மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்!! (மகளிர் பக்கம்)
கிரிக்கெட் என்றாலே விறுவிறுப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் என்றும் குறைவு கிடையாது. விறுவிறுப்பு என்றால் போட்டி சமனில் முடிவது. அந்த சமயத்தில் சூப்பர் ஓவர் (நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 அணிகளும் சமமான ரன் எடுக்க, வெற்றியை முடிவு செய்ய 2 அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அதில் யார் அதிக ரன் எடுக்கிறார்களோ, அவர்கள் வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்படுவார்) என்று அழைக்கப்படும் ஆறு பந்துகள்தான் யார் வெற்றியாளர் என்று நிர்ணயிக்கும்.
இவ்வாறு விறுவிறுப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர் போன இவ்விளையாட்டில் ஆடவருக்கு இணையாக மகளிரும் ஓசையின்றி தங்களுக்கான ஒரு தடத்தினை பதித்து வருகின்றனர். அதன் விளைவாக டி20, ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் தொடர் என மகளிர் கிரிக்கெட் அணியும் விளையாடி வருகிறது. இத்தகைய சூழலில் 12 வது மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நியூசிலாந்து நாட்டில், மார்ச் 4 ம் தேதி முதல் ஏப்ரல் 3 ம் தேதி வரை எனத் தொடர்ந்து 31 நாட்கள் நடைபெற உள்ளன. இந்த மகளிர் கிரிக்கெட் திருவிழா பற்றியும் அதில் பங்கேற்க உள்ள நாடுகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் விதம், முக்கிய வீராங்கனைகள் அவர்களில் சாதிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசுத் தொகை போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும் முன் ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பற்றி சில முன்னோட்ட பார்வைகள்.
கிரிக்கெட்டின் தாயகமாக கருதப்படும் இங்கிலாந்தில், ஐ.சி.சி மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் 1973-ல் முதன்முதலாக நடைபெற்றன. அந்தப் போட்டியில் போட்டியை நடத்திய நாடான இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள் உட்பட பல நாடுகள் உற்சாகமாகப் பங்கேற்றன. முதல் தடவையாக நடைபெற்ற மகளிருக்கான உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை முத்தமிட்டது. இது வரை நான்கு முறை இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை வென்றுள்ளது.
கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணி ஆறு முறையும் நடப்பாண்டில் இப்போட்டியை நடத்தும் நியூசிலாந்து ஒரு முறையும் உலகக் கோப்பையினை வென்றுள்ளன. இரண்டு முறை இறுதிப் போட்டி வரை முன்னேறிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அதிர்ஷ்டமின்மை காரணமாக கோப்பையை நழுவவிட்டது.கடந்த ஆண்டு நடைபெற இருந்த இப்போட்டி, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், தொற்றுப்பரவல் குறைந்த காரணத்தால், இம் மாதம் 4ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஐ.சி.சி தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. கொரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள காரணத்தினால், ஐ.சி.சி இவற்றிற்கும் தடையை நீக்கி, அனுமதி அளித்துள்ளது. எட்டு அணிகள் இக்கோப்பையை வெல்வதற்காக, களத்தில் வரிந்து கட்ட உள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறும். முதல் அரையிறுதி போட்டி, இம்மாதம் 30ம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி 31ம் தேதியும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி ஏப்ரல் 3ம் தேதி நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளுக்காக, நியூசிலாந்தில் ஆக்லாந்து, ஹாமில்டன், தருங்கா, கிறைஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் ஆடுகளங்கள் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளன.
பரிசுத் தொகை
உலகக் கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) எற்கனவே அறிவித்து விட்டது. மொத்த பரிசுத் தொகை இருபத்து ஆறரை கோடியாகும். உலகக் கோப்பையை வென்று மகுடம் சூடும் அணிக்கு சுமார் 10 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு நாலரை கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிக்கு இரண்டே கால் கோடியும், லீக் சுற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் 19 லட்சம் பரிசாக கிடைக்கும். இவைத் தவிர, சிறந்த பேட்ஸ்வுமன், பௌலர் எனத் தனித்தனியே பரிசுத்தொகை வழங்கப்படும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த உலகக் கோப்பையை தங்கள் நாட்டுக்கு வென்று தந்து மேலும் சிறப்பு சேர்க்க வேண்டுமென முனைப்புடன் வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர். போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நியூசிலாந்து வீராங்கனைகள் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் இக்கோப்பையை வென்றுவிட, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 முறை வென்றதோடு நின்று விடாமல், 7வது முறையும் உலகக்கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கனவு காணுகின்றனர்.
இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடருடன் தங்கள் ஓய்வை அறிவிக்க உள்ளதால், வெற்றியுடன் விடைபெற திட்டமிட்டுள்ளனர். இவர்களைத் தவிர, மேற்கிந்திய அணி கேப்டன் ஸ்டெஃப்னி டெய்லர், இங்கிலாந்து கேப்டன் ஹீதர்நைட், தென்னாப்ரிக்கா கேப்டன் டேன் வான் நிக்கெர்க், பாகிஸ்தான் கேப்டன் ஜவீரியா கான், ஆல்ரவுண்டர் பிஸ்மாக் மக்ரூப், பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ருமனா அகமது, ஜகனரா ஆலம் ஆகியோரும் இக்கோப்பையை வெல்ல மிகவும் துரிதமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அனல் பறக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதை அறிய ஒரு மாதம் நீங்கள் கண்டிப்பாக காத்திருக்க வேண்டும்.
Average Rating