தொற்று பயமில்லாமல் கர்ப்பிணிகள் குழந்தை பெறலாம்! (மகளிர் பக்கம்)
கோவிட் தொற்று காரணமாக உலக மக்கள் அனைவரும் சவால் நிறைந்த ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த தொற்று பரவல் காரணமாக கர்ப்பம் தரித்தலின் மகிழ்ச்சியை நாம் இழந்துவிடக்கூடாது. தொற்று பரவல் இருந்தபோதிலும் அதைப்பற்றி அச்சம்கொள்ளத் தேவையில்லை. இந்த காலக்கட்டத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் பாதுகாப்பாகவும் நேர்மறையான எண்ணங்களுடன் தங்கள் குழந்தைகளை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதற்காக அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் டாக்டர் ஸ்வேதா ராஜன் விளக்குகிறார்.
‘‘தற்போது கோவிட் தொற்று குறித்து பல விதமான செய்திகள் நிலவி வருகிறது. இது மக்கள் மத்தியில் ஒரு பெரிய அச்சத்தினை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொடர்பான உண்மை நிலையினை நாம் முதலில் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு பெண் கர்ப்பம் தரித்ததும் குழந்தை பிறக்கும் வரை கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள், தாங்கள் இருக்கும் இடங்களில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் அவர்கள் சுகாதாரமான காற்றை சுவாசிப்பதோடு, அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக விலகலை கடைபிடித்தல் மற்றும் வேலையில் இருக்கும் பெண்களாக இருந்தால் வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை செய்தல், திருமணம் மற்றும் திருவிழா போன்ற மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லாதிருத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுதல் போன்ற விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணி பெண்கள் தங்களின் மகப்பேறியல் டாக்டரின் ஆலோசனைகளை பெற்று அவர்களின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகள் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய அல்லது சுவாசப் பிரச்சினைகள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான மருந்து மாத்திரைகளை எடுத்து தங்கள் நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு இருக்கும்போது தொற்று பாதிப்பு முழுமையாக தவிர்க்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘தொப்புள் கொடி, பிறப்புறுப்பு பாதை மற்றும் தாய்ப்பால் மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இதுவரை எந்தவித ஆய்வுகளும் தெரிவிக்கவில்லை. தொற்று அறிகுறிகள் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நிலையில் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதொடு, முறையான பரிசோதனை செய்து கொண்டு தங்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து அவர்கள் பயப்படத் தேவையில்லை. அதற்கான முறையான சிகிச்சையை அவர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து எளிமையாக விடுபடலாம். இதன் காரணமாக கருக்கலைப்பு, கரு வளர்ச்சி பிரச்சினைகள், குறைப்பிரசவம், கருவில் ஏற்படும் வளர்ச்சி சிக்கல்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இதுவரை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
குழந்தை பெற்றவுடன் தாய்மார்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர்களால் கொடுக்க முடியாத சூழல் இருந்தால் ஆரோக்கியமுள்ள மற்றவர்கள் மூலமும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது மிகவும் பாதுகாப்பானது. இதனை அவர்கள் செய்யும்போது தொற்று பாதிப்பு ஏற்படாமல் அதிலிருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்’’ என்று தெரிவித்தார் டாக்டர் ஸ்வேதா ராஜன்.
Average Rating