திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்! (அவ்வப்போது கிளாமர்)
கணவன் – மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள், சோஷியல் மீடியாக்களின் தாக்கம், குழந்தை வளர்ப்பின் சவால் போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. பல திருமண உறவுகளின் முறிவுக்குப் பின்னால் தாம்பத்ய சிக்கல் மறைமுகமாக இருப்பதும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
எனவே, ‘திருமணத்துக்குப் பிறகான தாம்பத்ய வாழ்க்கையின் அவசியம்’ என்பது பற்றி பேசுவது இன்றைய தேவையாக மாறியுள்ளது. இதுபற்றி விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் பாபு ரங்கராஜன்.தம்பதியரிடையே இருக்கும் சின்னச்சின்ன கருத்துவேறுபாடாக இருந்தாலும் சரி… எத்தனை பெரிய சண்டையாக இருந்தாலும் சரி… தாம்பத்ய உறவு அத்தனையும் புறந்தள்ளி கணவன் – மனைவியிடையே அன்பைக் கொண்டு வந்துவிடும்.
இயல்பான காதல் நெருக்கங்களின் மீதான ஈர்ப்பைக் குறைத்து ஆன் ஸ்கிரீன் மோகத்துக்குள் தள்ளியுள்ளது, இன்றைய இளசுகள் காமத்துக்கும் அதிகளவில் ஆன் ஸ்கிரீனையே தேர்வு செய்வதுதான் திருமணத்துக்குப் பின்பான செக்ஸ் தேவை குறித்து நம்மைப் பேச வைத்துள்ளது. இருபால் உயிர்களின் இணையற்ற வாழ்வில் அன்பின் ஈரத்தைத் தக்க வைத்துக் கொள்ள காதல் மழையோடு, காமத்தின் வெப்பமும் அவசியம். மனித இனத்தைத் தழைக்கச் செய்யும் மாய உறவு இது. இவர்கள் பெற்றுத் தரும் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து அடுத்தடுத்த தலைமுறைகளைப் பாதுகாப்பதற்கு இவர்கள் இருவரும் நீண்ட காலம் இணைந்து வாழ வேண்டியது இயற்கையின் தேவை.
ஒன்றாகப் பிறந்த உடன்பிறப்புக்களே ஒத்த கருத்துடன் இல்லை. மாற்றுக் கருத்துக்களும், வேறு வேறு கலாச்சாரத்தையும் உடைய ஆணும் பெண்ணும் இணைந்து பல ஆண்டுகளுக்கு வாழ எத்தனை முரண்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஓர் இலையும், இன்னொரு இலையும் ஒன்றில்லை. ஒரு மனித மரபணுவும், இன்னொரு மனிதனின் மரபணுவும் வேறு வேறு. எதிரெதிர் பாலின ஈர்ப்பும் ஒரு சில காலத்துக்குள் சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் காமம் என்கிற ஒற்றைச் சொல்தான் ஆணையும் பெண்ணையும் ஆயுளின் அந்திவரை அதே ஈர்ப்புடன் இணைத்து பயணிக்கச் செய்கிறது.
ஆணாய்ப் பெண்ணாய் தனித்தனியாக வாழ்ந்த காலங்களில் நமக்குள் ஒரு இனம் புரியாத தேடல் இருந்திருக்கும். நான் பிறந்ததன் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மைத் தொடரும். திருமணத்துக்குப் பின் இந்தக் கேள்விகள் நின்றுபோகும். ஆம்… அந்த மாயாஜாலம் புதிய புதிய சந்தோஷங்களை அள்ளித்தரும். சிறு அணைப்பு, சீண்டல், தீண்டல், முத்தம் எல்லாம் ஆண்மை, பெண்மை என்பதன் முழுமையை உணரச் செய்கிறது. தொட்டுத் தொட்டுத் துவங்கும் இந்தக் காதல் மூளையில் நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தட்டி எழுப்பி ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் உணரும் மகிழ்ச்சி காதலை காமத்தில் மூழ்கச் செய்யும். திருமண பந்தத்தில் இணைந்த இணையரின் அன்பின் பிணைப்பை செக்ஸ் மேம்படுத்தும். உளவியல்ரீதியாக செக்ஸ் ஒருவரின் சுய மதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தன்னை முழுமையாக உணரச் செய்யும். இது மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் உதவுகிறது.
ஆண் பெண் இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில் வேலையிடத்திலும், பொது வெளியிலும் அவர்கள் சந்திக்கும் மன அழுத்தங்கள் மற்றும் மன இறுக்கங்களை செக்ஸ் கரைத்து ரிலாக்ஸ்டாக உணரச் செய்கிறது. முதல் நாள் இரவு முழுமையான செக்ஸ் இன்பத்தைக் கொண்டாடிய ஆணும் பெண்ணும் மறுநாள் அதிகத் திறன் மற்றும் மகிழ்ச்சியுடன் வேலையைத் தொடர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. வேறு வேறு சூழலில் வளர்ந்த ஆணும் பெண்ணும் தங்களைப் புரிந்துகொண்டு அவரவரை ஏற்றுக் கொள்ள புரிந்துகொண்டு அன்பு செலுத்த செக்ஸ் அவர்களைத் தயார்படுத்தும். அன்பை வெளிப்படுத்துவதற்கான இடமாகவும் செக்ஸ் உள்ளது.
செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது ஆண்-பெண் இருவர் உடலிலும் அதிகளவு சக்தி செலவழிக்கப்படுகிறது. மனம் ரிலாக்ஸ் ஆகிறது. செக்ஸ் அவர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். ஹைப்பர் டென்ஷன், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்புக்களையும் குறைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மூளையில் ஆக்சிடாசின் சுரப்பதால் நல்ல தூக்கம் செக்ஸ் இன்பத்துக்குப் பின்னர் சாத்தியம்.
உளவியல் ரீதியாக செக்ஸ் அதிகபட்ச பலன்களை அள்ளித்தருகிறது. மகிழ்ச்சியோடு திருப்தியையும் உணர வைக்கிறது. தன்னால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களது தொழில் மற்றும் சமூக வாழ்விலும் ஏற்றம் அடையச் செய்கிறது. ஆண்களுக்கு புற்றுநோய் போன்ற நோய்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. பெண்களையும் ரிலாக்ஸாக உணரவைத்து அவர்களது ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. குழந்தைப் பேறு எனும் அற்புதம் நிகழ்வதற்கான பேரின்பத்துக்கும் செக்ஸ் அவசியமாக உள்ளது.
திருமணமான சில மாதங்களில் மனமுறிவைத் தவிர்க்கவும், ஆணும் பெண்ணும் ஆயுளின் அந்தி வரை அன்பைத் தொடரவும் திருமணத்துக்குப் பின்பான செக்ஸ் அவசியம். தம்பதியர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். நேரமின்மை போன்ற காரணங்களைச் சொல்வதும், ‘இதெல்லாம் ரொம்ப அவசியமா’ என்று அலட்சியப்படுத்துவதும் திருமண பந்தத்தை சிக்கலில் உண்டாக்கி விடும் சாத்தியமும் உண்டு என்பதையும் மறக்க வேண்டாம்!
Average Rating