடம் நேரடியாக நடனம் கற்றதுடன், மிக விரைவில் அரங்கேற்றமும் நிகழ்ந்தது.
வழுவூராரிடம் நடனம் கற்றுத் தேரியவர்கள் பலர். அதிலும் திரைப்பட நடிகைகளாக மாறியவர்கள் ஏராளம்… பெயர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் குமாரி ருக்மணி, குமாரி கமலா, வைஜெயந்தி மாலா, எல்.விஜயலட்சுமி, ஈ.வி.சரோஜா, சச்சு, எம்.பானுமதி மற்றும் பல பிரபலங்களின் வீட்டுப் பெண்களும் இவரிடம் நடனம் பயின்றவர்கள்தான். அத்துடன் பல்வேறு திரைப்படங்களுக்கும் நடனம் அமைத்தவரும் அவரே. அவரிடம் நடனம் பயின்ற பத்மினி ப்ரியதர்சினி மட்டும் சோடை போய் விடுவாரா என்ன? அவரும் திரைப்படங்களில் நாட்டியத்தாரகையாக ஜொலிக்கவே செய்தார்.
திரைப்படங்களில் பத்மினியின் நாட்டியப் பங்களிப்பு நாட்டியப் பேரொளி பத்மினியைப் போல பெயரில் மட்டுமல்லாமல், அவரைப் போலவே முதன்முதலில் திரைப்படங்களில் நாட்டியம் மட்டுமே ஆடக்கூடிய நடன மங்கையாகவும் ப்ரியதர்சினி திகழ்ந்தார். 1957 ஆம் ஆண்டு மெலிந்த தேகத்துடன் 13 வயதில் அவர் அறிமுகமான படம் ‘பக்த மார்க்கண்டேயா’. இதில் குறி சொல்லும் குறத்தியாக வந்து, குறி சொல்லிப் பாடி ஆடி மகிழ்விப்பதாக்க் காட்சிகள் இடம் பெற்றன. இப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. அவரது நாட்டியத்திறன் தொடர்ந்து பல படங்களில் நடனம் ஆடும் வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.
கவிஞர் கண்ணதாசWWனின்
சொந்தத் தயாரிப்பான ‘மாலையிட்ட
மங்கை’ திரைப்படத்தில் கவிஞர் எழுதிய,
‘திங்கள் முடி சூடும் மலை
தென்றல் விளையாடும் மலை,
பொங்கருவி வீழும் மலை எங்கள் மலையே’
என்ற இந்தப் பாடலை டி.ஆர்.மகாலிங்கம் தன் கணீர் குரலில் கம்பீரமாகப் பாட, பத்மினி ப்ரியதர்சினி அதற்கு அற்புதமான ஒரு நடனத்தை ஆடியிருப்பார். அடுத்து இவர் ஆடிப் பாடிய படம் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் தயாரிப்பில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடிப்பில் 1958ல் வெளியான ‘வாழ வைத்த தெய்வம்’. அண்ணன் – தம்பி ஒற்றுமை, கூட்டுக் குடும்பத்தின் மேன்மை, அசல் கிராமிய மக்களின் வேளாண் குடி வாழ்க்கை என அனைத்தையும் பேசியது இந்தப் படம்.
கிராமத்துத் திருவிழா ஒன்றில் நடக்கும் நாடகத்தில் இடம் பெறுவதான தெம்மாங்கு பாணியில் அமைந்த பாடல் காட்சியில் பத்மினி ப்ரியதர்சினி, நகைச்சுவை நடிகர் குலதெய்வம் ராஜகோபாலுடன் இணைந்து ஆடிப் பாடினார். ‘கொல்லிமலைச் சாரலிலே முள்ளு முள்ளாய்க் குத்தும் பழம் குடம் போலே தொங்கக் கண்டேன் என்ன பழம் சொல்லு மச்சான்’ என்று விடுகதை போடும் பாணியிலான இப்பாடல் கொண்டாட்டமாக அமைந்த ஒரு பாடல்.
கிராமத்து மக்கள் கைத்தட்டி வரவேற்று இப்பாடலை ரசிப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இக்காட்சியைப் பார்க்கும் ரசிகர்களையும் ஆட்டம் போட வைக்கும் ஜனரஞ்சகமான ஒரு காட்சியும் கூட. கண்டாங்கிச் சேலையுடன் அசல் கிராமத்துப் பெண்ணாகவே இக்காட்சியில் தோன்றிக் குதித்தாடினார் பத்மினி ப்ரியதர்சினி. வழக்கமாக செவ்வியல் பாணியில் அமைந்த சாஸ்த்ரிய நடனங்களை ஆடிக் கொண்டிருந்தவருக்கு இந்தப் படத்தில் ஒரு கிராமிய நடனம் ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதையும் அவர் சிறப்பாகவே ஆடி முடித்தார்.
‘குறவஞ்சி’ படத்தில் மற்றொரு நாட்டியத் தாரகை எல்.விஜயலட்சுமியுடன் இணைந்து ஆடும் ‘செங்கையில் வண்டு கலீர் கலீர் என்று ஜெயம் ஜெயம் என்றாட….’ எனும் திரிகூட ராசப்பக் கவிராயரின் ‘குற்றாலக் குறவஞ்சி’ பாடலை இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் பாட, இரு நடன மணிகளின் தாளம் தப்பாத, தரையில் கால் பாவாத ஆட்டத்தைக் காணக் கண் கோடி வேண்டும். பாட்டின் இடையே நடிகையர் திலகம் சாவித்திரியும் வந்து இணைந்து கொள்ள, அவருக்கு நடனமணிகள் இருவரும் குறத்திகளாய்க் கை பார்த்துக் குறி சொல்லி ஆடிப் பாடும் அற்புதமான காட்சி அது.
மற்றொரு பாடல் காட்சி ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் இடம் பெற்றது. ரங்கூனில் இக்காட்சி நிகழ்வதாக படத்தில் இடம் பெற்றதுடன் திருப்புமுனைக் காட்சியாகவும் அமைந்தது. பத்மினி ப்ரியதர்சினி ஒரு பர்மியப் பெண்ணாகக் கையில் குடையுடன் தோன்றி குழுப் பெண்களுடன் ‘டிங் டாங்’ என்ற இந்திப் பாடலைப் பாடி ஆடுவார். அது ஒரு அரங்க நிகழ்ச்சியாகப் படத்தில் இடம் பெறும்.
பாடலின் இறுதியில் ஜப்பானியப் போர் விமானங்கள் ரங்கூன் மீது குண்டுமழை பொழிய, அனைவரும் பதுங்கு குழிகளில் ஓடிப் போய் பதுங்கிக் கொள்வதாகவும், பண்டரிபாயின் கணவர் ஜப்பானிய குண்டுகளுக்குப் பலியாகி தன் மகனுடன் அவர் இந்தியா திரும்புவதாகவும் காட்சி அமையும். வித்தியாசமான ஒரு பாடல் காட்சி என்பதுடன் ஒரு தமிழ்ப் படத்தில் இந்திப் பாடல் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
பெரும்பாலான படங்களில் ஒரு நடனக் காட்சியில் மட்டுமே வந்து நடனமாடி விட்டுப் போனார் என்றாலும். அந்தக் காட்சியும் பாடல்களும் மனதை மயக்குபவையாகவும் அமைந்திருந்தன. அனைத்து வேடங்களிலும் பொருந்தியவர்நடனக் காட்சிகளில் மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு, டி.ஆர்.ராமச்சந்திரன் இவர்களுடன் இணைந்து ‘பாத காணிக்கை’, ‘சகோதரி’, ‘விடி வெள்ளி’ போன்ற படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் திறம்பட நடித்தார். சகோதரி படத்தில் ஆனந்தக் கோனார் வேடமேற்ற பால்காரர் சந்திரபாபுவின் முறைப்பெண்ணாகவும், ஏற்கனவே திருமணம் ஆன நாயகன் பாலாஜியைக் காதலிப்பவராகவும் நடித்தார்.
இயக்குநர் தரின் ‘தேன் நிலவு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் ஜெமினி கணேசன், நாயகி வைஜெயந்தி மாலா, மற்றொரு நாயகி வசந்தி மூவரையும் வில்லன்கள் கூட்டத்திலிருந்து தப்புவிக்கும் பெண்ணாக நடித்திருப்பார் பத்மினி ப்ரியதர்சினி. இக்காட்சிகளில் ஒரு வார்த்தை வசனம் அவருக்குக் கிடையாது. சில நிமிடங்களே படத்தில் தோன்றினாலும் சைகை மொழியிலும் கண்களாலுமே பேசி விடுவார். அதேபோல இறுதியில் வில்லன்கள் கூட்டத்தில் பாடல் இல்லாமல் அவருக்கு ஒரு நடனமும் உண்டு. அதையும் பிரமாதப்படுத்தி இருப்பார். முகபாவம் மட்டுமே போதுமானதாக அமைந்திருக்கும். இயக்குநர் தர் தன் படங்களில் பத்மினி ப்ரியதர்சினிக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘விடிவெள்ளி’ படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் காதலியாக அவருடன் ஆட்டம் போட்டார். ‘காரு சவாரி ஜோரு.. கன்ணாலே பேசிடாமே ரோட்டக் கொஞ்சம் பாரு…’ பாடலை திருச்சி லோகநாதன் குரலில் கேட்க அவ்வளவு இனிமை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலோ வில்லன் நம்பியார் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டு வரும் இளம் அழகு மனைவியாக நடித்திருப்பார். முரட்டு குணமும் பணச்செருக்கும் மிக்க ஜமீன்தாரின் இரண்டாம் தாரமானாலும் அன்பும் பண்பும் மிக்கவளான பொறுப்பான பெண்ணை, தாயைக் கண் முன் வந்து நிறுத்தி விடுவார்.
வளர்ந்து வாலிபனாக திருமண வயதில் இருக்கும் மகனை வைத்துக் கொண்டு ஜமீன்தார், தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வருவதுடன், மகன் தன் இளம் மனைவியை மதிக்கவில்லை என்று கொதித்தெழும்போதும், மகன் யாரோ ஒரு குடியானவப் பெண்ணை விரும்புகிறான் எனத் தெரிந்ததும் வெறி கொண்டு பேசும் கணவனிடம் அன்பாக, நயமாகப் பேசி மகனை மன்னிக்கச் சொல்வதில் தொடங்கி மிக அருமையான நடிப்பை வழங்கியிருப்பார். குணச்சித்திர நடிப்பிலும் மிளிர வாய்ப்பளித்தது இப்படம்.
எழுத்தாளர் லட்சுமி எழுதிய ‘பெண் மனம்’ நாவல் 1963ல் திரை வடிவம் பெற்றது. கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, எல்.வி.பிரசாத் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி நாயகன் நாயகியாக நடிக்க ‘இருவர் உள்ளம்’ என்ற பெயரில் வெளியானது. பல பெண்களுடன் ஜாலியாகப் பழகும் ‘பிளேபாய்’ ஆக பணக்கார வீட்டு இளைஞனாக சிவாஜி நடித்தார். அப்படி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பழகிய பெண்களில் ஒருத்தி, பின்னர் வில்லத்தனம் செய்பவளாக மாறுகிறாள். அந்த வேடத்தை ஏற்று நடித்தவர் பத்மினி ப்ரியதர்சினி. நடனம், நகைச்சுவை, குணச்சித்திரம் மட்டுமல்லாமல் இப்படியும் தன்னால் நடிக்க முடியும் என அவர் நிரூபித்தார்.
பிற மொழிப் படங்களிலும் வாய்ப்பு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தாய் மொழியான மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் அவர் நடனம் ஆடினார்; நடித்தார். 1963ல் வெளியான ’நர்த்தனசாலா’ தெலுங்கில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதொரு திரைப்படம். என்.டி.ராமாராவ், எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி, எல்.விஜயலட்சுமி, பத்மினி ப்ரியதர்சினி என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கும் படம் அது. மகாபாரதத்தின் விராட பருவத்தைக் கூறும் படம். பாண்டவர்கள் வனவாசம் முடித்து ஓராண்டு காலம் தலைமறைவாக வாழும் காலம் அது.
இந்திரன் சபையில் அர்ஜுனன், ஊர்வசியின் நடனத்தை ரசித்துப் பார்க்கும் காட்சியும் அவன் மீது மோகம் கொள்ளும் ஊர்வசி, தனிமையில் அர்ஜுனனை சந்தித்துத் தன் ஆசையை அவனிடம் வெளியிடுகிறாள். அவனோ தன் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி மறுக்கிறான். அவன் மீது கோபம் கொள்ளும் ஊர்வசி, அவனை நபும்சகனாகப் (திருநங்கை) போகும்படி சாபமிடுகிறாள். அந்த சாபத்தின் விளைவாக அர்ஜுனன் திருநங்கையாக மாறி, ஓராண்டு காலம் விராட நாட்டில் மறைந்து வாழ்கிறான். அவன் மட்டுமல்லாமல், பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சாலியும் அங்கு வாழ்கிறார்கள். அர்ஜுனனாக என்.டி.ராமாராவும், தன் பெண்மையை இழிவுபடுத்தி விட்டதாகக் கருதி கோபத்தில் கொந்தளித்து அவனுக்கு சாபமிடும் ஊர்வசியாக பத்மினி ப்ரியதர்சினியும் நடித்திருப்பார்கள். இப்படம் மிகச் சிறப்பாக ஓடியதுடன் பல விருதுகளையும் பெற்றது.
அசல் வாழ்க்கையிலும் நாட்டியமணியாகவே…
1960களில் வெளியான படங்கள் பெரும்பாலும் சமூகப் படங்களாகவே இருந்ததால், நடனக் காட்சிகள் வெகுவாகக் குறைய ஆரம்பித்தன. நடன மணிகள் பலரும் கதாநாயகிகளாக மாறினார்கள். பத்மினி ப்ரியதர்சினிக்கும் திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. தமிழ்ப் படங்களிலிருந்து கன்னடப் படங்களுக்கு மாறினார். அங்கும் இதே நிலை என்றபோது, திருமணம் செய்து கொண்டு திரைத்துறையை விட்டே முற்றிலும் விலகிப் போனார். திரைத்துறையும் கூட அவரை மறந்து போனது என்றே சொல்லலாம்.
தலச்சேரியைச் சேர்ந்த டி.கே.ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சென்னையை விட்டு விலகி பெங்களூரில் குடியேறினார். நாட்டியப் பேரொளி பத்மினியின் கணவர் பெயரும் கூட ராமச்சந்திரன்தான். இவர்கள் இருவருக்கும் இடையில்தான் எவ்வளவு ஒற்றுமைகள்?! திருமணத்துக்குப் பின் பத்மினி ப்ரியதர்சினி, பத்மினி ராமச்சந்திரன் என்றே அறியப்பட்டார். இத்தம்பதிகளுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆடிய கால்கள் ஒருபோதும் ஓய்வெடுக்க முடியாதல்லவா? 1974ல் பெங்களூரில் ‘நாட்டிய ப்ரியா’ என்ற நடனப் பள்ளியை நிறுவி, மாணவிகளுக்கு நடனம் கற்பிக்கும் குருவாக மாறினார். திறமை மிக்க பல மாணவிகளையும் உருவாக்கினார். தன் மாணவிகளுடன் இணைந்து லண்டன், அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளில் நாட்டிய நிகழ்ச்சிகளையும் ஏராளமாக நடத்தியுள்ளார்.
கர்நாடக ராஜ்யோஸ்தவா விருது மற்றும் ஷாந்தலா விருது போன்ற பெருமை மிக்க விருதுகளை அவருடைய நாட்டியப் பணிகளுக்காக கர்நாடக அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.
திரைப்படங்களை எல்லாம் விட்டு விலகி இருந்தவருக்கு ஒரு வாய்ப்பாக 2012 ஆம் ஆண்டு ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. படத்திலும் தான் பெரிதும் நேசிக்கும் நாட்டியம் கற்பிக்கும் ஒரு நட்டுவனாராகவே அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவருடைய இறுதிப் படமும் கூட. நாட்டியத்தைப் பெரிதும் நேசிக்கும் ஒருவருக்கு இது மிகப் பெரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கும் செயலும் கூட. கடந்த 2016 ஆம் ஆண்டு, 72 ஆம் வயதில் உடல்நலக் குறைவால் பத்மினி ப்ரியதர்சினி பெங்களூருவில் காலமானார். பழைய பாடல்களையும் திரைப்படங்களையும் விரும்பும் ரசிகர்கள் இருக்கும் வரை பத்மினி ப்ரியதர்சினி, ரசிக மனங்ககளில் என்றும் தங்கியிருப்பார்.
பத்மினி ப்ரியதர்சினி நடித்த படங்கள்
பக்த மார்க்கண்டேயா, மாலையிட்ட மங்கை, அன்னையின் ஆணை, இரு சகோதரிகள், வாழ வைத்த தெய்வம், சகோதரி, பாகப்பிரிவினை, தெய்வ பலம், அல்லி பெற்ற பிள்ளை, தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, தாமரைக்குளம், குறவஞ்சி, விடிவெள்ளி, பார்த்திபன் கனவு, இரத்தினபுரி இளவரசி, மகாலட்சுமி, பெற்ற மனம், தேன் நிலவு, பாத காணிக்கை, பாக்தாத் திருடன், இருவர் உள்ளம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, நெஞ்சம் மறப்பதில்லை, லைஃப் ஆஃப் பை.
Average Rating