கங்குபாய் கத்தியவாடியின் உண்மைக் கதை!! (மகளிர் பக்கம்)
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி. ஆலியா பட் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஹுசைன் ஜைதியின் மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை (Mafia Queens of Mumbai) எனும் புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் குறித்து பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்திருந்தாலும், கங்குபாய் கத்தியவாடி என்பவரின் உண்மையான கதை பெரிய அளவில் மக்கள் மத்தியில் தெரியவில்லை.
கங்கா ஹர்ஜீவன்தாஸ் கத்தியவாடி (Ganga Harjeevandas Kathiawadi) எனும் பெண், குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் 50 மற்றும் 60களில் மும்பையின் மிக முக்கியமான பாலியல் விடுதிகளை நடத்தி வந்ததில் அனைவர் மத்தியிலும் நன்கு பிரபலமாகியவர். கங்கா, தனது கணவரால் காமாத்திபுராவில் உள்ள விபச்சார விடுதியின் உரிமையாளர் ஒருவருக்கு ரூபாய் 500க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. காமாத்திபுரா மும்பையின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான சிவப்பு விளக்கு பகுதிகளில் ஒன்றாகும். அதன் பிறகு கங்கா, தனது சொந்த பாலியல் விடுதியை நடத்த ஆரம்பித்தார். பின் பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடியதில் முக்கிய நபராக மும்பையில் அறியப்பட்டார்.
ஹுசைன் ஜைதியின் புத்தகத்தின் படி, கங்கா குஜராத்தின் கதியாவாட் கிராமத்தில் பல வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்திற்கு கதியாவாட்டின் அரச குடும்பத்துடன் நல்ல நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. மிகவும் கண்டிப்பான குடும்பத்தில் வளர்ந்ததாலும், 1940களிலேயெ பெண் குழந்தைக்கும் நல்ல படிப்பை கொடுக்க வேண்டும் என கங்காவை அவளது பெற்றோர்கள் படிக்க அனுப்பினார்கள். இது அந்தக் காலத்து பெண்கள் நினைத்துக்கூட பார்க்காத விஷயமாக இருந்தது.
ஆனால் கங்காவிற்கோ மும்பையில் நடிகையாக வேண்டும் என்பது கனவாக இருந்தது. கங்காவின் பதின் பருவத்தில், அவளது அப்பா, ராம்னிக் லால் எனும் கணக்காளரை பணிக்கு நியமித்தார். ராம்னிக் லால், தான் மும்பையில் சில வருடங்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கவும், கங்காவிற்கு உடனே ராம்னிக் லால் மீது ஈர்ப்பு உண்டாகியது. ராம்னிக், கங்காவின் ஆசையை அறிந்து, அவளுக்கு ஆசை வார்த்தைகள் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்வதாக கூறுகிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. கங்கா கொஞ்சம் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு, ராம்னிக்கை ஒரு கோவிலில் திருமணம் முடிக்கிறாள். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி மும்பைக்கு வந்தடைகின்றனர்.
மும்பைக்கு வந்த சில நாட்கள் மகிழ்ச்சியாக கடக்கிறது. ஆனால் சில நாட்களிலேயே கையில் இருந்த பணமும் தீர்ந்துவிடுகிறது. அப்போது ராம்னிக் தனது உறவினர் ஒருவர் மும்பையில் வசிப்பதாகவும், அங்கு சென்று தங்கி சினிமாவில் வாய்ப்புகளுக்கு முயற்சிக்கலாம் என்று கூறுகிறான். கங்காவும் ராம்னிக் யோசனைக்கு சம்மதிக்கிறார்கள். கங்காவை ரெட் லைட் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவளை ஐநூறு ரூபாக்கு ராம்னிக் விற்கிறான்.
உடைந்து போகும் கங்கா, அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என பசி பட்டினியுடன் போராடுகிறாள். அதே சமயம் அங்கிருந்து திரும்பி வீட்டிற்கு சென்றால் அது அவளது குடும்பத்திற்கே பெரும் அவமதிப்பாக மாறும் என்று உயிரை விட முடிவு செய்கிறாள். ஆனால் அங்கிருப்பவர்களின் தொடர் கண்காணிப்பால் சாகவும் வழியில்லாமல் தவிக்கிறாள்.
அங்கிருந்து தப்பிக்க முடியாது என தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அங்கிருக்கும் பாலியல் விடுதியின் உரிமையாளரின் கட்டளைகளுக்கு சம்மதிக்கிறாள். சில நாட்களில் தனது பெயரை கங்குபாய் என மாற்றிக்கொண்டு தான் கங்காவாக வாழ்ந்த நாட்களை அடியோடு மறக்கிறாள். படிப்படியாக பாலியல் தொழிலில் பிரபலமாகி, அங்கிருக்கும் மாஃபியாக்கள், போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கிறது.
பம்பாயின் தாதா கரீம் லாலா எனும் அப்துல் கரீம் கானின் சகோதரி என அந்தஸ்து கிடைத்ததும், கங்குபாயின் மதிப்பு கூடுகிறது. பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் நடத்தப்படும் தேர்தலில் கங்குபாய் வெற்றிப் பெற்றதும் அவள் கர்வாலி எனும் அந்தஸ்திற்கு உயர்கிறாள். கர்வாலி என்பது விபச்சார விடுதி நடத்துபவர்களுக்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். கங்குபாய், தனது விடுதிக்கு ஏமாற்றி அழைத்து வரப்படும் அப்பாவி பெண்களை நன்கு விசாரித்து அவர்கள் சொல்வது உண்மை எனும் பட்சத்தில், அவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறார். ஆனால், உண்மைக்கு புறம்பாக நடப்பவர்களை கங்குபாய் ரெட் லைட் பகுதியிலிருந்து வெளியேற தடைவிதித்து விடுவார். கங்குபாய் பணத்தைத் தாண்டி பெண்களுக்கு நன்மை செய்வதால், அங்கிருக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு அவர் மீது நல்ல எண்ணம் உருவாகுகிறது.
கர்வாலிகளுக்கிடையே நடத்தப்படும் மற்றொரு பெரிய தேர்தலில் கங்குபாய் நின்று வெற்றிப்பெற்றதில், அவர் கங்குமா என அனைவராலும் அழைக்கப்படுகிறார். ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கங்குபாய் பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காக முதல் முறையாக ஊடகம் மற்றும் பெரும் பார்வையாளர்கள் மத்தியில் குரல் கொடுத்தார்.
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும், பாலியல் தொழிலாளர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டால்தான், அவர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்படுவார்கள் எனவும் பேசினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், கங்குபாய் பெருமளவில் மீடியா மற்றும் தலைவர்கள் மத்தியில் பிரபலமானார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத கங்குபாய், பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. தன் வாழ்க்கையை பாலியல் தொழிலாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் உரிமைக்காக அர்ப்பணித்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மும்பையின் விபச்சார விடுதிகளை அகற்றுவதற்கு எதிரான இயக்கத்தை அவர் வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது. மும்பையின் காமாத்திபுராவில் கங்குபாய் சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்றும் அந்த பகுதியில் இருக்கும் பல வீடுகளில் அவரது புகைப்படத்தை வைத்து மக்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதாக கூறப்படுகிறது.
Average Rating