அக்கா கடை-இயக்குநர் மிஷ்கின் எங்கக் கடையில் 50 நாட்கள் சாப்பிட்டார்! (மகளிர் பக்கம்)
ஒருவரின் மிகப்பெரிய பலமே சுவையான உணவு தான். அதற்காகத்தான் நாம் அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். சுவையான உணவுடன் அன்பான உபசரிப்பையும் சேர்ந்து தருகிறார்கள் குறிஞ்சி மலர் மற்றும் நீதிமணி தம்பதியினர். இவர்கள் பிச்சாவரம் சுற்றுலாப் பகுதியில் ‘நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்’ ஒன்றை கடந்த எட்டு வருடமாக நடத்தி வருகிறார்கள். இவர்களின் உணவகத்தின் சிறப்பே இங்கு கடல் சார்ந்த உணவுகள் மட்டுமே பரிமாறப்படுவதுதான்.
‘‘இந்த கடை இயங்க காரணமே என் மனைவி குறிஞ்சி தான்’’ என்று பேசத் துவங்கினார் நீதிமணி. ‘‘2014ல் தான் இந்த உணவகத்தை ஆரம்பிச்சோம். இது ஒரு சுற்றுலா தளம் என்பதால் மக்களின் வருகை 365 நாட்களுமே இருக்கும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) ஓட்டல் இங்கு இருக்கு. அது சைவ ஓட்டல் என்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அசைவ ஓட்டல் இருந்தா நல்லா இருக்கும்ன்னு விரும்பினாங்க. அப்பதான் எனக்கும் என் மனைவிக்கும் நாம ஏன் ஒரு உணவகம் ஆரம்பிக்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. இங்க வட்டார உணவு என்று பார்த்தால் கடல் சார்ந்த உணவுகள் தான். மேலும் இது சதுப்புநில காடு என்பதால் மீன் வளமும் நன்றாக இருக்கும்.
தினசரி மீன், இறால் போன்றவற்றை இங்குள்ள மீனவர்கள் பிடித்து வருவது வழக்கம். கோழி மற்றும் ஆட்டிறைச்சி போல் இல்லாமல் நேரடியாக கடலுக்கு சென்று மீன், இறால் போன்றவற்றை ஃப்ரஷ்ஷாக பிடித்து வருவார்கள். அதை அப்படியே வாங்கி சமைக்கும் போது உணவின் சுவை மாறாமல் கொடுக்க முடியும் என்பதற்காகவே கடல் சார்ந்த உணவுகளை மட்டுமே கொண்டு உணவகம் ஆரம்பிக்கலாம்ன்னு திட்டமிட்டோம்.
மேலும் நான் ஒரு பயணி. நிறைய ஊர்களுக்கு சென்றிருக்கேன். அங்கு பல தரப்பட்ட உணவுகளை சாப்பிட்டும் இருக்கேன். சில சமயம் அதனால் என் உடல் நிலையில் பாதிப்பும் ஏற்பட்டு இருக்கு. அப்படி எல்லாம் இல்லாமல் தரமான உணவினை கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் எங்க இருவர் மனதிலும் இருந்தது. எல்லாவற்றையும் விட என் மனைவி மிகவும் அருமையா சமைப்பாங்க. அதனால் தைரியமாக இருவரும் இதில் இறங்க திட்டமிட்டோம்’’ என்றவரை தொடர்ந்தார் குறிஞ்சி மலர்.
பெயருக்கு ஏற்றது போல அனைவரையும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று உணவுகளை பரிமாறியவர் தங்களின் எட்டு ஆண்டு பயணம் குறித்து பகிர்ந்தார். ‘‘என்னுடைய பூர்வீகம் நாகூர். அப்பா டீச்சரா இருந்தார். அவருக்கு இங்கு மாற்றலாகி வந்ததால், நாங்க எல்லாரும் இங்கேயே செட்டிலாயிட்ேடாம். +2 வரை தான் படிச்சிருக்கேன். என் கணவருக்கு சிதம்பரத்தில் உள்ள கிள்ளை என்ற பகுதி தான் சொந்த ஊர். எங்க இருவருக்கும் ஓட்டல் துறையில் பெரிய அளவு அனுபவம் எல்லாம் கிடையாது. என்னுடைய அம்மாவும் சரி அவரின் அம்மாவும் சரி இருவரும் பிரமாதமா சமைப்பாங்க. எப்போதும் அம்மாவுடன் தான் நான் இருப்பேன். அதனால் பள்ளி படிக்கும் போதே நான் சமைக்க பழகிக்கொண்டேன்.
அதன் பிறகு திருமணமாகி என் மாமியாரின் டிரயினிங் வேற. இரண்டும் சேர்ந்து எனக்குள் இருந்த சமையல் கலையினை வெளியே கொண்டு வந்ததுன்னு தான் சொல்லணும். எங்க குடும்பத்தில் காது குத்து விழா, வளைகாப்பு போன்ற சின்ன சின்ன விசேஷங்களுக்கு என்னைதான் சமைக்க சொல்வாங்க. உன்னுடைய கைப்பக்குவம் நல்லா இருக்கு, அதனால் நீ தான் சமையல் வேலையை பார்த்துக்கணும்ன்னு அன்போட கேட்பாங்க.
நானும் செய்து தருவேன். இது போல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொன்ன ஒரே விஷயம் ‘ஏன் நீ ஒரு உணவகம் ஆரம்பிக்கக்கூடாது’ என்பது தான். அவங்க சொல்லும் போது, எனக்கு பெரிய அளவில் ஈடுபாடு எல்லாம் ஏற்படவில்லை. ஆனால் நாளடைவில் ஒவ்ெவாருத்தரும் இதையே அழுத்தமாக சொன்ன போது தான் நானும் என் கணவரும் இதை பற்றி யோசிக்கவே ஆரம்பித்தோம்’’ என்றவர் முதலில் ஒரு இருபது பேருக்காக மட்டுமே சமையல் செய்து இந்த உணவகத்தை ஆரம்பித்துள்ளார்.
‘‘ஓட்டல் ஆரம்பித்த போது, நானும் என் கணவர் மட்டும் தான் பார்த்துக் கொண்டோம். கூட வேலையாட்கள் யாரும் வைத்துக் கொள்ளவில்லை. கடலுக்கு சென்று மீன் வாங்கி வருவது, அதை சுத்தம் செய்வது மற்றும் அதற்கான மசாலா பொருட்களை தயாரிப்பது என அனைத்தும் எங்க இருவரின் மேற்பார்வையில் தான் நடக்கும். பெரிய முதலீடு கிடையாது. மேலும் எங்களுடைய வீட்டையே உணவகமாக மாற்றி அமைத்திருப்பதால் வாடகை கொடுக்க வேண்டும் என்ற பயம் இல்லை. கிடைக்கிற லாபம் போதும் என்ற எண்ணத்தில் துவங்கினோம். முதல் நாள் பெரிய அளவு கூட்டமில்லை என்றாலும், இங்கு சாப்பிட்டவர்கள் அனைவரும் உணவு பிரமாதம் என்று கூறி சென்றார்கள்.
இப்படி ஒருவர் சொல்லி ஒருவர் என எங்க உணவகத்தை தேடி மக்கள் வர ஆரம்பிச்சாங்க. ெவளிநாட்டில் இருந்தும் மக்கள் வராங்கன்னு நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. தீபாவளி, பொங்கல் அன்று கூட கடை இருக்கான்னு கேட்டு சாப்பிட வராங்க. அதனால் 365 நாளும் எங்களின் கடை திறந்திருக்கும்’’ என்றவர் மண் சட்டி மற்றும் இரும்பு தவாவில் தான் உணவுகளை சமைக்கிறார்.
‘‘நாங்க கடையை ஆரம்பித்த போது வீட்டில் இருந்த பாத்திரங்களைக் கொண்டு தான் ஆரம்பிச்சோம். எங்க வீட்டில் மண் சட்டி மற்றும் விறகு அடுப்பில் தான் சமைப்போம். அந்த சுவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அதேபோல் எத்தனை பேர் வந்தாலும் அவங்க வந்து ஆர்டர் செய்த பிறகு தான் சமைத்து தருவோம். ஃப்ரஷ்ஷாக உணவினை சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.
சாப்பாடு மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு, இறால் குழம்பு, சாம்பார், ரசம், கூட்டு, மோர், கெட்டி தயிர்.., இது தான் ரெகுலர் மீல்ஸ் சாப்பாடு. இதைத்தவிர மீன் வறுவல், இறால் மசாலா, கடமா கிரேவியும் உண்டு. மீன் குழம்பு மற்ற உணவுகளை உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பிறகு தான் செய்யவே ஆரம்பிப்போம். பொதுவாக நாங்க மீன் குழம்பை பத்து பேர் சாப்பிடுற அளவு தான் செய்வோம். சிக்கன், மட்டன் குழம்பு போல் மீன் குழம்பினை ஏற்கனவே செய்து வைத்தால் சுவையாக இருக்காது. அதனால் ஒவ்ெவாரு சட்டி குழம்பு தீர்ந்த பிறகு அதுவும் வாடிக்கையாளர்களின் வருகையை கணக்கிட்டு செய்வோம். குழம்பு மட்டுமில்லை, இறால் மசாலா, கடமா மசாலா, மீன் வறுவல் அனைத்துமே இதே அடிப்படையில் தான் செய்து தருகிறோம். மீன் மற்றும் இதர கடல் சார்ந்த உணவுகளை எல்லாம் ஒன்றுக்கு மூன்று முறை நன்றாக சுத்தம் செய்திடுவேன்.
அதற்கு மட்டுமே எனக்கு மூன்று மணி நேரமாகும். மீன் வறுவலுக்கான மீன்களை துண்டுகளாக போட்டு வைப்பதில்லை. மீன் தலையை மட்டும் தனியே நறுக்கி முழு மீனை சுத்தம் செய்து வைத்திடுவேன். எவ்வளவு துண்டு மீன் வேண்டுமோ அதை அந்த சமயத்தில் நறுக்கி மசாலா தடவி வறுத்து தருகிறோம். ஒரு பிளேட் கடமா என்றால் அதற்கான கடமாவை மட்டும் மண்சட்டியில் மசாலாவுடன் கலந்து அந்த சமயத்தில் உடனடியாக செய்து தருவதால், சுவையும் கூடுதலாக இருக்கும். கடல் சார்ந்த உணவில் வரும் கவிச்சி வாடையும் வராது. இப்போது எனக்கு உதவியாக எங்க ஊரை சேர்ந்த பெண்கள் இருந்தாலும், சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சமையல் என்னுடைய ெபாறுப்பு. ’’ என்றவர் 50 பேர் வந்தாலும் தனி மனுஷியாக சமாளித்துவிடுகிறார்.
‘‘எங்க உணவகத்தில் களி நண்டு மிகவும் பிரபலம்’’ என்று உணவகத்தில் உள்ள உணவின் சிறப்பு குறித்து பேசத் துவங்கினார் நீதிமணி. ‘‘இந்த நண்டு சதுப்பு நிலத்தில் வாழ்வதால், அதிக மருத்துவ குணம் கொண்டது. மார் சளிக்கு மிகவும் நல்லது. நண்டினை உயிரோடு அதன் காலை மட்டுமே கட்டி வச்சிருப்போம். தேவைப்படும் போது மட்டும் தான் அதன் ஓட்டை நீக்கி சமைத்து தருகிறோம். கடல் நண்டு போலில்லாமல், அதிக சதை கொண்டிருக்கும் என்பதால் சாப்பிடுவதற்கும் ருசியா இருக்கும்.
எங்க கடைக்கு வரும் ெபரும்பாலானவர்கள் வஞ்சிரம் மீன் வறுவல் தான் விரும்பி கேட்கிறாங்க. வஞ்சரம் மீனைவிட ஷீலா, வவ்வால், கொடுவா, கெண்டை, பாறை போன்ற மீன்களில் கால்சியம் மற்றும் இதர சத்துக்கள் உள்ளன. அவற்றின் சுவையும் வித்தியாசமாக இருக்கும். குழம்புக்கு பொறுத்தவரை கெண்டை, மத்தி, மடவை… போன்ற மீன்களை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். மேலும் அன்று என்ன மீன் தூண்டிலில் சிக்குகிறதோ அதைப் பொருத்து குழம்பில் உள்ள மீன்கள் மாறுபடும். மீன் ஃப்ரஷ்ஷாக இருந்தாலும், அதற்கு மேலும் சுவை கூட்டுவது அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள். மிளகாயை விட மிளகு எங்களின் மசாலாவில் அதிகம் இருக்கும்.
அதேப்போல் செரிமானத்திற்கு சோம்பு, சீரகம் போன்ற பொருட்களையும் மசாலாவில் சேர்த்திருக்கிறோம். இவை அனைத்தும் என் மனைவியே அவர்களின் கைப்பக்குவத்தில் தயார் செய்கிறார். கடையில் கிடைக்கக்கூடிய மசாலாக்களை நாங்க ஒரு போதும் பயன்படுத்துவதில்லை. உணவு ஒரு பக்கம் இருந்தாலும், அதை பரிமாறும் இடமும் சுத்தமாகவும், வீட்டில் சாப்பிடக்கூடிய உணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே எங்களின் உணவகத்தை நாங்க மார்டர்ன் ஓட்டல் போல் அமைக்கவில்லை. கடல் காற்றினை சுவாசித்துக் கொண்டே இங்கு சுவையான உணவினை சாப்பிடலாம். ஓட்டல் ஆரம்பித்த முதல் நான்கு வருடம் தரையில் தலைவாழை போட்டு தான் சாப்பாடு பரிமாறி வந்தோம். பலரால் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாத சூழல் என்பதால் இப்போது மேஜை சேர் போட்டிருக்கோம். எட்டு வருடங்களாக நாங்க இயங்கி வந்தாலும் எங்க இருவராலும் மறக்க முடியாத சம்பவம் என்றால் இயக்குனர் மிஷ்கின் எங்க உணவகத்தில் சாப்பிட்டது தான்’’ என்றவரை தொடர்ந்தார் குறிஞ்சி.
‘‘துப்பறிவாளன் பட ஷூட்டிங் இங்க தான் நடந்தது. அதற்கான அந்த மொத்த குழுவும் இங்கு வந்திருந்தாங்க. எங்க ஓட்டலின் பெயரைப் பார்த்து சாப்பிட வந்ததாக இயக்குநர் மிஷ்கின் சொன்னார். எனக்கு முதலில் அவரை அடையாளம் தெரியல. அதன் பிறகு என் கணவர் தான் அவரைப்பற்றி விவரித்தார். 50 நாட்கள் ஷூட்டிங் போது எங்களின் உணவகத்தில் தான் அவங்க குழு சாப்பிட்டாங்க. அந்த 50 நாட்களும் மறக்க முடியாத தருணம். நிறைய பேர் பிரான்சைசி கொடுக்க சொல்லி கேட்கிறாங்க. எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. மசாலா போன்ற பொருட்கள் எல்லாம் நாங்க தயாரித்து கொடுக்கலாம்.
ஆனால் ஃப்ரஷ்ஷான மீன் மற்றும் சமைக்கும் பக்குவம் இதேபோல் கிடைக்குமா? அதனால் எங்களுக்கு வேறு ஊர்களில் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. சிதம்பரம் இங்கிருந்து அருகே என்பதால் அங்கே ஒரு கிளையினை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. அதே சமயம் இதே போன்ற சுவையினை கொடுக்க வேண்டும் என்பதில் நானும் என் கணவரும் மிகவும் குறிக்கோளா இருக்கிறோம். எங்களின் நோக்கம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. ஓரளவு லாபம் பார்த்தால் போதும். வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தினாலே அதில் கிடைக்கும் மனநிறைவு சந்ததோஷம் வேறு எதிலும் கிடைக்காது’’ என்றார் குறிஞ்சி மலர் புன்னகை மாறாமல்.
Average Rating